Thursday, May 31, 2012

இதன் பெயரென்ன?


21 ஜனவரி 1920

லண்டன் “டைம்ஸ்” பத்திரிகையில் ஸர் வாலன்டைன் கிராஸ் பின்வருமாறு பரிதபிக்கிறார்:-

பத்து வருஷங்களின் முன்னே டில்லி நகரத்துக்கு வெளியே, இந்தியாவில், பண்டு இஸ்லாமிய ஆதிக்க மிருந்தற்குச் சிறந்தொரு சின்னமாகிய குதுப்மினார் என்ற கோரியின் கீழே ஒரு நாள் காலையில் சில மஹமதிய நண்பர்கள் என்னோடு ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தனர். இனி இந்திய ஸ்வராஜ்யமும், ஹிந்து ஆதிக்கமும் நேர்ந்தால் இந்திய மஹமதியரின் கதி என்ன ஆகுமோ என்றெண்ணி அவர்கள் பெருமூச்செறிந்தார்கள். இன்றைக்கு அவர்களில் சிலர் ஸ்ரீமான் காந்தியின் பரம சிஷ்யர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கு எங்கு பார்த்தாலும்  ‘ஹிந்து முஸ்லிம்கீ ஜய்’ என்ற சத்தம் பிறந்துவிட்டது. மஹமதியர்களில் மசூதிகளுக்குள் ஹிந்துக்கள் உபந்யாசர்களாய் முஸ்லிம்களுக்கு ஸ்வராஜ்ய உபதேசம் பண்ணுகிறார்கள். டில்லி நகரத்தில், சில தினங்களின் முன்பு உலோமாக்களின் ஸர்வ பாரத ஸங்கம் நடைபெற்றபோது அங்கு ஸ்ரீ காந்தி விருந்தாளியாகச் சென்றிருந்தார். இதைக்காட்டிலும் வினோதமான செய்து ஹிந்துக்களின் கொள்கைக்கிணங்கி முஸல்மான்கள் முக்யமான உத்ஸவ காலங்களில் பசுக்களை விட்டு ஆடுகளைக் கொல்ல உடம்பட்டதாகும். ஆனால் இப்படிச் செய்யலாமென்று அக்பர் சக்கரவர்த்தி வித்திறுக்கிறார்.”
என்று மேன்மேலும் ஸர் வாலண்டைன் தமது மன வருத்தத்தை விஸ்தரித் தெழுதிக்கொண்டு போகிறார். பொறாமையும் வயிற்றெரிச்சலும் இந்த வார்த்தைகளில் கொஞ்ந்து விட்டெரிகின்றன. இப்படிப்பட்ட மனோபாவ விலாஸங்களை இங்கிலாந்தில் ப்ரகடனம் செய்வதனால் யாருக்கென்ன பயன் விளையுமென்று டைம்ஸ் பத்திரிகை அதிகாரிகள் நினைக்கிறார்க்ள் என்பதை நம்மால் ஊஹிக்க முடியவில்லை.

ஆனால் தேசீய பாடசாலைகளில் ஹிந்து மத கிரந்தங்களுக்குத் தக்கபடி கல்வி கற்பிக்கப்படுமாதலால் அப்பாடசாலைகள் முஸல்மான்களுக்குப் பயன்பட மாட்டாவென்று ஸர் வாலன்டைன் சொல்லும்போதுதான். அவர் நம்பிக்கையின் வரம்புக்கு வெளியே பஹிரங்கமாக வந்து நிற்கிறார். ஏனெனில் தேசீயப் பாடசாலைகளில் முஸ்லிம் பிள்ளைகளுக்கு முஸ்லிம் மத நூல்களே உபதேசிக்கப்படு மென்பது ஸகலருக்கும் தெரிந்த விஷயம்.

Wednesday, May 30, 2012

தெலுங்க மஹா சபை


9 ஜூன், 1917

சென்ற வெள்ளிக்கிழமையன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் ஸ்ரீ வேங்கடப்பய்ய பந்தலு செய்த உபந்நியாஸம் கவனிக்கத்தக்கது. ராஜநீதி சாஸ்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமையுடையார்…

மேற்படி கொள்கைக்கு நல்ல திருஷ்டாந்தமாக, இக்காலத்திலும் கூடத் தெலுங்கு தேசத்தார் தமிழரைக் காட்டிலும் ராஜாங்க வ்யவஹாரங்களில் தீவிர புத்தி செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் நமக்குள் ஜாதிபேதமிருக்கிறது என்றால் ஜாதிபேதம் இந்தியாவில் மாத்திரமில்லை, உலகத்தில் எல்லா தேசங்களிலும் இருக்கிறது. .இந்தியாவில் கொஞ்சம் தீவிரமாகவும், விநோதமாகவும், மாற்றுவது கஷ்டமாகவும் இருக்கிறது. இப்போது பூமி முழுவதிலும் நடந்துவரும் மஹா ப்ரளயத்தில் இந்த ஜாதிபேதம் தவிடு பொடியாகப் போய்ப் புதிய மாதிரி உண்டாகும். இதுவெல்லாம் ஏன் சொல்ல வந்தேனென்றால், தமிழ்நாட்டு ஜனங்கள் வீண் சண்டைகளிலே பொழுது போக்குகிறார்கள். தெலுங்கர் ஜனாபிவிருத்திக்கு வழியாகிய நல்ல உபாயங்களிலே புத்தி செலுத்துகிறார்கள். சுதேசிய விஷயத்தில் இப்போது தெலுங்கருக்குள் இருக்கும் பக்தி சிரத்தையிலே நாலிலொரு பங்குகூடத் தமிழ் ஜனங்களிடம் இல்லை. சென்ற  வெள்ளிக்கிழமையன்று கூட மேற்படி நெல்லூர் ஆந்த்ர மஹாசபைப் பந்தலில் வந்தே மாதரம் என்ற கோஷம் அபரிமிதமாக இருந்ததென்று தந்தி சொல்லுகிறது. கொஞ்ச காலத்துக்கு முன்பு, கடலூரில் கூடிய மாஹாண சபையில் “வந்தே மாதரம்” பாட்டுக் கூடப் பாடவில்லையென்று கேள்விப்பட்டேன். தெலுங்கு ஜில்லாக்களில் ஒரு சபை கூட அப்படி நடந்திராது. இது நிற்க.
மேற்படி சபையில் வேங்கடப்பய்யா சபாநாயகராகப் பேசிய வார்த்தைகளின் ஸாரம் பின்வருமாறு:-

