Tuesday, January 31, 2012

நல்லதோர் வீணை

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

குறிப்பு:

இந்த நாளில் என் பெரிய தம்பி இறந்துவிட்டான். இரண்டு வயதுக் குழந்தை. சாதாரண சீதபேதி; பலவித மருந்துகள் கொடுத்தும் குணம் அடையவில்லை; குழந்தை போய்விட்ட அதிர்ச்சியில் என் தந்தை மனம் இடிந்துவிட்டார். சுதேசிக் கப்பலுக்காகக் கணக்கற்ற பணம் கை விட்டுப் போனபோதும், 'இந்தியா’ பத்திரிகை நிறுத்தப்பட்ட போதும், அரசாங்கம் பல கொடுமைகள் செய்தபோதும் சளைக்காது தைரியமாகவே இருந்தார். இந்தச் சம்பவம் நோயாளியை மேல் எறிந்து கலக்கியதைப் போல் அவரை மிகவும் துர்ப்பலமாக்கிவிட்டது. இந்தத் துக்கம் வந்த சமயத்தில் ஐயர், பாரதியார் இருவரும் இடைவிடாமல் அவரோடு பேசிக்கொண்டும் சதுரங்கம் ஆடிக்கொண்டும் பகலைக் கழிப்பார்கள். சாயங்காலம் நாலு மணிக்கு அரவிந்தரின் வீட்டிற்குப் போய் வேதம் உபநிஷத் இவைகளைச் சிந்தனை செய்வார்கள். இரவு பத்து மணி, பதினொரு மணிக்கு வருவார்கள்.

குழந்தை இறந்த அன்று அதை அடக்கம் செய்துவிட்டு இரண்டு மணிக்கு எல்லோரும் வீடு திரும்பினார்கள். பாரதியாருக்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. வயிற்றில் மிகவும் சங்கடப்படுத்தியது. ‘கேட்பன’ என்ற தலைப்பில் நொண்டிச் சிந்து மெட்டில் ‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலைப் பாடினார். குழந்தைகளான எங்களுக்கு அதைப் பாடிக் காட்டினார்.  - யதுகிரி அம்மாள், யதுகிரி நினைவுகள்

Monday, January 30, 2012

கண்ணன் - என் காதலன்

தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக -எனது
நெஞ்சத் துடித்த தடீ!

கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம்-மனது
வெறுத்து விட்ட தடீ!

பாயின் மிசை நானும்-தனியே
படுத் திருக்கையி லே,
வாயினில் வந்ததெல்லாம்-சகியே!
தாயினைக் கண்டாலும்-சகியே!
சலிப்பு வந்த தடீ!

வளர்த்துப் பேசிடு வீர்;
நோயினைப் போலஞ்சி னேன்;-சகியே!
நுங்க ளுறவையெல் லாம்.

உணவு செல்லவில்லை;-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை;
மணம் விரும்பவில்லை;-சகியே!
மலர் பிடிக்கவில்லை;

குண முறுதி யில்லை;-எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்த தில்லை.

பாலுங் கசந்ததடீ!-சகியே!
படுக்கை நொந்த தடீ!
நாலு வயித்தியரும்-இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலந்துச் சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்.

கனவு கண்டதிலே-ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றா மல்,
இனம் விளங்க வில்லை-எவனோ
என்னகந் தொட்டு விட்டான்,
வினவக் கண் விழித்தேன்;-சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில மட்டிலுமே -புதிதோர்
மகிழ்ச்சி கண்ட தடீ!

உச்சி குளிர்ந்ததடீ;-சகியே!
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல்
மனத்துக் கொத்த தடீ!
இச்சை பிறந்ததடீ-எதிலும்
இன்பம் விளைந்த தடீ;
அச்ச மொழிந்த தடீ;-சகியே!
அழகு வந்த தடீ!

எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை
இட்ட விடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ!-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே
கண்ணின் முன் நின்ற தடீ!


Sunday, January 29, 2012

வெள்ளைத் தாமரை

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.                                    (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.                                               (வெள்ளைத்)

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.                                                      (வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம்                  (வெள்ளைத்)

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்.                                            (வெள்ளைத்)

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அனனை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்,                                   (வெள்ளைத்)

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு;
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க.                                          (வெள்ளைத்)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!                                                (வெள்ளைத்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்                 (வெள்ளைத்)

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்!                                     (வெள்ளைத்)   

Saturday, January 28, 2012

போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

போகின்ற பாரதத்தைச் சபித்தல்

வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ

இன்று பார தத்திடை நாய்போல
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.

வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்

ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வா

இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்
விழியி னால் விளக்குவாய் வா வா வா

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா

Friday, January 27, 2012

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)

மந்திர வாதி என்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்,
யந்திர சூனி யங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு)

சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார,
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே,
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)

எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்,
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு)

Thursday, January 26, 2012

பாரத தேசம்

பல்லவி

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

சரணங்கள்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)

Wednesday, January 25, 2012

கண்ணம்மா - எனது குலதெய்வம்

நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

1. பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)

2. மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)

3. தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)

4. துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)

5. நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)

Tuesday, January 24, 2012

கண்ணம்மா என் குழந்தை

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! 1

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே! 2

ஓடி வருகையில் - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ! 3

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ! 4

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ! 5

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ! 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? 7

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய். 8

இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ? 9

மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்
செல்வம் பிறிது முண்டோ? 10
Chinnanchiru Kiliye by AshokSubra

Monday, January 23, 2012

அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

Sunday, January 22, 2012

தேசீயக் கல்வி (பகுதி 3)


நுட்பமான விவரங்கள் கற்றுக்கொடுப்பதற்குத் தகுந்த பாட புஸ்தங்கள் தமிழில் இன்னும் ஏற்படவில்லையாததால், ஆரம்பப் பள்ளிக்கூடத்தில், உபாத்தியாயர்கள் இங்கிலீஷ் புஸ்தகங்களைத் துணையாக வைத்துக்கொண்டு, அவற்றிலுள்ள பொதுப்படையான அம்சங்களை மாத்திரம் இயன்றவரை தேசபாஷையில் மொழி பெயர்த்துப் பிள்ளைகளுக்குச் சிறிது சிறிது கற்பித்தால் போதும்.

திருஷ்டாந்தமாக, ரஸாயன சாஸ்திரம் கற்பிக்குமிடத்தே:-

(அ) உலகத்தில் காணப்படும் வஸ்துக்களெல்லாம் எழுபதே சொச்சம் மூலப்பொருள்களாலும், அவற்றின் பலவகைப்பட்ட சேர்க்கைகளாலும் சமைந்திருக்கின்றன (திருஷ்டாந்தங்களும், சோதனைகளும் காட்டுக.)

(ஆ) அந்த மூல பதார்த்தங்களில், பொன், வெள்ளி, செம்பு, கந்தகம் இவைபோல வழக்கத்திலுள்ள பொருள்கள் இவை; க்ரோமியம், தித்தானியம், யூரேனியம் இவைபோல ஸாதாரண வழகக்த்தில் லகப்படாதன இவை, கனரூபமுடையன இவை, திரவரூபமுடையவ இவை, வாயுரூபமுடையன இவை, இவற்றுள் முக்கியமான மூன்று பதார்த்தங்களின் குணங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டுக. 

