Tuesday, January 10, 2012

தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள்


[பி. ஏ. பரீட்சை தேறிய ஒரு வாலிபனுடைய எண்ணங்கள்]

வாலிபன்: தமிழ்ப் பாஷை ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை. இது சீக்கிரம் அழிந்தால்தான் நமது நாடு பிழைக்கும்.

புலவன்: ஏதப்பா, உனக்கு இந்தப் பாஷையிலே இவ்வளவு கோபம் உண்டாயிருக்கின்றது?

வா: நவீன நாகரிகத்தினுடைய சங்கதி உமக்குத் தெரியாதையா! மனித ஜாதி குரங்கு நிலைமையினின்றும் மாறிக் காட்டு மனிதன் ஸ்திதிக்கு வந்தபோது உங்கள் தமிழ்ப்பாஷை ஏற்பட்டது. இப்போது உலகம் எவ்வளவோ விசாலமடைந்து போயிருக்கிறது. வானத்தில் உள்ள கிரகங்கள், நக்ஷத்திரங்கள் முதலியவற்றை யெல்லாம் மனித அறிவு ஊடுருவிச் சென்றிருக்கிறது. பதார்த்தங்களின் அணுக்களிலே எல்லாம் மனுஷ புத்தி நுழைந்து சென்றிருக்கிறது: பிரகிருதி வினோதங்களை மனிதன் எவ்வளவோ அதிகமாக ஆராய்ச்சி செய்திருக்கிறான். சமுத்திரத்து ஜலம் அனைத்தையும் குடத்துக்குள்ளே எப்படி அடைக்க முடியும்? அதுபோலவே அளவின்றி வரிந்து கிடக்கும் மனுஷ பக்தியின் நவீன சலனங்களை எல்லாம் உம்முடைய பண்டைக்காலத்துத் தமிழிலே கொண்டு நுழைப்பது மிகவும் பிராணாபத்தாய் இருக்கின்றது. நாம் நாகரிகம் அடைய வேண்டுமானால் இந்தத் தமிழ் பாஷையை முற்றும் கைவிட்டு விட வேண்டும்.

புல: ‘நாம்’ என்று யாரையப்பா சேர்த்துச் சொல்கிறாய்? உன் மட்டிலே நீ பேசுவதைப் பார்த்தால் ஞானக்கடலின் கரை கடந்தவனாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்! உன்னைப்போல் இங்கிலீஷ் படியாத மற்ற ஜனங்கள் தமிழ்ப் பாஷையை எப்படிக் கைவிட முடியும்? ஒரு பாஷையை நீ மரக்கிளை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? அதை ஜனங்கள் பிடித்துத் தொத்திக்கொண்டு விட மாட்டோம் என்கிறார்களென்று எண்ணுகிறாயா? மனுஷ பாஷைகள் மனுஷ வாழ்க்கையோடு ஒட்டி உடன் வளர்ந்த பொருள்களல்லவோ? தலைமுறை தலைமுறையாய் எத்தனையோ நூற்றாண்டுகளாக ஒரு நாட்டார் பேசிவரும் பாஷை அவர்களின் உயிரோடு ஒன்றி விடுகின்றது. மனித அறிவு வளர்ச்சிக்குப் பாஷை ஒரு கண்ணாடி. ஒரு நாட்டாரின் அறிவு வளர்ந்துகொண்டு வரவர அந்நாட்டின் பாஷையும் விசாலம் அடைந்து வருகிறது. அன்னிய ராஜாங்கம், தாரித்திரியம், சரீரபலக் குறைவு, நோய், உற்சாகமின்மை முதலிய காரணங்களால் இப்போது இழிவு கொண்டு போயிருக்கும் தமிழ் நாட்டு ஜனங்கள், ஆங்கிலேயர் முதலிய சுதந்திர நாட்டாரைப் போல் விருத்தி அடைந்து வருதல் அசாத்தியமாக இருக்கிறது என்பது ஒருவாறு மெய்யாக இருக்கலாம். அதற்குப் பாஷையைக் குற்றம் சொல்வதிலே என்ன பிரயோஜனம் இருக்கிறது? ‘ஆடத் தெரியாத தாசி கூடம் போதாது’ என்பது போலக் கதை சொல்லுகிறாயே?

வா: போமையா! பொதுப்படையாகப் பேசிக் கொண்டு போவதிலே என்ன பயன் இருக்கிறது? இப்போது ஐரோப்பியர்கள் பூமி நூல், கடல் நூல், பிராணி நூல், அணு நூல் முதலிய நூல்களிலே எல்லாம் அளவு கடந்த முதிர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மின்சாரம், காந்தம் இவற்றின் குணாதிசயங்களைப் பற்றி நவீன ஆராய்ச்சி வரம்பு இல்லாதிருக்கிறது. மின்சாரம், நீராவி, என்பவற்றைத் துணையாக வைத்துக்கொண்டு மனித ஜாதியின் செளகர்யங்களுக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுமாறு ஆயிரக்கணக்காக யந்திரங்களும், புதிய கருத்துக்களும் லக்ஷக்கணக்காக உண்டாயிருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் தமிழ்ப் பாஷையிலே பெயரும் கிடையாது, மண்ணும் கிடையாது. இப்படி இருக்க நீர் ஏதோ பொதுப்படையாக உருட்டிக்கொண்டு போகிறீர்?

