Wednesday, February 29, 2012

இந்தியர்களுக்கு இன்னும் ஒரு ரொட்டித் துண்டம்


1906 டிசம்பர் 1

“அழுதபிள்ளைக்கு வாழைப்பழம் கொடுத்து” ஏமாற்றுவதுபோல (இன்னும் ஒரு நல்ல பழமொழி இருக்கின்றது. அதை எழுத நமக்கு கூசுகின்றது.) இந்தியர்கள் கேட்பதற்கு இடையிடையே சொற்ப அனுகூலங்கள் கவர்ன்மெண்டார் செய்து வருகிறார்கள். ஆனால் ஆராய்ந்து பார்க்குமிடத்து இந்த அனுகூலமும் நமக்குத் தீமையாகுமன்றி நன்மையாகமாட்டாது. “ஸர்காரில் இந்தியர்களுக்கு உயர்ந்த பதவி கொடுக்க வேண்டும், உயர்ந்த பதவி கொடுக்க வேண்டும்” என்று நிதானக் கட்சியார் கூச்சலிடுகிறார்கள். இதன் பலன் என்னவாயிற்று? நிர்வாகப் பொறுப்புள்ள தலைமை உத்தியோகங்கள் நமக்குக் கொடுக்கவேமாட்டார்கள். கொடுக்கும் விஷயத்தில் அவர்களுக்குப் பிழையில்லாமல் போய்விடும். நீதி இலாகாவில் மட்டும் ஓரிரண்டு பெரும் பதவிகள் கொடுத்திருக்கிறார்கள். இதனால் நமது நாட்டிற்குக் கெடுதியே தவிர நன்மை கிடையாது. நமக்குள் நல்ல தேசபக்தர்களாகவும் ஜனத் தலைவர்களாகவும் இருப்போர்களுக்கு தக்க சம்பளங்களை லஞ்சமாகக் கொடுத்து கவர்ன்மெண்டார் தமது வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். இதனால் முப்பது கோடி ஜனங்களிலே ஒரு மனிதனுக்குச் சிறிது பணலாபமும், தேச முழுமைக்கும் நஷ்டமும் ஏற்படுகின்றது. ஐயோ! இந்தவிதமான சொற்ப லாபங்களுக்கெல்லாம் நாம் ஆசைப்பட்டா வாழப்போகிறோம்? ஜப்பான் தேசத்திலே சுதேசிய ராஜாங்கம் இருந்த போதிலும் அந்நாட்டு ஜனங்கள் ஸர்க்கார் உத்தியோகங்களிலே சிறிதேனும் ஆசைப்படாமல் வர்த்தகம், கைத்தொழில், நூலாராய்ச்சி முதலிய மார்க்கங்களால் செல்வமும் கீர்த்தியும் பெற விரும்புகிறார்கள். அன்னிய ராஜாங்கத்தின் கீழிருக்கும் நம்மவர்களோ ராஜாங்கத்தார் கொடுக்கும் கடைத்தரமான உத்தியோகங்களிலே மிகவும் ஆவலுடையவர்களாய் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் மனநிலைமை வெகு விசித்திரமாய் இருக்கிறது. ஸர்கார் உத்தியோகங்களை எவரும் விரும்பக்கூடாதென்றும், ஸர்க்காரின் உதவியில்லாமல் பலவித பிரயத்தனங்கள் செய்து பிழைக்க முயலவேண்டுமென்றும் இப்பத்திரிகை பல முறை உபதேசிப்பதை கேட்டிருக்கிறோம். எனினும் கவர்மெண்டார் நம்மவர்க்கு ஏதேனும் புதிய உத்தியோகங்கள் கொடுக்கப்போவதாக வதந்தி வரும் பக்ஷத்தில் இந்தப் பத்திரிகைக்கு அளவிறந்த ஆனந்தம் பிறந்துவிடுகின்றது. முன்னுக்குப் பின் தமது ஸபையிலேயும் வைசிராய் ஸபையிலேயும் ஒவ்வொரு இந்தியரை நியமிக்க எண்ணியிருப்பதாக நெடுநாளாய் ஒரு வதந்தி ஏற்பட்டு வருகிறது. அது மெய்யான வதந்தி என்று நினைப்பதற்கு யாதொரு பலமான ஆதாரத்தையும் காணவில்லை, என்ற போதிலும் மேற்கண்ட விஷயமாக “சுதேசமித்திரன்” பத்திரிகை எத்தனை ஆனந்தத்துடன் எழுதுகிறது பாருங்கள்:-

“ஆகையால் லண்டன் நியமனம் நமம்வர்க்கு ஆவது சுலபம். இந்த லண்டன் நியமனம் மிஸ்டர் கோகலேயிற்காவது, மிஸ்டர் ஆர்.ஸி.தத்துக்காவது ஆகுமென்ற வதந்தி இப்போது மாறி, பம்பாயில் நமது தேசாபிமானிகளில் சிம்மத்தைப் போன்ற வல்லமையும் தைரியமும் கொண்டு எல்லோருடைய மதிப்பையும் பெற்றிருக்கும் ஸர் பிரெளஸிஸா மோவான்ஜி மேட்டா, நைட், சி.ஐ.இ-க்கு ஆகக் கூடுமென்று நம்பப்படுகிறது. அப்படியானால் ஸர்வதோ மனனென்றே நினைக்கவேண்டும்.” ஐயோ போகட்டும்! மார்லியின் ஸபையிலே இந்திய விரோதிகளாகிய அநேக ஆங்கிலேயருக்கிடையில் ஒரு தனி இந்தியன் இருந்து நமக்கு வெகு காரியங்கள் சாதித்துவிட முடியுமல்லவா? அதிலும் சுதேசிய முயற்சியிலே கூடப் பற்றில்லாதவரும் சில வருஷங்களாக ஆங்கிலேய அபிமானம் அதிகப்பட்டு வருபவருமாகிய மேட்டாவைப் போன்றவர்கள் அங்கே போய் ஒரு மூலையில் பதுங்கி உட்கார்ந்த உடனே இந்தியாவிற்கு சகல சாம்ராஜ்யமும் கிடைத்துப் போய்விடும்! அற்ப சந்தோஷிகளுக்கு திருஷ்டாந்தம் வேண்டுமானால் நமது நிதானக் கட்சியாரையே சொல்லவேண்டும். கவர்ன்மெண்டாரிடமிருந்து எவ்விதமான தயவை எதிர் பார்க்கிறவனும் அந்த க்ஷணத்திலேயே பிரஜைக்கு உபயோகமில்லாமல் போய்விடுகிறான். சுதேசிய ராஜாங்கமாய் இருந்தால் இப்படியிராது. அன்னிய ராஜாங்கத்திற்கு இதுவே முதலாவது லக்ஷணம். இதை அறியாதவர்களும் அறிந்திருந்து மறைத்துவைப்பவர்களும், ஜனத் தலைமைக்குத் தகுதியுடையவர்களாகமாட்டார்கள்.

