Tuesday, January 31, 2012

நல்லதோர் வீணை

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

குறிப்பு:

இந்த நாளில் என் பெரிய தம்பி இறந்துவிட்டான். இரண்டு வயதுக் குழந்தை. சாதாரண சீதபேதி; பலவித மருந்துகள் கொடுத்தும் குணம் அடையவில்லை; குழந்தை போய்விட்ட அதிர்ச்சியில் என் தந்தை மனம் இடிந்துவிட்டார். சுதேசிக் கப்பலுக்காகக் கணக்கற்ற பணம் கை விட்டுப் போனபோதும், 'இந்தியா’ பத்திரிகை நிறுத்தப்பட்ட போதும், அரசாங்கம் பல கொடுமைகள் செய்தபோதும் சளைக்காது தைரியமாகவே இருந்தார். இந்தச் சம்பவம் நோயாளியை மேல் எறிந்து கலக்கியதைப் போல் அவரை மிகவும் துர்ப்பலமாக்கிவிட்டது. இந்தத் துக்கம் வந்த சமயத்தில் ஐயர், பாரதியார் இருவரும் இடைவிடாமல் அவரோடு பேசிக்கொண்டும் சதுரங்கம் ஆடிக்கொண்டும் பகலைக் கழிப்பார்கள். சாயங்காலம் நாலு மணிக்கு அரவிந்தரின் வீட்டிற்குப் போய் வேதம் உபநிஷத் இவைகளைச் சிந்தனை செய்வார்கள். இரவு பத்து மணி, பதினொரு மணிக்கு வருவார்கள்.

குழந்தை இறந்த அன்று அதை அடக்கம் செய்துவிட்டு இரண்டு மணிக்கு எல்லோரும் வீடு திரும்பினார்கள். பாரதியாருக்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. வயிற்றில் மிகவும் சங்கடப்படுத்தியது. ‘கேட்பன’ என்ற தலைப்பில் நொண்டிச் சிந்து மெட்டில் ‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலைப் பாடினார். குழந்தைகளான எங்களுக்கு அதைப் பாடிக் காட்டினார்.  - யதுகிரி அம்மாள், யதுகிரி நினைவுகள்

1 comment:

  1. எல்லோருக்கும் தெரிந்த பாடல் தான். ஆனாலும் வரலாறு / பின்புலம் தெரிந்து படிக்கும்போது சுவையே தனி.

    நன்றி!

    ReplyDelete