Sunday, January 15, 2012

வேதரிஷிகளின் கவிதை


2 ஆகஸ்டு 1916

(குறிப்பு:- அதிதி என்ற சொல்லை உச்சரிக்கும்போது முதற் ‘தி’கரத்தை ‘உந்தி’ என்பதுபோல் மெல்லோசையாகச் சொல்லுக. இரண்டாவது ‘தி’கரத்தை ‘திங்கள்’ என்பதுபோல் வல்லோசையாக்க வேண்டும்.)

மாக்ஸ்முல்லர் (Max Muller) எழுதுகிறார்:-

“உண்மையில் ‘அதிதி’ என்ற தெய்வப் பெயரே ‘அநந்தம்’ அல்லது எல்லையில்லாமை என்ற கருத்தைக் குறிப்பிடுவதற்கு மனித பாஷைகளில் உண்டான பதங்கள் எல்லாவற்றிலும் முந்தியது. ‘திதி’ என்றால் கட்டுப்பட்டது,  பிரிவுபட்டது, எல்லையுடையது என்று அர்த்தம். 

‘அதிதி’ கட்டுப்படாதது, பிரிவுபடாதது, எல்லையில்லாதது.”

இந்த அதிதி என்ற அநந்த சக்தி தேவர்களுக்கெல்லாம் தாய். எல்லாப் பொருள்களும், எல்லா உலகங்களும் இதனிடத்திலே தோன்றின. அஞ்ஞானக் கட்டுகளிலிருந்து விடுதலை பெற விரும்புவோன் அதிதியையே துணையாகக் கொள்ள வேண்டுமென்று வேதம் சொல்லுகிறது.

பிரமனாகிய முதற்கடவுளுக்குத் தாயென்றும் மகளென்றும் சொல்லப்படும் இந்த அதிதியைக் குறித்து ரிக் வேதத்தில் காணப்படும் சில மந்திரங்களை இங்கு மொழி பெயர்த்துக் காட்டுகிறேன்.

(ரிக் வேதம் 1-மண்டலம்; 89-ஸுக்தம்; 10 ரிக்.)

அதிதியே வானம். அதிதி இடைவெளி. அதிதி தாய். அதிதியே தந்தையும் மகனும். அதிதி தேவர்கள் எல்லாம். அதிதி ஐந்து மண்டலத்து மனிதர். சென்றதெல்லாம் அதிதி. இனி வருவதும் அதிதியே. 

(5 -79 - 3)

காலையில் தேவியாகிய அதிதியை அழைக்கிறேன். நடுப்பகலிலும், மாலையிலும் அவளையே அழைக்கிறேன்.

(10 – 65 – 9)

அதிதியையும் அவள் மக்களாகிய இந்திரன், வாயு, வருணன், மித்திரன், அர்யமான் என்ற தேவரையும் அழைக்கிறோம். இவர்கள் மண்ணிலும் வானிலும் நீரிலும் கலந்து நிற்கின்றனர். 

குறிப்பு:- வேதரிஷிகளின் கவிதை என்ற நூலிலே அதிதி என்ற பகுதியில் மேலேயுள்ள விஷயம் ஆரம்பத்தில் இருக்க வேண்டும். அது விட்டுப் போயிருக்கிறது.

~
வேதரிஷிகளின் கவிதை முடிவுரை

வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ரஹாராதனை கிடையாது; ஸ்ந்யஸம் கிடையாது. அத்வைத த்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா; பக்தி மாத்திரந் தானுண்டு.

கோவிலும் மடமும் பெளத்தமதப் பழக்கத்தால் வெளி நாடுகளிலிருந்து நமக்குக் கிடைத்த பேறுகளென்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். ஆனால் இப்போது ஹிந்துமதப் பயிற்சிகளுள்ளே கோவிலும் சிலையும் நெடுந்தூரம் ஆழ்ந்து போய்விட்டன. ஆதலால், இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. கோவில்களுக்குள்ளே பரஸ்பரம் பொறாமையும், சண்டையுமில்லாதபடி எல்லாக் கோவில்களும் ஸாக்ஷாத் ஸூர்யனாகவும், அக்நி குமாரனாகவும், ருத்ரனாகவும், இந்த்ரனாகவும், வாயுவாகவும், விஷ்ணுவாகவும், வருணனாகவும் விளங்குகிற பரமாத்மாவின் கோவில்களென்றும், கோயில்களுக்குள்ளே கக்ஷி பேதங்கள் கிடையாதென்றும் பண்டித பாரமர்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

ப்ரக்ருதி இயற்கைத் தோற்றம்; காணப்படுகிற உலகம் விஷ்ணுவுடைய சரீரம். இதற்குள்ளே வ்யாபித்து நிற்கும் ஆத்மாவே விஷ்ணு. விஷ்ணுவைச் சிலையிலும் வணங்கலாம், மலையிலும் வணங்கலாம், தூணிலும் துரும்பிலும் வணங்கலாம். சிலைகளிலே வணங்குதல் ஒரு வகை யோகம். வேதரிஷிகள் இந்த விஷ்ணுவை, இந்த்ரனை, ஸூர்யனை, ருத்ரனை நேராகக் கண்டு வணங்கினார்கள். உலகமே இவனுடைய உடம்பாதலால் அவர்கள் உலகத்தை வணங்கினர். அறிவுக்குள்ளே வானமும் ஸூர்யனுமிருப்பது போலே வெளியுலகத்திலும் இருக்கின்றன. உள்ளும் புறமும் ஒன்று.