Tuesday, February 28, 2012

சுய ஆட்சியைப் பற்றி ஒரு யோசனை


25 மே 1916                                                  நள வைகாசி 12
பாரத நாட்டுக்கு உடனே சுய ஆட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்தோறும் லக்ஷக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த க்ஷணமே ப்ரிடிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்.

ஐரோப்பாவில் நடக்கும் யுத்த நெருக்கடியிலே நாம் உள் நாட்டுத் திருத்தங்களுக்கு மன்றாடுவதனால் நாம் ப்ரிடிஷ் ராஜாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய கடமை தவறிப் போகுமென்று சொல்லி நமது முன்னேற்றத்தைத் தடுக்க விரும்புவோரின் அர்த்தமில்லாத வார்த்தையைக் கருதி இக்காரியத்தை நிறுத்தி வைக்கலாகாது.

அயர்லாந்து, போலாந்து என்ற தேசங்களின் திருஷ்டாந்தத்தைக் காட்டலாம். 

புதுச்சேரி                                               சி.சுப்பிரமணியபாரதி
அநலம் வைகாசி 7         

Monday, February 27, 2012

அம்மாக் கண்ணு பாட்டு

பூட்டைத் திறப்பது கையாலே - நல்ல
மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே - இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

ஏட்டைத் துடைப்பது கையாலே - மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே;
வேட்டை யடிப்பது வில்லாலே - அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.

காற்றை யடைப்பது மனதாலே - இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே - உயிர்
துணி வுறுவது தாயாலே

Sunday, February 26, 2012

சித்தாந்தச் சாமி கோயில்

சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளி யுண்டாம்; -பெண்ணே!
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்டதிருச் சுடராம்; -பெண்ணே!

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஒட்டவருஞ் சுடராம்; -பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம்; -பெண்ணே!

தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
தோற்ற முறுஞ் சுடராம்; -பெண்ணே!
மூன்று வகைப்படும் காலநன் றென்பதை
முன்ன ரிடுஞ் சுடராம்; -பெண்ணே!

பட்டினந் தன்னிலும் பாக்கநன் றென்பதைப்
பார்க்க வொளிர்ச்சுடராம்:  -பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதைக்
காண வொளிர்ச் சுடராம்; -பெண்ணே!

Saturday, February 25, 2012

கரும்புத் தோட்டத்திலே

ஹரிகாம்போதி ஜன்யம் 
ராகம்-ஸைந்தவி                                                                                        தாளம்-திஸ்ர சாப்பு

பல்லவி

 கரும்புத் தோட்டத்திலே - ஆ!
 கரும்புத் தோட்டத்திலே
 
கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக்     (கரும்புத்தோட்டத்திலே)

பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது
எண்ணம் இரங்காதோ? - அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக்     (கரும்புத்தோட்டத்திலே)

நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர்                 (கரும்புத்தோட்டத்திலே)

நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ? - ஹே
வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி!                           (கரும்புத்தோட்டத்திலே)

Friday, February 24, 2012

விடுதலை வேண்டும்

ராகம் - நாட்டை
பல்லவி
வேண்டுமடி எப்போதும் விடுதலை,அம்மா;

சரணங்கள்

தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு
மின்பம் அனைத்தும் உதவ (வேண்டுமடி)

விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்ம்மை தீர,
மெய்ம்மை நேர வருத்த மழிய வறுமை யொழிய
வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி)

பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர்
மருவ நாமும் உவகைதுள்ள. (வேண்டுமடி)

Thursday, February 23, 2012

சந்திரிகை

யாணர்க் குறையுளா மிந்து நாடதனிற்
காணற் கினிய காட்சிகள் பலவினு
மாணப் பெரிய வனப்பமைந் தின்கவி
வாணர்க் கமுதா யிங்கிடும் பொருளிதென்
றூணப் புலவோ னுரைத்துளன் முன்னாள்
அஃதுதான், கருமையிற் படர்ந்த வானமாங் கடலிடை
ஒருமையிற் றிகழு மொண்மதித் தீவினின்
றெல்லாத் திசையினு மெழில்பெற வூற்றுஞ்
சொல்லா லினிமைகொள் சோதியென் றோதினன்.
ஓர் முறை கடற்புற மணன்மிசைத் தனியே கண்ணயர்ந்
திடைப்படு மிரவி லினிதுகண் விழித்துயான்
வானக நோக்கினேன் மற்றதன் மாண்பினை
யூனமா நாவினி லுரைத்தலும் படுமோ?
நினைவறுந் தெய்விகக் கனவிடைக்குளித்தேன் வாழிமதி!
(சுதேசமித்ரன் 25.09.1906)

Wednesday, February 22, 2012

தொழில்

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
                யந்திரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
                கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
                ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்.
                பிரம தேவன் கலையிங்கு நீரே!


மண்ணெடுத்துக் குடங்கள்செய் வீரே!
                மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
                உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய்,பால்நெய் கொணர்ந்திடு வீரே!
                இழையை நாற்றுநல் லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!
                மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!

பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
                பரத நாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
                கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே!
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!
                நாடும் இன்பங்கள் ஊட்டிவைப் பீரே!
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
                தெய்வ மாக விளங்குவிர் நீரே!

Tuesday, February 21, 2012

பண்டாரப்பாட்டு

வையகத்தேசட வஸ்துவில்லை
     மண்ணுங் கல்லும் சடமில்லை
மெய்யுரைப்பேன் பேய்மனமே
     மேலும் கீழும் பயமில்லை !

பையப்பையத் தேரடா
     படையும் விஷமுங் கடவுளடா
பொய்யும்மெய்யுஞ் சிவனடா
     பூமண் டலத்தே பயமில்லை !

சாவும்நோவும் சிவனடா !
     சண்டையும் வாளும் சிவனடா !
பாவியும்ஏழையும் பாம்பும்பசுவும் 
     பண்ணும் தானமும் தெய்வமடா !

எங்குஞ்சிவனைக் காணடா !
     ஈனப் பயத்தைத் துரத்தடா !
கங்கைச் சடையா காலன்கூற்றே
     காமன் பகையே வாழ்க நீ !

பாழுந்தெய்வம் பதியுந்தெய்வம்
     பாலை வனமுங் கடலுந்தெய்வம்
ஏழு புவியும் தெய்வம்தெய்வம்
     எங்கும் தெய்வம் எதுவும்தெய்வம்

வையத்தே சடமில்லை
     மண்ணுங் கல்லும் தெய்வம்
மெய்யுரைப்பேன் பாழ்மனமே
     மேலும் கீழும் பயமில்லை

Monday, February 20, 2012

புயற்காற்று

 நள கார்த்திகை 8

ஒரு கணவனும் மனைவியும்

மனைவி:
                     காற்றடிக்குது, கடல் குமுறுது
                     கண்ணை விழிப்பாய் நாயகனே!
                     தூற்றல் கதவு சாளர மெல்லாம்
                     தொளைத் தடிக்குது பள்ளியிலே.

கணவன்:
                     வானம் சினந்தது; வையம் நடுங்குது
                     வாழி பராசக்தி காத்திடவே!
                     தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு
                     தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம்.

மனைவி:
                    நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே,
                    இந்தநேர மிருந்தால் என்படுவோம்?
                    காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
                    காத்தது தெய்வ வலிமை யன்றோ!

Sunday, February 19, 2012

சிட்டுக் குருவியைப் போலே

பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

சரணங்கள்

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)

Saturday, February 18, 2012

மழை

திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!

அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

Friday, February 17, 2012

தெளிவு

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
               ஏழைமை யுண்டோடா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
               புத்தி மயக்க முண்டோ?

உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்
               உள்ளங் குலைவ துண்டோ? - மனமே!
வெள்ள மெனப் பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
               வேதனை யுண்டோ டா?

சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
               செய்கையுந் தேர்ந்துவிட்டால், - மனமே,
எத்தனை கோடி யிடர்வந்து சூழினும்
               எண்ணஞ் சிறிதுமுண்டோ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
               தேவ னுரைத் தனனே; - மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
                பூதல மஞ்சுவரோ?

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்
                கச்சமு முண்டோடா? - மனமே!
 தேன் மடை யிங்குத் திறந்தது கண்டு
                தேக்கித் திரிவமடா!

Thursday, February 16, 2012

சங்கு

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திட லாமென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனித ரவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்.

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தி லெறிந்தே
ஐயுற லின்றிக் களித்திருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்.

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம தாமன்றிச் செய்வார்
சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்.

Wednesday, February 15, 2012

தொழில் முறை: கர்மயோகம்

நொண்டிச் சிந்து

ஏது மறந்துவிட லாமா ? - ஒன்றில்
எண்ணமிட எண்ணமிட வெற்றிவிளையும்
பாதி தொழில்புரிய லாமோ ? - தொடப்
பட்டதனைத் தும்வெல்லப் பட்டதெனவே
மோதிமுன் னேறுவது மேன்மை - சித்தம்
முன்னிமுன்னித் துளைத்திட நன்மை தெளிவாம்
மீதித் தொழில் நிறுத்தலாமோ ? - வெறும்
வேகத்தை நாடி நலம் விடுவதுண்டோ ?

அஞ்சித் தொழில்புரிய லாமோ ? நெஞ்சில்
அன்பு கனியாவிடில் கைகள் செய்யுமோ ?
மிஞ்சி இடுக்கண் வருமென்றே - தங்கம்
வெட்டுவதற்கு அஞ்சிடிற்பின் - செல்வமுண்டோ ?
கொஞ்சி நமக்கினிமை யாதல் - நாம்
குழந்தைகளோ ? தெய்வம் கிழத்தாயோ ?
நெஞ்சி லுறுதி மதிநினைப்பு - இவை
நேரி லன்றோ தொழில் நேர்கொண்டு போம் ?

எண்ணித் துணிகுவது கருமம் - துணிந்
தேற்றபினர் எண்ணுவது இழுக்கெனவே
புண்ணியத் தமிழ்க் குறள் முனிவன் - சொன்ன
புத்தியை மறந்துவிடும் மந்தமதியோர்
மண்ணிற் கெடுவர்மிக விரைவில். கொண்ட
மதியினிலே மதி செல்ல விடுவோர்
விண்ணிற் புடைக்கும் இசை பெறுவார் - இங்கு
வெற்றி பெறுவார் பரமுக்தி பெறுவார்

கூடித் தொழில்புரிதல் வேண்டும் - நெஞ்சக்
குடைச்சல் எல்லாம்மெல்லச் சரிப்படுத்தி
நீடித்த நன்மையினைக் கருதி - நல்ல
நீதி தவறாதபடி பாகம் இயற்றிப்
பேடிப் பதர்களைப்பின் விலக்கிப் - பொதுப்
பெரும்பயன் கருதித்தஞ் சிறுபயனை
வேடிக்கை போலுதறித் தள்ளி - பொது
வெற்றியினை நாடுபவர் மேன்மை பெறுவார்

(பாரதி பக்தரும் தேசபக்தருமான திருநெல்வேலியைச் சேர்ந்த திரு. எஸ். முத்தையா பிள்ளை அவர்கள் எழுதி வைத்திருந்த பாரதி கவிதைகளிலிருந்து தேடி எடுத்துத் தாமரை (செப் 73) இதழில் திரு. தொ.மு.சி ரகுநாதன் வெளியிட்டார்.)

