Sunday, January 1, 2012

புதிய உயிர்


இவ்வுலகத்தில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய வலிமைகளையெல்லாம் நான் எனக்கு உண்டாக்கிக் கொள்வேன். மனிதனுக்கு வசப்படக்கூடிய செல்வங்களையெல்லாம் எனக்கு வசமாக்கிக் கொள்வேன். மனிதனுக்கு விளையக்கூடிய அறிவுகளையெல்லாம் என்னிடம் விளைவித்துக் கொள்வேன். மனிதனுக்கு கிடைக்கக்கூடிய இன்பங்களையெல்லாம் நான் தேடியனுபவிப்பேன்; ஸ்ர்வ சக்தி பெறுவேன்.”

என்று மனத்திலே நிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாக்ஷிமை பெறுவதற்குத் தீராத விருப்பமும் துணிவுமே வழி. வேறு வழியில்லை. ஒருவன் தெய்வ பக்தியுள்ளவனாக யிருந்தாலும் அல்லது நாஸ்திகனாக இருந்தாலும் இந்த வழியை அனுசரிக்கலாம். நாஸ்திகன் அறியக்கடவது யாதெனில்,

‘இவ்வுலகம் நமது தாய்’ என்பது.

“உலகம் என்னிடம் பகைமையுடைய வஸ்துவில்லை உலகவனத்தில் நான் ஒரு மலர்… உலகம் என் அறிவுக்கு வசப்படுவதை அனுபவத்திலே கண்டிருக்கிறேன் உலகம் என்னிடம் அன்பு பூண்டது” இந்தச் செய்தியை ஸாமான்ய மதியுடைய எவனும் தன் உள்ளத்திலே பதியச் செய்துகொள்ளுதல் சிரமமில்லை. உலகம் நமக்குப் பிரதிகூலமாக இருந்தால், இங்கே மூன்று க்ஷணங்கள் கூட உயிருடன் வாழமுடியாது; “ஆனால், உலகம் நமக்கு நோய் உண்டாக்குகிறதே. இறுதியில் நம்மைக் கொன்றுவிடுகிறதே; இதை நம்மிடம் அன்பு பூண்டதாக எங்ஙனம் சொல்லலாம்?” என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். 

உலகம் நம்முடைய தாய். அது நமக்குத் துன்பங்கள் விளைவிக்கும்போது நமக்குப் பாடங்கள் கற்றுக் கொடுக்கிறது. மூடக்குழந்தையைத் தாய் அடிப்பது போலவும் கட்டிபுறப்பட்ட சதையை ரணவைத்தியன் அறுத்தெறிவது போலவும், உலகம் நம்மைத் துன்பப்படுத்துகிறது. 

பெருந்துன்பமடைந்து அதனால் பரிசுத்த நிலைபெற்ற மேதாவிகள் எல்லோரும் இவ்வுண்மையைக் கண்டு கூறியிருக்கிறார்கள். திருஷ்டாந்தமாக, ஏழைத்தனம் பெரிய துன்பங்களிலே ஒன்றென்பது மனித ஜாதியின் பொது அநுபவம். எனிலும் இதைக்குறித்து விக்டர் ஹ்யூகோ என்ற பிரான்ஸ் தேசத்து ஞானியொருவர் பேசும்போது, “வறுமைத் தீயிலே ஸத்தில்லாத மனிதர் அழிந்து போகிறார்கள். ஸத்துடையவர்கள் பத்தரை மாற்றுத் தங்கம்போல் தேறிச் சுடர்வீசி மாண்பு பெறுகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்கள். 

நோயிலே செத்தவன் போக, அதிலிருந்து நன்றாகத் தேறியெழுந்தவன் அறிவிருந்தால் முன்னைக்காட்டிலும் தான் அதிக சுகநிலையில் இருப்பதை உணர்ந்துகொள்வான். வெளிப்படையாகத் தோன்றும் நோய்க்குறிகள் எல்லாம் உடலுக்குள் இருக்கும் விஷத்தை வெளியேற்றிச் சுகந்தரும் பொருட்டாக இயற்கையால் செய்யப்படும் உபாயங்களே யாகுமென்று சிறந்த வைத்தியர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

ஸூக்ஷ்ம ஞானத்திலே நாட்டமில்லாத ஐரோப்பிய ஸயன்ஸ்’காரர்கூட, அடியிலே பூச்சி நிலையிலிருந்து உயிர் மேன்மேலும் படிப்படியாக ஏறி மனிதநிலை பெற்றிருப்பதை நோக்கும்போது உயிர்களை மேன்மைப்படுத்த வேண்டும் என்பதே இயற்கையில் உட்கருத்தென்பது தெளிவாகிறதென்று சொல்லுகிறார்கள். ஜந்துக்கள் செய்யும் போராட்டங்களும், அவைபடும் துன்பங்களும் அவற்றின் உயர்வுக்காகவே ஏற்படுத்தப்படுகின்றன என்பதையும் அங்கீகாரம் செய்து கொள்கிறார்கள். இங்ஙனம் நம்மை உயர்வுறச் செய்ய வேண்டும் என்ற நோக்கமுடைய இயற்கைக்கு நாமும் அறிவுத் துணிவினாலே உதவி புரிவோமானால், அவ்வுயர்வு விரைவிலே கைகூடும். 

வீணாக அஞ்சுவதிலே பயனில்லை. இவ்வுலகம் நம்மிடம் கருணையுடையது என்பதை நாஸ்திகரும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு நல்லது.

No comments:

Post a Comment