மற்றொரு முறை விளங்கச் சொல்லுகிறேன். புயற் காற்றடித்தது. வேத ரிஷிகள் அதன் முன்னே போய் நின்றார்கள். ஆயிர மின்னல்கள் வாள்போலே வீசின. உலகம் குலுங்கிற்று. அண்டங்கள் இடிவது போலே சத்தம் கேட்டது. மேற்படி ரிஷிகள் பயப்படவில்லை. மந்திரங்களைப் பாடினார்கள். ருத்ரனுடைய உடம்பு தானே உலகம்? வாயுவே ருத்ரன். வாயுவினுடைய உடற் செய்கை தானே புயற்காற்று? இந்திரன் மின்னலையும் இடியையும் காட்டுகிறான். மேகங்கள் சிதறுகின்றன. பூமிக்குத் தண்ணீர் கிடைக்கிறது. இதில் பயத்துக் கிடமெங்கே? ரிஷி புயற்காறைத் துதிக்கிறார். பிறகு, இரவு நீங்கி ஸூயோதயம் உண்டாகிறது; ஒளி தோன்றுகிறது. அதைப் பார்த்து நேரே கைகூப்பி ரிஷி மந்திரம் பாடுகிறார்.  பக்ஷிகள் பாடுகின்றன. இஃதத்தனையும் இயற்கை தெய்வத்தின் காட்சி. இதை ரிஷி போற்றும்போது ப்ரத்யக்ஷ நாராயணனைப் போற்றுகிறார்.

வீட்டிலே நெருப்பு வளர்த்து அதிலே தெய்வத்தைக் கண்டு தொழும் வழக்கம் அக்காலத்தில் மிகுதிப்பட்டது. பொதுவாக இயற்கை வணக்கம் வழக்கமில்லாமல் போன பிறகும் அக்நி பூஜையும், ஸூர்ய பூஜையும் இன்றுவரை நமக்குள்ளே மிஞ்சி நிற்கின்றன. ஸந்த்யா வந்தனாதிகளில் ஸூர்ய பூஜை நியதமாக நடந்துவருகிறது. ஸ்ர்வ வைதிக கிரியைகளும் ஹோமம் வளர்த்துப் பூஜை பண்ணாமல் நடப்பதில்லை.

ப்ரக்ருதியை நேரே தொழும் வழக்கம் மிகுதிப்பட்டால் வேதம் ஒளிபெறும்.
சரணாகதியே வழி.

வேதரிஷிகள் வேறு வழி காட்டியதாக ஸம்ஹிதைகளிலே தெரியவில்லை.
குருவுக்கு மரியாதை செய்யவேண்டுமென்றும் பரமாத்மா ஒருவனுக்கே சரணாகதி தகுமென்றும் என்னுடைய அபிப்ராயம்.

மனத்தைக் கட்டி ஆளுவதற்கு மந்திரத்தை உச்சரிப்பதே வழி. மந்திரத்தின் ஒலியைத் தியானம் செய்வதில் பயன் கிடைக்குமென்று தோன்றவில்லை. அதன் பொருளைத் தியானிக்க வேண்டும். பின்வரும் பாட்டில் பரம்பொருளாகிய நாராயணனுக்கு சக்தி நாமம் வழங்கப்படுகிறது. 

பாட்டு

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

"
நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்;
அல்லது நீங்கும்"என் றேயுலகேழும்
அறைந்திடு வாய் முர சே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்!இங்கு
சொல்லு மவர்தமை யே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

நம்புவ தேவழி யென்ற மறையதன்னை
நாமின்று நம்பிவிட் டோம்
கும்பிட்டெந்நேரமும்"சக்தி"யென் றாலுனைக்
கும்பிடு வேன்,மன மே!
அம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்ச மில்லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்;
அன்னை பராசக்தி என்றுரைத் தோம்;தளை
அத்தனை யுங்களைந் தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை,காண்;
இன்னும தேயுரைப் போம்,சக்தி ஓம் சக்தி,
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல்,சக்தி வேல்!

(‘தனத தனத தனத தனத தனத தனத தாம்’ என்ற தாளம் போட்டுக் கொண்டு மேற்படி பாட்டை இஷ்டமான ராகத்தில் பாடலாம்.)

No comments:

Post a Comment