(இ) ரஸாயன சேர்க்கை, பிரிவு இவற்றின் இயல்புகள் (பரீக்ஷைகளின் மூலமாக விளக்குக); இவற்றின் விதிகள்.

(ஈ) ரேடியம், ஹெலியம் முதலிய புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட மூல பதார்த்தங்களின் அற்புத குணங்கள். 

(உ) பரமாணுக்கள், அணுக்கள், அணுக்கணங்கள் – இவற்றின் இயல்பு, குணங்கள், செய்கைகள் முதலியன. 

இவைபோன்ற பொது அம்சங்களைப்பற்றிய முக்கியமான செய்திகளை, ஸாதாரண ஸ்ம்பாஷணை நடையில் உபாத்தியாயர்கள் வீட்டில் எழுதிக்கொண்டு வந்து பிள்ளைகளுக்கு வாசித்துக்காட்டி அவர்களை எழுது வைத்துக்கொள்ளும்படி செய்ய வேண்டும்.

இயற்கைநூல் (பிஸிக்ஸ்), ரஸாயனம் (கெமிஸ்ட்ரி), சரீர சாஸ்த்ரம், ஜந்து சாஸ்த்ரம், செடிநூல் (தாவர சாஸ்த்ரம்) – இவையே முக்கியமாக போதிக்க வேண்டியனவாம். 

(ஏ) கைத்தொழில், விவஸாயம், தோட்டப் பயிற்சி, வியாபாரம்

இயன்றவரை மாணக்கர்கள் எல்லாருக்கும், விசேஷமாகத் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு, நெசவு முதலிய முக்கியமான கைத்தொழில்களிலும், நன்செய் புன்செய்ப் பயிர்த்தொழில்களிலும், பூ, கனி காய், கிழங்குகள் விளைவிக்கும் தோட்டத் தொழில்களிலும், சிறு வியாபாரங்களிலும் தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படி செய்தல் நன்று. இதற்கு, மேற்கூரிய மூன்று உபாத்தியாயர்களைத் தவிர, தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகளிலே சற்றுப் படிப்புத் தெரிந்தவர்களும் தக்க லெளகிகப் பயிற்சி யுடைவர்களுமான அனுபவஸ்தர்களைக் கொண்டு ஆரம்பப்பயிற்சி ஏற்படுத்திக் கொடுத்தல் மிகவும் நன்மை தரக்கூடிய விஷயமாகும். 

(ஐ) சரீரப் பயிற்சி 

தோட்டத்தொழில்கள், கிணறுகளில் ஜலமிறைத்தல் முதலியவற்றால் ஏற்படும் சரீரப் பயிற்சியே மிகவும் விசேஷமாகும். பிள்ளைகளுக்குக் காலையில் தாமே ஜலமிறைத்து ஸ்நானம் செய்தல், தத்தம் வேஷ்டி துணிகளைத் தோய்த்தல் முதலிய அவசியமான கார்யங்களில் ஏற்படும் சரீரப் பயிற்சியும் நன்றேயாம். இவற்றைத் தவிர, ஓட்டம், கிளித்தட்டு, சுடுகுடு முதலிய நாட்டு விளையாட்டுகளும், காற்பந்து (Foot Ball) முதலிய ஐரோப்பிய விளையாட்டுகளும், பிள்ளைகளுடைய படிப்பில் பிரதான அம்சங்களாகக் கருதப்பட வேண்டும். குஸ்தி, கஸரத், கரேலா முதலிய தேசீயப் பயிற்சிகளும் இயன்றவரை அனுஷ்டிக்கப்படலாம். ஐரோப்பிய முறைப்படி பிள்ளைகளைக் கூட்டமாகக் கூட்டி, கபாத்து (ட்ரில்) பழக்குவித்தல் இன்றியமையாத அம்சமாகும். ஸெளகர்யப்பட்டால் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிக்கும் மரக்குதிரை, ஸமக் கட்டைகள் (parallel bars), ஒற்றைக் கட்டை (horizontal bar) முதலிய பழக்கங்களும் செய்விக்கலாம். படிப்பைக் காட்டிலும் விளையாட்டுக்களில் பிள்ளைகள் அதிக சிரத்தை எடுக்கும்படி செய்ய வேண்டும். ‘சுவரில்லாமல் சித்திரமெழுத முடியாது.’ பிள்ளைகளுக்கு சரீரபலம் ஏற்படுத்தாமல் வெறுமே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர்களுக்கு நாளுக்குநாள் ஆரோக்யம் குறைந்து, அவர்கள் படித்த படிபெல்லாம் விழலாகி, அவர்கள் தீராத துக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரிடும். 

(ஓ) யாத்திரை (எக்ஸ்கர்ஷன்)

பிள்ளைகளை உபாத்தியாயர்கள் பக்கத்தூர்களிலும் தமதூரிலும் நடக்கும் உற்சவங்கள் திருவிழாக்கள் முதலியவற்றுக்கு அழைத்துச் சென்று, மேற்படி விழக்களின் உட்பொருளைக் கற்பித்துக் கொடுத்தல் நன்று. திருவிழாவுக்கு வந்திருக்கும் பலவகை ஜனங்களின் நடையுடை பாவைகளைப் பற்றிய ஞானம் உண்டாகும்படி செய்ய வேண்டும். வனபோஜனத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும். அங்கு பிள்ளைகள் தமக்குள் நட்பும், அன்பும், பரஸ்பர ஸம்பாஷணையில் மகிழ்ச்சியும் எய்தும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். மலைகள் கடலோரங்களுக்கு அழைத்துச் சென்று, இயற்கையில் அழகுகளையும் அற்புதங்களையும், பிள்ளைகள் உணர்ந்து மகிழும்படி செய்ய வேண்டும். பலவிதமான செடி கொடிகள், மரங்கள், லோஹங்கள், கல்வகைகள் முதலியவற்றின் இயல்பைத் தெரிவிக்க வேண்டும். 

பொதுக் குறிப்புகள்

மேலே காட்டிய முறைமைப்படி தேசீயப் பள்ளிக்கூடம் நடத்துவற்கு அதிகப் பணம் செலவாகாது. மாஸம் நூறு ரூபாய் இருந்தால் போதும். இந்தத் தொகையை ஒவ்வொரு கிராமத்திலுள்ள ஜனங்களும் தமக்குள்ளே சந்தா வசூலித்துச் சேர்க்கவேண்டும். செல்வர்கள் அதிகத் தொகையும், மற்றவர்கள் தத்தமக்கு இயன்றளவு சிறு தொகைகளும் கொடுக்கும்படி செய்யலாம். 100 ரூபாய் வசூல் செய்ய முடியாத கிராமங்களில் 50 ரூபாய் வசூலித்து உபாத்தியாயர் மூவருக்கும் தலைக்கு மாஸச் சம்பளம் 12 ரூபாய் கொடுத்து, மிச்சத் தொகையை பூகோளக் கருவிகள், “ஸயன்ஸ்” கருவிகள், விவசாயக் கருவிகள் முதலியன வாங்குவதில் உபயோகப்படுத்தலாம். 100 ரூபாய் வசூலிக்கக்கூடிய கிராமங்களில் உபாத்தியாயர் மூவருக்கும், தலைக்கு 20 ரூபாய் வீதம் சம்பளம் ரூபாய் அறுபது போக, மிச்சத் தொகையை மேற்அடி கருவிகள் முதலியன வாங்குவதில் உபயோகப்படுத்தலாம். மேற்படி கருவிகள் எப்போதும் வாங்கும்படி நேரிடாது. முதல் இரண்டு வருஷங்களுக்கு மாத்திரம் மாஸந்தோறும் மிஞ்சிந் தொகையை இங்ஙனம் கருவிகள் வாங்குவதிலும் புஸ்தகங்கள் வாங்குவதிலும் செலவிட்டால் போதும். அப்பால் மாஸந்தோறும் மிஞ்சுகிற பணத்தைப் பள்ளிக்கூடத்துக்கு க்ஷேம நிதியாக ஒரு யோக்கியமான ஸ்ரீமானிடம் வட்டிக்குப் போட்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறன்றி ஆரம்பத்திலேயே கருவிகள் முதலியன வாங்குவதற்குப் பிரத்யேகமான நிதி சேகரித்து அவற்றை வாங்கிக் கொண்டுவிட்டால் பிறகு தொடக்க முதலாகவே மிச்சப் பணங்களை வட்டிக்குக் கொடுத்துவிடலாம். 