புல: அடடா! உனது விவகாரத்தின் நுட்பத்தை என்னென்று சொல்வேன்! நீ ஓயாமல் அடுக்கிக் கொண்டு போன நவீன ஆராய்ச்சிக் கதைகள் எல்லாம் தமிழ் நாட்டு ஜனங்களுக்குள்ளே வழக்கமான பிறகல்லவோ அவை தமிழ்ப் பாஷையிலே வழங்குவதற்குச் சுலபமாகும். தமிழ் நாட்டிலேயோ பொது ஜனங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிவதே அருமையாய் இருக்கிறது. வயிற்றுப் பிழைப்பே பெரிய கஷ்டமாய் இருக்கின்றது. ராஜாங்கத்தார் பொது ஜனக் கல்விக்கு மிகவும் வெட்கக்கேடான சிறுதொகை செலவிடுகின்றார்கள். சிறுபான்மையோருக்குத் தரப்படும் கல்விகூட அவர்களைக் குமாஸ்தக்களாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கொடுக்கப்படுவதேயன்றி வேறு எவ்வதமான பெருந் தொழிலுக்கும் தகுதியாக்க அன்று. எனவே இந்நாட்டார் பொதுவாக மிகவும் அறிவு சுருங்கிப் போயிருக்கிறார்கள். இதற்குப் பாஷை என்ன செய்யும்? நீராவியினால் ஓட்டப்படும் ரெயில் வண்டி இந்நாட்டிலே வழக்கமாய் இருக்கிறது. இப்போது பொது ஜனங்கள் அதற்கு வார்த்தை ஏற்படுத்திக் கொள்ளாமலா இருக்கிறார்கள்? மின்சார சக்தியால் தந்தி ஏற்படுத்தப்ப்பட்டிருக்கிறது. அதற்குத் தமிழர்கள் வார்த்தை உண்டாக்கி கொள்ளவில்லையா? கோவணம் இல்லாத நிர்வாண தேசத்தாரின் பாஷையிலே பட்டு அங்கவஸ்திரத்துக்குப் பெயர் கிடையாதென்றால் அதற்கு அவர்களுடைய பாஷையின் மேல் என்ன குற்றம் இருக்கிறது? துணியைக் கொண்டு கொடுத்து வழக்கப்படுத்தினால் முறையே வார்த்தைகளும் உண்டாக்கிக் கொள்வார்கள். தமிழ் நாட்டிலே தொழில் வகைப்படும் ஆலோசனை மிகுதியும் ஏற்பட்டால் தமிழ் பாஷை அன்றைக்கே வளர்ந்துவிடும். அப்படிக்கின்றி இந்தப் பாஷையை ஒழித்துவிட வேண்டும் என்று சொல்லுவது மகா மூடத்தனம் அல்லவா? கண்ணிலே வியாதி கொண்டிருக்கும் ஒருவன் அதன் மூல காரணங்களைத் தெரிந்து கொண்டு ஒளஷதப் பிரயோகம் செய்யாமல், இந்தக் கண்களையே ஒழித்து விட்டு நல்ல பிரகாசமுள்ள இரண்டு பிரான்ஸ் தேசத்துக் கண்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று யோசிப்பது நல்ல அறிவாகுமா? உன் கண்களை நீக்கிவிட்டுப் பிரான்ஸ் சேதத்துக் கண்களை வாங்கி வைத்துக்கொள்வது சாத்தியமா?

வா: ஏனையா சும்மா வளர்க்கிறீர்? நான் சொல்வதன் குறிப்பு உமக்குத் தெரியவில்லையே! தமிழ்ப் பாஷை இயற்கையிலே நவீனக் கருத்துக்களுக்குப் பொருத்தம் உடையதன்று. இப்போது கவிதை விஷயத்தை எடுத்துக் கொள்வோம். இதற்கும் மின்சாரம் காந்தம் முதலிய பூத சாஸ்திர அபிவிருத்திகளுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாதல்லவா? இதில்கூடத் தமிழ்ப் பாஷை ஏன் இத்தனை சீர்கெட்டு இருக்கிறது? டெனிஸன் முதலிய நவீன ஆங்கிலக் கவிகளையும், சூரியநாராயண சாஸ்திரி முதலிய தமிழ் நாட்டுப் புலவர்களையும்  ஒப்பிட்டுப் பாரும். ஆங்கிலப் படிப்பற்ற தமிழ்ப் புலவர்கள் நிலைமை சொல்ல வேண்டியதில்லை.

