Thursday, January 19, 2012

தேசீயக் கல்வி


தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ்ப் பாஷையைப் ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உபபாஷையாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசீயம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியும் என்பதில் ஐயமில்லை. தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்து விடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண சஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும்.

ஆரம்பப் பள்ளிக்கூடம்: உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக் கூடம் வீதமாக எத்தனை பள்ளிக் கூடங்கள் ஸாத்யமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள். ஆரம்பத்தில் மூன்று உபாத்தியாயர்கள் வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் போதும். 

இந்த உபாத்யாயர்களுக்கு தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்கவேண்டும். திருஷ்டாந்தமாக இங்ஙனம் தமிழ் நாட்டில் ஏற்படும் தேசீயப் பாடசாலைகளில் உபாத்யாயர்களாக வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வதர்மாபினமும், எல்லா ஜீவர்களிடத்திலும் கருணையும் உடைய உபாத்யாயர்களைத் தெரிந்துதெடுத்தால் நன்று. அங்ஙனம் தேசாபிமானம் முதலிய உயர்ந்த குணங்கள் ஏற்கெனவே அமைந்திராத உபாத்தியாயர்கள் கிடைத்த போதிலும், பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியாயர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுதற்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆரோக்கியமும், திட சரீரமும் உடைய உபாத்தியாயர்களைத் தேர்ந்தெடுப்பது நன்று.

தேச பாஷையின் மூலமாக சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப்பட வேண்டுமென்பது சொல்லமலேயே விளங்கும். தேசபாஷையின் மூலமாகக் கற்பிக்கப்படாத கல்விக்கு தேசீயக்கல்வி என்ற பெயர் சொல்லுதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ?

ஜின ராஜ் தாஸரின் கருத்து: கல்வியைப் பற்றிய மூலக் கருத்துக்கள் எல்லா நாடுகளுக்கும் பொது, ஆனால், அந்தக் கொள்கைகளை வெவ்வேறு தேசங்களில் பிரயோகப்படுத்தும்போது இடத்தின் குணங்களுக்கும், ஜனங்களின் குணங்களுக்கும் தக்கபடி கல்வி வழியும் வெவ்வேறாய்ப் பிரிந்து தேசீயமாகி விடுகிறது. 

இந்தியாவில் மாத்திரம் சுதேசியக் கல்வி இல்லை. இந்நாட்டுக் கல்வி முழுதும் பிரிட்டிஷ் குணமுடையதாக இருக்கிறது. ஒரு வாரத்தில் இரண்டு மூன்று மணி நேரம் ஹிந்து தேச சரித்திரமும், தேச பாஷையும் கற்றுக் கொடுத்தால் போதாது. அதினின்றும் சுதேசிய ஞானம் ஏற்படாது. சென்னையில் ‘பிரஸிடென்ஸி காலேஜ்’ என்று சொல்லப்படும் மாகாணக் கலாசாலையின் கட்டடம் நமது தேச முறையைத் தழுவியதன்று. பழைய இத்தாலிய வழி யொன்றை அனுசரித்தது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் சர்வ கலா சங்கங்களின் கட்டடங்களில் கற்றுக் கொடுக்காத கல்வி இங்கு சுதேசீயக் கல்வி என்று சொல்லத் தகுந்த யோக்யதை பெறாது.

இது ஜினராஜ தாஸர் சில தினங்களின் முன்பு சென்னைப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்திருக்கும் ஒரு வ்யாசத்தின் ஸாரமாம். இதில் கடைசி அம்சம் மிகவும் கவனிக்கத் தகுந்தது. நமது தேசத்து முறைப்படி கட்டிய கட்டடத்திலேயன்றி பிறநாட்டு முறை பற்றிக் கட்டிய மனைகளிலே கூட தேசீயக் கல்வி பயிற்றுதல் ஸாத்யமில்லையானால், ஓஹோ, பாஷை விஷயத்தை என்னென்று சொல்வோம்! தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி கற்பிக்க வேண்டுமானால், அதற்குத் தமிழே தனிக் கருவியாக ஏற்படுத்த வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 