மாசம் நாற்பது ரூபாய் வீதம் மிச்சப் பணங்களை க்ஷேமநிதியாகச் சேர்த்துவந்தால் பதினைந்து வருஷங்களுக்குள்ளே தகுந்த தொகையாய்விடும். பிறகு மாஸவசூலை நிறுத்திவிட்டுப் பள்ளிக்கூடத்தை அதன் சொந்த நிதியைக் கொண்டே நடத்திவரலாம். தவிரவும், அப்போதப்போது அரிசித் தண்டல், கலியாண காலஙக்ளில் ஸம்பாவனைகள், விசேஷ நன்கொடைகள் முதலியவற்றாலும் பள்ளிக்கூடத்து நிதியைப் போஷணை செய்து வரலாம். 

எல்லாவிதமான தானங்களைக் காட்டிலும் வித்யாதானமே மிகவும் உயர்ந்தது என்று ஹிந்து சாஸ்த்ரங்கள் சொல்லுகின்றன. மற்ற மத நூல்களும் இதனையே வற்புறுத்துகின்றன. ஆதலால் ஈகையிலும் பரோபகாரத்திலும் கீர்த்திபெற்றதாகிய நமது நாட்டில், இத்தகையப் பள்ளிக்கூடமொன்றை மாஸ வசூல்களாலும், நூற்றுக் கணக்காகவும், ஆயிரக் கணக்காகவும் அல்லது சிறு சிறு தொகைகளாகவும் சேகரிக்கப்படும் விசேஷ நன்கொடைகளாலும் போஷித்தல் சிரமமான காரியம் அன்று. இது மிகவும் எளிதான காரியம். 

இந்தப் பள்ளிக்கூடங்களை ஒரு சில மனிதரின் ப்ரத்யேக உடைமையாகக் கருதாமல், கோயில், மடம், ஊருணி முதலியன போல் கிராமத்தாரனைவருக்கும் பொது உடைமையாகக் கருதி நடத்த வேண்டும். பொது ஜனங்களால் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுக்கப் படுவோரும், ஜந்து வருஷவங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டியவருமாகிய பத்து கனவான்களை ஒரு நிர்வாக ஸபையாகச் சமைத்து, அந்த ஸபையின் மூலமாகப் பாடசாலையின் விவகாரங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நிர்வாக ஸபையாரைத் தெரிந்தெடுப்பதில் கிராமத்து ஜனங்களில் ஒருவர் தவிரமல் அத்தனை பேருக்கும் சீட்டுப் போடும் அதிகாரம் ஏற்படுத்த வேண்டும். 

இத்தகைய கல்வி கற்பதில் பிள்ளைகளிடம் அரையணாக் கூடச் சம்பளம் வசூலிக்கக் கூடாது. தம்முடைய பிள்ளைகளுக்குச் சம்பளங்கொடுக்கக்கூடிய நிலைமையிலிருந்து, அங்ஙனம் சம்பளங்கொடுக்க விரும்புவோரிடம் அத்தொகைகலை நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், மிகவும் ஏழைகளான பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடத்திலிருந்தே இயன்றவரை புஸ்தகங்களும், வஸ்த்ரங்களும், இயன்றவிடத்தே ஆஹாரச் செலவும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆண்மக்களுக்கு மட்டுமன்றி, இயன்றவரை பத்து வயதுமட்டுமேனும் பெண்குழந்தைகளும் வந்து கல்வி கற்க ஏற்பாடு செய்யலாம். அங்ஙனம் செய்தல் மிகவும் அவசியமாகவே கருதத் தகும். ஆனால், ஜனங்கள் அறியாமையால் இங்ஙனம் பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் சேர்ந்து படிக்கும் விஷயத்தில் அக்ஷேபம் சொல்லக்கூடிய கிராமங்களில், இதை வற்புறுத்தாமல், முதலில் ஆண்பிள்ளைகளுக்கு மாத்திரமாவது தேசீயக் கல்வி பயிற்ற ஏற்பாடு செய்யலாம். பெண்குழந்தைகளுக்கு இதே மாதிரியாக உபாத்திச்சிமார் மூலமாக கல்வி பயிற்றக்கூடிய இடங்களில் அதனையும் செய்யலாம். 

பாடசாலை வைப்பதற்குத்தக்க இடங்கல் செல்வர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இது ஸெளகர்யப்படாத இடங்களில் கோயில்கள்,  மடங்கள் முதலிய பொது ஸ்தலங்களிலே பாடசாலை நடத்தலாம். அதிகப் பணச்செலவின்றி ஸெளகர்யமும், நல்ல காற்றோட்டமும் ஒளிப்பெருக்கமுடைய கூறைக் கட்டிடங்கள் கட்டி அவற்றிலே பாடசாலை நடத்தினால் போதும். இடம் பெரியதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஏராளமான பணஞ் செலவுசெய்து கட்டிடங்கள் கட்ட வேண்டிய அவசியமுமில்லை. ஸாதாரண ஸெளகர்யங்கள் பொருந்திய இடங்களில் கல்வி நன்றாகக் கற்பித்தால் அதுவே போதும். 

இங்ஙனம் ஆரம்பப்பாடசாலைகளில் படித்துத் தேறும் பிள்ளைகள் அந்த அளவிலே ஏதேனும் தொழில் அல்லது வியாபாரத்துறையில் புகுந்து தக்க ஸம்பாத்யம் செய்யத் தகுதியுடையோராய் விடுவார்கள். அங்ஙனமின்றி, நாட்டிலுள்ள பல உயர்தரப் பாடசாலைகளில் அவர்கள் சேர்ந்து மேற்படிப்பு படிக்க விரும்பினாலும் அதற்கு இப்பள்ளிக் கூடங்கள் தக்க ஸாதனங்களேயாகும். மேலும் அவ்விதமான ஆரம்பப் பாடசாலைகள் நன்கு நடந்து வெற்றி பெற்றுவிடுமாயின், அப்பால் இதே கொள்கைகளை ஆதாரமாகக் கொண்ட மேல்தர தேசீயப் பாடசாலைகள் ஏற்படுத்தக் கூடிய இடங்களில் அங்ஙனம் செய்யலாம். 