புல: யோசனையின்று ஏனடா பேசுகிறாய்? தமிழ்நாடு இப்போது சுதந்திரமும், சரீர பலமும், மனோபலமும் இழந்து தாழ்ந்த நிலைமைக்கு வந்துவிட்டது. எனவே இந்நாட்டில் உயர்ந்த கவிஞர்கள் இல்லாமல் போய் விட்டார்கள். நோய் கொண்ட மாமரத்திலே நல்ல பழம் எங்ஙனம் தோன்றும்? மரத்தின் நோயைத் தீர்த்தல்லவோ பிறகு கனியினுடைய ருசியைப் பார்க்க வேண்டும்? தமிழர்களைப் புனிதப்படுத்திப் பிறகு பார்த்தால் தமிழ்ப் பாஷையின் நறுமணம் விளங்கும். தமிழர்கள் நேர்மையாய் இருந்த காலத்தில் திருத்தக்கதேவர், இளங்கோ, கம்பர் முதலிய எண்ணிறந்த தமிழ்ப் புலவர் இருந்து அருமையான தெய்வீகப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.

வா: சும்மா ஸ்தோத்திரம் பண்ணாதேயும்; கம்பன் டம்பன் எல்லாம் நானும் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். 

புல: அப்பா தயை செய்து உளறாதே. காலேஜுகளிலே கம்ப ராமாயணம் சொல்லித் தரப்படும் மாதிரியிலே உனக்கும் உன்போன்றோர்க்கும் தமிழ்ப் புலவர்களிடம் வெறுப்பு ஏற்படுதல் சகஜமேயாம். எனினும், போப் முதலிய ஆங்கிலேய வித்வான்கள் கூடப் பண்டைத் தமிழ் புலவர்களின் ஆழ்ந்த கருத்துக்களையும் பெருமைகளையும் கண்டு மிகுந்த வியப்படைகிறார்கள்.
கம்ப ராமாயணத்திலே ஸீதை தனியாக அசோக வனத்திலே இருக்கும்போது ராமபிரான் அவ்வப்போது செய்த செய்கைகளையும் விளையாடி விளையாட்டுகளையும் நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருப்பதாகச் சில பாடல்கள் சொல்லப்படுகின்றன. அதிலே ஒரு பாட்டை உனக்கு எடுத்துச் சொல்லிப் பொருள் கூறுகின்றேன். அது ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் பெறும்படி கட்டளை இடப்பட்ட காலத்திலேயும், ‘ராஜ்யத்தை விட்டு வனாந்தரம் செல்’ என்று கட்டளையிடப்பட்ட போதும் ஒரே மாதிரி மனமுடையவனாக முகம் மலர்ந்திருந்த வியப்பை ஸீதை நினைத்துப் பார்த்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. அப்பாட்டைக் கேள்:

“மெய்த் திருப்பதமேவென்ற காலையும்
இத்திருத் துறந் தேகென்ற போதிலும்
சித்திரத்தி லலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கு முகத்தினை யுன்னுவாள்”
(பாடலின் பொருள் சொல்லுகிறார்.)

பார்த்தாயா? இதிலே என்ன ஓசை நயமும், சொல் நயமும், பொருள் இன்பமும் மலிந்து கிடக்கின்றன. இதை உனக்கு ஒரு திருஷ்டாந்தமாகச் சொன்னேன். இவ்வாறு கம்ப ராமாயணத்திலே ஆயிரக்கணக்கான பாட்டுக்கள் செறிந்து கிடக்கின்றன. மாம்பழம் அழுகி இருக்கும்போது தின்று பார்த்தவன் பொதுப்படையாக மாம்பழமே கெட்ட பொருள் என்று நிந்திப்பது போல, தமிழ்ப்பாஷையும் தமிழர்கலும் பதனம் அடைந்து போயிருக்கும் இந்தக் காலத்தைக் கவனித்து விட்டு நீ பாஷையையே குற்றஞ் சொல்லுவது நியாயமன்று. மஹரிஷி பால கங்காதரதிலகர் முதலிய மஹான்கள் சொல்லும் வழிகளைப் பின்பற்றி நமது நாடு செல்வமும் பெருமையும் சுதந்திரமும் பெற்ற பிறகு, நமது பாஷை இருக்கும் மாதிரியைப் பார்த்தால் அப்போது ஆச்சரியம் அடையக்தக்க விதமாக இருக்கும்.

4 comments:

  1. என்னமோ குறை கண்டு பிடிச்சு டைப் பண்ணப் போறேன் அப்படின்னு சொன்னீங்க? ஒன்னியும் குறை கண்டு புடிக்க முடியலியே!

    புலவர் எப்படி பேசினார் பாத்தீங்களா? பிஏநால வாயைத் திறக்க முடியல :)

    ReplyDelete
  2. //சும்மா உருட்டாதீர்//

    //கம்பன் டம்பன் எல்லாம் எனக்கும் தெரியும்// :-))

    ReplyDelete