Friday, November 30, 2012

எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்குக் கடிதம்


ஓம் சக்தி

கடையம்
30 ஜனவரி 1919

ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்.

இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதைச் செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலவிட்டு, மேற்படி தொகைக்கு வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக்கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின்மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக்கொள்ளுதல் இன்றியமையாததாயிற்று.

இந்த விஷயத்தைக் குறித்து மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி, அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும், உன்னால் இயன்றது சேர்த்துக் கூடிய தொகையை "ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதி, பழைய கிராமம், கடையம்" என்ற விலாசத்துக்கு ஸ்ரீமதி சின்னமாச் சித்தி மூலமாகவேனும் நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்.

உனக்கு மகாசக்தி அமரத்தன்மை (தருக)

உனதன்புள்ள,
சி.சுப்பிரமணிய பாரதி

Thursday, November 29, 2012

நெல்லையப்பருக்குக் கடிதம்

கடையம்
21 டிசம்பர் 1918

ஸ்ரீமான் நெல்லையப்ப பிள்ளைக்கு நமஸ்காரம்.

நான் ஸெளக்கியமாகக் கடையத்துக்கு வந்து சேர்ந்தேன். இவ்வூருக்கு நான் வந்த மறுநாள் பாப்பா பாட்டு, முரசு, நாட்டுப் பாட்டு, கண்ணன் இவை வேண்டுமென்று பலரிடமிருந்து கடிதங்கள் கிடைத்தன.

என் வசம் மேற்படி புஸ்தகங்கள் இல்லை. உன்னிடம் மேற்படி புஸ்தகங்களிருந்தால் அனுப்பக்கூடிய தொகை முழுதும் அனுப்பும்படி ப்ரார்த்திக்கிறேன்.

'பாஞ்சாலி சபதம்' - இரண்டு பாகங்களையும் சேர்த்து ஒன்றாக அச்சடிப்பதற்குரிய ஏற்பாடு எதுவரை நடந்திருக்கிறதென்ற விஷயம் தெரியவில்லை. இனிமேல் சிறிது காலம் வரை நான் ப்ரசுரம் செய்யும் புஸ்தகங்களை போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் காட்டி அவருடைய அனுமதி பெற்றுக்கொண்ட பிறகே ப்ரசுரம் செய்வதாக ராஜாங்கத்தாருக்கு நான் ஒப்பந்தமெழுதிக் கொடுத்திருக்கிறேன்.

ஏற்கெனவே 'பாஞ்சாலி சபதம்' (முதல் பாகம்) வெளிப்பட்டிருக்கிற படியாலும், ப்ரசுரம் செய்பவன் நானன்றி நீயாதலாலும் இதை அச்சிடுமுன் மேற்படி ஒப்பந்த விதியை அனுசரித்தல் அவசியமில்லையென்று தோன்றுகிறது.

அப்படியே காண்பித்தாலும் தவறில்லை. நமது நூல் மாசற்றது. டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் ஹானிங்டன் எனக்கு மிகவும் அன்புள்ள ஸ்நேகிதர்; தங்கமான மனுஷ்யன். ஆதலால், அநாவசியமான ஆஷேபங் கற்பித்து நமது கார்யத்தைத் தடை செய்யக்கூடியவரல்லர். நீயே மேற்படி நூலை அவரிடத்தில் காட்டி அனுமதி பெற்றுக்கொள்ளுக.

பாப்பா பாட்டு முதலியன உன்னிடம் இல்லாவிட்டால் உடனே அவற்றை மீண்டும் ப்ரசுரம் செய்தல் மிகவும் அவஸரம்.

இவை முதலிய எல்லா விஷயங்களைப் பற்றி உன்னிடம் நேரே பேச விரும்புகிறேன். இதன் பொருட்டாக இக்கடிதம் கண்டவுடன் இங்கு நீ நேரே புறப்பட்டு வந்துசேரும்படி வேண்டுகிறேன். ஸ்ரீமான் குவளை க்ருஷ்ணையங்கார் முதலிய நம்முடைய நண்பர்களுக்கு என் நமஸ்காரத்தைத் தெரிவிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். இன்னும் ப்ரசுரம் செய்ய வேண்டிய நூல்கள் என்னிடம் பல இருக்கின்றன. நான் இப்போது பிரிடிஷ் இந்தியாவுக்கு வந்துவிட்டபடியால் நமது ப்ரசுரங்களுக்குப் பணம் கொடுக்கக் கூடிய நண்பர்களும் பலர் இருக்கிறார்கள். உன்னை ஸஹாய புருஷனாகக் கொண்டால் ப்ரசுர கார்யம் தீவிரமாகவும் செம்மையாகவும் நடைபெறுமென்று தோன்றுகிறது.

எதற்கும், நீ உடனே புறப்பட்டு இங்கு வந்துசேரும்படி ப்ரார்த்திக்கிறேன்.

உனக்கு மஹாசக்தி அமரத் தன்மை தருக.

உனதன்புள்ள,
சி.சுப்பிரமணிய பாரதி

(http://mahakavibharathiyar.info/kadithangal/nellayappar_kadayam.htm)

Wednesday, November 28, 2012

தம்பி விசுவநாதனுக்கு கடிதம்

புதுச்சேரி, 3 ஆகஸ்டு, 1918

ஸ்ரீமான் விசுவநாதனுக்குப் பராசக்தி துணை செய்க. உன்னுடைய அன்பு மிகுந்த கடிதம் கிடைத்தது. அதைப் படித்து அதினின்றும் உன்னுடைய புத்திப் பயிற்சியின் உயர்வைக் கண்டு சந்தோஷமடைந்தேன். தந்தைக் கப்பால் நீ என்னை முக்கிய சகாயமாகக் கருதுவது முறையே. இதுவரை உன்னை நேரே பரிபாலனம் செய்வதற்குரிய இடம் பொருளேவல் எனக்கு தெய்வ சங்கற்பத்தால் கிடையாமல் போய்விட்டது. அதையெண்ணி இப்போது வருந்துவதிலே பயனில்லை. எனினும் இயன்றவரை விரைவாகவே எனக்கு நற்காலமும் அதனால் உன் போன்றோருக்குக் கடமைகள் செய்யும் திறமும் நிச்சயமாக வரும். உன் கடிதத்தில் கண்டபடி நீ இங்கே என்னைப் பார்க்க வரும் காலத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் வா. தங்கை ஸ்ரீ லக்ஷ்மி சில வருஷங்களுக்கு முன் எட்டயபுரத்துக்கு வந்திருந்த காலத்தில் என்னைக் கொஞ்சம் பணம் அனுப்பச் சொல்லியிருந்தாள். அப்போது என் கையில் பணம் இல்லாதபடியால் அனுப்பவில்லை. அது முதல் என் மீது கோபம் கொண்டு எனக்கு ஒரு வார்த்தைகூட எழுதாமலிருக்கிறாள். என்னை மன்னிக்கும்படிக்கும் எனக்கு அடிக்கடி காயிதங்களெழுதும்படிக்கும் நீ அவளை அழுத்தமான பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன். தம்பியுள்ளோன் படைக்கஞ்சான் என்ற வாக்கியத்தின் உண்மையை உன் விஷயத்தில் நம்பியிருக்கலாமென்றே நம்புகிறேன்.

எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எத்தனை கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ்கூட எழுத முடியாவிட்டால் ஸம்ஸ்கிர்தத்திலே காயிதம் எழுது. திருப்பயணம் வி.ராமஸ்வாமி அய்யங்கார் என்னிடம் 'விநாயகர் ஸ்தோத்திரம்' (தமிழ் நூல்) அச்சிட வாங்கிக்கொண்டு போனார். இன்னும் அச்சிட்டனுப்பவில்லை. மேலும் அவர் 'பாஞ்சாலி சபதம்' அச்சிடும் சம்பந்தமாகப் பணம் சேகரித்துப் பட்டணத்துக் கனுப்புவதாகச் சொன்னார். அங்ஙனம் அனுப்ப முடியுமானால் உடனே புதுச்சேரியில் எனது விலாசத்துக்கனுப்பும்படி ஏற்பாடு செய்.

அது மாத்திரமேயன்றி, 'விநாயர் ஸ்தோத்திரம்' வேலையை விரைவில் முடித்துப் புஸ்தகங்களனுப்பும்படி சொல்லு. உடம்பையெண்ணிப் பயப்படாதே. அடிக்கடி பால் குடி. ஜலத்தை எப்போதும் காய்ச்சிக் குடி. வேறு எந்த விஷயத்துக்கும் கவலைப்படாதே. பொறுமையாலும் பயமின்மையாலும் இவ்வுலகத்தில் மனிதன் தேவத்தன்மை அடைகிறான். அந்நிலைமை உனக்கு மஹாசக்தி அருள் செய்க.