முக்கியமான குறிப்பு:- ஹிந்துக்களல்லாத பிள்ளைகள் இப்பாடசாலைகளில் சேர்ந்தால் அவரவர் மதக்கொள்கைகளை அன்னியமத தூஷணையின்றி பெருந்தன்மையாகக் கற்றுக்கொடுப்பதற்குரிய வழிகள் செய்யவேண்டும். 

முடிவுரை

தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசீயக் கல்வி இன்றியமையாதது. தேசீயக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம். இந்த விஷயத்தை ரவீந்தரநாத் தாகூர், ஆனி பெஸண்ட், நீதிபதி மணி அய்யர் முதலிய ஞானிகள் அங்கீகரித்தும், நம் நாட்டில் தேசீயக்கல்வியைப் பரப்புதற்குரிய தீவிரமான முயற்சிகள் செய்கின்றனர். ஆதலால், இதில் சிறிதேனும் அசிரத்தை பாராட்டாமல், நமது தேச முழுதும், ஒவ்வொரு கிராமத்திலும் மேற்கூறியபடி பாடசாலைகள் வைக்க முயலுதல் நம்முடைய ஜனங்களின் முதற் கடமையாம். 

தேசீயக் கல்வி (2)

ஸ்ரீமான் ஜினராஜ தாஸரின் கருத்து

“கல்வியைப் பற்றிய மூலக் கருத்துக்கள் எல்லா நாடுகளுக்கும் பொது, ஆனால், அந்தக் கொள்கைகளை வெவ்வேறு தேசங்களில் பிரயோகப்படுத்தும்போது இடத்தின் குணங்களுக்கும், ஜனங்களின் குணங்களுக்கும் தக்கபடி கல்வி வழியும் வெவ்வேறாய்ப் பிரிந்து தேசீயமாகி விடுகிறது. இங்கிலாந்தின் கல்வி முறையில் பலவகை விளையாட்டுகளும் சரீரப்பயிற்சி முறைகளும் கட்டாயமாக ஏற்பட்டிருக்கின்றன. இத்தாலியின் அவை புறக்கணிக்கப்படுகின்றன. அங்கு கற்பனா சக்தியும், சிற்பம் முதலிய கலைகளும் தலைமையாகக் கொண்ட கல்வியே பயிற்றப்படுகிறது. இதன் காரணம், இங்கிலாந்தில் பயிர் விளைவு குறைவு; ஆதனால், அநேக ஜனங்கள் வெளித்தேசங்களில் குடியேறி ஜீவனம் செய்தல் அவசியமாகிறது; அதற்குரிய குணங்களை ஆங்கிலக் கல்வி முக்கியமாகக் கருதுகிறது. அமெரிக்காவில், ஜனாதிகாரமே மேலான ராஜ்ய தர்மமென்றும், எத்தனை பெரிய ஏழையும் எத்தனை பெரிய செல்வனும் தம்முள் ஸமமேயன்றி அவர்களில் ஏற்றத்தாழ்வு கிடையாதென்றும், பிறரைச் சார்ந்து நிற்காமல் தன்மதிப்புடன் பிழைக்கத்தகுந்த கூலி தரும் எவ்விதமான கைத்தொழிலிலும் அவமானத்துக்கு இடமில்லையென்றும் பாடசாலைகளில் முக்கிய போதனையாகக் கற்பிக்கிறார்கள். இந்தியாவில் மாத்திரம் சுதேசீயக் கல்வி இல்லை. இந்நாட்டுக் கல்வி முழுதும் பிரிட்டிஷ் குணமுடையதாக இருக்கிறது. ஒரு வாரத்தில் இரண்டு மூன்று மணிநேரம் ஹிந்துதேச சரித்திரமும் தேசபாஷைகளும் கற்றுக்கொடுத்தால் போதாது. அதினின்றும் சுதேசீய ஞானம் ஏற்படாது. சென்னையில் ‘பிரெஸிடென்ஸி காலெஜ்’ என்று சொல்லப்படும் மாகாணக் கலாசாலையின் கட்டடம் நமது தேசமுறையைத் தழுவியதன்று. பழைய இத்தாலி வழியொன்றை அனுஸரித்தது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் ஸங்கங்களின் கட்டிடம் இத்தாலி முறையிலா கட்டியிருக்கிறார்கள்? அதுபோலவே, பாரததேச முறைமைப்படி கட்டிய கட்டிடங்களில் கற்றுக்கொடுக்காத கல்வி இங்கு சுதேசீயக் கல்வி என்று சொல்லத்தகுந்த யோக்யதை பெறாது.”

இது ஜினராஜதாஸர் சில தினங்களின் முன்பு சென்னைப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்திருக்கும் ஒரு வ்யாஸத்தின் ஸாரமாம். இதில் கடைசி அம்சம் மிகவும் கவனிக்கத் தகுந்தது. நமது தேசத்து முறைமைப்படி கட்டிய கட்டிடத்திலேயன்றிப் பிறநாட்டு முறை பற்றிக் கட்டிய மனைகளிலேகூட தேசீயக்கல்வி பயிற்றுதல் ஸாத்யமில்லையானால், ஓஹோ, பாஷை விஷயத்தை என்னென்று சொல்வோம்! தமிழ் நாட்டில் தேசீயக்கல்வி கற்பிக்க வேண்டுமானால், அதற்குத் தமிழே தனிக் கருவியாக ஏற்படுத்த வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தமிழ் நாட்டுப் பெண்கள்

தமிழ் நாட்டு ஸ்திரீகளையும் சேர்த்துக் கொண்டு, அவர்களுடைய யோசனைகளையும் தழுவி நடத்தாவிடின் அக்கல்வி சுதேசீயம் ஆக மாட்டாது. தமிழ்க் கல்விக்கும் தமிழ்க் கலைகளுக்கும் தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க்கோயில், தமிழரசு, தமிழ்க்கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ? இப்போது ஸ்ரீமதி அனிபெஸண்ட் தம்முடன் திலகர் ரவீந்த்ரநாதர் முதலிய மஹான்கள் பலரையும் சேர்த்துக்கொண்டு மீளவும் எழுப்பியிருக்கும் தேசீயக்கல்வி முயற்சியில் ஏற்கெனவே நீதிபதி ஸதாசிவ அய்யர், பத்தினி ஸ்ரீமதி மங்களாம்பாள் முதலிய ஓரிரண்டு ஹிந்து ஸ்த்ரீகள் ஸ்ர்வகலாஸங்கத்தின் ஆட்சிமண்டலத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது போதாது. தேசியக் கல்வியின் தமிழ்நாட்டுக் கிளையென ஒரு கிளை ஏற்பட வேண்டும். அதன் ஆட்சிமண்டலத்தில் பாதி தொகைக்குக் குறையாமல் தமிழ் ஸ்த்ரீகள் கலந்திருக்க வேண்டும். ஒரு பெரிய ஸர்வ கலா ஸங்கத்தின் ஆட்சிமண்டலத்தில் கலந்து தொழில் செய்யத்தக்க கல்விப் பயிற்சியும் லெளகிக ஞானமும் உடைய ஸ்த்ரீகள் இப்போது தமிழ் நாட்டில் பலர் இலர் என ஆக்ஷேபங் கூறுதல் பொருந்தாது. தமிழ் நாடு முழுதுந் தேடிப்பார்த்தால் ஸ்ரீமதி மங்களாம்பாளைப் போல இன்னும் பத்து ஸ்த்ரீகள் அகப்படமாட்டார்கள் என்று நினைக்க ஹேதுவில்லை. எதற்கும் மேற்படி ஆட்சி மண்டலம் சமைத்து, அதில பத்துப் பெண்களைக் கூட்டி, நடத்த வேண்டிய காரியங்களைப் பச்சைத் தமிழில் அவர்களிடம் கூறினால், அதினின்றும் அவர்கள் பயன்படத்தக்க பல உதவி யோசனைகளையும், ஆண்மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புது ஞானங்களையும் சமைத்துக் கொடுப்பார்கள் என்பதில் ஸந்தேஹமில்லை. முன்பு தமிழ் நாட்டை மங்கம்மா ஆளவில்லையோ? ஒளவையார் உலக முழுவதும் கண்டு வியக்கத்தக்க நீதி நூல்கள் சமைக்கவில்லையோ?