Tuesday, February 14, 2012

அன்பு செய்தல்

இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?

வேறு

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமன்றோ?
யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!

Monday, February 13, 2012

ஹாஸ்யம்


10 பிப்ரவரி 1921                                            ரெளத்திரி தை 29

பத்திரிகைகளில் “பால்” வேற்றுமை

உயிரில்லாத வஸ்துக்களுக்குக்கூட ஆண்பால், பெண்பால் கற்பித்தல் கவிகளின் வழக்கம். ஸம்ஸ்க்ருதம் முதலிய புராதன பாஷைகள் சிலவற்றிலும், ப்ரெஞ்சு, ஹிந்து முதலிய நவீன பாஷைகள் சிலவற்றிலும், பெரும்பான்மையான பொருட்பெயர்களுக்கு மட்டுமேயன்றி, குணப் பெயர்களுக்குங் கூடப் பால் வேற்றுமைகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த பாஷைகளைக் கற்போர் சொற்களில் இறுதி யெழுத்துக்களைக் கொண்டும், நெடுங்கால அனுபவத்தைக் கொண்டும் இன்ன சொல் இன்ன பாலைச் சேர்ந்ததென்று நிர்ணயித்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் தமிழ், இங்கிலிஷ் முதலிய பெரும்பான்மையான பாஷைகளில் இந்தக் கஷ்டம் கிடையாது. “மக்கள், தேவர், நரகர் உயர் திணை. மற்றுயிருள்ளவும், இல்லவும் அஃறிணை” என்ற தமிழிலக்கண விதியே பொதுவாக எல்லா பாஷைகளுக்கும் பொருந்தி நிற்கிறது. எனினும், இப்போது சிறிது காலமாகத் தமிழிலேயே, பத்திரிகைகளின் பெயர்களுக்குச் சிலர் ஆண்பால், பெண்பால் வகுக்கத் தொடங்கியிருப்பது மிகவும் விநோதமாகத் தோன்றுவதால், இங்கு அதைக் குறித்து எழுத நேர்ந்தது. முதலாவது இவ்வழக்கம் “தேச பக்தன்” பத்திரிகையில் தொடக்க மெய்திற்றென்று நினைக்கிறோம். அப் பத்திரிகையின் பழைய பத்திராதிபராகிய ஸ்ரீமான் கலியாண ஸுந்தர முதலியாருடைய காலந்தொட்டே அதில், “சுதேச மித்திரன் சொல்லுகிறேன்”, “தேச பக்தன் சொல்லுகிறான்” என்பன போன்ற பிரயோகங்கள் வழங்கி வருகின்றன. இப்போது ஸ்ரீமான் முதலியார் நடத்திவரும் “நவசக்தி”ப் பத்திரிகையிலும் அவ்வழக்கமிருந்து வருகிறது. எனவே, சில தினங்களுக்கு முன் ஏதோ தொழிலாளர் விஷயமாக மேற்கூறிய இரண்டு பத்திரிகைகளுக்குள்ளே எழுந்திருக்கும் விவாதம் மிகவும் ரஸமாக இருக்கிறது. “தேச பக்த”னை ஆண் பாலாக்கி ஸ்ரீ முதலியார் எழுதி வருகிறார். “தேச பக்தன்” புதிய பத்திராதிபரோ, “நவ சக்தி”யைப் பெண் பாலாக்கிவிட்டார்! திருஷ்டாந்தமாக மேற்படி ஆண்பால் பத்திரிகையிலுள்ள பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள். “தேச பக்தன் தன் பிரதியை ஏன் அனுப்பவில்லை யென்று நவசக்தி கேட்கிறாள்”, “அவர் சொல்லி யனுப்பியதையும் நவசக்தி மறந்துவிட்டாள் போலும்.” இந்தப் புதிய வழி ரஸமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதைப் பொது வழக்கமாக்க முயன்றால், பலவித ஸங்கடங்கள் ஏற்படுமென்று தோன்றுகிறது. முக்யமாக, அன்யபாஷைப் பத்திரிகைகளைக் குறித்துப் பேசுமிடத்தே தான் அதிகக் கஷ்டம்; “லண்டன் டைம்ஸ்”, “ஈவினிக் ந்யூஸ்” என்பன பலவின்பாற் பெயர்களாதலால் ‘டைம்ஸ் சொல்லுகின்றன’, ‘ஈவினிங் ந்யூஸ் பரிஹாஸம் பண்ணுகின்றன’ என்றெழுத நேரும்! மேலும் ‘பெர்லினர் தகப்ளாத்’, ‘ப்ராங்க் புர்த்தெர் ஜெய்துங்’ என்பவை போன்ற ஜெர்மானியப் பத்திரிகை நாமங்கள் ஆண்பாலோ பெண்பாலோ, ஒன்றன்பாலோ, பலர்பாலோ, பலவின்பாலோ அறிகிலோம். இவை போன்ற சிரமங்களைக் கருதி ஸாதாரணமாக, வழக்கம் போலவே, எல்லாப் பத்திரிகைகளின் பெயர்களையும் ஒன்றன் பாலாகவே வழங்கி விடுதல் நன்றென்று நினைக்கிறேன். 

“யானைக்கால்” வியாதிக்கு முகாந்தரம்!

