Monday, April 30, 2012

பரசிவ வெள்ளம்

உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே

காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே

எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.

வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.

தூல வணுக்களாய்ச் சூக்கு மமாய்ச சூக்குமத்திற்
சாலவுமே நண்ணிதாய்த் தன்மையெலாந் தானாகி

தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.

எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாய்தனை யீட்டுவதாய் நிற்குமிதே.

காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.

எல்லாந் தானாகி யிருந்திடிலும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.

மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே.

இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளுந் தாம் பெற்றிங் ன்பநிலை யெய்துவரே.

வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.

ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆடுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.

வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா!

யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா!

எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதையுள்ளே ததும்பப் புரியுமடா!

எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா

யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!

காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே.

சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!

தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா!

சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின் றசிவம்,
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா!

நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா!

Sunday, April 29, 2012

பக்தி

ராகம்-பிலஹரி

பல்லவி
பக்தியினாலெ-தெய்வ-பக்தியினாலே

சரணங்கள்

பக்தியினாலே-இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சித்தந் தெளியும்,-இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும்,-நல்ல
வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத்
தத்துவ முண்டாம்,நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்.

காமப் பிசாசைக்-குதி
கால்கொண் டடித்து விழுந்திடலாகும்;இத்
தாமசப் பேயைக்-கண்டு
தாக்கி மடித்திட லாகும்;எந்நேரமும்
தீமையை எண்ணி-அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந்
நாம மில்லாதே-உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும்.

ஆசையைக் கொல்வோம்,-புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட
பாச மறுப்போம்,-இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல்-உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி-இன்பம்
 
சோர்வுகள் போகும்,-பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெறலாகும்,நற்
பார்வைகள் தோன்றும்-மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும்,-பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்,
தீர்வைகள் தீரும்-பிணி
தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும்.

கல்வி வளரும்,-பல
காரியங் கையுறும்,வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும்,-நல்ல
ஆண்மை யுண்டாகும்,அறிஉ தெளிந்திடும்,
சொல்லுவ தெல்லாம்-மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும்,மெய்
வல்லமை தோன்றும்,-தெய்வ
வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம்-உண்மை.

சோம்ப லழியும்-உடல்
சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்
கூம்புத லின்றி நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்,
வீம்புகள் போகும்-நல்ல
மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்
பாம்பு மடியும்-மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும்

சந்ததி வாழும்,-வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்,
'இந்தப் புவிக்கே-இங்கொர்
ஈசனுண்டா யின் அறிக்கையிட் டேனுன்றன்
கந்தமலர்த்தாள்-துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்
சிந்தையறிந்தே-அருள்
செய்திட வேண்டும்'என்றால் அருளெய்திடும்.

Saturday, April 28, 2012

வ.உ.சி.க்கு வாழ்த்து

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
      மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ,
      வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
      நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
      வாழ்த்துதிநீ வாழ்தி!வாழ்தி!

Friday, April 27, 2012

பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி


பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
      புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
      எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
      தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்;
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
      வியப்பிது காண்!பள்ளி யெழுந்தரு ளாயே!

புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்;
      பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்;
வெள்ளிய சங்கம் முழங்கின,கேளாய்!
      வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்;
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
      சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;
அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை!
      ஆருயிரே!பள்ளி யெழுந்தரு ளாயே!

பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;
      பார்மிசை நின்னொளி காணுதற்கு அலந்தோம்;
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
      கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்;
சுருதிகள் பயந்தனை; சாத்திரம் கோடி
      சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
      நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!

நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
      நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
      பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள்செய்து எத்தனை காலம்
      ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
      இன்னுயி ரே! பள்ளி யெழுந்தரு ளாயே!

மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
      மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
      கோமக ளே!பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
      வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்;
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
      ஈன்றவ ளே! பள்ளி யெழுந்தரு ளாயே!