மீர்ஜா ஸமி உல்லா பேக்

முன்பு முகம்மதிய ஸர்வ கலா ஸங்கம் ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுந்த முயற்சியில் தலைவர்களில் ஒருவராக உழைத்த மீர்ஜா ஸமி உல்லா பேக், “ஜாதி மத பேதங்களால் சிதைந்து போயிருப்பதால், பாரத தேசத்தார் மேலே எழமாட்டார்களென்று பிறர் கூறும் அவலச் சொல்லை நீங்கள் கேட்காதிருக்க வேண்டினால், மேலும் ஸ்வராஜ்யத்துக்குத் தகுதியுடையோராக உங்களைக் காட்டிக்கொள்ள விரும்பினால், தேசீயக் கல்விக்குத் துணை செய்யுங்கள். இந்தத் தருணம் தவறினால், இனி வேறு தருணம் இப்படி வாய்க்காது” என்கிறார். தேசீயக் கல்வியும் ஸ்வராஜ்யமும் தம்முள்ளே பிரிவு செய்யத் தகாதன என்றும், இவ்விரண்டினுள் ஒன்றன் அவசியத்தை அங்கீகாரம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அரவிந்த கோஷ் சொல்லியதும் மேற்படி ஸமி உல்லா சொல்வதும் பொருத்தமாகவே காணப்படுகின்றன. எந்த வினைக்கும் காலம் ஒத்து நின்றாலொழிய அதை நிறைவேற்றுதல் மனிதனுக்கு ஸாத்தியமில்லை. விதியின் வலிமை சாலவும் பெரிது. ஆனால் விதி இப்போது தேசீயக்கல்வி முயற்சிக்கு அநுகூலமான காலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்ற செய்தியை மீர்ஜா ஸமி உல்லா நம் நாட்டாருக்கு நினைப்பூட்டுகிறார். 

‘காளயுக்தி’ என்பது காலயுக்தி; அதாவது காலப் பொருத்தம். காலம் இந்த வர்ஷத் தொடக்கத்தில் எந்தப் பெருஞ் செயலுக்கும் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

பகவத் கீதையில் துர்க்காஸ்துதி முதலிய சில அம்சங்கல் சேர்ந்தும், ஹம்ஸ யோகி என்பவரின் ‘கீதா ரஹஸ்யம்’ என்னும் உரைநூலில் கூறப்பட்டதைத் தழுவி 18 அத்யாயக் கணக்கை 24 அத்யாயமாக மாற்றியும், சென்னை சுத்த தர்ம மண்டலத்தார் ஒரு புதிய பதிப்புப் போட்டிருக்கிறார்கள். 

இதற்கு நீதி நிபுண மணி அய்யர் ஒரு முகவுரை எழுதியிருக்கிறார். அந்த முகவுரையில் சக்தி தர்மத்தை மிகவும் உயர்த்திக் கொண்டாடுகிறார். 

இப்படிப்பட்ட மணி அய்யரும் அனி பெஸண்ட் அம்மையும் கலந்து நடத்தும் தேசீயக்கல்வி முயற்சியில் பெண்களின் ஆதிக்கம் மேன்மேலும் ஓங்கி வளரும் என்பது சொல்லாமலே விளங்கும். 

மேற்பதிப்பின் முதல் ஏட்டின் முதுகுப் புறத்தின் தலைப்பில் ‘ஓம் நம; ஸ்ரீ பாமர்ஷிப்யோ யோகிப்ய: (யோகிகளாகிய தலைமை முனிவரைப் போற்றுகிறோம் ஓம்) என்று அச்சிட்டு, அடியில், 

“ஸ்ரீம்; ஶ்ரைம்; ஶ்ரைம்; ஓம் –தாஸ”:

என்ற மந்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. 

இம்மந்திரங்களின் பொருள் யாதெனில்-

ஸ்ரீம் – லக்ஷ்மியை
(ஸ்ரீ, திரு, என்றவை ஒரு மொழியின் வடிவங்கள்)

ஶ்ரைம் – ஆச்ரயிக்கிறேன், சார்ந்து நிற்கிறேன்;
ஆதலால்,
ஶ்ரைம் – அசைகிறேன்,
ஓம் – ப்ரணவப் = ப்ர+நவம்= மேன்மேலும் புதியநிலை; 

எப்போதும் க்ஷணந்தோறும் புதிய புதிய உயிருடன் என்றும் அழியாத அமிர்த நிலை பெற்று விளங்குவேன். 

தாஸ:=அடியேன்.

இப்பொருளுடைய மந்திரங்களை துர்க்காஸ்துதி சேர்ந்த கீதைப் பதிப்புடன் ஆரம்பத்திலே போட்டது மிகவும் பொருத்த முடைய செய்கையேயாம். 

மஹா சக்தியே தாய் அல்லது மனைவி வடிவத்தில் மனிதன் உயிருக்குத் துணைபுரிகிறாள். ஆதலால் பெண்ணை ஆச்ரயித்த வாழ்க்கையே தேவவாழ்க்கை. “வந்தே மாதரம்” என்பதும், “ஓம் ஸ்ரீம்” என்பனவும் நம்முடைய தேசக் கல்விச் சாலைகளின் வாயிற்கதவுகளிலும் கொடிகளிலும் பொறிக்கத்தக்க மந்திரங்களாம்.

மேலும் அந்த பதிப்பின் மூன்றாம் ஏட்டின் முதுகுப் புறத்தைத் திருப்பினால், அதில், நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கண்ணன் நடத்த, அதில் அர்ஜுனன் வீற்றிருப்பதைப் போல் சித்திரம் வரையப்பட்டிருக்கிறது; இஃது ஆண் மக்கள் ஒருவருக்கொருவர் நட்புச் செலுத்த வேண்டிய நெறியைக் காட்டுவது. 

ஆண்மக்கள் இருவர் பரஸ்பரம் எங்ஙனம் *பாவனை* செய்ய வேண்டும்? நர நாராயணரைப்போலே, நீ உனது மித்திரனைக் கண்ணனாகவும், உன்னைப் பார்த்தனாகவும், அவன் உன்னைக் கண்ணனாகவும், தன்னைப் பார்த்தனாகவும் உணர்ந்து கொள்ள வேண்டிய நெறி மேற்படி மந்திரங்களாலும் சித்திரத்தாலும் குறிக்கப்படுவது. 

இந்த நெறி தேசியக் கல்விச் சாலைகளில் கற்பிக்கும் விஷயங்களுள் ஒன்றாகக் கற்பிக்கப்படவேண்டும்.