  1. தெலுங்கு தேசத்தைத் தனி மாகாணமாகப் பிரிக்க வேண்டும்.
  2. இந்தியாவுக்கு தன்னாட்டி கொடுக்க வேண்டும்.
  3. இயன்றவரை, இந்தியா முழுவதையும், பாஷைகளுக்குத் தக்கபடி வெவ்வேறு மாகாணமாக்கவேண்டும். அதாவது மதறாஸ், பம்பாய், ஐக்ய மாகாணம், மத்ய மாகாணம், பஞ்சாப், பங்காளம் என்ற பிரிவுகளை மாற்றித் தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மராட்டிய நாடு, கன்னட நாடு, ஹிந்துஸ்தானம், வங்க நாடு என்று பாஷைக்கிரமப்படி வகுக்கவேண்டும்.
  4. ஸ்வபாஷைகளில் கல்விப் பயிற்சி செய்விக்க வேண்டும். ராஜ்ய காரியங்களும் இயன்றவரை ஸ்வபாஷையில் நடக்க வேண்டும்.
மேற்படி நாலம்சங்களில் முதலாவது, மூன்றாவது, நாலாவது இம்மூன்றும் ஒரு பகுதி; இரண்டாவது மற்றொரு பகுதி. இரண்டாவது தாய்ப் பகுதி; மற்றவை கிளைப் பகுதிகளாகும்.

என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கையெல்லாம், நியாயமென்றே தோன்றுகிறது. ஆனாலும், இந்த ஸமயத்தில் ஆந்திரரைத் தனிப் பிரிவாக ருஜுப்படுத்துவதைக் காட்டிலும், ஆஸேது ஹிமாசல பர்யந்தம் உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒன்று என்ற மூல மந்திரத்தை நிலை நாட்டுவதே அவசியமென்று என் புத்திக்குத் தோன்றுகிறது. ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம்.  வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய்வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் ஜாதிபேதம் குலபேதம் பாஷைபேதம் ஒன்றுமே கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடர், ஒன்று.
ஹிந்துக்கள் உயர்ந்த நிலைமைக்கு வரவேண்டுமென்றால் ஐக்யநெறியை உடனே அனுசரிக்க வேண்டும். போன வருஷம் கீழ்க்கடலோரத்தில் பெரிய புயற்காற்றடித்தது. ஒன்றுகூடியிருந்த வீடுகள் பிழைத்தன. தனிக் குடில்களெல்லாம் காற்றிலே பறந்துபோயின. உலகத்தில் புதிய ஞானம், புதிய வாழ்க்கை, புதிய அறம், புதிய நெறி தோன்றக்கூடிய காலம் பிறந்துவிட்டதென்று மேதாவிகளெல்லாம் ஒருங்கே சொல்லுகிறார்கள். இங்ஙனம் புதிய ஞானம் பிறக்க வேண்டுமானால் அதற்கு ஹிந்து மதமே முக்ய ஸாதனமென்று நாம் சொல்லுகிறோம். ஸ்வாமி விவேகாநந்தர், ரவீந்திரநாத டாகுர், ஜகதீச சந்திர வஸு முதலிய பெரியோர்களும் அங்ஙனமே சொல்லுகிறார்கள். இந்த ஸமயத்தில் ஹிந்துக்கள் பிரிவு பேசலாமோ? ஹிந்துக்கள் பிரிந்துகிடந்தால், ஹிந்து தர்மத்தின்  மஹிமையை உலகத்தார் காண்பதெப்படி?

ஹிந்து தர்மம் பெருமாள் கோயிலைப்போலே; நிற்பது எங்கே நின்றாலும் அத்தனை பேருக்கும் ப்ரஸாதமுண்டு. பகவத் ஸந்நிதியில் ஜாதிபேதமில்லை. அத்தனை பேரும் கலந்து நிற்கலாம். ஹிந்து தர்மம் சிதம்பரத்தைப் போலே. அதனுள்ளே, பறையரும் ஒளியில் கலந்துவிடலாம்.

Tuesday, May 29, 2012

பால பாரத சங்கம்-முதலாவது பிரகடனம் பத்தாம் அவதாரம்


1907 மார்ச் 30.

“ஹே பாரதா! எப்போதெப்போது தர்மத்டதிற்கு பங்கமுண்டாகி அதர்மம் தலைதூக்கி நிற்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுகிறேன். ஸாதுக்களைக் காக்கும் பொருட்டாகவும், தீங்கு செய்வோர்களை நாசம் செய்யும் பொருட்டாகவும், தர்மத்தை நன்கு ஸ்தாபனம் செய்யும் பொருட்டாகவும் நான் யுகந்தோறும் வந்து பிறக்கிறேன்” என்று கிருஷ்ண பகவான் பகவத் கீதையிலே நமது பூர்விகராகிய அர்ஜுனனுக்கு வாக்களித்திருக்கிறார். 

ஆகையால் தற்காலத்தில் இந்தியர்கள் என்று வழங்கப்பெறும் ஹே பாரதர்களே! இப்போது பத்தாம் அவதாரம் தோன்றுவ்தற்குரிய காலம் வந்துவிட்டதா இல்லையா என்பதைப்பற்றி சிறிது ஆலோசியுங்கள்.