உனதன்புள்ள ஸஹோதரன்,
சி.சுப்பிரமணிய பாரதி

Tuesday, November 27, 2012

ஜாதி 1

26 டிசமப்ர் 1916

ஜாதி என்ற சொல் இரண்டர்த்த முடையது. முதலாவது ஒரு தேசத்தார் தமக்குள் ஏற்பத்திவைத்துக் கொள்ளும் பிரிவு. வேளாள ஜாதி, பிராமண ஜாதி, கைக்கோள ஜாதி என்பது போல. இரண்டாவது, தேசப் பிரிவுகளைத் தழுவிய வேற்றுமை. ஜப்பானிய ஜாதி, சீன ஜாதி, பார்ஸீ ஜாதி, பாரத ஜாதி, ஆங்கிலேய ஜாதி, ஜர்மானிய ஜாதி, ருமானிய ஜாதி என்பது போல. இவ்விரண்டும் அதிக அனுகூலம் இல்லையென்பது ஸ்ரீமான் ரவீந்திரநாத டாகுருடைய கக்ஷி.

அமெரிக்காவிலேயே பிறந்தவன் தன்னை அமெரிக்க ஜாதியென்றும், இங்கிலிஷ் ஜாதி இல்லையென்றும் நினைத்துக் கொள்ளுகிறான். இங்கிலாந்திலுள்ள ஆஙிலேயனுக்கும், குடியரசுத் தலைவன் வில்ஸனுக்கும் நடை, உடை, ஆசாரம், மதம், பாக்ஷை எதிலும் வேற்றுமை கிடையாது. ஆனால் தேசத்தையொட்டி வேறு ஜாதி, நேஷன். இந்த தேச ஜாதிப்பிரிவு மேற்குப் பக்கத்தாரால் ஒரு தெய்வம் போலே ஆதரிக்கப்படுகிறது. அங்கு யுத்தங்களுக்கு இக்கொள்கை முக்கிய காரணம். எல்லா தேசத்தாரும் ஸகோதரரென்றும், மனுஷ்ய ஜாதி முழுதும் ஒன்றேயென்றும், ஆதலால் தேச வேற்றுமை காரணமாக ஒருவரையொருவர் அவமதிப்பதும் அழிக்க முயல்வதும் பிழைகளென்றும் ஸ்ரீடாகுர் சொல்லுகிறார்.

அமெரிக்காவிலே ஒரு சபையிலே இவர் மேற்படி கொள்கையை எடுத்துக் காட்டுகளையில், அந்த தேசத்தானொருவன் இவரை நோக்கி, “இவ்விதமான கொள்கையிலிருந்து பற்றியே உங்கள் தேசத்தை அந்நியர் வென்று கைப்பற்றிக் கொள்ள நீங்கள் தோற்றுக் கிடக்கிறீர்கள்” என்றான்.

“நாங்கள் இப்போது புழுதியோடு புழுதியாக விழுந்து கிடந்தாலும் எங்கள் பூமி புண்ணிய பூமி. உங்களுடைய செல்வத்தில் மேலே தெய்வசாபமிருக்கிறது” என்று ரவீந்திரநாத டாகுர் அவருக்கு மறுமொழி சொன்னாராம். அதாவது இந்த நிமிஷத்தில் செல்வத்திலும், பெருமையிலும் நம்மைக் காட்டிலும் அமெரிக்கா தேசத்தார் உயர்வு பெற்றிருந்த போதிலும் இந்த நிலைமை எப்போதும் மாறாமலிருக்கு மென்று அமெரிக்கர் நினைபப்து பிழை. நாங்கள் தெய்வத்தையும் தர்மத்தையும் நம்பியிருக்கிறோம். கீழே விழுந்தாலும் மறுபடி எழுந்துவிடுவோம். அமெரிக்கா விழுந்தால் அதோ கதி. ஆதலால் இனிமேலேனும் ஹிந்து தர்மத்தை அனுசரித்து உலக முழுவதிலும் எல்லா தேசத்தாரும் உடன் பிறப்பென்றும் சமானமென்றும் தெரிந்து கொண்டு, பரஸ்பரம் அன்பு செலுத்தினால் பிழைக்கலாமென்று ரவீஇந்திரர் அவர்களுக்குத் தர்மோபதேசம் செய்கிறார்.

வெளித் தேசத்தாருக்குத் தர்மோபதேசம் செய்கையில் நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? இங்கே அநாவசியமான ஜாதி விரோதங்களும் (அன்புக் குறைவுகளும்) அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழித்து உடனே அன்பையும் உடன் பிறப்பையும் நிலை நாட்டுவது நம்முடைய கடமையன்றோ?

Monday, November 26, 2012

செத்தவரைப் பிழைப்பிக்கும் ஸஞ்சீவி

 19-2-1910 (இந்தியா)

அமெரிக்காவில் ஒரு பிரஸித்த மாது சிகாகோவிலுள்ள வைத்திய மஹான்கள் முன்னிலையில் ஒரு செத்த முயலை மின்ஸார வேகத்தால் உயிர்பித்தாள். எல்லாப் பண்டிதர்களும் ஆச்சரியப்பட்டனர். நமது பாரத நாட்டிலும் ஸ்வாபிமான மின்றி ஆங்கில மாயையால் கொல்லப்பட்ட பாரதர்களை “வந்தே மாதரம்” எனும் பஞ்சாக்ஷரமானது உயிர்ப்பித்துவிட்டது.

நாட்டின் பெருமையை விளக்க இந்நாட்டிலேயே பல அத்தாட்சிகள் பிரத்தியக்ஷமாய் இருக்கின்றன. வெளி நாட்டவர்களும் அநேக விதமாய் வெளியிட்டிருக்கின்றனர். ஸ்வதந்திர முயற்சியில் எண்ணிறந்த கஷ்டங்களை மஹான்களான பலர் மனஞ் சலியாமல் திடபக்தியுடன் அனுபவித்து வருகின்றனர்.

இதைக் கண்டு பிரிடிஷ் அரசாங்கம் மிரண்டு, பல சட்டங்கள் எனும் ஆயுதங்களை வீசுகின்றது. இத்தனை விதமான கிளர்ச்சிகளைக் கண்டும் இன்னும் சில ராஜ விச்வாஸ மிதவாதிகள் கண் விழியாமல், முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி, உடுப்ப உடுத்து, இடித்திடித்துண்ணா, செவிகேளா, கண்விழியா நெட்டுயிரிப்போடுற்ற பிணமாய் இருக்கின்றனர். இவர்களை எந்த மின்ஸார சக்தி வந்து உயிர்பிக்கப் போகிறதோ, அது கடவுளே யறிவார்.

Sunday, November 25, 2012

Rights and Duties

To the Editor of New India

In the course of a recent lecture at Madras, Mrs. Annie Besant is reported to have emphasised the upholding of one’s duties in preference to one’s rights. And the Chairman of the meeting, Justice Sadasiva Iyer, naively remarked (in effect): “ After listening to Mrs. Besant’s speech, I have come to see that man has no rights at all. He has only duties. God alone has rights, etc.”

Now, I have a right to submit that such teachings contain but a partial truth and may do injury to the cause of our national progress which, I am sure, is as dear to the hearts of Mrs. Besant and Justice Iyer to anyone else’s.
My duties are based on my rights. That is to say, may duties to others are defined by their duties to myself. It is my duty to respect my father, because I am his son and he has permitted me the right to the life and the culture that he has bequeathed to me.

In my view, they are of equal sacredness: my rights and my duties. My duties I must fulfil. My rights I must vindicate. Life is possible only on such a basis.
Meanwhile, it is the right and duty of the wise ones to purify the strong by teaching them their duties and to strengthen the weak by teaching them their rights.

Pondicherry
October 17
                                                              C. Subramania Bharati

Saturday, November 24, 2012

ஸ்ரீ ரவீந்திரர் திக் விஜயம்

25 ஆகஸ்டு 1921                                  துன்மதி ஆவணி 10

“மன்னற்குத் தன் தேச மல்லால் சிறப்பில்லை;
கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு.”

ஆஹா, மனிதராகப் பிறந்தோரில் கீர்த்தி பெற்றால் மாத்திரம் என்ன ப்ரயோஜனம்? என் நண்பர் பெயர் சொல்லப்படாத ஒருவருக்குக்கூட ஓரிடத்தில், ஒரு கூட்டத்தினிடையே ஒரு கக்ஷியாருக்குள் ஒருவிதமான கீர்த்தி ஏற்பட்டிருக்கிறது.

நாளை அந்தக் கக்ஷி புகையாய்விடும். அந்தக் கூட்டம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அந்தக் கீர்த்தி, “பொய்யாய்ப் பழங் கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமே.”
கீர்த்தியடைந்தால், மஹான் ரவீந்த்ரதைப் போலே அடைய வேண்டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்த்ரியா, பிரான்ஸ் பூமண்டல முழுமையும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுகளோ வங்க பாஷையிலே உள்ளன. வெறும் மொழிபெயர்ப்புக்களைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத்தான் இந்தக் கீர்த்தி. 

