Tuesday, January 17, 2012

விதி


9 செப்டம்பர் 1916.

விதி மூன்று வகைப்படும்:-

             1.தெய்வ விதி 2. சாஸ்திர விதி 3. நாட்டு விதி 

தெய்வ விதி

இந்த மூன்றிலே தெய்வ விதியை மாற்ற முடியாது. காற்றிலே வீசிய கல் இடையிலே தடுக்காவிட்டால் மண் மேலே வந்துவிழும்; தீ சுடும்; பனி குளிரும். மின்னல் அழிக்கும். வெயில் ஒளி செய்யும். இவற்றைப் பிற விதிகளால் சிறிது நேரம் தடுத்தாலும் தடுக்கலாம். இயற்கை விதிகளை மாற்றிவிட வழியில்லை. நன்மை நினைத்தால் நன்மை விளையும். தீமை நினைத்தால் தீமை விளையும். பொய் இழிவு தரும். உண்மை கைதூக்கும். இவை மாறாத விதிகள். இக்காலத்து இயற்கை விதிகளை ஒன்றொன்றாக ஆராய்ந்து கண்டுபிடித்துப் பின் அவற்றை அனுசரித்து வாழவேண்டும். இந்த விதிகளிலே மனித ஜாதியார் இன்றுவரை “கற்றது கைமண்ணளவு, கல்லாததுலகளவு.” இவற்றின் ஞானம் வளர வளர மனித ஜாதி மேன்மை பெறும்.

சாஸ்திர விதி

சாஸ்திரம் மனிதனால் எழுதப்பட்டது. ஆதலால் இன்னும் நிறைவு பெறவில்லை. தெய்வ விதிகளைக் கூடியவரை பின்பற்றியே சாஸ்திரக்காரர் எழுத முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் காலதேச வர்த்தமானங்கள் மாறுபடுகின்றன. தெய்வ விதிகளைப் பற்றிய புதிய வித்தைகள் வழக்கப்படுகின்றன. அப்போது சாஸ்திர விதிகளை மாற்றுதல் அவசியமாகிறது. திருஷ்டாந்தமாக வைத்திய சாஸ்திரத்தைப் பாருங்கள். காலதேச வர்த்தமானங்களுக்குத் தக்கபடி விதிகள் மாறுகின்றன. பூர்வீக ஐரோப்பிய வைத்தியர்கள் பெரும்பான்மை எல்லா வியாதிகளுக்கும் நோயாளியின் உடம்பைக் குத்தி ரத்தத்தைக் கொஞ்சம் வெளியேற்றினால், அதுவே நல்ல முறையென்று நினைத்திருந்தார்கள். தலை நோவு, ஜ்வரம் எது வந்தாலும் உடம்பைக் குத்தி ரத்தத்தைக் கொட்டித் தீரவேண்டும். இந்த மடமையாலே, பலர் ரத்த நஷ்டமே முதற் காரணமாய் அநியாயமாக மடிந்து போனார்கள். இக்காலத்தில் அந்தக் கொள்கை மாறிவிட்டது. ஜ்வரம் வந்தால் பத்தியம் மதுரையில் ஒரு மாதிரி, வேலூரிலே மற்றொரு மாதிரி.

இலக்கணத்தை எடுங்கள்:-

“பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவலகால வகையினானே” என்று பவனந்தி முனிவரே சொல்லுகிறார். 

தர்ம சாஸ்திரத்தை எடுங்கள்:-

பஞ்சபாண்டவர் காலத்தில் ஒரு ஸ்திரீ பல புருஷரை விவாகம் செய்து கொள்ளலாம். வேதவியாஸர் காலத்தில் தமையன் பிள்ளையில்லாமல் இறந்து போனால் தம்பி அவனுக்கு ஸந்ததி ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

விசுவாமித்திரர் காலத்தில் க்ஷத்திரியர் அறிவினால் பிராமணராகிவிடலாம். மனுஸ்மிருதியின் விதிகள் வேறேன். பராசரர் விதிகள் வேறே. நடப்பிலுள்ள வைத்தியநாத தீக்ஷிதர் விதிகள் வேறே. இங்கிலாந்துக்கு வேறு ஸ்மிருதி. ப்ரான்ஸ் தேசத்துக்கு வேறு. பாரஸீகத்துக்கு வேறு. நமக்கு வேறு. நமக்குள் வடநாட்டில் வேறு. தென்னாட்டில் வேறு. வைஷ்ணவருக்கு வேறு. ஸ்மார்த்தருக்கு வேறு.

சாஸ்திரங்களையெல்லாம் காலத்துக்குத் தகுந்தபடி மாற்றிக்கொண்டு போகிறோம். வேதத்தைத்தான் மாற்ற முடியாது; உண்மையான வேதமாக இருந்தால். 

நாட்டு விதி

நாட்டு விதி என்பது அர்த்த, நீதி சாஸ்திரங்களின் விதி. இதனைத் தற்காலத்தோர் அரசியல் விதியென்று சொல்லுகிறார்கள். அதுவும் சாஸ்திர விதியோடு சேர்ந்ததுதான். ஆனால் மற்ற இலக்கணம் முதலிய சாஸ்திரங்களின் விதிகளைக் காட்டிலும் அரசியல் விதிகள் மிகவும் விரைவுடன் மாறுபடுவதால் இதனைத் தனியாக ஒரு பகுதியாக்கும்படி நேரிட்டது. எனவே, தெய்வ விதிக்குப் பரிபூரணமாக உட்பட்டு சாஸ்திர விதிகளையும் நாட்டு விதிகளையும் மேன்மேலும் புத்திசாலித்தனமாகச் சீர்திருத்திக் கொண்டு வந்தால், மனுஷ்ய ஜாதிக்கு ஷேமமுண்டாகும்.

No comments:

Post a Comment