இந்தியாவிலே பிறந்து வாழும் 30 கோடி ஜனங்களை சுமார் ஒரு லக்ஷம் தொகையுள்ள பரங்கிக்கார ஜனங்கள் வந்து எவ்விதமாகவோ மாயைகள் செய்து அரசாட்சி செய்கிறார்கள். நம்மவர் வாயில்லாமல் பூச்சிகள்போல் அந்த அரசாட்சி இன்ன மாதிரியாக நடத்தவேண்டுமென்று வற்புறுத்துவதற்குக்கூட சக்தியில்லாதவர்களாயிருக்கிறார்கள். 30 கோடி ஜனங்கள் தீர்வை செலுத்துகிறார்கள். அந்தத் தீர்வை மொத்தத்தை இன்னவிதமாகச் செலவிட வேண்டுமென்று நியமனம் செய்யக்கூட இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. இங்கிலீஷ்காரர் தம்முடைய சொந்த (அனு) கூலங்களை கவனித்து எவ்விதமான படிப்புச் சொல்லிக் கொடுக்கிறார்களோ அந்தவிதமான படிப்புத்தான் படிக்கவேண்டும். நாமாக நமது சொந்த நன்மைகளைக் கவனித்து மற்ற சுதந்திர தேசங்களைப் போல் படிப்பு முறைகள் ஏற்பாடு செய்துகொள்ள வழியில்லை. நமது சொந்த ஜன்ம பூமியிலே முக்க்யி அதிகாரங்களெல்லாம் அந்நியர்களைச் சேர்ந்ததாய் உள்ளது. ஊழிய வேலைகளையே நாம் செய்ய வேண்டும். நமக்கு அவர்கள் பார்த்து “இட்டதே சட்டம், வைத்ததே வாழ்க்கை.”

மேலும் கன லாபமுள்ள வர்த்தக வியாபாரம், கைத் தொழில் முதலியவற்றிலெல்லாம் அவர்களே முதலாளிகளாயிருந்து லாபங்களையெடுத்து தமது தூர பந்தத்திலே கொண்டு சேர்க்கிறார்கள். கூலிப் பிழைப்புத்தான் நமக்கெல்லாம் விதித்திருக்கிறார்கள்.

நாம் ஆயுதங்களைத் தொடாத பேடிகளாக இருக்க வேண்டுமென்றும் ஆயுதங்கள் வைத்துக் கொண்டிருந்தால் தண்டனையென்றும் ஏற்பாடு செய்துவிட்டார்கள். நிராயுதபாணிகளை அவர்கள் இஷ்டப்படியெல்லாம் நடத்துவது எளிதல்லவா?

வருஷந்தோறும் 60 கோடி ரூபாய்கள் இங்கிருந்து வற்றடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடந்துகொண்டிருந்தால் இந்த பாரத தேசம் நாளுக்கு நாள் சொல்லமுடியாத தரித்திரத்திலும் பிணியிலும் மூழ்கி வருவது ஆச்சரியமாகுமா? இப்போது நடைபெற்று வரும் பிரிட்டிஷ் ராஜாங்க முறைமையிலே மேலே கூறியது போன்ற அநீதிகள் எத்தனையோ இருக்கின்றன. இந்த அநீதிகளை நாசம் செய்யும் பொருட்டாக நமக்கிடையே கடவுள் பத்தாம் அவதாரம் செய்திருக்கின்றார். இப்போது மனித ரூபமாக அவதாரம் செய்யவில்லை. அவருடைய அவதாரத்தின் பெயர் சுதேசியம்; அவருடைய  ஆயுதம் Bycott, அதாவது அன்னிய சம்பந்த விலக்கு அல்லது பஹிஷ்காரம்; அவருடைய மந்திரம் வந்தே மாதரம்.

Monday, May 28, 2012

அப்படிப் பேசும்போது அவர்மூச்சு முட்டிப்போய் விடவில்லையே யென்று நான் வியப்படைகிறேன்


1906 செப்டம்பர் 11

எம்.எம். ஹைண்டுமன் என்பவர் இந்தியாவிற்கு இங்கிலாந்திலேயுள்ள முக்கிய நண்பர்களில் ஒருவர். இவர் வேறு சிலரைப் போல நம்மிடம் அரை மனதுடன் அனுதாபம் கொள்வாரில்லை. நம்மவர்களுக்கு முற்றிலும் சுயாட்சி கிடைக்க வேண்டுமென்பதையே பெருநோக்கமாகக் கொண்டவர், மார்லியின் “வரவு செலவு கணக்கு”ப் பிரஸங்கத்தைப்பற்றி ‘ஜஸ்டிஸ்’ (நீதி) என்ற லண்டன் பத்திரிகையிலே ஒரு விஷயம் எழுதியிருக்கின்றார். இந்தியா சிறிது சிறிதாகச் செழிப்படைந்து வருகிறதென்று மிஸ்டர் மார்லி கூறியிருப்பதைப்பற்றி இவர் கண்டனை புரிந்து பேசுகிறார்:-

இவரது விவகாரங்கள் பின்வருமாறு:- (1757ம் வருஷம்) பிளாஸி சண்டை முதலாக  (1815ம் வருஷம்) வாடர்லு சண்டை வரை இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் கொள்ளையடித்துச் சென்றது நூறு கோடி (100,000,000) பவுன். அதற்கப்பால் 1875ம் வருஷம் முதல் 1906ம் வருஷம் வரை  குறைந்தபக்ஷம் மற்றோரு நூறு கோடி (100,000,000) பவுன் பிரதியுபகாரமில்லாமல் வாரிச் சென்றிருக்கிறார்கள்.

இன்றும் வருஷந்தோறும், இந்தியாவிலிருந்து பிரதி பிரயோஜன மில்லாமல் 3 கோடி (30,000,000) பவுன் எடுத்துக் கொண்டுபோகிறார்கள். இந்தியாவிலேயே அன்னியர்கள் (20,00,000) 2 கோடி பவுன் சம்பளமாக எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு இந்தியாவின் இரத்தத்தை அன்னியர்கள் உறிஞ்சுவதால் இங்கே பஞ்சமும், பிளேக்கும் ஜனங்களைப் பதினாயிரக்கணக்காக விழுங்குகின்றன. மரணத்திட்டம் வருஷந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைக்காட்டிலும்  பெரிய அநீதி எந்தக் காலத்திலும், எந்த ராஜாங்கத்தாராலேயும் செய்யப்பட்டதே கிடையாது.