Thursday, April 26, 2012

தமிழருக்கு


தமிழா, தெய்வத்தை  நம்பு. பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகின்றது.

உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள். தெய்வங்கண்ட கவிகள், அற்புதமான ஸங்கீத வித்வான்கள், கைதேர்ந்த சிற்பர், பல நூல் வல்லார், பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றுகிறார்கள். அச்சமில்லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள். கண்ணை நன்றாகத் துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார், ஒரு நிலைக் கண்ணாடியில் போய்ப் பார்.

நமது நாட்டு ஸ்திரீகளிலே பல சக்தி கணங்களின் அவதாரமாக ஜனித்திருக்கிறார்கள். ஒளி, சக்தி, வலிமை, வீர்யம், கவிதை, அழகு, மகிழ்ச்சி நலங்களெல்லாம் உன்னைச் சார்கின்றன.

தமிழா, பயப்படாதே ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்.

ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே ‘ஜாதியிரண்டொழிய வேறில்லை’ என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள்.

பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவியை “வாழ்க்கைத் துணை” என்றார்: ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பெண்ணும் சமம்.

வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள்போல் நடந்து கொள்ளாதே.

தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதம்மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லெளகீகக் கொள்கைகள், வைதிக நடை – எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலைதூக்கி ஆட இடங்கொடுத்துவிட்டாய். இவற்றை நீக்கிவிடு. வீட்டிலும், வெளியிலும, தனிமையிலும், கூட்டத்திலுm,ம எதிலும், எப்போதும் நேர்மையிருக்க வேண்டும்; உண்மையிருக்க வேண்டும் நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்கவேண்டும். எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறிதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால், தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய். 

தமிழா, எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. “முந்திய சாஸ்திரந்தான் மெய், பிந்திய சாஸ்திரம் பொய்” என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக ஒர் கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? “தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள்” என்று பஞ்சதந்திரம் நகைக்கிறது.
இவ்வுலகில நான்கு புருஷார்த்தங்கள் என்று பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை, அறம், பொருள் இன்பம், வீடு என்பன.

.இவற்றுள் அறமாவது கடமை. அது உனக்கும் உனது சுற்றத்தாருக்கும், பிறர்க்கும் நீ செலுத்தவேண்டிய கடமை. ‘பிறர்’ என்பதனுள் வையகம் முழுதும் அடங்கும். கடமையில் தவறலாகாது. தொழில்களெல்லாம் நற்பயன் தருமிடத்து அறங்களாகும்.

.பொருள் என்பது செல்வம். நிலமும், பொன்னும், கலையும், புகழும் நிறைந்திருத்தல், நல்ல மக்களைப் பெறுதல் இனப்பெருமை சேருதல், இவையெல்லாம் செல்வம். இச்செல்வத்தைச் சேர்த்தல் மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.

இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது. பெண், பாட்டு, கூத்து முதலிய ரஸ வஸ்துக்களை  அனுபவிப்பது. இவ்வின்பங்கள் எல்லாம், தமிழா, உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக. உன்னுடைய நோய்களெல்லாம் தீர்க. உனது வறுமை தொலைக. உனக்கு இனிமையும் அழகுமுடைய வஸ்துக்களெல்லாம் வசப்படுக. பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படுக. நீ எப்போதும் இன்பம் எய்துக.

வீடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது. “வீடு” என்ற சொல்லுக்கு “விடுதலை” என்பது பொருள். மேற்கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோருக்கு ஈசன் தானாகவே வீட்டு  நிலை யருள் செய்வான். தமிழா, உனது புருஷார்த்தங்கல் கை கூடுக!

Wednesday, April 25, 2012

தமிழ் வசன நடை


தமிழ் வசன நடை இப்போதுதான் பிறந்தது. பல வருஷமாகவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சி செய்ய வேண்டும். கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி. எந்த ஒரு விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.

பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல், தனக்கும் அதிக பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது வாய்க்கு வழங்குகிறதா  என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல்  நல்லது. அல்லது ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் வழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல், நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்துவிட்டால் பின்பு ஸங்கடமில்லை. ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடிந்த வசனங்களையே எழுதுவது நன்று. உள்ளத்திலே நேர்மையும் தைர்யமுமிருந்தால், கை பிறகு தானாகவே எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டிமாடு போல ஓரிடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது. வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்க வேண்டும். இவற்றுள், ஒழுக்கமாவது தட்டுத்தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை. நமது தற்கால வசனநடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்திலே தமிழ்க் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ் நடை எழுதும்.

Tuesday, April 24, 2012

தென்றலுடன் பிறந்த பாஷை


“தமிழ்ப் பாஷையின் இனிமை” என்ற தலைப் பெயருடன் சென்னை, “சுதேசமித்திரன்’ பத்திரிகையிலே இனியதோர் குறிப்பு எழுதப்பட்டிருக்கின்றது. அதனை மற்றோரிடத்திலே எடுத்துப் பிரசுரித்திருக்கிறோம். தென்றலுடன் பிறந்த தமிழ் மொழியின் இளமையைப் பற்றி டாக்டர் ஜி.யு.போப் என்னும் புகழ் பெற்ற விற்பன்னர் கொண்டிருக்கும் மதிப்பை அதில் எடுத்துக் காட்டியிருப்பது தமிழர்கள் அனைவரும் கண்டு மகிழத் தக்கதாக இருக்கின்றது. ஆங்கிலப் பெண்களின் இதழ் நயத்திற்கும், செவி நுடபத்திற்கும், அபிசிருக்கும் தமிழைப் போன்ற பொருத்தமுடையது வேறெந்த பாஷையும் இல்லையென்று போப் கூறுகிறார். தற்காலத்திலே நம் நாட்டவர்கள் நமது அருமைத் திருமொழியின் சுவையை வளர்க்க முயலாமல் அதன் இன்பமெல்லாம் பாழாகவிட்டிருப்பதைப் பற்றி மேற்படி குறிப்பெழுதியவர் மிகுந்த கோபமுணர்த்தி இருக்கின்றார். நாம் அந்த விஷயங்களில் நமக்கேற்பட்டிருக்கும் அன்புகளைப் பல வாரங்களின் முன்பு ஒரு தடவை விஸ்தாரமாக எழுதியிருக்கிறோம்.