ஜெர்மனியிலே, இவருடைய அறுபதாம் வருஷக் கொண்டாட்டம் சில தினங்களின் முன்பு கொண்டாடப்பட்டது. அப்போது (பி) பெர்ன்ஸ்தாப் (எப்) முதலிய மஹா பிரமுகர்கள் கூடி ஒரு ஸமிதி சமைத்துக்கொண்டு, இக்காலத்தில் ஜெர்மன் பாஷையில் எழுதப்பட்டிருக்கும் மிக முக்யமான காவ்யங்களும், சாஸ்த்ர க்ரந்தங்களும், பிற நூல்களும் அடங்கிய மிக விலையுயர்ந்த புஸ்தகத் தொகுதியொன்று டாகுருக்கு ஸம்மானம் செய்தார்கள். 

ஜெர்மனி தேசம் இன்றைக்கும் ஐரோப்பாக் கண்டத்தின் வித்யா ராஜதானியாக விளங்குகிறது. ஜெர்மனியில் நமது பாரத ரவீந்த்ரராகிய நவீந்த்ரருக்கு நடத்தப்பட்ட உபசாரங்களெல்லாம் அவருக்குச் சேரமாட்டா. பாரதமாதாவின் பாத கமலங்களுக்கே சேரும். ஜெர்மனியில் உபசாரம் நடந்த மாத்திரத்திலே, அதைப் பின்பற்ரி மற்ற முக்யமான ஐரோப்பிய தேசங்களெல்லாம் அவருக்குப் பூஜை நடத்துமென்பது சொல்லாமலே விளங்கும். அங்ஙனமே நடத்தியுமிருக்கின்றன என்பதைக் கீழே நன்கு விவரணம் புரிவோம்.

1921ம் வருஷம், மே மாஸம், 21ந் தேதியன்றி, “ஹம்புர் கெர் ஜெய்துங்க” என்ற பத்திரிகையில் ஒருவர் எழுதியிருக்கும் நிருபத்தில் ஸ்ரீமான் டாகுரைப் பற்றிய பின்வரும் வசனங்கள் கவனிக்கத் தக்கன; “ஸ்ரீமான் ரவீந்த்ரநாத டாகுர் ஸபைக்குள் வந்து பிரவேசித்த மாத்திரத்தில் எங்கள் அறிவுக் கெட்டாத ஒரு சக்தி வந்து புகுந்தது போலிருக்கிறது. இந்த மனிதருடைய வாழ்க்கையில் ஒற்றை க்ஷணமாவது இவர் எல்லையில்லாத ஜகத்துடன் லயப்பட்டு நில்லாத க்ஷணம் கிடையாதென்பது தெளிவாகப் புலப்பட்டது. அவருடைய ஆரம்ப வசனங்களே மிகவும் வியக்கத்தக்கனவாக இருந்தன. கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்கும் நிகழ்ந்திருக்கும் ஸந்திப்பே இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஸம்பவமென்று ரவீந்த்ரர் தம்முடைய முதல் வாக்கியமாகக் கூறினர். ஆசியா ஐரோப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய உண்மைகள், ஆசியா ஐரோப்பாவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய சக்திகள் பல இருக்கின்றன என்பதை ரவீந்த்ரர் மறுக்கவில்லை. இதனை மேற்றிசை உபந்யாஸங்களினிடையே அவர் பன்முறை அங்கீகாரம் செய்திருக்கிறார். இந்தியாவுக்கு வந்த பின்னர் சில ஆங்கிலோ இந்தியப் பத்திராதிபர்களுக்குப் பேரானந்தம் விளையும்படி மிகவும் அழுத்தமான பாஷையில் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் இஃதன்று அவருடைய முக்யோபதேசம். நாம் மேற்றிசையாரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களைக் காட்டிலும், அவர்கள் நம்மிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் அதிகமென்பதே அவருடைய மதம். ஆசியாவையும் ஐரோப்பாவையும் ஒற்றுமைப்படுத்தினாலன்றி, உலகத்தில் யுத்தங்கள் நிற்கப் போவதில்லை. ஆசியாவும் ஐரோப்பாவும் ஸமத்வம், ஸஹோதரத்வம், அன்பு என்ற தளைகளாலே கட்டப்பட்டாலன்றி, உலகத்தில் ஸமாதானத்துக்கிடமில்லை. ஸமாதானமே யில்லாமல், மனிதர் பரஸ்பரம் மிருகங்களைப் போலே கொலை செய்து கொண்டு வருமளவும், மனிதருக்குள்ளே நாகரிக வளர்ச்சியைப்பற்றிப் பேசுதல் வெற்றுரையேயாகுமென்று கூறி விடுக்க. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இங்ஙனம் ஒற்றுமைப்படுத்துதற்குரிய பல புதிய உண்மைகளையும் அறங்களையும், தம்முடைய அற்புதமான நூல்களாலும், உபன்யாசங்களாலும் தெளிவுபடுத்தி மகான் டாகுர் இந்த பூமண்டலத்தையே தமக்குக் கடன்படுமாறு செய்துவிட்டார். இதனை ஜெர்மனி முற்றிலும் நன்றாக உணர்ந்துகொண்டு, அதன் பொருட்டாக நம் ரவீந்த்ரரிடம் அளவிறந்த மதிப்புச் செலுத்துவதுமன்றி அபாரமான நன்றியும் செலுத்துகிறது.

ஆஸ்த்ரியா தேசத்தில் பாரத கவிராஜ ரவீந்த்ரருக்கு நடந்த உபசாரங்கள் வர்ணிக்கத் தக்கன அல்ல. 1921 ஜூன் 26-ஆந் தேதியன்று, லண்டன் “அப்ஸர்வர்” பத்திரிகையின் வியெந்நா நிருபர் எழுதிய கடிதமொன்றில் பின்வருமாறு கூறுகிறார்:-

”வியெந்நா நகரத்துப் பொதுஜனங்களாலும் பத்திராதிபர்களாலும்,  ஒருங்கே இத்தனை ஆழ்ந்த பக்தி சிரத்தைகளுடனே, இத்தனை ஒருமனமான புகழ்ச்சி வந்தனைகளுடனே நல்வரவேற்கப்பட்டோர் வேறெவரும் கவிகளிடையேயுமில்லை, பெரிய பெரிய ராஜ்ய தந்த்ரிகளிடையேயுமில்லை, வீர ஸேனாதிபதிகளிடையேயு மில்லை; மன்னர்களிடையேயு மில்லை” என. ஆஹா! இஃதன்றோ கீர்த்தி. இதனைக் குறிப்பிட்டன்றோ, முன்பு திருவள்ளுவனாரும் “தோற்றிற் புகழொடு தோன்றுக” என்றார்.
தன் பொருட்டாகச் சேகரிக்கப்படும் கீர்த்தியொரு கீர்த்தியாகுமா? ஒரு தேச முழுமைக்கும் கீர்த்தி சேகரித்துக் கொடுப்போனுடைய புகழே புகழ். ரவீந்த்ரநாதர் இந்தியாவை பூலோக குருவென்று பூமண்டலத்தார் கண்முன்னே நிலைநாட்டிக் கொடுத்தார். அவருடைய திருவடி மலர்கள் வாழ்க.
இந்தியாவின் ஞானோப தேசமாகிய அமிர்தத்துக்கு, ஐரோப்பாவில் உயர்ந்த தரத்து மேதாவிகள் எத்தனை வேட்கையுடன் காத்திருந்தன ரென்பது மேலே கூறிய ஆஸ்த்ரிய நிருபரின் கடிதத்திலே மற்றொரு பகுதியில் பின்வரும் வசனத்தாலே நன்கு விளக்கப்படுகின்றது:- “இந்த நூற்றாண்டின் சிதறுபட்ட குழந்தையாகிய நாம் (ஐரோப்பியர் இப்போது ஒற்றுமையை நாடித் தவிப்பது போல் இதுவரை எப்போதும் தவித்தது கிடையாது.) நரகவாதனைப் படுகிற நாம் இன்னும் எதிர்காலத்தில் இந்த மண் மீது தேவலோக அனுபவங்களெய்துவோம் என்று கனவுகள் காண்பதை விடவில்லை. இப்படியிருந்த எங்கள் முன்னே மற்றொரு லோகத்திலிருந்தொரு மனிதன் வந்தது போலே டாகுர் வந்தார். அவரை நல்வரவு கூறி உபசரிப்பதற்கு இப்போது நாம் தகுதி பெற்றிருப்பதுபோல் இதுவரை எப்போது மிருந்ததில்லை. இப்போது ஆயுத்தமாக இருப்பது போல், இதுவரை எப்போதும் ஆயுத்தமாக இருந்தது கிடையாது. இஃது நேற்று அவருக்கு நடந்த உபசாரங்களாலே நன்கு விளங்கிற்று” என்று அந்நிருபர் கூறுகிறார்.