மிஸ்டர் மார்லி மேற்கண்ட விஷயங்களையெல்லாம் மிக நன்றாய் அறிவார். அப்படியிருந்தும் அவர் இந்தியா செழிப்படந்து வருகிறதென்பதற்கு “நிதரிசனம்” காட்டப் புகுந்துவிட்டார். இந்தியா கடன்கார தேசமாகி அதன் வருஷாந்திர இறக்குமதிகளைக்காட்டிலும், ஏற்றுமதிகள் அதிகப்பட்டு, இங்கிலாந்தின் நன்மைகளின் பொருட்டு அது பெரும் நஷ்டமடைந்து வருவதையே, மார்லி இந்தியாவிலேயே செல்வம் குவிந்து வருவதற்கு திருஷ்டாந்தமாகக் கூறுகிறார்.

“விவசாய ஜாதியாருக்குப் பெரிய அனுகூலம் செய்து விட்டதாக” மார்லி பெருமை பாராட்டிக் கொள்ளுகின்றார். 11 பென்ஸ் கொண்ட 1 ரூபாயை ஹில்லிங் 4 பென்ஸ் கொண்டதாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று கவர்ன்மெண்டார் தமது சொந்த நலத்தின் பொருட்டு விதியேற்படுத்தி 100க்கு 40 ஆக இருந்த தீர்வையை 100க்கு 50 ஆகச் செய்துவிட்டார்கள். இது விவசாயிகளுக்குச் செய்த அனுகூலம். இனி, இத்தேச வஸ்துக்களை இழுத்துக் கொண்டு, அன்னியர்கள் காலில் போட்டு வரும் ரெயில் பாதைகளை அன்னிய கம்பெனியார் முதல் போட்டு நடத்துகிறார். இந்தியாவிலேயே எந்த வருஷம் பஞ்சம் அதிகமோ அந்த வருஷத்திலே கம்பெனி பங்காளிகளுக்கு அதிகப் பணம் கிடைக்கிறது. இது நமக்குப் பெரிய வரமாக அவர்கள் வெளியில் பேசிக் கொள்கிறார்கள். நீர்ப்பாய்ச்சல் விஷயத்தில் ஏதோ ஒரு பெரிய உதாரத் தன்மை காட்டிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 250 வருஷங்களிலே இந்தியாவின் நீர்ப்பாய்ச்சலின் பொருட்டு 28,000,000 பவுன் செலவிட்டிருக்கிறார்கள். அதில் பெருந்தொகை உபயோகமில்லாமல் துர்விநியோகமாயிருக்கிறது.

இத்தனையும் சேர்த்து ஒரே வருஷத்தில் இங்கிருந்து வாரிச்செல்லும் பணத்துக்கு சமானமாகமாட்டாது. புராதனமான அரிய வாய்க்கால் தொழில்களை சரியானபடி செப்பனிடாமல் பாழாக்கிவிட்டார்கள்.

இனி உப்பு வரி ஒன்றிருக்கிறது. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உப்புக் கிடைக்காதபடி நஷ்டமடைந்து கொண்டிருந்த சமயத்தில், வரியின் பளு மிகுதியாலேயே கவர்ன்மெண்டாருக்குத் தக்க வருமானம் கிடைக்க வழியில்லாமலிருக்கிறது, இந்த சமயத்தில் வரியை சிறிது குறைத்துவிட்டார்கள். உப்பைப் போன்ற பிராணதாரமான வஸ்துவில் வரி விதிப்பதுவே பெரும் பாதகம். அப்படியிருக்க, ஒருவித சுயநலத்தைக் கருதி உப்பைக் குறைத்துவிட்டது ஒரு தர்மமாகுமா?................. தர்மம் என்று சொல்லிக்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படியேதான் இதுவும் இருக்கிறது.

இவற்றையெல்லாம் நமது க்ஷேமாபிவிருத்தியின் நிதர்சனங்களென்று மார்லி வெட்கமில்லாமல் சொல்ல வந்துவிட்டார். நமக்கு இதன் அக்கிரமம் எவ்வளவு தெளிவாக விளங்குகிறதோ அவ்வளவு தெளிவாக மார்லிக்கும் விளங்குமென்பதில் ஆக்ஷேபமில்லை. ஆனால் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்தியா மந்திரி வேலை பார்ப்பவர் அதற்குத் தக்கபடி பேசவேண்டாமா? நாய் வேஷம் போட்டால் குலைத்துத்தானே தீரவேண்டும்? இந்தியாவின் விஷயமாக…. பேசிக்கொண்டு வந்த மார்லிக்கு அவர் பேசும்போது தொண்டையடைத்து மூச்சுமுட்டிப் போய்விடவில்லையே! என்ன ஆச்சரியம்! என்று ஹைண்ட்மான் கவலைப்படுகிறார்.

Sunday, May 27, 2012

வந்தே மாதரம்

ராகம்-காம்போதி                                                                தாளம்-ஆதி

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
                  இருந்ததும் இந்நாடே-அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
                 முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
                 சிறந்ததும் இந்நாடே-இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
                 வாயுற வாழ்த்தேனோ-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
                  என்று வணங்கேனோ? 

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
                  ஈந்ததும் இந்நாடே- எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
                 அறிந்ததும் இந்நாடே- அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
                 களித்ததும் இந்நாடே-தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
                 போந்ததும் இந்நாடே-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
                 என்று வணங்கேனோ? 

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
                 வளர்த்ததும் இந்நாடே-அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
                தழுவிய திந்நாடே-மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
                 சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
               ஆர்ந்ததும் இந்நாடே-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
                என்று வணங்கேனோ?