தென் இந்தியாவில் ஒரு நகரத்தில் ஒரு செல்வமிகுந்த வியாபாரிக்கு இரண்டு கால்களிகும் யானைக்கால் நோய் வந்து கால்கள் உரல்களைப் போலாய்விட்டன. ஆனால் அந்தச் செட்டியார் தமக்கு யானைக்கால் நோயென்று சொல்ல மனமில்லாமல், யாராவது, “காலிலே என்ன?” என்று கேட்டால் தம்மிடம் மோட்டார் சைக்கிள் வண்டியிருப்பதாகவும், அதில் ஏறிச் செல்லும்போது, அது தம்மை எங்கேயோ மரத்தில் மோதிக் கீழே தள்ளிவிட்டபடியால் கால்கள் வீங்கி யிருக்கின்றன என்றும் சொல்வதுண்டு. அதுபோல் ஆங்கிலேய ராஜ தந்திரிகளில் சிலர் தமது தேசத்திலேற்பட்டிருக்கும் வறுமைக்கும் பணத்தட்டுக்கும் காரணம் சொல்லும் போது தங்கள் தேசத்தில் செழித்துக் கிடக்கும் செய்பொருள்களை மற்ற ஐரோப்பிய தேசந்தார்கள் விலைக்கு வாங்க முடியாதபடி பரம ஏழைகளாய் விட்டபடியால் தங்களுடைய வியாபாரம் வீழ்ச்சி பெற்றிருப்பதாகவும் அதனால் பணக் கஷ்டம், தொழிலின்மை மிகுதி முதலியன தோன்றிவிட்டதாகவும் “ஷரா” சொல்லுகிறார்கள். ஆனால் மேற்கூறிய இதர ஐரோப்பிய தேசங்களின் ராஜதந்திரிகள் தத்தம் நாடுகள் ஏழ்மைப்பட்டதற்கு என்ன முகாந்தரம் சொல்லித் தப்புகிறார்களோ தெரியவில்லை. அவர்கள் இங்கிலாந்தின் மீது குறை சொல்லுகிறார்களோ அல்லது, ஆசியாவைக் காண்பிக்கிறார்களோ அறியோம். 

புதிதாகச் சென்னை நிர்வாஹ ஸபையில் சேர்ந்த பிராமணரும், (பஞ்சமரும், ஐரோப்பியருமாகிய பிறரும்) அல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள் தமிழர்களும் அல்லாதார் என்பதைத் தமிழராகிய பிராமணரும் (பஞ்சமரும் பிறரு)மல்லாதார் ஒருவன் என்னிடம் வந்து முறையிட்டார். ஹும்! இந்தபாஷை சரிப்படாது. நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன். தமிழ் வேளாளரொருவர் இப்போது மந்திரிகளாகச் சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடும், ஸ்ரீ ராமராயனிங்காரும் தெலுங்கர்களென்றும், தமிழ் நாட்டுக்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்.

“ஐஸ்டிஸ் பாடம்”

எனக்கு “ஜஸ்டிஸ்” பத்திரிகையில் வாசித்த வியாஸமொன்று மேற்படி கதை கூறி வருகையிலேயே ஞாபகத்துக்கு வருகிறது. அதில் அந்த “ஜஸ்டிஸ்” பத்திராதிபர் “ஹிந்து” பத்திராதிபருக்குப் பல பல ஞனோபதேசங்கள் செய்திருக்கிறார். அவற்றின் மொத்தக் குறிப்பு யாதென்றால் ஆங்கிலேய அதிகாரிகளின் ஆட்சியை இந்த க்ஷணமே பஹிஷ்காரம் செய்துவிட வேண்டுமென்ற “காங்கிரஸ்” கக்ஷியைச் சேர்ந்த பத்திராதிபர் யார் மந்திரியாக வந்தாலும் கவனிக்கக் கூடாதென்பது. அவர்களிடமுள்ள குணதோஷங்களை எடுத்துக் கூறவும், அந்த ஸ்தானத்துக்குப் பிறரை சிபார்சு செய்யவும் “ஹிந்து”வுக்குத் தகுதி கிடையாதென்பது.
ஏன் தகுதி கிடையாது? அதைக் குறித்துத் தர்க்கமெப்படி? “ஹிந்து” ஜனங்களுக்குப் பிரதிநிதி; அதிகாரிகளுக்கு விளக்கு. ஜனங்களுடைய நன்மைக்கிசைந்தவாறு அதிகாரிகள் நடக்கும்படி கவனிக்க வேண்டியது அந்தப் பத்திரிகையின் கடமை. இந்த ராஜாங்கத்தை மாற்றி இதைக் காட்டிலும் தர்மமான ராஜாங்கம் ஸ்தாபிக்க வேண்டுமென்று நாங்கள் முயற்சி செய்கிறோம். இதனிடையே இந்த அதிகாரிகள் எங்கள் வீடுகளில் தீயைக் கொளுத்தினால் நாங்கள் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமென்று “ஜஸ்டிஸ்” பத்திராதிபரின் தர்க்க சாஸ்த்ரம் போதிக்கிறதா? நாங்கள் ராஜாங்கத்தைப் புதுப்பிக்க விரும்புவது பற்றி நாங்கள் இவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்துவோம். இவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டனம் செய்துகொண்டிருப்போம். ஜனங்களுக்கெடுத்துக்காட்டி, அந்த உபாயத்தின் மூலமாக, இவர்கள் தங்கள் தவறுகளை நீக்கிக் கொள்ளும்படி வற்புறுத்துவோம். ஜன கோபத்துக்கு இவர்கள் எப்போதும் அஞ்சித் தீரவேண்டுமென்பதை நாம் அறிவோம். எனவே இவர்களுக்கும் நமக்குமிடையே நிகழ்ச்சி பெற்றுவரும் தர்ம யுத்தத்தில் அந்த அறிவைப் பயன்படுத்தாமல் விடமாட்டோம். எங்களுடைய தர்க்கம் “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்குத் தெளிவுபடுகிறதென்று நினைக்கிறோம்.