இனி பிரான்ஸ் முதலிய மற்ற தேசங்களில் இந்தக் கவீசுவரருக்கு நடக்கிற உபசாரங்களைப் பற்றிப் பேசு முன்னர், இவர் இந்தியாவின் எந்த உண்மையைத் தெரிவித்தபடியாலே இங்ஙனம் பாரத பூமிக்கு பூலோக குருத்தன்மை ஏற்படுத்திக் கொடுக்க வல்லோர் ஆயினர் என்பதைச் சற்றே ஆராய்ச்சி புரிவோம்:-

அஃது பழைய வேத உண்மை; எல்லாப் பொருள்களும் ஒரே வஸ்துவாகக் காண்பவன் ஒருவனுக்கு மருட்சியேது? துயரமேது? எல்லாம் ஒரே பொருளென்று கண்டவன் எதனிடத்தும் கூச்சமேனும், வெறுப்பேனும், அச்சமேனும் எய்தமாட்டான். அவன் எல்லாப் பொருள்களிடத்தும் அன்பும், ஆதரவும், ஸந்துஷ்டியும், பக்தியும் செலுத்துவான். எல்லாப் பொருளிலும் திருப்தி பெறுவோன் எப்போதும் திருப்தியிலிருப்பான். இங்ஙனம் மாறாத சந்தோஷ நிலையே முக்தி நிலையென்றும் அமரபதமென்பதும் கூறப்படுவது. இதனை மனிதன் அப்யாஸத்தாலும் நம்பிக்கையாலும் இந்த உலகத்தில் எய்திவிட முடியும். அஃதே வேதரஹஸ்யம்.

இந்த ஆத்ம ஐக்கியமான பரம தத்துவத்தை மிக இனிய தெளிந்த வசனங்களாலே ஐரோப்பாவுக்கு எடுத்துக் கூறியது பற்றியே ரவீந்த்ர கவிச் சக்ரவர்த்திக்கு ஐரோப்பா இங்ஙனம் அற்புத வழிபாடு செலுத்திற்று.

Friday, November 23, 2012

புதிய யுத்த முறைமை

27-11-1909 (இந்தியா)

இந்துஸ்தான் ஸ்வதந்திர யுத்தம் 1857ம் ஆண்டு நடந்து, ஐம்பத்திரண்டு வருஷமாகிறது. இப்போது நாஸிக்கில் ஒரு சண்டை நடந்தது இதில் கலகத் தலைவன் ஸ்ரீ கணேச தாமோதர ஸவர்க்கர் எனும் மராத்தி வாலிபன். இவன் செய்த யுத்தத்தில் பட்டாக் கத்திகள், வில்லு, அம்புகள், ஈட்டி, கதை எனும் புராதன ஆயுதங்களும் கிடையாது. நவீன யுத்தமுறைமையில் வழங்கப்பட்டு வரும் துப்பாக்கி, பீரங்கி, பிஸ்தோல், ரிவால்வர், வேகமான மாக்ஸிம் பீரங்கி, இன்னும் வெடிகுண்டுகள் இந்த ஆயுதங்கள் ஒன்றுமே கிடையாது. எல்லா யுத்தங்களும் ஒரு புஸ்தகத்தில்; மராத்தி பாஷையில் ஸ்ரீ ராஜேந்திர சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் சரித்திரங்களைப் பாடல்களாகப் பாடியிருக்கிறார்.

இந்த ஸங்கதி அப்படியிருக்கட்டும். நாஸிக் ஸெஷன்ஸ் ஜட்ஜு இவரை அரசனோடு யுத்தம் செய்வதனென்றும், அந்த குற்றம் செய்ய அயலாரையும் தூண்டினானென்றும் சொல்லி அவருக்கு ஆயுள் பரியந்தம் தீபாந்திர சிக்ஷை விதித்தார். மேலும் அவருடைய ஸொத்துக்களைப் பிடுங்கி ஸர்க்காரில் சேர்த்துவிடும்படி உத்தரவு செய்தார். இதன்பேரில் பம்பாய் ஹைகோர்ட்டில் இவர் செய்த அப்பீலில் சென்ற வியாழக்கிழமை தினம் ஜஸ்டிஸ் சந்திரவர்க்கரும், ஜஸ்டிஸ் ஹீட்டனும் தள்ளிவிட்டுக் கீழ்க்கோர்ட் தீர்மானத்தை உறுதி செய்துவிட்டார்கள்.

இந்தியாவில் பிரிடிஷ் அரசாக்ஷியிலே ஒரு ஸூக்ஷ்மமான யுத்த முறைமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவர் காகிதத்தை எடுத்து அதில் ஏதாவது தன்னிஷ்டப்படி ஒரு பாட்டிற்காக இரண்டொரு வரி கிறுக்கிவிட்டால் போதும்; இனிமேல் இந்த ஸவர்க்கர் போன்ற போர் வீரர்களைக் கப்பலிலேற்றி இங்கிலாந்தில் கொண்டு இறக்கிவிட்டாலோ, ஜெர்மனியின் டிரெட்னாட் கப்பலுக்காவது, பிரான்ஸின் ஆகாய விமானங்களுக்காவது அமெரிக்க விசை பீரங்கிக்காவது இங்கிலாந்து பயப்பட வேண்டியதே யில்லை.

இந்த வீரர்களெல்லாம் இரண்டு பாடல்களெழுதிவிட்டால் ஜெர்மனி, பிரான்ஸு முதலான தேசங்களை இங்கிலாந்து ஜெயித்துவிடலாமே. ரொம்பவும் பரோபகார சிந்தனையுடன் இதை நாம் சிபார்சு செய்கிறோம். இதற்காக நமக்கு எந்தப் பட்டமாவது கேஸர்-ஹிண்டு மெடலுமாவது வேண்டாம்.

Thursday, November 22, 2012

தென்னாப்பரிக்காவில் நம்மவர்கள்

25-12-1910 (இந்தியா பத்திரிக்கை)

தென் ஆப்பரிக்காவில் ஸமத்துவத்தின் பொருட்டாகவும் ஆரிய ஜாதியின் மானத்தைக் காக்கும் பொருட்டாகவும் நம்மவர்கள் பட்டுவரும் துயரங்களைப் புதிதாக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

வீடு வாசலையும் பொருளையும் இழந்தவர்கள் பலர். துன்பம் பொறுக்க முடியாமல் இந்தியாவுக்குத் திரும்பியோடி வந்துவிட்டவர்கள் பலர். அங்கேயே இறந்தவர்கள் பலர். பிராணனுக்குத் தீங்கு நேரிடினும் மானத்தை இழக்க மனமற்றவர்களாய் அந்நாட்டு மிருகச் சட்டத்தை மீறி நடந்து சிறைச்சாலையில் வருந்துவோர் பலர்.

கல்வியிலும் செல்வத்திலும் குலத்திலும் மஹோன்னத ஸ்தானத்திலிருந்தவர்கள் இப்போது அந்நாட்டுச் சிறைக்கூடங்களில் மலக்கூடை சுமப்பது முதலிய வேலை செய்ய நேர்ந்துவிட்டது.

அங்குள்ள ஆரிய ஸ்திரீகளோ தமது கணவரிடமும், ஸஹோரதரரிடமும் “சிறையிலிருந்து படாத பாடுபட்டு இறந்தாலும் இறந்துவிடுங்கள். ஆரிய ஜாதிக்கு அவமானந்தரும் சட்டத்துக்கு உட்படாதேயுங்கள்” என்று போதிக்கிறார்கள்.

காய்கறிகள் விற்றும், கையால் உழைத்தும் புருஷரைச் சிறைக் களத்தில் விட்டுவிட்டு நமது உத்தம ஸ்திரீகள் ஜீவனம் செய்கிறார்கள்.

இப்போது அவ்வித ஜீவனத்திற்கும் பல இடுக்கண்கள் நேர்ந்துவிட்டன. பண உதவி வேண்டுமென்று நமது வீர சகோதரர்களும் சகோதரிகளும் தாமே வாய்திறந்து கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

பம்பாயிலிருந்து ஆயிரக்கணக்கான தொகை போய்விட்டது. பெங்காளத்திலும் பெருந் தொகைகள் சேர்த்து வருகிறார்கள்.

சென்னப்பட்டணத்தில் இதன் பொருட்டு வைத்திருக்கும் சபையாருக்கு இன்னும் அதிகமாகப் பணம் சேரவில்லை.

தென் ஆப்பரிக்காவிலுள்ள இந்தியர்களிலே பெரும்பாலோர் தமிழர்கள், அப்படி யிருந்தும் நாம் இவ்விஷயத்தில் அஜாக்கிரதையாக இருப்பது கிரமமன்று.

ஆகையால் “இந்தியா பத்திரிகை நிதி”யென்பதாக ஒன்று சேர்த்துச் சென்னைப்பட்டணத்திலுள்ள சபையின் காரியதரிசிக்கு அனுப்ப உத்தேசித்திருக்கிறது.

தமிழர்களனைவரும் உதவி செய்ய வேண்டும்.