ஹிந்து முஹம்மதிய ஸமரஸம்     
        
தேசியக் கல்வியின் முஹம்மதியர் எத்தனைக்கெத்தனை சேர்ந்துழைக்கிறார்களோ, அத்தனைக் கத்தனை அம் முயற்சி அதிகப் பயன் அடையும். மத பேதங்களை வ்யாஜமாகக் காட்டி ஹிந்து முஹம்மதியர் ராஜரீக முதலிய பொது விஷயங்களிலும் கூடியுழைக்காமல் தடுக்க வேண்டும் என்று ஆங்கிலோ-இந்திய பத்திராதிபர் முதலிய பொதுச் சத்துருக்கள் செய்த தீய முயற்சிகளெல்லாம் விழலாய்விட்டன. மஹான் முஹம்மது ஆலி, அவர் அண்ணன் ஷெளகத் ஆலி, ஸேட் யாகுப் ஹுஸேன், பெரிய ஜினா, மஹமதாபாத் ராஜா முதலிய மேலோர்களின் ப்ரயத்னத்தால் ஹிந்து முஹம்மதியர் அண்ணன் தம்பிகளென்பது தென் அமெரிக்காக் கண்டத்தாருக்குக்கூட ஸம்சயம் ஏற்பட இடமில்லாமல் பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணி போல் நிலைநிறுத்தப்பட்டு விட்டது. 

மேலும் இந்தியாவிலுள்ள முஸல்மான்களில் பலர் ஹிந்து ஸந்ததியார். அவர்களுடைய நெஞ்சில் ஹிந்து ரத்தம் புடைக்கிறது. இங்ஙன மில்லாமல் வெறும் *பிரட்டாணிய* அராபிய பாரஸீக மொகாலய ஸந்ததியாக இருப்போரும் இந்த தேசத்தில் ஆயிர வருஷங்களுக்கு மேலாக வாழ்வதால், ஹிந்து ஜாதியாராகவே கருதத்தக்கவர் ஆவர். எங்ஙனமெனில், ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன்; சீனத்தில் பிறந்தவன் சீனன். ஹிந்து தேசத்தில் பிறந்தவன் ஹிந்து; இதர தேசங்களில் தேச எல்லையே ஜாதி எல்லையாகக் காணப்படுகிறது; இந்த நாட்டிலும் அதே மாதிரி ஏன் செய்யக்கூடாது?

இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்துஜாதி. 

(2) கிறிஸ்தவர்

தேசீயக் கல்வி முயற்சிகளில் சேரக்கூடாதென்று ஒரு சில மூடப் பாதிரிகள் சொல்லக்கூடும். அதை ஹிந்துக் கிறிஸ்தவர் கவனிக்கக்கூடாது. தேசீயக் கல்வியில்,  ரிக்வேதமும், குரானும், பைபிலும் ஸமானம். கிறிஸ்து, கிருஷ்ணன் என்பது பர்யாய நாமங்கள். வங்காளத்தில் ஹிந்துக்கள் கிருஷ்ணதாஸ பாலன் என்று சொல்வதற்குக் கிறிஸ்தோதாஸ் பால் என்று சொல்கிறார்கள். 

(3) மனுஷ்யத்தன்மை

ஆங்கிலேயர், பிராமணர், ஆஸ்திரேலியாவில் முந்தி வேட்டைகளில் அழிக்கப்பட்ட புதர்ச்சாதியார் (Bushmen) – எல்லாரும் பொதுவில் ‘மனிதர் ஆதாம் ஏவாவழியில் பிறந்தவர்கள்’ என்று கூறி, முஹம்மதியக் கிறிஸ்தவ வேதங்கள் ‘மனிதர் எல்லோரும் ஒன்று’ என்பதை உணர்த்துகின்றன. மஹாபாரதத்தில், மனிதர் தேவர், புட்கள், பாம்புகள் எல்லோருமே காச்யப ப்ராஜபதியின் மக்களாதலால் ஒரே குலத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

வேதாந்த சாஸ்த்ரமோ, பிராமணர், நாயர், முதலை, கரடி, வெங்காயப்பூண்டு முதலிய ஸகல ஜீவன்களும் பரமாத்மாவின் அம்சங்களே யன்றி வேறல்ல என்று பல நூற்றாண்டுகளாகப் பறையறைந்துகொண்டு வருகிறது. 

ஆதலால், தேசீயக்கல்வி முயற்சியில் ஜாதிமத வர்ணபேதங்களை கவனிக்கக் கூடாதென்று அரவிந்த கோஷ், திலக், அனி பெஸண்ட் முதலியவர்கள் சொல்லுவதை இந்த நாட்டில் எந்த ஜாதியாரும், எந்த மதஸ்தரும், எந்த நிறத்தையுடையவரும் மறுக்க மாட்டார்களென்று நம்புகிறேன். 

அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். கான்பரன்ஸ் என்றும், மீட்டிங் என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தை சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! படிப்பில்லாத ஜனங்கள் மிருகங்களுக்குச் சமானமென்று திருவள்ளுவர் பச்சைத் தமிழிலே சொல்லுகிறார். நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும், நம்மிலே முக்காற் பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒருவழி பிறக்கவில்லையே! ஏன்? எதனாலே? காரணந்தான் என்ன?

‘காள யுக்தி’

காளயுக்தி என்பது கால யுக்தி; அதாவது, காலத்தின் பொருத்தம்; காலம் இந்த வருஷத்தின் ஆரம்பத்தில் எந்தப் பெருஞ் செயல்களுக்கும் மிகவும் பொருத்தமாகச் சமைந்திருக்கிறது.
தேசீயக் கல்வி, மனுஷ்யஜாதியின் விடுதலை, இவ்விரண்டு பெருங் காரியங்களைத் தொடங்குவதற்கும் இப்போது காலம் மிகவும் பொருத்தமாக வாய்த்திருக்கிறது.
இவற்றுள் மனுஷ்யஜாதியின் விடுதலை நிறவேற வேண்டுமாயின் அதற்கு பாரத தேசத்தின் விடுதலை இன்றியமையாத மூலாதாரமாகும். 

இங்ஙனம் பாரத தேசம் விடுதலை பெற வேண்டுமாயின் அதற்கு தேசீயக் கல்வியே ஆதாரம்.

”அ….. ன்”

மேலே காட்டிய குறியின் பொருள் யாது?

தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்.
ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ் மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; ‘ஸ்லேட்’ ‘பென்ஸில்’ என்று சொல்லக்கூடாது.