அன்னிய வஸ்து பஹிஷ்காரம்

“ஹிந்து” பத்திராதிபரிடம் “ஜஸ்டிஸ்”  பத்திராதிபர் மற்றொரு குற்றம் கண்டு பிடிக்கிறார். அதாவது, அன்ய வஸ்து பஹிஷ்காரத்தை ஜனங்களுக்குப் போதித்துவிட்டுத் தாம் அன்ய வஸ்துக்களின் விளம்பரங்களுக்குத் தமது பத்திரிகையில் இடங்கொடுக்கிறாரென்ற குற்றம்! சபாஷ்! இந்தக் குற்றத்துக்காக “ஹிந்து” பத்திராதிபருக்குப் பெருந் தண்டம் விதிக்கலாம்! அதிலும் “ஜஸ்டிஸ்” பத்திரிகை நம்மை ஐரோப்பிய வியாபாரிகளுடைய விளம்பரம் போடும் குற்றத்துக்காகத் தண்டனைக்குட்படுத்த அதிகாரமுடையது! ஐரோப்பிய ஸம்பந்தமே அங்கில்லையே! இது குற்றமென்று “ஜஸ்டிஸ்” சொல்வது பேதமை. விளம்பரங்களில்லாமல் இக்காலத்தில் பத்திரிகை நடத்த முடியாது. இந்த இந்தியருக்குத் தெரியும். ஆதலால் பத்திரிகைக்குள்ளே பத்திராதிபர் எழுதியிருக்கும் கருத்தைக் கவனித்து நடப்பார்களேயன்றி விளம்பரத்தைக் கவனித்து தேசக் கடமையை நிர்ணயிக்க மாட்டார்கள். “ஹிந்து” பத்திரிகையில் “சுருட்டு” விளம்பரம் போட்டிருக்கிறது. அதனின்றும் “ஹிந்து” பத்திராதிபர் உலகத்தாரையெல்லாம் புகையிலைச் சுருட்டுக் குடிக்கும்படி வற்புறுத்துகிறாரென்று நிச்சயித்தல் பொருந்துமா? “ஜஸ்டிஸ்” பத்திரிகையில் “காந்தி சரித்திரம்” என்ற புஸ்தகத்தின் விளம்பரம் ப்ரசுரிக்கப்பட்டால அதனின்றும் “ஜஸ்டிஸ்” பத்திராதிபர் மஹாத்மாவின் கொள்கைகளைப் பரப்ப விரும்புகிறாரென்று நிச்சயித்து விடலாமா? “ஹிந்து” விளம்பரங்களைப் பிரசுரம் செய்வதை நிறுத்திவிட்டால், ஜஸ்டிஸின் வருமானம் அதிகப்படுமென்பது அப்பத்திரிகையின் ஆட்சேபத்திற்குக் காரணமோ?

அப்படி நிச்சயிக்கும்படி இந்தியர்கள் அத்தனை மூடர்களல்லர், மேலும், மனம் வேறு, சொல் வேறு, செயல் வேறாக நிற்பது தவறென்று “ஜஸ்டிஸ்” பத்திராதிபர் பிறருக்கு போதிப்பதைப் பார்த்து எனக்கு மேன்மேலும் நகைப்பு விளைகிறது.

Sunday, February 12, 2012

மனப் பெண்

மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்

தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய்,புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய் 

பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்.

அங்ஙனே,
என்னிடத் தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய்,ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய்,காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை

உலக வுருளையில் ஓட்டுற வகுப்பாய்,
இன்பெலாந் தருவாய்,இன்பத்து மய்ங்குவாய்,
இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,

தன்னை யறியாய்,சகத்தெலாந் தொளைப்பாய்,
தன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய்,காணெனிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய்,பொருளையுங் காணாய்

மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்;

உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.

Saturday, February 11, 2012

மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

Friday, February 10, 2012

ஆயிரம் தெய்வங்கள்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?

வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே. 1

Thursday, February 9, 2012

தமிழ்


3 ஏப்ரில் 1916                                           ராக்ஷஸ பங்குனி 22

கல்கத்தாவிலிருந்து வெளியிடப்படும் ‘மாடன் ரெவ்யூ’ என்ற மாதப் பத்திரிகையின் தை-மாசி ஸஞ்சிகையை நேற்றுப் பொழுது போக்கின் பொருட்டாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலே திருநெல்வேலி ஹிந்து காலேஜ் சரித்திர பண்டிதர் ஸ்ரீ நீலகண்டையர் ஒரு சிறிய கடிதமெழுதியிருக்கிறார். ஏற்கெனவே மேற்படி பத்திரிகையில் ஸ்ரீயதுநாத ஸர்க்கார் என்ற வித்வான் எழுதியிருந்த சில வார்த்தைகளைக் குறித்து ஸ்ரீ ஐயர் தமது கருத்துக்களை வெளியிடுகிறார்.

கலாசாலையில் சரித்திரப் பாடங்களை இங்கிலீஷில் கற்றுக் கொடுப்பது பயனில்லாத வீண் தொல்லையாக முடிகிறதென்றும் தேச பாஷைகளிலே கற்றுக் கொடுத்தால் நல்ல பயன் விளையுமென்றும் ஸ்ரீ சர்க்கார் தமது அனுபவத்திலே கண்ட செய்திகளைச் சொன்னார். அதற்கு நமது திருநெல்வேலிப் பண்டிதர் சொல்கிறார்:- “பாஷைத் தொல்லை பெருந் தொல்லையாகவே இருக்கிறது. ஆனால் எனது ஜில்லா, எனது காலேஜ் சம்பந்தப்பட்ட வரையிலே பிள்ளைகளுக்குச் சரித்திரப் பாடம் இங்கிலீஷிலே கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும் தேச பாஷையில் கற்றுக் கொடுப்பது அதிக பயன்படுமென்று சொல்வதற்கில்லை. எனது மாணாக்கர்களிலே பெரும்பாலோர் இங்கிலீஷ் இலக்கணப் பிழைகளும் வழக்குப் பிழைகளும் நிறையச் செய்த போதிலும் மொத்தத்திலே தமிழைக் காட்டிலும் இங்கிலீஷை நன்றாக எழுதுகிறார்கள். சரித்திர விஷயங்களை வியவஹரிக்கும்போது எனக்கும் இங்கிலீஷ் தான் தமிழைக் காட்டிலும் நன்றாகச் சொல்ல வருகிறது.”