தென் ஆப்பரிக்கா பாரத சஹாய நிதி


            ரூ           அ.         பை
”இந்தியா பத்திராதிபர்” 10 0 0
கு. சண்முகவேலு செட்டியார் 10 0 0
ஸி. சுப்பிரமணிய பாரதி 5 0 0
வந்தே மாதரம் 5 0 0

Wednesday, November 21, 2012

வன்னியர்கள் விரதம்

விஜயா 2.2.1910

தென்னிந்தியாவில் வன்னியர்கள் பெருந் தொகையான ஜனங்கள். இவர்களுக்குள் கட்டுப்பாடு மெத்த அதிகம். இப்போது ஆங்காங்கு ஸபை கூடித் தங்கள் குலத்தவர்களின் நன்மையைக் கருதி பல நற்காரியங்கள் செய்து சீர்திருத்தி வருகின்றனர்.

தென்னாப்பரிக்காவில் வெள்ளையர்களால் பலவிதமாகய் இடர்ப் படுத்தப்படும் இந்தியர்களில் பெரும்பாலர் சென்னைவாசிகளே. சென்னைவாசிகளிலும் பலர் இந்த வன்னிய குலத்தவர்களே.

இந்தத் தென்னாப்பரிக்காவிலுள்ள இந்தியர்களின் மீட்சிக்காக இந்த வன்னிய மஹாஜனங்கள் ஒரு விரதம் கைக்கொண்டிருக்கின்றனர். அதாவது, வருஷத்தில் ஒரு நாள் எல்லாரும் இந்தத் தென்னாப்பரிக்கா இந்தியர்களின் கஷ்டங்களுக்காக உபவாச விரமிருக்கப் போவதாய்ச் செய்தி எட்டுகிறது.

இது உண்மையாய் இருக்கும் பக்ஷத்தில் இவர்களும் வடநாட்டு ஆரிய ஸமாஜிகள் போலவே பிரதி மாசமும் ஒரு நாள் உபவாஸமிருந்து அன்றைய தினம் தங்கள் வீட்டு ஆகாரச் செலவை ரொக்கமாகச் சேர்த்துத் தென்னாப்பரிக்கா இந்தியர்களுக்கு ஒரு ஸஹாய நிதியாக ஏற்படுத்தியனுப்பினால் மெத்த நலமென்று தோன்றுகிறது.

இதை மேற்படி வன்னிய மஹாஜனங்கள் அங்கீகரித்தல் நலம். உண்மையில் இவர்கள் சேரமான் பெருமாள் நாயனார், குலசேகரப் பெருமாள் இவர்களின் வம்சத்தவர்களானால் இந்த ஜீவகாருண்ய விரதத்தைக் கைக்கொண்டு பரோபகாரம் செய்வார்கள்.

Tuesday, November 20, 2012

நெல்லையப்பரும் வெள்ளையப்பரும் திருநெல்வேலி ராஜவிச்வாஸிகள்

1-2-1910 விஜயா

இந்த தை மாதம் 29ம் தேதிக்குச் சரியான ஜனவரி மாதம் 13ந் தேதி திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி ஸமேத ஸ்ரீ நெல்லையப்பருக்குத் தைப்பூசத்தன்று ஸிந்து பூந்துறையில் வழக்கப்படி தீர்த்தவாரி நடந்தது. மறுநாள் வழக்கப்படி தெப்ப உத்ஸவம் வெகு விசேஷமாய் பல ஆடம்பரங்களுடன் நடைபெற்றது.

மறுநாள் கிரமப்படி தெப்பத்தை அவிழ்க்கவில்லையாம். அவ்வூர் முனிசிபல் செக்ரிடரி, கோவில் தர்மகத்தா, போலீஸ் இன்ஸ்பெக்டர் இவர்கள் மூவரும் சேர்ந்து, அதே இடத்தில் அதே தெப்பத்தில் மறுநாள் சாயங்காலம் முதல் நாளைவிட அதிக அலங்காரங்கள் செய்து தீவட்டி, மத்தாப்பு, தாஸிகள், சாமரைகள், நாகஸுரம் முதலான ஸங்கீத மேள வாத்தியங்கள் முதலானவைகளுடன் வெகு அட்டகாசமாய் ஜில்லா ஜட்ஜி, போலீஸ் சூப்ரிண்டெண்டு , ஜில்லா ஸர்ஜன், ஜில்லா எஞ்ஜிநீயர் ஆகிய நான்கு துரைகளையும் இவர்களின் துரைஸானிகளுடன் தெப்பத்தில் ஏற்றி ஏழு சுற்று இழுத்து ஆங்கில உத்ஸவத்தைப் பூர்த்தி செய்தார்கள். இத்துடன் போதாமல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஹேட்டுகள், துரைகளின் பட்லர்கள், ஆயாமார்கள், வண்டிக்காரக் குசினிகள் இவர்களுக்கும் பிற்பாடு தெப்ப உத்ஸவம் நடந்ததாம்!

ராஜ விச்வாஸிகளின் லக்ஷணம் இதுதான் போலும்!

நமது தெய்வங்களின் ஸ்தானத்தில் பரங்கிகளை உட்காரவைத்துத் தெய்வங்களுக்குச் செய்யும் உபசாரங்களைச் செய்ய அந்த தர்மகர்த்தாவுக்கும் மற்ற இரண்டு இந்திய கனவான்களுக்கும் எப்படி மனம் ஒப்பியதோ, தெரியவில்லை. இனி இவர்கள் கோயிலின் விக்ரஹங்களை உடைத்து, ஆங்கில அதிகாரிகளை அவ்விடம் வைத்து, தெய்வங்களின் நகைகளை அவர்களுக்குச் சாற்றி, அதன் காலில் விழுவார்கள் போலும்!

சபாஷ்! இதுவன்றோ ராஜ பக்தி! நாட்டில் கேட்பாரில்லாமல் போய்விட்டது. இதுவும் கலிகால விந்தையே!

இதைப் பற்றிய விவரங்களை நாளைக் கெழுதுவோம்.

Monday, November 19, 2012

வந்தேமாதரம்



28 டிசம்பர் 1905                        விசுவாவசு மார்கழி 14

(சக்கரவர்த்தினி மாதாந்திரப் பத்திரிகையில் வெளியானது)

இப்போது பெங்கால மாகாணத்திலிருக்கும் ஒவ்வொரு ஹிந்துவாலும் ஸாம கீதத்தைப்போல அத்தனை பக்தியுடன் பாடப்பட்டு வருகின்ற வந்தேமாதரம் என்ற திவ்ய கீதத்தை நான் மொழி பெயர்க்கக்த் துணிந்தமை, கர்வங்கொண்ட செய்கையென்று பலர் கருதக்கூடும். கீதமெழுதிய பெங்காலி வித்வானாகிய பங்கிம் சந்திர பாபுவின் தைவிகச் சொற்களைத் தமிழ்ப்படுத்த எனக்குப் போதிய வன்மையில்லாவிடினும் தமிழ்நாட்டாருக்கு அச் செய்யுளின் பொருளுணர்த்த வேண்டுமென்ற ஆசைப் பெருக்காலேயே யான் இதனைத் துணிந்திருக்கிறேன். இவ் வாந்தேமாதரம் என்ற கீதம் பங்கிம் சந்திர சாடர்ஜியின் நூல்களிலே மிகச் சிறப்புக் கொண்டதாகிய ஆனந்த மடம் என்ற நாவல் கதையினிடையே அமைக்கப்பட்டிருக்கின்றது. 

ஆனந்த மடம் என்ற கதையானது உண்மையாகவே நடந்த சரித்திரத்தைத் தழுவியது. வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாயிருந்த காலத்தில் சந்நியாசிகள் சேர்ந்து நடத்திய ஓர் பெருங் கலகத்தைப் பற்றியே ௸ நூல் விரித்துக் கூறுகின்றது. பெங்காலத்தில் 1774-5 வருஷத்தில் பெரும் பஞ்சம் உண்டாயிற்று. அதற்கப்பால் அனேக ஆயிரம் சந்நியாசிகள் ஒன்றாய்க் கூடி அந்நியர்களைத் தமது தாய்ப் பூமியிலிருந்து ஒழித்துவிட வேண்டுமென்னும் ஒரே நோக்கத்துடன் கலகஞ் செய்யத் தொடங்கினார்கள்.

இவர்கள் இரகசியமாகக் சந்திக்கும் பொருட்டு ஆள் நுழையக் கூடாத கருங்காட்டில் ஆனந்த மடம் என்பதோர் இடம் வைத்திருந்தார்கள். இவர்கள் மகமதியப் படைகளைப் பல இடங்களில் தோல்வி செய்ததுமன்றி ஓர் ஆங்கிலேயப் பட்டாளத்தையும் முறியடித்தார்கள். எனினும் பிரிட்டிஷார் விடாமல் தாக்கியதன்பேரில் இந்த வீர சந்நியாசிக் கூட்டத்தார் கடைசியாகப் பிரிந்து போயினர். இந்த வீரத் துறவிகளில் ஒருவராகிய பவாநந்தர் வந்தே மாதரம் என்ற ஆரம்பங்கொண்ட அரிய கீதத்தைப் பாடியாதாக பங்கிம் புலவர் தமது நூலில் அமைத்திருக்கிறார்.