பொறுப்பென்பதே அற்ற சில மூட வாலிபர்கள் தாம் அரைகுறையாகக் கற்றிருக்கும் அன்னிய பாஷைத் தருக்கு  மேலிட்டவர்களாகித் தமிழ் மொழியே இறந்து போய்விட வேண்டுமென்று கூறுவதை நன்கு கண்டித்துப் பேசியிருக்கிறோம். இவர்கள் கிடக்க, மற்றப்படிப் பொதுவாக இந்நாட்டில் ஆங்கிலம் கற்றோரெல்லாம் சுபாஷாபிமானம் என்பது மிகவும் குன்றியிருப்பது அன்றி, அதன் நயமறியாது திட்டுவதை நினைக்கும்பொழுது நமக்கு வருத்தமுண்டாகிறது. இதன் சம்பந்தமாகச் சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய மஹாவித்வான் ஸ்வாமிநாதையர் சொல்லிய வார்த்தையொன்று நமது நெஞ்சை விட்டு ஒருபோதும் அகலமாட்டாது. மேற்படி காலேஜ் தமிழ்ச் சங்கத்தில் ஒரு ‘மீட்டிங்’ நடந்தது. தமிழ்ப் பாஷையின் அருமையைப் பற்றி ஏதோ பிரஸ்தாபம் வந்தது. அப்போது ஸ்வாமிநாத ஐயரவர்கள் எழுந்து பின்வருமாறு பேசினார்:- “ஆங்கிலேய பாஷையின் இலக்கிய நூல்களில் எத்தனையோ அருமையான கருத்துக்கள் ததும்பிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். அந்தப் பாஷை எனக்குத் தெரியாது. அதனால் அவ்விஷயத்தில் ஒரு விதமான அபிப்பிராயமும் என்னால் கொடுக்க முடியாது என்ற போதிலும் மேற்கண்டவாறு சொல்வோர் தமிழ்ப் பாஷையிலே அவ்விதமான அருமையான விஷயங்கள் கிடையாவென்று சொல்லும் பொழுது உடன் எனக்கு வருத்தமுண்டாகிறது. இவ்வகுப்பினர்களுடன் நான் எத்தனை முறையோ சம்பாஷணை செய்திருக்கிறேன். அந்தச் சமயங்களிலே நான் இவர்களது தமிழ் வன்மையைப் பரிசோதனை புரிந்திருக்கிறேன். இவர்கள் அத்தனை சிறந்த பண்டிதர்களென்று எனக்குப் புலப்படவில்லை. பழங்காலத்துத் தமிழ் நூல்களிற் பயிற்சியில்லாத இவர்கள் அவற்றைப் பற்றி இழிவான அபிப்பிராயம் கொடுப்பதுதான் வெறுக்கத் தக்கதாக இருக்கின்றது. ஆனையையே பார்த்திராத குருடனா அதன் நிறம் முதலியவற்றை பற்றி ஒர் அபிப்பிராயம் கொடுக்க வேண்டும்? “போப் முதலான விற்பன்னர்கல் இவர்கள் இருக்கும் திசை நோக்கிக் காறியுமிழும் வண்ணமாக” நம்மவர்களிற் சிலர் நடந்து கொள்கிறார்களென்று மேற்கூறப்பட்ட “மித்திரன்” குறிப்பில் எழுதபட்டிருப்பதை நாம் முற்றும் அங்கீகாரம் செய்கிறோம்.

தமிழ்ப் பாஷையின் இனிமை

[ “மித்திரன்”, 1906 ஸெப்டம்பரில் வெளிவந்த குறிப்பு]

பாற்கடலிலே பிறந்த மீன்கள் பாலைப் பெரிதாகப் பாராட்டுவது வழக்கமே கிடையாதென்பது நெடுங்காலமாக வழங்கி வரும் உண்மையாகும்.  அவ்வசனக் கருத்து முற்றும் மெய்யென்பதற்குச் சிறிது காலத்தின் முன்பு டாக்டர் போப்பையர் லண்டனில் ராயல் ஏஷியாடிக் சபையார் முன்பு செய்த உபந்நியாசத்திலே நல்லதோர் திருஷ்டாந்தம் அகப்பட்டது. திருக்குறள், திருவாசகம் என்னும் தெய்வீக நூல்களை இங்கிலீஷிலே மொழி பெயர்த்தவரும் அநெக இலக்கண நூல்கள் பிரசுரித்திருப்பவரும் ஆகிய டாக்டர் போப்பைத் தமிழ் நாட்டாரில் பெரும்பான்மையோர் நன்கு அறிவார்கள். இவர் சொல்கிறார்:-“அநேகர் (அதாவது அநேக ஆங்கிலேயர்கள்) பிரெஞ்சு, ஜெர்மன், இடாலியன் முதலிய பாஷைகளைப் போய்ப் படித்துக் கொண்டு இடர்படுகிறார்கள். இப்படிச் செலிவடப்படும் காலத்தைத் தமிழ் கற்பதில் செலவிட்டால் எவ்வளவோ விசேஷமாகும். நான் அநேக (ஆங்கில) மாதர்களுக்குத் தமிழ் கற்பித்திருக்கிறேன். அவர்களுடைய இதழ் நயத்திற்கும் செவி நுட்பத்திற்கும் அபிருசிக்கும் அந்தப் பாஷையைப் போல் எந்தப் பாஷையும் ஒத்து வருவதில்லை” என்றார். இவர் தமிழ்ப் பாஷையின் இனிமையையும் பெருமையையும் குறித்து எவ்வளவோ சிலாக்கியமாகப் பேசியிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த நம்மவர்களோ அந்தப் பாஷையின் இனிமையைப் பாதுகாக்க வேண்டுமென்றேனும் அபிவிருத்தி செய்யவேண்டுமென்றேனும் சிறிதும் முயல்வதில்லை.

