Monday, January 2, 2012

புதிய வருஷம்


ஜனவரி19, 1907

தமிழர்களாகிய நமக்கு இவ்வாரம்பத்திலேயே புதிய வருஷம் பிறந்திருக்கின்றது. நம் முன்னோரெல்லாம் இப்புதிய வருஷம் எல்லா மங்களமும் கொண்டு வருமாறு ஸ்ர்வமங்கள மூர்த்தியாகிய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். காலச்சக்கரமானது மேன்மேலும் சுழன்று கொண்டிருக்கின்றது. அதன் ஒரு வட்டத்தை ஒரு வருஷமென்று கொள்ளுகிறோம். இவ்வாறு ஒவ்வொரு வருஷத்திலும் ஜீவகணங்கள் அபிவிருத்தி அடைந்துகொண்டே செல்ல வேண்டுமென்பது தெய்வ சங்கற்பம். எனினும் ஜீவகணங்களிலே ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தனி உயிரிலும் அதனதன் செய்கை (கர்ம) விளைவிற் கிணங்க மேற்பட்டாயினும் இழிவடைந்தாயினும் போகின்றது. ஜீவ இயற்கையிலே ஒரு விநோதம் என்னவென்றால் மேற்கொண்டு செல்லாதவர்கள் கீழப்பட்டே தீரவேண்டும் மேலும் போகாமல், கீழும் போகாமல் ஒரே நிலைமையில் நிற்பது சாத்தியமில்லை. பெருமையடைய முயலாதவன் வறுமையடைந்தே தீரவேண்டும். நல்வழிப்பட முயலாதவன் தீவழிப்பட்டே தீருவான். மத்திய நிலையில் நிற்க முடியாது.

தமிழர்களாகிய நாம் சென்ற ஒரு வருஷத்திலே எவ்விதமான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றோம், என்ன பலனடைந்திருக்கின்றோம், மேற்கொண்டு ஒரு அடியெடுத்து வைத்திருக்கின்றோமா, பள்ளத்தில் இறங்கியிருக்கின்றோமா? இதையெல்லாம் சிறிது கவனிப்போம். ஆழ்ந்து பார்க்குமிடத்து தமிழ்நாடு முன்னடி யெடுத்து வைத்திருக்கிறதென்பதாகவே சொல்லவேண்டும். ஏனெனில், தெற்கில் தமிழர்கள் முதலாக வடக்கே காஷ்மீரர்கள் வரை நம்மவருக்கெல்லாம் பொது நாடாகிய பாரத பூமியானது அபிவிருத்தியின் பாரிசமாகச் சிறிது நகர்ச்சி பெற்றிருக்கின்றது. 

நாம் எவ்விதமான அபிவிருத்தியைக் குறிப்பிடுகிறோம் என்பதை எல்லோரும் எளிதாக அறிந்துகொள்ளக்கூடும். சர்வ அனுகூலங்களுக்கும் பொருள்களுக்கும் மூலாதாரமாகிய ஸ்வராஜ்ய செளபாக்கியத்தை நாம் அடைந்தே தீரவேண்டும் என்று பரதகண்டத்துப் பிரதிநிதிகளெல்லாம் இந்நாட்டு முக்கிய நகரத்திலே கூடி நிச்சயம் செய்து கொண்டிருக்கிறாரகள். இதுவரை அங்கங்கே தனித்தனி அறிஞர்கள் இருந்து இவ்விஷயமாய் பிரஸ்தாபங்களும், பிரயத்தனங்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனித்தனியான மனிதர்கள் எத்தனை பெரியோர்களாய் இருந்த போதிலும் அதிக அனுகூலம் சாதித்துவிட முடியாதல்லவா? தேசப் பிரதிநிதிகளின் மஹா சபையான காங்கிரஸ் இதுவரை இதைக் கவனியாமலிருந்தது. சென்ற தடவை இதைக் கவனித்தது மட்டுமேயல்லாமல் மஹாசபை தெய்வ சாக்ஷியாக சரியான நிச்சயமும் செய்து கொண்டுவிட்டது. “ஸ்வராஜ்யமே நமது நோக்கம்; அதற்கு முதற்படியாக அன்னிய வஸ்து திரஸ்கார பிரதிக்கினையைக் கைக்கொள்ளுகிறோம்” என்று இந்நாட்டு முப்பத்து முக்கோடி ஜனங்களின் பிரதிநிதிகள் விரதம் பூண்டுவிட்டார்கள். இந்த விஷயத்தில் தமிழர்களாகிய நாம் வடநாட்டாரைப்போல அத்தனை பிரயாஸை எடுக்கவில்லையே என்பது வாஸ்தவமே. எனினும், தந்தை பெற்ற செல்வத்திற்குத் தகுதியற்ற மகனும் பாத்தியதையடைவதுபோல் தாய்ப் பூமியில் பொது அபிவிருத்தியிலே நாமும் பாகமடைந்திருக்கிறோம். இவ்விஷயமாக மற்றொருமுறை முழு மனதுடன் நம்மவர்களுக்குப் புது வருஷ வாழ்த்துக் கூறுகின்றோம். வாழ்க பாரதம்! வாழ்கமன் வாழ்க!

No comments:

Post a Comment