25 வருஷங்களுக்கு முன் இவர் இந்தப் பெருநூலைப் பிரசுரித்தபோது அந்தக் கீதத்தின் கண்ணே பெரும் பகுதி சமஸ்கிருதமாகவே யிருந்தபடியால் அவருடைய நேயர்கள் பலர் அதைக் குறை கூறினார்கள். ஆனால் அம்மகான் அவர்களுடைய அபிப்பிராயத்தைப் பொருட்டாக்கவில்லை. எழுதி 25 வருஷங்களுக்குள்ளாக மேற்படி திவ்ய கீதம் பெங்காலத்து ஜனங்கள் எல்லோருடைய நாவிலுமிருக்குமென்பதை அந்தக் கவியரசர் அறிந்திருந்தார் போலும். அதிலிருக்கும் சம்ஸ்கிருதம் வெகு எளிதாயிருப்பதால் எந்தப் பெங்காளிக்கும் வெகு சுலபமாகப் பொருள் விளங்கிவிடும். அதுவுமின்றி அந்தக் கீதமானது பழமையில் முன்னோர்களால் வழங்கப்பட்டு வந்ததும் ஒப்பற்றதுமான சம்ஸ்கிருத பாஷையோடு தற்காலப் பாஷை கலப்புற்று அமைக்கப் பெற்றிருப்பதால் பூர்வ காலத்துடன் தற்காலத்தை இணைப்பதாக இருக்கின்றது. தாய்த் தேசத்தை அந்தப் பாடலில் தாயென்று வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமுடையதே.

பலரால் இக்கீதத்திற்கு எழுதப்பட்டிருக்கும் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பானது பெங்காலி கீதத்திலிருந்து சில இடங்களில் மாறுபடுகின்றது. அவ்வாறு மாறுபட்ட இடங்களில் என்னால் கூடிய அளவு பெங்காலிச் சொற்களை அநுசரித்தே தமிழ் மொழி பெயர்ப்பெழுதியிருக்கிறேன். எனது தமிழ் எத்தனை குறைவுபட்டிருந்த போதிலும் தெய்வப் புலவராகிய பங்கிம்பாபுவின் மதிப்பைக் கருதித் தமிழுலகத்தார் இதனை நன்கு ஆதரிப்பார்களென்று நம்புகிறேன்.

வந்தேமாதரம்

Sunday, November 18, 2012

அந்திப்பொழுது

காவென்று கத்திடுங் காக்கை - என்றன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை.
மேவிப் பலகிளை மீதில் - இங்கு
விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே
கூவித் திரியும் சிலவே; சில
கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்.
தேவி பராசக்தி யன்னை - விண்ணிற்
செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள்.

தென்னை மரக்கிளை மீதில் - அங்கோரை
செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்.
சின்னஞ் சிறிய குருவி - அது
‘ஜிவ்’ வென்று விண்ணிடை யூசலிட் டேகும்.
மன்னப் பருந்தொரிரண்டு - மெல்ல
வட்டமிட் டுப்பின் நெடுந்தொலை போகும்.
பின்னர் தெருவிலொர் சேவல் - அதன்
பேச்சினி லே “சக்தி வேல்” என்று கூவும்.
 
செவ்வொளி வானில் மறைந்தே - இளந்
தேன்நில வெங்கும் பொழிந்தது கண்டீர்.
இவ்வள வான பொழுதில் - அவள்
ஏறிவந் தேயுச்சி மாடத்தின் மீது,
கொவ்வை யிதழ்நகை வீச, - விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தாள்.
செவ்விது, செவ்விது, பெண்மை! - ஆ!
செவ்விது, செவ்விது, செவ்விது, காதல்.

காதலி னாலுயிர் தோன்றும்; இங்கு
காதலி னாலுயிர் வீரத்தி லேறும்;
காதலி னாலறி வெய்தும், இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
ஆதலி னாலவள் கையைப் - பற்றி
அற்புத மென்றிரு கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன்; அவள்
வீணைக் குரலிலோர் பாட்டிசைத் திட்டாள்.

காதலியின் பாட்டு

கோல மிட்டு விளக்கினை யேற்றிக்
கூடி நின்று பராசக்தி முன்னே
ஓல மிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்;
ஞால முற்றும் பராசக்தி தோற்றம்.
ஞான மென்ற விளக்கினை யேற்றிக்
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்,
காத லென்பதொர் கோயிலின் கண்ணே.

Saturday, November 17, 2012

காந்தாமணி - ஒரு சிறு கதை

14 செப்டம்பர் 1919

"காந்தாமணி, உங்கப்பா பெயரென்ன?” என்று பாட்டி கேட்டாள். ஒரு கிணற்றங்கரையில் நடந்த ஸங்கதி. கோடைக் காலம். காலை வேளை. வானத்திலே பால ஸூர்யன் கிரணங்களை ஒழிவில்லாமல் பொழிந்து விளையாடுகிறான்; எதிரே நீலமலை; பச்சை மரங்கள்; பசுக்கள்; பல மனிதர்; சில கழுதைகள்; இவற்றின் தொகுதி நின்றது. வெளிலொளி எந்தப் பொருள்மீது பட்டாலும் அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்லுகிறான்; எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையவனவாகத் தோன்றுகின்றன. 

ஆனால் காலை வேளையில் மனிதக் கூட்டத்தில் கொஞ்சமும் உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகமாகக் காணப்படுவதால் அப்போது உலகம் மிகவும் சந்தோஷகரமான காட்சியுடையதாகிறது. 

தோட்டத்துக்கு நடுவே ஒரு கிணறு. அத்தோட்டத்தில் சில அரளிப்பூச் செடிகள்; சில மல்லிகைப்பூச் செடிகள்; சில ரோஜாப்பூச் செடிகள். அக்கிணற்றிலிருந்து அதற்கடுத்த வீதியிலுள்ள பெண்களெல்லோரும் ஜலம் எடுத்துக் கொண்டு போவார்கள். 

இந்தக் கதை தொடங்குகிற அன்று காலையில் அங்கு காந்தாமணியும் பாட்டியையும் தவிர ஒரு குருட்டுக் கிழவர் தாமே ஜலமிறைத்து ஸ்நானத்தைப் பண்ணிக் கொண்டிருந்தார். போலீஸ் உத்தியோகத்திலிருந்து தள்ளுபடியாகி அதிலிருந்து அந்தக் கிராமத்துகு வந்த தமது வாழ்நாளின் மாலைப் பொழுதை ராமநாமத்தில் செலவிடும் பார்த்தசாரதி அய்யங்கார் அங்கு பக்கத்திலே நின்று கிழவியை குறிப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். 

மேற்படி கிணற்றுக்கருகே ஒரு குட்டிச்சுவர். அதற்குப் பின்னே ஒரு வேப்பஞ் சோலை. அங்கு பல மூலிகைகளிருக்கின்றன. அவற்றுள் ஒன்று மிகுந்த பசி உண்டாக்குமென்று என்னிடம் ஒரு சாமியார் சொன்னார். அது கொண்டு நான் மேற்படி மூலிகையைப் பறித்து வரும் பொருட்டாக அந்தச் சோலைக்குப் போயிருந்தேன். வானத்தில் குருவிகள் பாடுகின்றன. காக்கைகள் ‘கா, கா’ என்று உபதேசம் புரிகின்றன. வானவெளியிலே ஒளி நர்த்தனம் பண்ணுகிறது. எதிரே காந்தாமணியின் திவ்ய விக்ரஹம் தோன்றிற்று. 

“உங்கப்பா பெயரென்ன?” என்று பாட்டி காந்தாமணியிடம் கேட்டாள்.

"எங்கப்பா பெயர் பார்த்தசாரதி அய்யங்கார்” என்று காந்தாமணி புல்லாங்குழலைப் போல் ஊதிச் சொன்னாள். கிழவி, போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்காரை நோக்கி, ஒரு முறை உருட்டி விழித்தார். போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்கார் கையுங் காலும் வெலவெலத்துப் போனார். அவருக்கு முகமும் தலையும் வெள்ளை வெளேரென்று நரைத்துப் போய்த் தொண்ணூறு வயதுக் கிழவனைப்போலே தோன்றினாலும் உடம்பு நல்ல கட்டு மஸ்துடையதாகப் பதினெட்டு வயதுப் போர்ச் சேவகனுடைய உடம்பைப் போலிருக்கும். அவர் ஆண் புலி வேட்டைகளாடுவதில் தேர்ச்சி யுடையவரென்று கேள்வி. பாம்பு நேரே பாய்ந்து வந்தால் பயப்படமாட்டேனென்று அவரே என்னிடம் பத்துப் பதினைந்து தரம் சொல்லியிருக்கிறார். 