Saturday, January 21, 2012

தேசீயக் கல்வி (பகுதி 2)


(ஈ) மதப் படிப்பு

நான்கு வேதங்கள், ஆறு தர்சனங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிஹாஸங்கள், பகவத்கீதை, சித்தர் பாடல்கள், சித்தர் நூல்கள் – இவற்றை ஆதாரமாகக் கொண்டது ஹிந்து மதம். ஹிந்து மதத்தில் கிளைகள் இருந்தபோதிலும், அக்கிளைகள் சில சமயங்களில் அறியாமையால் ஒன்றை யொன்று தூஷணை செய்து கொண்டபோதிலும், ஹிந்துமதம் ஒன்றுதான்; பிரிக்க முடியாது. வெவ்வேறு வ்யாக்யானங்கள் வெவ்வேறு அதிகாரிகளைக் கருதிச் செய்யப்பட்டன. பிற்காலத்தில் சில குப்பைகள் நம்முடைய ஞான ஊற்றாகிய புராணங்கள் முதலியவற்றிலே கலந்துவிட்டன. மத த்வேஷங்கள், அனாவசிய மூட பக்திகள் முதலியவனே அந்தக் குப்பைகளாம். ஆதலால், தேசீயப் பள்ளிக்கூடத்து மாணாக்கர்களுக்கு உபாத்தியாயர் தத்தம் இஷ்ட தெய்வங்களினிடம் பரம பக்தி செலுத்தி வழிபாடு செய்து வரவேண்டும் என்று கற்பிப்பதுடன், இதர தெய்வங்களைப் பழித்தல், பகைத்தல் என்ற மூடச் செயல்களை கட்டோடு விட்டுவிடும்படி போதிக்கவேண்டும். ‘ஏகம் ஸ்த் விப்ரா பஹுதா வதந்தி’ (கடவுள் ஒருவரே, அவரை ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர்)  என்ற ரிக்வேத உண்மையை மாணாக்கரின் உள்ளத்தில் ஆழப் பதியுமாறு செய்ய வேண்டும். மேலும், கண்ணபிரான் ‘எல்லா உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்’ என்று கீதையில் கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர் – எல்லா உயிர்களும் பரமாத்மாவின் அம்சங்களே என்பதை நன்கறிந்து அவற்றை மனமொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையை செய்துவர வேண்டும்’ என்பது ஹிந்துமதத்தின் மூல தர்மம் என்பதை மாணாக்கர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். மாம்ஸ போஜனம் மனிதன் உடல் இறைச்சியைத் தின்பதுபோலாகும் என்றும், மற்றவர்களைப் பகைத்தலும் அவர்களைக் கொல்வது போலே யாகும் என்றும் ஹிந்து மதம் கற்பிக்கிறது. ‘எல்லாம் பிரம்ம மயம்’, ‘ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்ற வசனங்களால் உலக முழுதும் கடவுளின் வடிவமே என்று ஹிந்து மதம் போதிக்கிறது. ‘இங்ஙனம் எல்லாம் கடவுள்மயம் என்றுணர்ந்தவன் உலகத்தில் எதற்கும் பயப்படமாட்டான்; எங்கும் பயப்பட மாட்டான். எக்காலத்திலும் மாறாத ஆனந்தத்துடன் தேவர்களைப் போல் இவ்வுலகில் நீடூழி வாழ்வான்’ என்பது ஹிந்து மதத்தின் கொள்கை. இந்த விஷயங்களெல்லாம் மாணாக்கருக்கு தெளிவாக விளங்கும்படி செய்வது உபாத்தியாயர்களின் கடமை. மத விஷயமான போராட்டங்கள் எல்லாம் சாஸ்த்ர விரோதம்; ஆதலால், பரம மூடத்தனத்துக்கு லக்ஷணம். ஆசாரங்களை எல்லாம் அறிவுடன் அனுஷ்டிக்கவேண்டும். ஆனால், ஸமயக் கொள்கைக்கும் ஆசார நடைக்கும் தீராத ஸம்பந்தம் கிடையாது. ஸமயக் கொள்கை எக்காலத்திலும் மாறாதது. ஆசாரங்கள் காலத்துக்குக் காலம் மாறுபடும் இயல்புடையன. 

ஸ்ரீராமாயண மஹாபாரதங்களைப் பற்றி பிரஸ்தாபம் நடத்துகையிலே, நான் ஏற்கனவே சரித்திரப் பகுதியிற் கூறியபடி, இதிஹாஸ புராணங்களில் உள்ள வீரர், ஞானிகள் முதலியோரின் குணங்களை நாம் பின்பற்றி நடக்க முயலவேண்டும். உண்மை, நேர்மை, வீர்யம், பக்தி, ஸ்வஜனாபிமானம், ஸர்வ ஜீவ தயை முதலிய புராதன வீரர்களின் குணங்களையும் பிள்ளைகளுக்கு நன்றாக உணர்த்த வேண்டும். சிபி சக்கரவர்த்தி புறாவைக் காப்பாற்றும் பொருட்டாக தன் சதையை அறுத்துக் கொடுத்த கதை முதலியவற்றின் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டி, மாணாக்கர்களுக்கு ஜீவகாருண்ணியமே எல்லா தர்மங்களிலும் மேலானது என்பதை விளக்கவேண்டும். ஏழைகளுக்கு உதவி புரிதல், கீழ் ஜாதியாரை உயர்த்திவிடுதல் முதலியனவே ஜன ஸமூஹக் கடமைகளில் மேம்பட்டன என்பதைக் கற்பிக்க வேண்டும். 

(உ) ராஜ்ய சாஸ்திரம்
ஜனங்களுக்குள்ளே ஸமாதானத்தைப் பாதுகாப்பதும், வெளி நாடுகளிலிருந்து படை எடுத்து வருவோரைத் தடுப்பதும் மாத்திரமே ராஜாங்கத்தின் காரியங்கள் என்று நினைத்துவிடக்கூடாது. ஜனங்களுக்குள்ளே செல்வமும், உணவு, வாஸம் முதலிய ஸெளகர்யங்களும், கல்வியும், தெய்வ பக்தியும், ஆரோக்கியமும், நல்லொழுக்கமும், பொது சந்தோஷமும் மேன்மேலும் விருத்தியடைவதற்குரிய உபாயங்களை இடைவிடாமல் அனுஷ்டித்துக் கொண்டிருப்பதே ராஜாங்கத்தின் கடமையாவது. 

குடிகள் ராஜாங்கத்தைத் தம்முடைய நன்மைக்காகவே சமைக்கப்பட்ட கருவியென்று நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். குடிகளுடைய இஷ்டப்படியே ராஜ்யம் நடத்தப்படவேண்டும்.தீர்வை விதித்தல், தீர்வைப் பணத்தை பலதுறைகளிலே வினியோகித்தல், புதுச்சட்டங்கள் சமைத்தல், பழைய சட்டங்களை அழித்தல் முதலிய ராஜாங்கக் காரியங்களெல்லாம் குடிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளின் இஷ்டப்படியே நடத்தவேண்டும்.

குடிகளின் நன்மைக்காகவே அரசு ஏற்பட்டிருப்பதால், அந்த அரசியலைச் சீர்திருத்தும் விஷயத்தில் குடிகளெல்லாரும் தத்தமக்கு இஷ்டமான அபிப்பிராயங்களை வெளியிடும் உரிமை இவர்களுக்கு உண்டு. இந்த விஷயங்களையெல்லாம் உபாத்தியாயர்கள் மாணாக்கர்களுக்கு கற்பிக்குமிடத்தே, இப்போது பூமண்டலத்தில் இயல் பெறும் முக்கியமான ராஜாங்கங்கள் எவ்வளவு தூரம் மேற்கண்ட கடமைகளைச் செலுத்தி வருகின்றன என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். 

மேலும், உலகத்து ராஜாங்கங்களில் சுவேச்சாராஜ்யம், ஜனப்பிரதிநிதியாட்சி, குடியரசு முதலியன எவையென்பதையும், எந்த நாடுகளில் மேற்படி முறைகள் எங்ஙனம் மிசிரமாகி நடைபெறுகின்றன என்பதையும் எடுத்துக் காட்டவேண்டும். 

