Saturday, January 7, 2012

நெல்லையப்பருக்குக் கடிதம்


19 ஜூலை 1915
ஓம்.
புதுச்சேரி,
19-7-1915
என தருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்பபிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக.
தம்பி-மாதத்துக்கு மாதம் நாளுக்கு நாள் நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள்ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்.
·         * *
நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை. 

ஹா! உனக்கு ஹிந்தி மராட்டி முதலிய வட நாட்டு பாஷைகள் தெரிந்திருக்கிறது. அந்தப் பாஷைப் பத்திரிகைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ள என்பதை நேரில் தெரிந்து கொள்ள முடியுமானால் –

தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும்; தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை,  புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே போக வேண்டும்.
~~~
 
தம்பி – நான் ஏது செய்வேனடா; தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் 
பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக்காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.

தம்பி – உள்ளமே உலகம்.

ஏறு! ஏறு! ஏறு! மேலே, மேலே! மேலே! நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி. 

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்துபோ. பற! பற! மேலே, மேலே, மேலே.

தம்பி, தமிழ் நாடு வாழ்க என்றெழுது. தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது. தமிழ் நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் மலிக என்றெழுது. 

அந்தத் தமிழ்ப் பள்ளிக் கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது. தமிழ் நாட்டில் ஒரே ஜாதிதான் உண்டு. அதன் பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது. ஆணும் பெண்ணும் ஓருயிரில் இரண்டு கலைகள் என்றெழுது. 

ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது. 

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது. 

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தவன் என்றெழுது.

தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு. 

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பவன் மேற்குலத்தான் என்று கூவு.
வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக. முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திரநூல், பூதநூல், வானநூல் இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ்நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.

சக்தி, சக்தி, சக்தி என்று பாடு.
தம்பி – நீ வாழ்க.
~~~
உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை உயிர் கொண்டது. இன்று உன் விலாஸத்துக்கு நாட்டுப் பாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப்பகுதி பகுதியாக உனது பத்திரிகையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. ‘புதுமைப்பெண்’ என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும், எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி – உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை? நீ வாழ்க.
உனதன்புள்ள,
பாரதி

2 comments:

  1. இதை எழுது அதை எழுதுன்னு எல்லாத்தையும் நீங்களே எழுதித் தந்துட்டா அவர் எண்ணங்க எழுதுவார்?

    ஆனா,

    // தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக்காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.//

    என்று எழுதறீங்க பாத்தீங்களா, அங்கதான் நீங்க நிக்கறீங்க. :)

    தொடர்ந்து எழுதுங்க, நன்றி.

    ReplyDelete
  2. கடைசி ரெண்டு வரி படிக்கும் போது தான் அதிர்ச்சியாயிடுச்சு!

    ReplyDelete