Saturday, January 14, 2012

ஜப்பான் தொழிற் கல்வி


12 பிப்ரவரி 1916

தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் சக்தியுண்டாகும். தெளிந்த அறிவென்பது இரண்டு வகைப்படும் – ஆத்ம ஞானம், லெளகிக ஞானம் என. ஆத்ம ஞானத்தில் நமது ஜாதி சிறந்தது. லெளகிக ஞானத்தில் நம்மைக்காட்டிலும் வேறு பல தேசத்தார் மேன்மை யடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேசங்களில் ஜப்பான் ஒன்று. புத்தகங்களாலும், பத்திரிகைகளாலும், யாத்திரைகளாலும் நாம் ஜப்பான் விஷயங்களை நன்றாகத் தெர்ந்து கொள்ளுதல் பயன்படும். கூடியவரை பிள்ளைகளை ஜப்பானுக்கு அனுப்பிப் பலவிதமான தொழில்களும் சாஸ்திரங்களும் கற்றுக் கொண்டு வரும்படி செய்வதே பிரதான உபாயமாகும். தொழிற் கல்வியிலும் லெளகிக சாஸ்திரப் பயிற்சியிலும் நாம் மற்ற ஜாதியாருக்கு ஸமானமாக முயலுதல் அவசரத்திலும் அவசரம். 

தஞ்சாவூர் ஜில்லாவிலிருந்து ஒரு தமிழ் வாலிபர் சில வருஷங்களாக ஜப்பானிலே போய் நூல் நூற்றல், துணி நெய்தல், சாய மேற்றுதல் முதலிய தொழில்கள் படித்துக் கொண்டிருக்கிறார். இங்கிருந்து புறப்படு முன்பாக அந்தப் பிள்ளை வெகு சாதாரணராக இருந்தார். அங்கே போய் மூன்று, நான்கு வருஷங்கள் வாசம் செய்ததிலிருந்து அவருக்கு ஏற்பட்டிருக்கும் அறிவுப் பயிற்சி, ஊக்கம், தைரியம், ஸ்வஜனாபிமானம் முதலிய குணங்கள் வியக்கும்படியாக இருக்கின்றன. திருஷ்டாந்தமாக, சில தினங்களின் முன்பு அவர் இங்குள்ள தமது தமையனாருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் எனக்கு வாசித்துக் காட்டப்பட்டது. மிகவும் ரஸமாக யிருந்தபடியால் அதன் ஸாராம்சங்களை இந்தப் பத்திரிகை படிப்பவருக்குத் தெரிவிக்கிறேன். 

ஜப்பானில் தொழிற் கல்வி பழகும் ஒரு தமிழ் வாலிபர் தம்முடைய தமையனாருக்கு எழுதிய கடிதத்தின் ஸாராம்சங்கள்:-

அண்ணாவுக்கு நமஸ்காரம்:

சாயத் தொழில் விஷயமாக ஏற்கெனவே கேட்ட பாடங்களை அனுபவத்தில் சோதனை செய்து வருகிறோம். மிகவும் துரிதமாக வேலை நடந்து வருகிறது. சாயமருந்துகள், மாதிரித் துணிகள் முதலிய சாமான்களெல்லாம் போதுமான அளவு சேகரஞ் செய்துவிட்டேன். ஆனால் இன்னும் செய்ய வேண்டிய காரியம் எவ்வளவோ இருக்கிறது. துணி சம்பதமான பரிபூரண ஞானம் ஏற்பட வேண்டுமானால், சாயம், (துணியில்) அச்சடித்தல், இரண்டிலும் இன்னும் பல பல சோதனைகள் செய்து பார்க்க வேண்டும். ராஜாங்க சர்வகலா சங்கத்து விவசாயக் கலாசாலையில் போய்ப் பட்டுப் பூச்சி வ்ளர்க்கும் தொழில் படிக்க வேண்டும். டோக்கியோ (ஜப்பான் ராஜதானி) நகரத்திலும், பக்கங்களிலும் உள்ள தொழிற்சாலைகள் எல்லாம் பார்த்தாய் விட்டது. வெளி நகரங்களுக்கு சீக்கிரத்தில் போய் வருவேன். 

நெசவு சம்பந்தமான பலவகைத் தொழில்களிலே நான் பாரத தேசத்திற்குத் திரும்பி வந்த பிறகு அங்கே என்ன தொழில் தொடங்கலாமென்பதைக் குறித்து இங்கிருந்து எவ்விதமான தீர்மானமும் செய்ய முடியாது அங்கு வந்த பிறகுதான் பார்க்க வேண்டும். நமது நாட்டு முதலாளிகள் கொடுக்கும் உதவிக்குத் தகுந்தபடிதான் தொழில் செய்ய முடியும்.

ஒரு ஜப்பானிய சாஸ்திரியின் உபதேசம். இந்த விஷயமாக எனது கலாசாலைத் தலைவரிடம் ஆலோசனை செய்தேன். அவர் சொல்லியதென்னவென்றால்:

“நூற்புத் தொழிலுக்கு நல்ல முதல் போட்டுப் பெரிதாக நடத்தினால் தான் லாபமுண்டாகும். வேலையும் ஸெளகரியமாக நடக்கும். நெசவுத் தொழில் அப்படியில்லை. அதிலே, சரக்கு நயத்துக்குத் தக்கபடி தொழிற்சாலையைப் பெரிதாகவோ சிறிதாகவோ தொடங்கிவிடலாம். இந்தியாவிலே தொழிற் பண்டிதரும் கை தேர்ந்த தொழிலாளிகளும் கிடைப்பது அருமையாதலால், ஆரம்பத்திலேயே நீராவி, மின்சாரம் முதலிய சக்திகளைக் கொண்டு வேலை தொடங்குதல் ஸெளகரியப்படாது. சேதமும், உற்பத்திக் குறைவும் அதிகமாக உண்டாகும். விசேஷமாகப் பட்டுத் தறிகள் வைப்போர் இவ்விஷயத்தில் ஜாக்ரதையாக இருக்க வேண்டும்.