தமிழ் மட்டும் தெரிந்த ஜனங்களிற் சிறுபாலார் தமிழ் விஷயத்தில் ஒருவிதமான மூடபக்தியாவது வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலம் கற்றுணர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் தமது கடமையை முற்றும் மறந்துவிடுகிறார்கள். இவர்கள் தமிழ்ப் பாஷை விஷயத்தில் கொண்டிருக்கும் எண்ணத்தையும் இவ்விஷயத்தில் இவர்கள் வகிக்கும் அசிரத்தையையும் டாக்டர் போப்பைப் போன்ற ஆங்கிலேயர்கள் அறியும் பக்ஷத்தில் இவர்கள் இருக்கும் திசையை நோக்கிக் காறியுமிழும் வண்ணமாக நம்மவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

Monday, April 23, 2012

தமிழில் சாஸ்த்ர பரிபாஷை


பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே, நம்மைக்காட்டிலும் ஐரோப்பியர் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும் லெளகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுத வேண்டுமென்று பல பண்டிதர் மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். ஏற்கெனவே, சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேல் வளரும்; வளர்ந்து தீரவேண்டும். அந்த சாஸ்திரங்களை யெல்லாம் ஏக காலத்தில் தமிழில் எழுதி முடிப்பதற்காக ஒரு பண்டித-சங்கம் ஏற்படக்கூடும்.  நமது ராஜாக்களுக்கும், ஜெமீன்தார்களுக்கும், செட்டியார்களுக்கும் நல்ல புத்தியுண்டாகித் தமிழில் நவீன சாஸ்த்ரம் சேர்ப்பதாகிய காரியத்தை அவர்கள் தக்க் பண்டிதர்களின் உதவி கொண்டு, விரைவில் நிறைவேற்றி மேன்மை பெறக்கூடும்.

அஸ்திவாரக் காரியம்

இதற்கெல்லாம் முன்னதாகவே பண்டிதர்கள் செய்து வைக்கவேண்டிய அடிப்படைக் காரியம் ஒன்றுண்டு. கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால், பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமமிராது: ஸங்கடமிராது. பரிபாஷை, ஸங்கேதம், குழுவுக்குறி என்ற மூன்று சொல்லுmம் ஒரே பொருளைப் பல வகையிலே குறிப்பன. அதாவது, ஒரு கூட்டத்தார் அல்லது சாஸ்த்ரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொது வழக்கமில்லாத சொல் இங்ஙனம் பரிபாஷையை நிச்சயப்படுத்த  வேண்டுமென்ற நோக்கத்துடன், சேலத்தில் வக்கீல்  ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாசார்யரும், ஸ்ரீ வெங்கட சுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கி யிருக்கிறார்கLள். இந்தப்பத்திரிகையின் பெயர் ‘தமிழ் சாஸ்திர – பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை’. மேற்கண்ட பெயருடன் ஒரு சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்த சங்கத்தின் கார்யஸ்தர், அந்த ஊர்க்காலேஜில் ப்ரகிருதி சாஸ்திர பண்டிதராகிய ஸ்ரீ ராமநாதய்யர்.

தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப்பத்திரிகை என்ற சேலத்துப் பத்திரிகையின் முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலே தமிழில் எழுதாமல் தமிழருக்கு வேண்டிய இக்காரியத்தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படி நேரிட்டதற்கு ஸ்ரீ ராஜகோபலாசார்யர் சொல்லும் முகாந்தரங்கல் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப்பகுதி யொன்று அந்தப் பத்திரிகையில் சேருமெnனறு தெரிகிறது. அநேகமாக இரண்டாம் ஸஞ்சிகையிலேயே சேருமென்று கேள்விப்படுகிறேன். அங்ஙனம், சேர்ந்து நடக்கும் சாஸ்திரப் பத்திரிகையினால், தமிழ் நாட்டாருக்கு மிகப் பெரிய பயன் விளையுமென்பதில் சந்தேகமில்லை. 