மேலும், உலகத்து கிராம பரிபாலனம், கிராம சுத்தி வைத்தியம் முதலியவற்றில் குடிகளனைவரும் மிகுந்த சிரத்தை காட்ட வேண்டுமாதலால், மாணாக்கர்களுக்கு இவற்றின் விவரங்கள் நன்றாக போதிக்கப்பட வேண்டும். 

கோயிற் பரிபாலனமும், அங்ஙனமே ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதும், தொழில் ஏற்படுத்திக் கொடுத்து, உணவு தருவதும் ராஜாங்கத்தாரின் கடமை என்பது மட்டுமன்றி, கிராமத்து ஜனங்கள் அத்தனை பேருக்கும் பொதுக் கடமையாகும். 

(ஊ) பொருள் நூல்
பொருள் நூலைப்பற்றிய ஆரம்பக் கருத்துக்களை மாணாக்கர்களுக்கு போதிக்குமிடையே, தீர்வை விஷயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஜனங்களிடம் தீர்வை எத்தனைக்கெத்தனை குறைவாக வசூல் செய்யப்படுகிறதோ, அங்ஙனம் குறைவாக வாங்கும் தீர்வையிலிருந்து பொது நன்மைக்குரிய காரியங்கள் எத்தனைக் கெத்தனை மிகுதியாக நடை பெறுகின்றனவோ, அத்தனைக்கத்தனை அந்த ராஜாங்கம் நீடித்து நிற்கும்; அந்த ஜனங்கள் ஷேமமாக வாழ்ந்திருப்பார்கள். வியாபார விஷயத்தில், கூட்டு வியாபாரத்தால் விளையும் நன்மைகளை மாணாக்கர்களுக்கு எடுத்துக் காட்டவேண்டும். மிகவும் *ஸமான இடத்தில் விலைக்கு வாங்கி, மிகவும் லாபகரமான சந்தையில் கொண்டுபோய் விற்கவேண்டும் என்ற பழைய வியாபாரக் கொள்கையை எப்போதும் பிரமாணமாகக் கொள்ளக் கூடாது. விளைபொருளும் செய்பொருளும் எஞ்சிக்கிடக்கும் தேசத்தில் விலைக்கு வாங்கி, அவை *ண்டியிருக்குமிடத்தில் கொண்டுபோய் விற்கவேண்டும் என்பதே வியாபாரத்தில் பிரமாணமான கொள்கையாகும்.
வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ங்கம் சிறந்தோ அதுபோலவே கைத்தொழிலிலும் கூட்டுத் தொழிலே சிறப்பு வாய்ந்ததாம். முதலாளி யொருவன் கீழே தொழிலாளிகள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும் தொழிலாளிகள் பலர் கூடிச் செய்யும் தொழிலே அதிக நன்மையைத் தருவதாகும். 

செல்வம் ஒரு நாட்டில் சிலருக்கு வசப்பட்டதாய் பலர் ஏழைகளாக இருக்கும்படி செய்யும் வியாபார முறைகளைக் காட்டிலும், சாத்தியப்பட்டவரை அநேகரிடம் பொருள் விரவியிருக்கும்படி செய்யும் வியாபார முறைகள் மேன்மையாக பாராட்டத்தக்கனவாம். 

(எ) ஸயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம்
ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும் பரீக்ஷைகள் மூலமாகவும் பிள்ளைகளுக்கு கற்பித்துக்கொடுத்தல் மிகவும் அவசியமாகும். பிள்ளைகளுக்கு தாங்களே ‘ஸயன்ஸ்’ சோதனைகள் செய்து பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வியாபார விஷயங்களுக்கு ரஸாயன சாஸ்திரம் மிகவும் பிரதானமாகையால், ரஸாயனப் பயிற்சியிலே அதிக சிரத்தை காண்பிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாத நுட்பமான பூச்சிகள் தண்ணீர் மூலமாகவும், மண்மூலமாகவும் பரவி நோய்களைப் பரப்புகின்றன என்ற விஷயம் ஐரோப்பிய ‘ஸயன்ஸ்’ மூலமாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பதில் ஒரு சிறிது உண்மை இருப்பது மெய்யேயாயினும், மனம் சந்தோஷமாகவும் ரத்தம் சுத்தமாகவும் இருப்பவனை அந்தப் பூச்சிகள் ஒன்றும் செய்யமாட்டா என்பதை, ஐரோப்பியப் பாடசாலைகளில் அழுத்திச் சொல்லவில்லை. அதனால், மேற்படி சாஸ்திரத்தை நம்புவோர் வாழ்நாள் முழுதும் ஸந்தோஷமாய் இராமல் தீராத நரக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆதலால், நமது தேசீய ஆரம்பப் பாடசாலையில் மேற்படி பூச்சிகளைப்பற்றின பயம் மாணாக்கருக்குச் சிறிதேனும் இல்லாமல் செய்துவிட வேண்டும்.
உலகமே காற்றாலும், மண்ணாலும், நீராலும் சமைந்திருக்கிறது. இந்த மூன்று பூதங்களை விட்டு விலகி வாழ யாராலும் இயலாது. இந்த மூன்றின் வழியாகவும் எந்த நேரமும் ஒருவனுக்கு பயங்கரமான நோய்கள் வந்துவிடக்கூடும் என்ற மஹா நாஸ்திகக் கொள்கையை நவீன ஐரோப்பிய சாஸ்திரிகள் தாம்நம்பி ஓயாமல் பயந்துபயந்து மடிவது போதாதென்று, அந்த மூடக்கொள்கையை நமது தேசத்தின் இளஞ்சிறுவர் மனதில் அழுத்தமாகப் பதியும்படி செய்துவிட்டார்கள். சிறு பிராயத்தில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வலிமை உடையன, அசைக்க முடியாதன, மறக்கமுடியாதன; எனவே, நமது நாட்டிலும் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்த பிள்ளைகள் சாகுமட்டும் இந்தப் பெரும்பயத்துக்கு ஆளாய் தீராத கவலை கொண்டு மடிகிறார்கள். பூச்சிகளால் மனிதர் சாவதில்லை; நோய்களாலும் சாவதில்லை; கவலையாலும் பயத்தாலும் சாகிறார்கள். இந்த உண்மை நமது தேசீயப் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படி செய்ய வேண்டும். 

பெளதிக சாஸ்த்ரங்கள் கற்றுக் கொடுப்பதில், மிகவும் தெளிவான எளித தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும் ஸுலபமாக விளங்கும்படி சொல்லிக்கொடுக்க வேண்டும். இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகபப்டுத்த வேண்டும். திருஷ்டாந்தமாக, “ஆக்ஸிஜன்”, “ஹைட்ரஜன்”, முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கெனவே தமிழ் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராணவாயு, ஜலவாயு என்ற நாமங்களையே வழங்க வேண்டும். தமிழ்ச் சொற்கள் அகப்படாவிட்டால் ஸமஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல் பொருந்தும். இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம். ஆனால், குணங்கள், செயல்கள், நிலைமைகள் – இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை ஒருபோதும் வழங்கக் கூடாது. பதார்த்தங்களின் பெயர்களை மாத்திரமே இங்கிலீஷில் சொல்லலாம், வேறு வகையால் உணர்த்த இயலாவிடின்.