இங்ஙனம் எழுதுகிற ஸ்ரீ நீலகண்டையரின் நிலைமையை நினைத்து நான் மிகவும் வருத்தப் படுகிறேன். சொந்த பாஷையை நேரே பேசத் தெரியாதவர்கள் சாஸ்திர பாடங்கள் நடத்தும் விநோதத்தை இந்தத் தேசத்திலேதான் பார்த்தோம். புதுமை! புதுமை!! புதுமை!!!

மேலும் இவர் தமக்குத் தாய் மொழி தெரியாதென்ற செய்தியை வங்கப் பத்திரிகைக்கு ஏன் எழுதப் போனார் என்பது எனக்கு அர்த்தமாகவில்லை. ஜப்பானியர், சீனர், நார்வேக்காரர், ஸ்விஸ் ஜாதியார், இத்தாலி தேசத்தார், ஹாலாந்துக்காரர் முதலிய உலகத்து ஜாதியாரெல்லாம் நம்மை அறிவிலும் சாஸ்திரங்களிலும் பாஷைத் திறமையிலும் தாழ்வென்று நினைத்து வந்தார்கள். இப்போது தான் ஹிந்து ஜாதியாராகிய நாம் காட்டு மனிதரில்லை, வாலில்லாத குரங்குகளில்லை, நமக்குப் பாஷைகள் இருக்கின்றன; நமக்குள்ளே சாஸ்திர விற்பன்னர்கள் இருக்கிறார்கள்; கவிகள் இருக்கிறார்கள் என்று நம்மவரிலே சிலர் வெளியுலகத்தார் தெரிந்துகொள்ளும்படி செய்து வருகிறார்கள். இதற்குள்ளே தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ்தானத்து வகுப்புகளைக் காட்டிலும் குறைவுபட்டதென்று நம்மிலே சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு நகைப்புண்டாக்குகிறது.

என்னுடைய சொந்த அபிப்பிராயாத்தைக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.

உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம்போல் விளங்குகிறோம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப்போல வலிமையும், திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமேயில்லை.

இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸ்த்யமில்லை. நாளை வரப்போவது ஸ்த்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அது வரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச்சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும். இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள்.


Wednesday, February 8, 2012

பெண் விடுதலைக்குத் தமிழ்ப்பெண்கள் செய்யத்தக்கது யாது?


[ புதுச்சேரியில் ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியின் குமாரி ஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்றது.]

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டுமன்று பெண்ணுக்கு மப்படியே.

ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ விரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம் விடுதலை. அடிமைகளுக்கு இன்பம் கிடையாது. தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்தார்படுங் கஷ்டங்களைக் குறித்து, 1896ம் வருஷத்தில் கல்கத்தாவில் கூடிய பன்னிரண்டாயிரம் ஜனசபைக் (காங்கிரஸ்) கூட்டத்தில் செய்யப்பட்ட தீர்மானமொன்றை ஆதரித்துப் பேசுகையில் வித்வான் ஸ்ரீ.ஜி.பரமேச்வரன் பிள்ளை பின் வருமாறு கூறினார்:-

“மிகவும் உழைப்பாளிகளாகிய ஹிந்து தேசத்தார் அந்த நாட்டில் பரம்பரை முறியடிமைகளாக வாழும்படி நேர்ந்திருக்கிறது. அங்கு நம்மவர் உத்திரவுச் சீட்டில்லாமல் யாத்திரை செய்யக்கூடாது. இரவு வேளையில் வெளியே சஞ்சரிக்கக்கூடாது. நகரங்களுக்கு நடுவே குடியிருக்கக்கூடாது. ஒதுக்கமாக நமக்கென்று கட்டப்பட்டிருக்கும் சேரிகளில் வசிக்க வேண்டும். ரயில் வண்டியில் மூன்றாவது வகுப்பிலே தான் ஏறலாம். முதலிரண்டு வகுப்புகளில் ஏறக்கூடாது. நம்மை ட்ராம் வண்டியிலிருந்து துரத்துகிறார்கள். ஒற்றையடிப் பாதைகளினின்றும் கீழே தள்ளுகிறார்கள். ஹோட்டல்களில் நுழையக் கூடாதென்கிறார்கள். பொது ரஸ்தாக்களில் நடக்கக் கூடாதென்று தடுக்கிறார்கள். நம்மைக் கண்டால் காறி உமிழ்கிறார்கள். “ஹுஸ்” என்று சீத்காரம் பண்ணுகிறார்கள். நம்மை வைகிறார்கள். சபிக்கிறார்கள். மனுஷ்ய ஜந்துக்களினால் சகிக்கக்கூடாத இன்னும் எத்தனையோ அவமானங்களுக்கு நம்மை உட்படுத்துகிறார்கள். ஆகையால் நம்மவர் இந்த நாட்டிலேயே இருந்து பஞ்சத்திலும் கொள்ளை நோயிலும் அழுந்திட்டாலும் பெரிதில்லை. நமது ஸ்வந்திரங்களை வெளிநாடுகளில் அன்னியர் காலின்கீழே போட்டு மிதிக்காதபடி ராஜாங்கத்தாரால் நம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் நம்மவர் வேற்று நாடுகளுக்கு குடியேறிப் போகாமல் இங்கிருந்து மடிதலே நன்று” என்றார். என்ன கொடுமையான நிலை பார்த்தீர்களா?

ஆனால், சகோதரிகளே, தென் ஆப்பிரிக்காவில் மாத்திரமே இவ்விதமான கொடுமைகள் நடக்கின்றன என்று நினைத்து விடாதீர்கள்!