Saturday, May 26, 2012

ஸ்வாமி அபேதாநந்தர்

21, ஜூலை 1906

இந்த வாரத்தில் சென்னையிலே நடந்த சமாசாரங்களுக்குள் வெகு முக்கியமானது ஸ்வாமி அபேதாநந்தரின் வரவே யாகும். பாரத நாட்டு மஹரிஷிகளில் ஒருவரும் ஜகத் பிரசித்தருமாகிய ஸ்வாமி விவேகாநந்தரது ஸகபாடியுமான அபேதாநந்தர் பல வருஷ காலமாக ஐரோப்பா, அமெரிக்கா முதலிய இடங்களில் மண்ணாசையிலும் பொன்னாசையிலும் அமிழ்ந்துகிடக்கும் மனிதர்களிடம் வேதாந்த மார்க்கம் உபதேசித்து அவர்களுடைய இரும்பு நெஞ்சுகூட ஞானத் தீயில் இளகுமாறு செய்வித்து வேதாந்த மார்க்கம் உபதேசித்து அவர்களுடைய இரும்பு நெஞ்சுகூட ஞானத் தீயில் இளகுமாறு  செய்வித்து பெருங்கீர்த்தி பெற்றுவிட்டு,  இப்போது தமது தாய் நாட்டிற்கு மீண்டும் வந்திருக்கிறார்.

இவருக்குச் சென்னையில் நடந்த உபசரணைகளையும் இவர் சென்னையில் செய்த உபந்நியாசக் கருத்துக்களையும் பற்றி மற்றோரிடத்திலே பிரஸ்தாபம் செய்திருக்கிறோம். இவரும் இவருடைய கூட்டாளிகளும் கடல்மீது எத்தனையோ ஆயிரம் காதம் கடந்துபோய் இத்தேசத்தின் பெயர் கேட்டவுடனே அந்நியர்கள் முடி வணங்குமாறு செய்யும் நன்மைக்கு நம்மவர்களால் என்ன கைம்மாறு செய்ய முடியும்? இந்த மஹான்கள்தாம் என்ன கைமாறை எதிர்பார்க்கிறார்கள்? யாதொரு பற்று மில்லாமல், இரந்து உண்பவர்களாய்  உலகத்தாரின் ஞான வழிக்கு ஏற்பட்டிருக்கும் மாயையாகிய குருட்டுத் தன்மையை  நீக்கி, ஒளியளிக்க வேண்டுவதே கடமையாகக் கொண்டு நாள் கழித்துவரும் இப் பெரியார்களுக்கு உலகம் அளக்கத் தகாதவாறு கடமைப் பட்டிருக்கிறது. ஆத்மாவே உண்மை யென்றும், அதனை மறைத்து நிற்கும் மற்றத் தோற்றங்களெல்லாம் மயக்கமே என்றும் போதனை செய்யத் தலைப்பட்டிருக்கும் அபேதாநந்த ஸ்வாமிகள், அந்தப் பாரமார்த்திக நிலைமை அறியாமல் வியாவஹாரிக நிலையிலே உழலும் நம்மவர்களுக்குக்கூட மிகவும் பயன் படத்தக்க சில ஹிதோபதேசங்கல் தந்திருக்கின்றார். ஞாயிற்றுக் கிழமை மாலை டவுன் ஹால் வெளி மைதானத்திலே இவர் உபந்நியாசம் புரிந்த காலத்தில் நம்மவர்களின் பேடித்தன்மையும் பயங்காளித் தன்மையும் பற்றிப் பேசியது கொஞ்சமில்லை. “ஆண்மை இழந்து பள்ளத்தில் விழுந்து கிடக்கிறீர்களே! எழுந்து நின்று உங்களது புருஷத் தன்மையை நிரூபித்துக்கொள்ளுங்கள்” என்று இத் தேசத்தாரை நோக்கிக் கூறுவதில் விவேகாநந்தர் எம்மட்டு ஆத்திரம் கொண்டிருந்தாரோ அம்மட்டு அபேதாநந்தரும் கொண்டிருப்பதைக் காண்கிறோம். தீர புத்திரர்களாகிய ஆரியர்கள் ஏதோ ஒரு விதமான மதி மயக்கத்தால் குழந்தைகLளைப் போலவும் பெண்களைப் போலவும் நடந்துகொள்வதைப் பார்த்தால் அனைத்தையும் துறந்த ஞானிக்குக்கூட ஒருவிதமான பரிதாபம் ஜனிக்குமல்லவா?

அபேதாநந்தருக்கும் அவரைப் போன்ற ஞானிகளுக்கும் நாம் பெரிய உபசரணைகள் நடத்துவதால் மட்டும் அவர்களது பிரீதிக்கு உள்ளாய்விட மாட்டோம். பல்லக்குகள், புஷ்ப ஹாரங்கள், வாத்தியங்கள் என்பவற்றைக் கொண்டு ஒரு ஞானியின் கிருபையை சம்பாத்தியம் செய்துவிடுவதென்றால் அது எளிதான காரியமா? அவர்களது உபதேசத்தின் உண்மையைக் கிரகித்து நம்மால் இயன்றமட்டும் அதன்படி நடக்க முயல்வதே நாம் அவர்களுக்குச் செய்யக்கூடிய கடமையாகும்.

தீரத் தன்மையைப் பற்றி மட்டிலுமல்லாமல் ஐக்கியம் முதலிய மற்ற விஷயங்களைப் பற்றியும் அபேதாநந்தர் பேசியிருக்கிறார். இந்தியாவில் ஒரு கோடி ஜனங்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒருவனுக் கொருவன் சம்பந்தமில்லாமல் ஒவ்வொருவன் ஒவ்வொரு மாதிரி எண்ணங்கொண்டிருக்கிறான். ஆதலால் வெவ்வேறு வகைப் பட்ட ஒரு கோடி  எண்ணங்கள் ஏற்பட்டுப் போய் விடுகின்றன. எனவே ஒரு காரியம் எளிதாகச் சாதிக்க முடியாமல் போய் விடுகிறது. பிரிட்டிஷ் தேசத்தில் 4 கோடி ஜனங்கள் மாத்திரமே இருந்தபோதிலும், அவர்களைனைvரும் ஒரே விதமான எண்ணங் கொண்டிருப்பதால் அவர்கள் காரியங்கள் மிகவும் எளிதாகக் கைகூடிவிடுகின்றன. இதனை விவேகாநந்தர் வெகு தெளிவாக எடுத்துக் கூறி இருக்கிறார்.