ஆரம்பத்திலே உயர்ந்த கைத்தறிகள் வைத்து மெல்லிய, சாதாரண, அல்லது கனமான, எந்தமாதிரி வேண்டுமென்றாலும் – துணிகள் செய்து கொள்ளலாம். ஒரு வருஷத்துப் பழக்கத்திலே தொழிலாளிகளுக்குப் போதுமான தேர்ச்சியுண்டாய்விடும். இரண்டாவது அல்லது மூன்றாவது வருஷத்தில் சக்தி யந்திரம் (பவர்) உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஜப்பானில் வந்து நெசவுத் தொழில் படிக்கும் ஹிந்து வாலிபர்கள் எங்களுடைய ராஜாங்கத் தொழிற்சாலையைப் பார்வையிட்டு வருவதுடன் சாதாரணத் தொழிற்சாலை யொன்றில் சேர்ந்து ஒரு வருஷம் வேலை செய்து பழக வேண்டும். அப்போதுதான் தங்களுடைய ஆக்கம், பயன், ஆட்சி இவை நன்றாக மனதில் படியும்.

இங்ஙனம் ஜப்பானிய சாஸ்திர நெசவுத் தொழில் விஷயமாக மாத்திரமேயன்றி சாயத் தொழில் சம்பந்தமாகவும் எனக்கு நல்ல போதனைகள் சொன்னார். சாயத்தொழில் சொல்லிக் கொடுக்கும் வகுப்புகளிலே அன்னிய தேசத்துப் பிள்ளைகள் வந்து சேர்தல் இன்னும் சிறிது காலத்திற்குள் சிரமமாகிவிடும். ஆகையால் சீக்கிரத்திலேயே பல தமிழ்ப்பிள்ளைகள் இங்கு வந்து மிகப் பயனுள்ளதாகிய இத்தொழில் பழகிக் கொண்டு போகும்படி செய்ய வேண்டும். 

இத்தொழில்களில் ஏதேனும் ஒரு சாகையிலே மட்டும் விசேஷ பாண்டித்யம் ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன். நான் இருக்கும் இடத்திற்கும் பள்ளிக்கூடத்துக்கும் 2½ மைல் தூரம் இருக்கிறது. நடந்துதான் போகிறேன். வண்டியேறுவதில்லை. இடைப்பகல் ஆஹாரம் கையிலேயே கொண்டுபோய் விடுகிறேன். சந்தோஷத்தோடு தான் இருக்கிறேன். என்னைப்பற்றிக் குடும்பத்தாருக்கு எவ்விதமான கவலையும் வேண்டியதில்லை. 

பிறந்த நாடு

நமது ஜாதியாருக்கும் தேசத்தாருக்கும் என்னாலே ஆனவரை ஊழியம் செய்ய வேண்டுமென்று விரதம் கொண்டிருக்கிறேன். செட்டுக் குடித்தனம், ஆனால் திருந்திய ஜீவனம் நமது ஜனங்களுக்கு அவசியமென்று நினைக்கிறேன். நல்ல காற்று, நல்ல நீர், சுத்தமான, பயனுடைய ருசியான தகுந்த அளவுள்ள ஆஹாரம், சுத்தமான உடை இவையெல்லாம் திருந்திய ஜீவனத்திற்கு லக்ஷணங்கள். இதற்கெல்லாம் படிப்பு அவசியம்… சோறில்லாமல் சோர்ந்து கிடக்கும் ஜனக் கூட்டத்தாருக்கு தர்மோபதேசங்கள் பண்ணுவதிலே எனக்கு ஸந்தோஷமில்லை. அது பாவமென்பதை நான் அறிவேன். ஆனாலும் என்ன செய்வது? மனதிலிருப்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்? ஜனகோடிகள் படித்தாலொழிய நாகரிகப்படுவதற்கு வேறு வழியில்லை. நமது காங்கிரஸ் சபை விஷயத்தில் எனக்கு அஸுஸை கிடையாது. ஆனாலும் அந்த சபையாரிடம் எனக்குச் சிறிது அதிருப்தியுண்டு. அவர்கள் ஒரு சார்பையே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாவது ஆஹாரத்திற்கு வழி தேட வேண்டும். அதிகாரம் வேண்டுமென்று கேட்கிறார்கள். நியாயந்தான். அது கிடைக்கும்வரை பிழைத்திருக்க வேண்டுமே? உண்டாலன்றோ உயிரோடிருக்கலாம்? படிப்பு, கைத்தொழில் இவற்றை காங்கிரஸ் சபையார் போதுமானபடி கவனிப்பதாகத் தோன்றவில்லை. நமது ஜனங்களிலே பெரும்பாலோர் ஏழ்மையிலும் அறியாமையிலும் மூழ்கிக் கிடப்பதைக் கல்வியாளர் சும்மா பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாமலிருப்பது மடமையிலும் மடமை. கைத்தொழில் வளர்ச்சிக்காக உழைப்போரும் உண்மையான தேசபக்தரேயாவர்.

No comments:

Post a Comment