அப்படிப்பட்ட சூராதி சூரனாகிய பார்த்தஸாரதி அய்யங்கார், கேவலம் ஒரு பாட்டியின் விழிப்புக்கு முன்னே இங்ஙனம் கைகால் வெலவெலத்து மெய் வெயர்த்து முகம் பதறி நின்றதைக் கண்டு வியப்புற்றேன். 

அப்பால் அந்தப் பாட்டி காந்தாமணியிடம் மேற்படி போலீஸ் அய்யங்காரதை சுட்டிக் காட்டி:- “இதோ நிற்கிறாரே, இந்தப் பிராமணன், இவரா உங்கப்பா?” என்று கேட்டாள். 

அதற்குக் காந்தாமணி தன் இரண்டு கைகளையும் வானத்திலே போட்டு, முகத்திலே வானொளியை நகைக்கத் தக்க ஒளியுடைய நகை வீச- “ஏ, ஏ, இவரல்லர்; இவர் கன்னங்கரேலென்று ஆசாரியைப் போலிருக்கிறாரே! எங்கப்பா செக்கச் செவேலென்று எலுமிச்சம் பழத்தைப் போலிருப்பார். இவர் நரைத்த கிழவரன்றோ? எங்கப்பா சின்னப் பிள்ளை” என்றூ காந்தாமணி உரைத்தாள். 

அப்போது போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்கார் காந்தாமணியை நோக்கி:- “உங்கப்பாவுக்கு எந்த ஊரில் வேலை?” என்று கேட்டார். 

”எங்கப்பா சங்கரநாதன் கோயில் ஸப்-இன்ஸ்பெக்டர்” என்று காந்தாமணி சொன்னாள். பார்த்தஸாரதி அய்யங்கார் தலையைக் கவிழ்த்துக் கொண்டார். அவருக்கு “ஸப்-இன்ஸ்பெக்டர்” என்ற பெயர் பாம்புக்கு இடிபோல். அப்போது காந்தாமணிக்கும் பாட்டிக்குமிடையே பின்வரும் ஸம்பாஷணை நிகழலாயிற்று. 

“நீங்கள் அக்காள், தங்கை எத்தனை பேர்?” என்று பாட்டி கேட்டாள். அப்போது காந்தாமணி சொல்கிறாள்: “எங்கக்காவுக்கு பதினெட்டு வயது. போன மாஸந்தான் திரட்சி நடந்தது; ஸ்ரீவைகுண்டத்திலே. எனக்கு அடுத்த மாஸம் திரட்சி. என் தங்கை ஒரு பெண் திரள நிற்கிறது. நாங்கள் மூன்று பேரும் பெண்கள். எங்கப்பாவுக்குப் பிள்ளைக்  குழந்தை இல்லையென்று தீராத மனக்கவலை. என்ன செய்யலாம்? பெருமாள் அநுக்ரஹம் பண்ணினாலன்றோ தாழ்வில்லை? அதற்காக அவர் சோதிடம் பார்த்தார். எங்கம்மாவுக்கு இனிமேல் ஆண் குழந்தை பிறக்காதென்று பாழாகப் போவான் ஒரு ஜோதிடன் சொல்லிவிட்டான். அதை முத்திரையாக முடித்துக்கொண்டு இந்த அறுதலிப் பிராமணன், எங்கப்பா அடுத்த மாஸம் மன்னார் கோவிலில் ஒரு பெண்ணை இளையாளாகக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறார். முகூத்தமெல்லாம் வைத்தாய் விட்டது” என்றாள். 

"மன்னார் கோவிலில் உங்கப்பாவுக்குப் பெண் கொடுக்கப் போகிற மாமனாருடைய பெயரென்ன?” என்று அந்தப் பாட்டி கேட்டாள். அதற்குக் காந்தாமணி:- “அவர் பெயர் கோவிந்தராஜய்யங்காராம். அந்த ஊரிலே அவர் பெரிய மிராசாம். அவருக்கு ஒரு பெண் தானாம். கால் முதல் தலைவரை அந்தப் பெண்ணுக்கு வயிர நகை சொரிந்து கிடக்கிறதாம். தேவ ரம்பையைப் போல் அழகாம் அந்தப் பெண்” என்றாள். 

“அப்படியாப்பட்ட அழகான பணக்கார இடத்துப் பெண்ணை இளையாளாகக் கொடுக்கக் காரணமென்ன?” என்று பாட்டி கேட்டாள். “அந்தப் பெண் திரண்டு மூன்று வருஷங்களாய் விட்டன. தாயும் இறந்து போய் விட்டாள். அதன் நடையுடை பாவனைகளெல்லாம் ஐரோப்பியமாதிரி. ஆதலால் இதுவரை அதற்குக் கலியாணத்துக்கு யாரும் வரவில்லை. எங்கப்பா ருதுவான வார்த்தையெல்லாம் வீண் பொய்யென்று சொல்லித் தாம் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஸம்மதப்பட்டு விட்டார். மேலும் இவருக்கு மனதுக்குள்ளே ஸந்தோஷந்தான், தமக்கு ருதுவான பெண் கிடைப்பதுபற்றி. இன்றைக்குக் காலையிலே கூட அவரும் எங்கம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் இந்த ஊர்ச் சத்திரத்திலேதான் ஒரு வாரமாக இறங்கியிருக்கிறோம். எங்கப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தபோது அம்மா சொன்னாள்:- 'மன்னார்குடிப் பெண் திரண்டு மூன்று வருஷமாய் விட்டதாக இந்த ஊரிலே கூடப் பலமான ப்ரஸ்தாபம். ஆண், பெண் எல்லோரும் ஒரே வாக்காகச் சொல்லுகிறார்கள்’ என்றாள். அப்பா அதற்கு: ‘நெவர் மைண்ட். அந்தக் குட்டி திரண்டிருப்பதைப் பற்றி நமக்கு இரட்டை சந்தோஷம். நமக்குப் பணம் கிடைக்கும். ஆண் பிள்ளை பிறக்கும். குட்டி ஏராளமான அழகு. இந்த மாதிரி இடத்திலே ஐ டோன் கேர் எடேம் எபெளட் சாஸ்த்ரங்கள். நாம் சாஸ்திரங்களைப் புல்லாக மதிக்கிறோம்” என்றார்...”  என்று காந்தாமணி சொன்னாள். 

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிற சத்தம் என் காதில் விழுந்தது. என்னுடைய பார்வை முழுவதும் போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்கார் மேல் நின்றது. அவரைப் பார்த்துக் கொண்டேயிருக்கையிலே என் மனதில் திடீரென்று ஒரு யோசனை பிறந்தது. அங்கிருந்தவர்களில் எனக்கு காந்தாமணியின் முகந்தான் புதிது. பார்த்தஸாரதி ஐயங்காரையும் தெரியும். அந்தக் கிழவியையுந் தெரியும். அந்தக் கிழவி அய்யங்காரிச்சியில்லை; ஸ்மார்த்தச்சி. அந்த கிராம முன்சீபின் தங்கை. அவளுக்கும் போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்காருகும் பால்யத்தில் பலமான காதல் நடைபெற்று வந்ததென்றும், அதனால் போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்காருக்கும் மேற்படி கிராம முன்ஸீபுக்கும் பல முறை யுத்தங்கள் நடந்தனவென்றும், அந்த யுத்தங்களிலே ஒன்றின் போது தான் பார்த்தஸாரதி அய்யங்காருக்கு ஒரு கண்ணில் பலமான காயம் பட்டு அது பொட்டையாய் விட்டதென்றும் நான் கேள்விப்பட்டதுண்டு. அந்தக் கேள்வியையும் மனதில் வைத்துக் கொண்டு இப்போது மேற்படி ஸ்திரீகளின் ஸம்பாஷணையின்போது மேற்படி அய்யங்காரின் முகத்திலே தோன்றிய குறிப்புகளையும் கவனித்தவிடத்தே என் மனதில் பின் வரும் விஷயம் ஸ்பஷ்டமாயிற்று.

கிழவியினிடத்தில் பழைய காதல் தனக்கு மாறாமல் இன்னும் தழல் வீசிக் கொண்டிருக்கிறதென்ற செய்தியை ஐயங்கார் கிழவியினிடம் ஸ்திரப்படுத்திக் காட்ட விரும்புகிறாரென்றும், காந்தாமணி முதலிய யுவதிகள் அருகே கூடத் தனக்கு அக்கிழவியின் வடிவே அதிக ரம்யமாகத் தோன்றுகிறதென்றும் உணர்த்த விரும்புகிறாரென்றும் தெரியலாயிற்றூ. அவருடைய முகக் குறிப்புக்களிலே பாதி பொய் நடப்பென்பதும் தெளிவாகப் புலப்பட்டது. 