அது நிற்க,  அபேதாநந்தர் சென்னை மாகாணத்திலும் நகரத்திலும் பெற்ற உபசரணைகள் அவருக்கு இத்தேசம் முழுதும் நடைபெறும் என்பதில் ஆக்ஷேபமில்லை. ஆனால் அத்துடன் இவர் சென்ற இடமெல்லாம் ஜனங்கள் இவரது போதனைகளைப் பக்தியுடன் கேட்டுப் பயன் பெறுவார்களென்று இத்தனைய மஹான்கள் இந்நாட்டிலே தோன்றி வருவார்களானால் ஆரிய பூமியானது மறுபடியும் புராதன காலத்துப் பெருமையைக் காட்டிலும் மேற்பட்ட பெருமைக்கு வந்துவிடும்.

Friday, May 25, 2012

ப்ராயச்சித்தம்

21 ஜூன் 1917                                                              பிங்கள ஆனி  8

என்னுடைய ஸ்நேஹிதர்களில் ஒருவராகிய் ராமராயர் இங்கிலாந்துக்குப் போயிருந்தார். திரும்பி வேதபுரத்துக்கு வந்தார். அவருக்கு ஒருவிதமான வேதாந்ததப் பயித்தியம். ப்ரம்மமே ஸத்தியம். லோகமெல்லாம் மித்தை. ஆதலால் எல்லாரும் ஸந்நியாஸம் வாங்கிக்கொள்ள வேண்டும். தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். சடைகளாகத் திரித்து விடலாம்.  அப்படிச் செய்தாலும் குற்றமில்லை. எப்போதும் ஓம், ஓம், என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.  அல்லது ஐம்புலன்களையும், மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்களையும் உள்ளே இழுத்துக்கொண்டு சுத்த ப்ரம்ம நிலையோ, அல்லது அதற்குப் போகிற பாதையோ, ஆகிய நிர்விகற்ப ஸமாதியில் நிற்கவேண்டும். இது அவருடைய மதம்; ஆனால் அவருடைய நடை மற்ற மனுஷ்யர்களைப் போலேதான்.
ஸ்ந்யாஸம் வாங்கவில்லை; தலை மொட்டையுமில்லை; சடையுமில்லை; ஓங்காரத்தைத் தவிர வேறு வார்த்தைகளும் சொல்லிக்கொண்டுதான் வருகிறார். நிர்விகற்ப ஸமாதியிலே அவர் இருப்பதை நான் பார்த்ததே கிடையாது.