தமிழ் நாட்டுப் பெண்கள்

தமிழ் நாட்டு ஸ்திரீகளையும் சேர்த்துக் கொண்டு, அவர்களுடைய யோசனைகளையும் தழுவி நடத்தாவிடின் அக்கல்வி சுதேசீயம் ஆக மாட்டாது. தமிழ்க் கல்விக்கும் தமிழ்க் கலைகளுக்கும் தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க்கோயில், தமிழரசு, தமிழ்க்கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ?

தேசீயக் கல்வியின் தமிழ் நாட்டுக் கிளையென ஒரு கிளை ஏற்பட வேண்டும். அதன் ஆட்சி மண்டலத்தில் பாதிக் தொகைக்குக் குறையாமல் தமிழ் ஸ்திரீகள் கலந்திருக்கவேண்டும்.

கிராமப் பள்ளிக் கூடங்கள்

அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். கான்பரன்ஸ் என்றும், மீட்டிங் என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தை சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! படிப்பில்லாத ஜனங்கள் மிருகங்களுக்குச் சமானமென்று திருவள்ளுவர் பச்சைத் தமிழிலே சொல்லுகிறார். நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும், நம்மிலே முக்காற் பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒருவழி பிறக்கவில்லையே! ஏன்? எதனாலே? காரணந்தான் என்ன?

ஜாதி என்ற சொல் இரண்டு அர்த்த முடையது. முதலாவது, ஒரு தேசத்தார் தமக்குள் ஏற்படுத்தி வைத்துக் கொள்ளும் பிரிவு; வேளாள ஜாதி, பிராமண ஜாதி, கைக்கோள ஜாதி என்பது போல. இரண்டாவது தேசப்பிரிவுகள் தழுவிய வேற்றுமை. ஜப்பானிய ஜாதி, சீன ஜாதி, பாரஸிக ஜாதி, ஆங்கிலேய ஜாதி, ஜர்மானிய ஜாதி, ருமானிய ஜாதி என்பது போல. இவ்விரண்டிலும் அதிக அநுகூலமில்லை யென்பது ஸ்ரீமான் ரவீந்திர நாத தாகூருடைய கக்ஷி.

வெளி தேசத்தாருக்கு தர்மோப தேசம் செய்கையில் நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? இங்கே, அனாவசியமாக ஜாதி விரோதங்களும் அன்புக் குறைவுகளும் அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழித்து உடனே அன்பையும் உடன் பிறப்பையும் நிலை நாட்டுவது நம்முடைய கடமையன்றோ?

எது எப்படியானாலும், இந்த தினத்தில், இந்த க்ஷணத்தில் நாமெல்லோரும் பறையர், பார்ப்பார் எல்லோரும் ராஜாங்க விஷயத்தில் ஒரே ஜாதி.

தேசீயக் கல்வி, மனுஷ்யஜாதியின் விடுதலை, இவ்விரண்டு பெருங் காரியங்களைத் தொடங்குவதற்கும் இப்போது காலம் மிகவும் பொருத்தமாக வாய்த்திருக்கிறது.
இவற்றுள் மனுஷ்யஜாதியின் விடுதலை நிறவேற வேண்டுமாயின் அதற்கு பாரத தேசத்தின் விடுதலை இன்றியமையாத மூலாதாரமாகும். 

இங்ஙனம் பாரத தேசம் விடுதலை பெற வேண்டுமாயின் அதற்கு தேசீயக் கல்வியே ஆதாரம்.

”அ….. ன்”

மேலே காட்டிய குறியின் பொருள் யாது?

தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்.
ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ் மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; ‘ஸ்லேட்’ ‘பென்ஸில்’ என்று சொல்லக்கூடாது.

No comments:

Post a Comment