பரிபாஷை சேகரிக்க ஓருபாயம்

ஸ்ரீ காசியிலே, ‘நாகரி ப்ராசாரிணி சபையார்’ ஐரோப்பிய ஸங்கேதங்களை யெல்லாம் எளிய ஸம்ஸ்கிருத பதங்களில் போட்டு, மிகப் பெரியதோர் அகராதி உண்டாக்கி  வருகிறார்கள். அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்ற வரை, தேச பாஷைகள் எல்லாவற்றிலும் ஏககாலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன், யவன பரிபாஷைகளைக் கைகொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதால் நமது தேச பாஷைகளில் ஸங்கேத ஒற்றுமையேற்படும். அதனால் சாஸ்த்ரப் பயிர் தேச முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்.

Sunday, April 22, 2012

வீரத் தாய்மார்கள் என்ற கட்டுரையை யொட்டி


வீரத்தாய்மார்கள் என்ற கட்டுரையை யொட்டி பிரம்மஸ்ரீ. மு. இராகவையங்காரவர்களுக்கு எழுதிய லிகிதம்.

இந்தியா ஆபீஸ்,
பிராட்வே, மதறால்,
18th October 1907
அநேக நமஸ்காரம்,

ஒவ்வொரு காலத்துச் சோம்பர் மிகுதியாலும், ஒவ்வொரு காலத்தே முயற்சி மிகுதியாலும், தங்களைப் போன்ற பெரியோர்களுக்கு அடிக்கடி கடிதங்களெழுதிப் புனிதத் தன்மை பெறுவதற்கு அவகாசமில்லாதவனாக இருக்கின்றேன்.

சென்ற முறை வெளிவந்த “செந்தமிழ்”ப் பத்திரிகையிலே தாங்கள் எழுதியிருக்கும் “வீரத்தாய்மார்கள்” என்ற அற்புத உரையைக் கண்டு மகிழ்ச்சி பூத்து அம் மகிழ்ச்சியைத் தமக்கு அறிவிக்கும் பொருட்டாக இக்கடிதம் எழுதலானேன்.

தாங்கள் பாண்டித்தியத்தை நான் புகழ வரவில்லை. அதனை உலகமறியும். தங்களுடைய பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும் “ஸ்வதேச பக்தி” என்ற புது நெருப்பிற்குத் தான் நான் வணக்கம் செய்கிறேன்.

“காலச் சக்கரம் சுழலுகிறது” என்று அவ்வுபந்நியாசத்தின் இறுதியிலே குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆம்! காலச் சக்கரம் சுழலவே செய்கின்றது;  அச்சுழற்சியிலே, சிறுமைச் சேற்றில் ஆழ்ந்து கிடந்த ‘நீச பாரதம்’ போய் ‘மஹா பாரதம்’ பிறக்கும் தறுவாய் வந்துவிட்டது. 

‘தாழ் நிலை’ என்ற இருளிலே மூழ்கிக் கிடக்கும் பாரத வாஸிகளுக்கு மஹாபாரதம் காட்டத் தோன்றியிருக்கும் சோதிகளிலே தமது நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப்பொன்றாகும். அதற்கு வணக்கம் செய்கிறேன். அது வளர்க. ஓம்!

ஸி. சுப்பிரமணிய பாரதி.

குறிப்பு:- ஸ்ரீ அழகிய சிங்கப் பெருமாளையங்கார் (பச்சையப்பன் காலேஜ்) அவர்களும் அவர் தம்பி ஸ்ரீகிருஷ்ணமாசாரியாரும் தங்களுக்கு ஸாஷ்டாங்க வணக்கம் கூறும்படி என்னிடம் கற்பித்தார்கள்.