மேற்படி ராமராயர் இங்கிலாந்தில் இருக்கும் போது, ஐரோப்பியர் கண் பார்க்காமல் கை  எப்படிச் சமைக்கும்? ஐரோப்பியர் சமையல் பண்ணின பதார்த்தங்களை நாளொன்றுக்கு நான்கு முறையாகப் பத்து வருஷ காலம் நிர்விக்நமாக போஜனம் செய்துகொண்டு வந்தார். (இந்த விஷயத்தில் அவர்மேலே அதிகக் குற்றம் சொல்ல இடமில்லை. ஐரோப்பாவில் ஐரோப்பியர் சமையல்  பண்ணினதைத் தின்னாமல் எப்படிப் பிழைக்க முடியும்? இங்கிருந்து பிராம்மணப் பரிசாரகர்களில் நூறு நூற்றைம்பது பேரைக் கொண்டு லண்டன் பட்டணத்தில் குடியேற்றினால் நம்மவர்கள் போய் ஜாதியாசாரங்களுக்கு விரோதமில்லாதபடி அங்கிருந்து படித்து வைதிகக் கலெக்டர்களாகவும் வைதிக பாரிஸ்டர்களாகவும் திரும்பி வர இடமுண்டாகும். ஸ்வாமி விவேகானந்தர் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஸஞ்சரித்த காலத்தில் பசுக் கறி முதலியவற்றை யதேஷ்டமாக சாப்பிட்டதாகப் பாதிரிகள் இந்தியாவில் கூக்குரல்  போட்டதைப் பொறுக்க முடியாமல், சென்னப் பட்டணந்திலிருந்து சில வைதிக சிஷ்யர்கள் வருத்தப்பட்டு விவேகானந்தருக்கு காயிதம் போட்டார்கள். அடுத்த கப்பலில் ஒரு வைதிக பரிசாரகனும், வைதிக போஜனங்களும் இந்தியாவிலிருந்து அனுப்பினால், தான் வைதிகமாக உண்பதில் ஆக்ஷேபமில்லையென்று விவேகானந்தர் மறுமொழி எழுதினாராம்.) ராமராயர் இங்கிலாந்தில் போய்ப் பத்து வருஷ காலம் இருந்து வியாபாரம் பண்ணிவிட்டுக் கொஞ்ச காலத்துக்கு முன்பு, வேதபுரத்துக்கு வந்து சேர்ந்தார். இங்கே அவர் கையில் கொஞ்சம் காசிருப்பதைக் கண்டு சில வைதிகர்கள் அவரைப் பிராயச்சித்தம் செய்து கொள்ளும்படி சொன்னார்கள். அவர் பண்னிக் கொள்ளவில்லை. ஆனால்  இங்கு வந்த பிறகு சுத்தமான பிராமணர் சமையல்தான் சாப்பிடுகிறார். பிராமண ஆகாரம் அவருக்கு நன்றாக ஒத்து வருகிறது. உடம்புக்கு ஒன்றும் செய்வதில்லை. மற்ற நடைகளும் அப்படியேதான். மூன்று வேளையும் ஸந்த்யாவந்தன, மாத்யான்ஹிகங்கள் தவறுவதில்லை. அமாவாசை தோறும் சரியான தர்ப்பணம்; வருஷத்தில் ஐந்தாறு சிராத்தம். எல்லாம் கிரமமாகவே நடத்தி வருகிறார். ஒரே ஒரு புரோஹிதரும் அனேக லெளகிகரும் இவரை ஜாதியிlல் சேர்த்துக்கொண்ட மாதிரியாகவே நடந்து வருகிறார்கள். பல புரோஹிதரும், சில லெளகிகருmம கொஞ்சம் ஒட்டியும் ஒட்டாமலுமே, தாமரை நீர் போலிருக்கிறார்கள். சிலர் ஒட்டாமலே விலகியிருக்கிறார்கள். போன மாஸம் மேற்படி ராமராயர் என்னிடம் ஊர்க்காரருடைய திருப்தியை உத்தேசித்துத் தான் ப்ராயசித்தம்  பண்ணிக் கொள்ள இஷ்டப்படுவதாக அறிவித்தார். நான் உடனே மேற்படி விஷயத்தை இந்த ஊர் வைதிகர்களுக்கெல்லாம் சிரோமணியாகிய ரங்கநாத சாஸ்திரிகளிடம் போய்ச் சொன்னேன். இந்த ரங்கநாத சாஸ்திரிகளுடைய மாப்பிள்ளை ஒருவன் ரங்கூனிலே போய்க் காபிக் கடை வைத்திருந்தான். தமிழ்த் தேங்குழல், தமிழ் முறுக்கு,  தோசை, வடை, கடலைச் சுண்டல் முதலிய பக்ஷணங்களைக் கொஞ்சமேலும் வட இந்தியா ஆர்ய சம்பந்தமில்லாதபடி நன்றாகப் பண்ணிக் கொடுத்து அங்குள்ள தமிழ்  மக்களெல்லாம், இந்த மிகவும் அருமையாகப் பாராட்டினபடியால் நல்ல பணக்காரனாகி, அங்கே தனது மனைவியாகிய மேற்படி சாஸ்திரிகளுடைய பெண்ணும், தானும் நாலைந்து குழந்தைகளுமாக செளக்கியத்தோடு வாழ்ந்து வருகிறான். இந்தக் காரணத்தை யொட்டி மேற்படி ரங்கநாத சாஸ்திரிகள் மாப்பிள்ளையுடன் எவ்விதமான சம்பந்தமுமில்லாமல் கத்தரித்து விட்டார். இவருடைய மனைவி மூலமாகக் காயிதப் போக்குவரவு நடக்கிறது. அதில் கூட இவர் கவனம் செலுத்துவதில்லை. இதே காரணந்தை யனுசரித்து அதாவது இவருடைய மாப்பிள்ளை ரங்கூனுக்குப் போனதை உத்தேசித்து, இந்த சாஸ்திரிகள் தம்முடைய வைதிகத்தை மிகவும் விஸ்தாரப்படுத்தி வைத்திருக்கிறார். மற்றவர்களுடைய வைதிகம் ஆறு முழமென்று வைத்துக் கொண்டால் இவருடைய வைதிகம் பன்னிரெண்டு முழம். இந்த ப்ராமணர் இங்கே வைதிகர்களுக்குத் தலைவர். இவரிடம் நான்  போய் ராமராயருக்குப் பிராயச்சித்தம் செய்துவைக்க வேண்டு மென்று சொன்னேன்.
அப்போது மேற்படி ரங்கநாத சாஸ்திரிகள் என்னைப் பார்த்து, “நீர் இந்த விஷயத்தை ஏன் கவனிக்கிறீர்?” என்று கேட்டார்.. நான் வைதிகமென்றும் அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் கேள்விக்கு நான் மறுமொழி சொல்லாமல், “ஸமுத்ர யாத்திரை  செய்தவன் பண்ண வேண்டிய ப்ராயசித்த மெப்படி?” என்று கேட்டேன்; (இது வரைக்கும் சொன்ன கதை யெல்லாம் பீடிகை. இனிமேல் எழுதப் போகிற வசனங்களே நான் சொல்ல வந்த விஷயம். ப்ராயச் சித்தம் கடல் யாத்திரைக்கு எப்படி நடத்த வேண்டுமென்று நான் கேட்டதற்கு ரங்கநாத சாஸ்திரி சொல்லிய மறுமொழி கொஞ்சம் தர்க்க சாஸ்த்ர ஹானியாக இருந்த போதிலும் எனக்கே கேட்க ரஸமாக இருந்தபடியால், பிறருக்கும் தெரிவிப்போம் என்ற எண்ணத்துடன் இங்கெழுதலானேன்.) ரங்கநாத சாஸ்திரிகள் சொல்லுகி்றார்:-