ஏனென்றால், காந்தாமணியையும் அக்கிழவியையும் தன் கையால் படைத்து, இருவருக்கும் பிதாவாகிய பிரமதேவன் கூடக் காந்தாமணியின் ஸந்நிதியில் அந்தக் கிழவியைப் பார்க்கக் கண் கூசுவான். அப்படியிருக்கக் கிழவியின்மீது அங்கு காதற் பார்வையை அசைவின்றி நிறுத்த முயன்ற போலீஸ் பார்த்தசாரதி ஐயங்காரின் முயற்சி மிகவும் நம்பக் கூடாத மாதிரியில் நடைபெற்று வந்தது. 

இந்த ஸங்கதியில் மற்றொரு விசேஷமென்னவென்றால் மேற்படி அய்யங்காரை நான் விருக்ஷ மறைவிலிருந்து கவனித்துக் கொண்டு வந்தது போலவே காந்தாமணியும் கிழவியும் அவரை அடிக்கடி கடைக்கண்ணால் கவனித்துக்கொண்டு வந்தார்கள். பெண்களுக்குப் பாம்பைக் காட்டிலும் கூர்மையான காது; பருந்தைக் காட்டிலும் கூர்மையான கண். எனவே பார்த்தஸாரதி அய்யங்காருடைய அகத்தின் நிலைமையை நான் கண்டது போலவே அந்த ஸ்திரீகளும் கண்டு கொண்டனரென்பதை அவர்களுடைய முகக் குறிகளிலிருந்து தெரிந்துகொண்டேன்.
என்னை மாத்திரம் அம்மூவரில் யாரும் கவனிக்கவில்லை. நான் செடி கொடிகளில் மறைவில் நின்று பார்த்தபடியால் என்னை அவர்களால் கவனிக்க முடியவில்லை. 

இப்படியிருக்கையிலே அங்கு இருபது வயதுள்ள ஒரு மலையாளிப் பையன் பெருங்காயம் கொண்டு வந்தான். சில்லறையில் பெருங்காயம் விற்பது இவனுடைய தொழில். இவன் பலமுறை அந்தக் கிராமத்துக்குப் பெருங்காயம் கொண்டு வந்து விற்பதை நான் பார்த்திருக்கிறேன். இவனைப்பற்றி வேறென்றும் நான் விசாரித்தது கிடையாது. இவன் பார்வைக்கு மன்பதன் போலிருந்தான். கரிய விழிகளும், நீண்ட மூக்கும், சுருள் சுருளான படர்ந்த உச்சிக்குடுமியும் அவனைக் கண்டபோது எனக்கே மோஹமுண்டாயிற்று. 

அந்த மலையாளி கிணற்றருகே வந்துட்கார்ந்து கொண்டு கிழவியிடம் தாஹத்துக்கு ஜலங் கேட்டான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் காந்தாமணி நடுங்கிப் போனதைக் கவனித்தேன். அப்பால் அந்த மலையாளி காந்தாமணியை ஒருமுறை உற்றுப் பார்த்தான். அவள் தன் இடுப்பிலிருந்த குடத்தை நீரோடு நழுவ விட்டுவிட்டாள். அது தொப்பென்று விழுந்தது. காந்தாமணி அதைக் குனிந்தெடுத்து;.. “ஐயோ; நான் என்ன செய்வேனம்மா? குடம் ஆறங்குல ஆழம் அமுங்கிப் போய்விட்டதே? எங்கம்மா எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பாளோ?” என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டாள். 

மார்புத் துணியை நெகிழவிட்டாள்; பொதிய மலைத் தொடரை நோக்கினாள்.
இந்தக் காந்தாமணி மேற்படி மலையாளிப் பையனிடம் காதல் வரம்பு மிஞ்சிக் கொண்டவளென்பதை நான் தொலைவிலிருந்தே தெரிந்து கொண்டேன், பின்னிட்டு விசாரணை பண்ணியதில் காந்தாமணியின் பிதாவாகிய பார்த்தசாரதி ஐயங்கார் பூர்வம் நெடுநாள் மலையாளத்தில் உத்தியோகம் பண்ணிக் கொண்டிருந்தாரென்றும் அங்கு மிகச் சிறிய குழந்தைப் பிராய முதலாகவே காந்தாமணிக்கும் அந்த மலையாளிக்கும் காதல் தோன்றி அது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதென்றும் வெளிப்பட்டது. ஸப்-இன்ஸ்பெக்டர் அய்யங்கார் திரவிய லாபத்தை உத்தேசித்துக் காந்தாமணியைப் பென்ஷன் டிப்டி கலெக்டரும் கூந்தலாபுரம் ஜமீன் திவானுமாகிய ஐம்பத்தைந்து வயதுள்ள கோழம்பாடு ஸ்ரீநிவாஸாசார்யர் என்பவருக்கு விவாகம் செய்து கொடுத்துவிட்டார். அந்த ஸ்ரீநிவாஸாசார்யருடன் வாழக் காந்தாமணிக்கு சம்மதமில்லை. இந்தச் செய்தியெல்லாம் எனக்குப் பின்னிட்டுத் தெரிய வந்தது. 

அன்று கிணற்றங்கரையில் என் கண்முன்னே நடந்த விஷயத்தை மேலே சொல்லுகிறேன். காந்தாமணி குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, “எங்கம்மா வைவாளே, நான் என்ன சொல்வேனம்மா?” என்று அழுது கொண்டே போனாள். ஆனால் அவள் தன்னுடைய தாய் தந்தையர் இருந்த சத்திரத்துக்குப் போகவில்லை. நேரே, அந்த ஊருக்கு மேற்கேயுள்ள நதிக்குப் போனாள். தாகத்துக்கு நீர் குடித்த பின்பு மலையாளியும் அந்த ஆற்றங்கரையை நோக்கிச் சென்றான். இதற்குள்ளே எனக்கு ஸந்தியாவந்தன காலம் நெடுந்தூரம் தவறிவிட்டபடியால் நான் அந்தக் கிணற்றடியை விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அன்று மாலை என் வீட்டுக்கு மேற்படி கிராமத்து வாத்தியார் சுந்தர சாஸ்திரி வந்தார். வந்தவர் திடீரென்று:- “கேட்டீர்களோ, விஷயத்தை; வெகு ஆச்சரியம்! வெகு ஆச்சரியம்!” என்று கூக்குரலிட்டார்.

”என்ன ஓய் ஆச்சரியம்? நடந்ததைச் சொல்லிவிட்டுப் பிறகு கூக்குரல் போட்டால் எனக்குக் கொஞ்சம் செளகர்யமாக இருக்கும்”  என்றேன். “சத்திரத்திலே ஸப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி அய்யங்கார் சங்கரநாதன் கோவிலிலிருந்து வந்து இறங்கியிருக்கிறாரோ, இல்லையோ? அவர் ஒரு பெண்ணையுங்க் கூட்டிக் கொண்டு வந்தார். அவருடைய மகள். அந்தக் குட்டி வெகு அழகாம். திலோர்த்தமை, ரம்பை யெல்லாம் இவளுடைய காலிலே கட்டி அடிக்க வேண்டுமாம். அதற்குப் பெயர் காந்தாமணியாம். சொல்லுகிறபோதே நாக்கில் ஜலம் சொட்டுகிறது. காந்தாமணி, காந்தாமணி. என்ன நேர்த்தியான நாமம். ரஜம் ஒழுகுகிறது...”

இங்ஙனம் ஸுந்தர சாஸ்திரி காந்தாமணியை வர்ணித்துக்கொண்டு போவதை நான் இடையே மறித்து:- “மேலே நடந்த சரித்திரத்தைச் சொல்லும்” என்றேன்.

“அந்தக் காந்தாமணியைக் காணவில்லையென்று விடியற்காலமெல்லாம் தேடிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் அம்பாசமுத்திரத்திரத்திலிருந்து தந்தி கிடைத்ததாம். இன்று பகல் 3 மணிக்கு மேற்படி காந்தாமணியும் , ஒரு மலையாளிப் பையனும் கிறிஸ்துவக் கோவிலில் விவாகம் செய்து கொண்டார்களென்று அந்தத் தந்தி சொல்லுகிறதாம்” என்றார்.

சில தினங்களுக்கப்பால் மற்றொரு ஆச்சர்யம் நடந்தது. கிராமத்து மாஜி போலீஸ் சேவகர் நரைத்த தலைப் பார்த்தசாரதி அய்யங்காரும், அன்று கிணற்றங் கரையில் அவருடைய காதற்பார்வைக்கிலக்காயிருந்த கிழவியும் ரங்கூனுக்கு ஓடிப்போய் விட்டார்கள். பின்னிட்டு அந்தக் கிழவி தலை வளர்த்துக் கொண்டு விட்டாளென்றும் பார்த்தஸாரதி ஐயங்காரும் அவளும் புருஷனும் பெண்ஜாதியுமாக வாழ்கிறார்களென்றும் அய்யங்கார் அங்கொரு நாட்டுக்கோட்டை செட்டியிடம் வேலை பார்த்துத் தக்க சம்பளம் வாங்கிக் கொண்டு சேஷமமாக வாழ்கிறாரென்றும் ரங்கூனிலிருந்து செய்தி கிடைத்தது.