சகோதரிகளே! ஒளவையார் பிறந்தது தமிழ்நாட்டில். மதுரை மீனாக்ஷியும், அல்லி அரசாணியும், நேற்று மங்கம்மாளும் அரசுபுரிந்த தமிழ் நாட்டிலே நம்முடைய நிலைமை தென்னாப்பிரிக்காவில் ஹிந்து தேசக் கூலிகளுடைய நிலையைக் காட்டிலும் கேடு கெட்டிருக்கிறதா? இல்லையா? உங்களுடைய அனுபவத்திலிருந்து நீங்களே யோசனை பண்ணிச் சொல்லுங்கள்.

நாமும் ஸ்வேச்சைப்படி வெளியே சஞ்சரிக்கக் கூடாது. நம்மைச் சேரிகளில் அடைக்காமல் சிறைகளில் அடைத்து வைக்க முயற்சி செய்கிறார்கள். ரயில் வண்டிகளில் நமக்கென்று தனிப்பகுதி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். நம்மைக் கண்டாலும் ஆண்மக்கள் நிஷ்காரணமாய் சீறி விழுகிறார்கள்; காறி உமிழ்கிறார்கள்; வைகிறார்கள்; அடிக்கிறார்கள். நாம் நமதிஷ்டப்படி பிறருடன் பேசக் கூடாதென்று தடை செய்கிறார்கள். மிருகங்களை விற்பது போல், நம்மை விலைக்கு விற்கிறார்கள். தம்முடைய நூல்களிலும் ஸம்பாஷணைகளிலும் ஓயாமல் நம்மைத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கத்தால் நாம் இத்தனை பாடுக்கும் ஒருவாறு ஜீவன் மிஞ்சியிருக்கிறோமெனினும், இந்த நிலை மிக இழிவானதென்பதிலும், கூடிய சீக்கிரத்தில் மாற்றித் தீரவேண்டிய தென்பதிலும் சந்தேகமில்லை. இதற்கு மருந்தென்ன?

தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்துக் கூலியாட்களுக்கு ஸ்ரீமான் மோஹனதாஸ் கரம்சந்த் காந்தி எந்த வழி காட்டினாரோ, அதுவே நமக்கும் வழி. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையரை ஹிந்துக்கள் ஆயுதபலத்தால் எதிர்க்கவில்லை. கைத்துப்பாக்கி வெடிகுண்டு முதலியவற்றை உபயோகிக்க விரும்பின சில இளைஞரைக்கூட அது செய்யலாகாதென்று மஹாத்மா காந்தி தடுத்துவிட்டார். “அநியாயத்தை அநியாயத்தால் எதிர்த்தலென்பது அவசியமில்லை. அதர்மத்தை அதர்மத்தால்தான் கொல்ல வேண்டுமென்பது அவசியமன்று. நாம் அநியாயத்தை நியாயத்தால் எதிர்ப்போம்; அதர்மத்தை தர்மத்தால் ஒழிப்போம்” என்று காந்தி சொன்னார்.

சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவே உபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே, இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம், குருக்ஷேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜுனனுடைய மனது திகைத்தது போலே திகைக்கிறது. ஆண் மக்களை ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத்தகாத காரியம். அது பற்றியே, ‘சாத்விக எதிர்ப்பினால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று’ நான் சொல்லுகிறேன்.

‘அடிமைப்பட்டு வாழமாட்டோம்; ஸமத்வமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம்’ என்று அவர்களிடம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டு, அதனின்றும் அவர்கள் கோபத்தால் நமக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளயெல்லாம் தெய்வத்தை நம்பிப் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுப்பதே உபாயம். இந்த சாத்வீக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத் தொடங்க வேண்டுமாயின், அதற்கு இந்தக் காலமே சரியான காலம். அந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாஸமே நல்ல மாஸம். இன்றே நல்ல நாள். இந்த முகூர்த்தமே தகுந்த முகூர்த்தம்.

சகோதரிகளே! இப்போது பூமண்டலமெங்கும் விடுதலைப் பெருங்காற்று வீசுகிறது. கொடுங்கோலரசர்களுக்குள்ளே கொடியவனாய் ஹிரண்யனைப்போல் ஐரோப்பாவின் கிழக்கே பெரும் பகுதியையும் ஆசியாவின் வடக்கே பெரும் பகுதியையும் ஆண்ட ஸார் சக்ரவர்த்தி, இப்போது ஸைபீரியாவில் சிறைபட்டுக் கிடக்கிறான். “பாரத நாட்டைக் காப்பதிலே எனக்குத் துணைபுரிய வாருங்கள்” என்று ஆங்கிலேயன் ஹிந்துக்களைக் கூப்பிடுகிறான். விடுதலைக்காற்று, ‘வீர், வீர்’ என்று வேகமாக வீசுகீறது.

ஒரு ஸ்திரீயானவள் இந்த ஸாத்விக எதிர்ப்பு முறையை அனுசரிக்க விரும்பினால், தனது கணவனிடம் சொல்லத்தக்கது யாதெனில்:-

“நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால், இன்று இராத்திரி சமையல் செய்யமாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதைவிட்டு வெளியேறவும் மாட்டேன்” என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவும் வேண்டும். இங்ஙனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வைப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக்கூடாது. ‘சிறிது சிறிதாக, படிப்படியாக ஞாயத்தை ஏற்படுத்திக் கொள்வோம்’ என்னும் கோழை நிதானக் கட்சியாரின் மூடத்தனத்தை நாம் கைக்கொள்ளக்கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும். அதுவும் இந்த க்ஷணத்தில் வேண்டும்.

இங்ஙனம், ‘பரிபூர்ண ஸமத்வமில்லாத இடத்தில் ஆண் மக்களுடன் நாம் வாழமாட்டோம்’ என்று சொல்வதனால், நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மை யுடையனவாயினும், அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக் கூடாது. ஸஹோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள்; ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால், ஸஹோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்தி துணை செய்வாள். வந்தே மாதரம்.