“ இங்கிலீஷ் படித்தவன் பண்ணுகிற ப்ராயச்சித்த மெல்லாம் ‘ஹம்பக்’ (பொய் வேஷப்) ப்ராயச்சித்தம். இங்கிலிஷ் படித்தவனுக்கு இந்த விஷயத்தில் கொஞ்சமேனும் நம்பிக்கை கிடையாது. ருஷ்யாவிலே ராஜ்யம் புரண்டு போச்சுதாமே. ஜாதிகுல மெல்லாம் லோக முழுதிலும் தலைகீழாகக் கவிழ்ந்து போமென்று ஆனிபெஸண்ட் பத்திரிகையில் போட்டிருந்ததாமே! ‘தன் மத்யே’ இன்னுமொரு பேச்சு உம்மிடத்தில் கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே யிருந்தேன். ஆனி பெஸண்டுக்கு அஷ்டமாசித்துகளும் வருமென்று தஞ்சாவூரில் ஒரு பெரிய யோகீசுவரர் என்னிடம் நேரில் சொன்னார்… உமக்குத் தெரியாதா? போகட்டும் போம்… மொத்தத்தில் உத்தம ஸ்த்ரீ. வெள்ளைக்கார ஜாதியில் பிறந்து நம்முடைய  ஹிந்து மதத்தைச் சேர்ந்து விட்டதாக வாயினாலே எப்போது சொன்னாளோ, அவள் நம்மைச் சேர்ந்தவளாகவே நினைக்க வேண்டும். இந்த விஷயத்தில், காளிதாசரே, நம்முடைய அபிப்பிராயமென்னவென்றால், எந்தக் குலமாக, எந்த ஜாதியாக இருந்த போதிலும் நமது ஆலயத்தில் வந்து கும்பிட்டால் அவர்களை நாம் ஹிந்துவாக நினைத்து ப்ரேமை செலுத்த வேண்டும். இந்த ஆனிபெஸண்ட்கூட பூமி முழுதிலும் ஸஹோதரத்தவமும் ஸம்த்துவமும் ஏற்படப் போகிறதென்று சொல்லுவதாகக்கேள்வி. அந்த வார்த்தை ஸத்தியமாகத்தான் இருக்கும். அந்தம்மாளL வெகு தூரம் படித்தவளாமே? அஷ்டமாஸித்தி யென்கிற வார்த்தை வந்தால் அஸாதாரணமான புத்தியாவது உண்டென்பது நிச்சயந்தானே? நம்முடைய சாஸ்திரங்களும் அப்படியேதான் சொல்லுகின்றன. கலி மேலே போகப் போக ஜனங்களுக்குள்ளே  கலப்பு மிகுதிப்பட்டுக் கடைசியில் ஒரே குலமாய்விடுமென்று சாஸ்திரம் சொல்லுகிறது. எல்லாரும் ஒரே குலமாய்க் கெட்டுப் போவார்களென்று சொல்லுகிறது. யதார்த்தம் அப்படியில்லை. ப்ரஹ்மாண்ட  புராணத்தில் நான் ஒரு சுலோகம் படித்தேன். அது இப்போது ஞாபகமில்லை. அதிலே என்ன போட்டிருக்கிறதென்றால் கலியுகத்திலேயே ஒரு கிருதயுகம் வரும் என்று போட்டிருக்கிறது. கலி முற்றி உலகம் நாசமாய்ப் போகுமென்ற வாக்யங்களை சோதனை போட்டுப் பார்த்திருக்கிறேன். அவற்றை யெல்லாம் காட்டிலும் மேற்படி ப்ரஹ்மாண்ட புராண வாக்யமே  ப்ரமாணமென்று நான் நிச்சயமாக  ருஜுப்படுத்துவேன். காளிதாஸரே, நீரும் அதை நம்பும். இதெல்லாம் ஏன் சொல்லுகிறேனென்றால் உம்முடைய ஸ்நேகிதர் ராமராயர் ப்ராயச்சித்தம் பண்ணிக் கொள்ளப் போகிற்தாகச் சொன்னீரே! அது அவசியமில்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் கிருதயுகம் வந்து விடுமானால, அவருக்கு யாதொரு சிரமமுல்லை. எல்லாரும் ஸமானம். அட க்ருத யுகம் வரவெயில்லை; இந்தக் கலியுகமே சாசுவதமாக இருக்கப் போகிறதாக வைத்துக் கொள்வோம். அதிலும், அதிகமாகப் பொய் சொல்லாமல் இருப்பது விசேஷம். கலி தானாகவே முற்றுவது போதாதென்று நாம் ஒரு பக்கம் அதைப் பொய் சொல்லிப் பழுக்க வைப்பதில் என்ன சுகம்? கடல்  யாத்திரை பண்ணினால் என்ன குடி முழுகிப் போச்சு? ஏன் காணும், காளிதாஸரே, உம்மைத்தான் கேட்கிறேன். கடல் யாத்திரை பண்ணினால் என்ன? இருக்கிற் பிராமணர்களெல்லாரும் ஸ்மிருதி வாக்யம் தவறாதபடி தான் நடக்கிறார்களோ? நம்முடைய மாப்பிள்ளை ரங்கூனுக்குப் போய் அங்கே நல்ல கோடீசுவரணாக வாழ்கிறான். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பங்களூர், திருச்சினாப்பள்ளி, தஞ்சாவூர், புதுச்சேரி, கும்பகோணம் இத்யாதி க்ஷேத்ரங்களில் வஸிக்கும் இங்கிலிஷ் பிராமணர்களுக்குள்ளே ஸந்த்யா வந்தனம் எவ்வளவும் சொற்பம்? தீர்த்த பானம் கூட நடக்கத்தான் செய்கிறது. ராமராமா! இந்த ரிஷிகளெல்லாரும் என்ன ப்ராயச்சித்தம் பண்ணுகிறார்கள்? என் மாப்பிள்ளை ரங்கூனில் நித்ய கர்மானுஷ்டானங்கள் தவறாமல் நடத்தி வருகிறானென்று கேள்வி. அவன் வந்தால் ஜாதி ப்ரஷ்டந்தானே? ப்ராயச்சித்தம் பண்ணினால் கூட நான் சேர்த்துக்கொள்ள மாட்டேன். தள்ளுங்காணும்! ப்ராய்ச் சித்தமாவது, வெங்காயமாவது! நான் ஏதோ உதர நிமித்தமாக இந்த வைதிகத்தை விட முடியாமல் கட்டுப் பட்டுக் கிடக்கிறேன். இதில் மற்றவர் வந்து சேர்வதிலே எனக்கு ஸம்மதமில்லை. ராமராயர் ப்ராயச்சித்தம் பண்ணிக் கொள்ளுவதில் எனக்கு இஷ்டமில்லை. ரூபாய் ஐந்நூறு கொடுத்தால் செய்து வைக்கிறேன். ஆக்ஷேபமில்லை. அப்படியே அவர் ப்ராயச்சித்தம் செய்தாலும் நான் அவருடன் பந்தியிலிருந்து சாப்பிட மாட்டேன்” என்றார். இதை நான் ராமராயரிடம் வந்து சொன்னேன். ராமராயர் ப்ராயச்சித்த  யோசனையை நீக்கி விட்டார்.