நுட்பமான விவரங்கள் கற்றுக்கொடுப்பதற்குத் தகுந்த பாட புஸ்தங்கள்
தமிழில் இன்னும் ஏற்படவில்லையாததால், ஆரம்பப் பள்ளிக்கூடத்தில், உபாத்தியாயர்கள் இங்கிலீஷ்
புஸ்தகங்களைத் துணையாக வைத்துக்கொண்டு, அவற்றிலுள்ள பொதுப்படையான அம்சங்களை மாத்திரம்
இயன்றவரை தேசபாஷையில் மொழி பெயர்த்துப் பிள்ளைகளுக்குச் சிறிது சிறிது கற்பித்தால்
போதும்.
திருஷ்டாந்தமாக, ரஸாயன சாஸ்திரம் கற்பிக்குமிடத்தே:-
(அ) உலகத்தில் காணப்படும் வஸ்துக்களெல்லாம் எழுபதே சொச்சம் மூலப்பொருள்களாலும்,
அவற்றின் பலவகைப்பட்ட சேர்க்கைகளாலும் சமைந்திருக்கின்றன (திருஷ்டாந்தங்களும், சோதனைகளும்
காட்டுக.)
(ஆ) அந்த மூல பதார்த்தங்களில், பொன், வெள்ளி, செம்பு, கந்தகம்
இவைபோல வழக்கத்திலுள்ள பொருள்கள் இவை; க்ரோமியம், தித்தானியம், யூரேனியம் இவைபோல ஸாதாரண
வழகக்த்தில் லகப்படாதன இவை, கனரூபமுடையன இவை, திரவரூபமுடையவ இவை, வாயுரூபமுடையன இவை,
இவற்றுள் முக்கியமான மூன்று பதார்த்தங்களின்
குணங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டுக.
(இ) ரஸாயன சேர்க்கை, பிரிவு இவற்றின் இயல்புகள் (பரீக்ஷைகளின்
மூலமாக விளக்குக); இவற்றின் விதிகள்.
(ஈ) ரேடியம், ஹெலியம் முதலிய புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட
மூல பதார்த்தங்களின் அற்புத குணங்கள்.
(உ) பரமாணுக்கள், அணுக்கள், அணுக்கணங்கள் – இவற்றின் இயல்பு,
குணங்கள், செய்கைகள் முதலியன.
இவைபோன்ற பொது அம்சங்களைப்பற்றிய முக்கியமான செய்திகளை, ஸாதாரண
ஸ்ம்பாஷணை நடையில் உபாத்தியாயர்கள் வீட்டில் எழுதிக்கொண்டு வந்து பிள்ளைகளுக்கு வாசித்துக்காட்டி
அவர்களை எழுது வைத்துக்கொள்ளும்படி செய்ய வேண்டும்.
இயற்கைநூல் (பிஸிக்ஸ்), ரஸாயனம் (கெமிஸ்ட்ரி), சரீர சாஸ்த்ரம்,
ஜந்து சாஸ்த்ரம், செடிநூல் (தாவர சாஸ்த்ரம்) – இவையே முக்கியமாக போதிக்க வேண்டியனவாம்.
(ஏ) கைத்தொழில், விவஸாயம், தோட்டப் பயிற்சி, வியாபாரம்
இயன்றவரை மாணக்கர்கள் எல்லாருக்கும், விசேஷமாகத் தொழிலாளிகளின்
பிள்ளைகளுக்கு, நெசவு முதலிய முக்கியமான கைத்தொழில்களிலும், நன்செய் புன்செய்ப் பயிர்த்தொழில்களிலும்,
பூ, கனி காய், கிழங்குகள் விளைவிக்கும் தோட்டத் தொழில்களிலும், சிறு வியாபாரங்களிலும்
தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படி செய்தல் நன்று. இதற்கு, மேற்கூரிய மூன்று உபாத்தியாயர்களைத்
தவிர, தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகளிலே சற்றுப் படிப்புத் தெரிந்தவர்களும் தக்க
லெளகிகப் பயிற்சி யுடைவர்களுமான அனுபவஸ்தர்களைக் கொண்டு ஆரம்பப்பயிற்சி ஏற்படுத்திக்
கொடுத்தல் மிகவும் நன்மை தரக்கூடிய விஷயமாகும்.
(ஐ) சரீரப் பயிற்சி
தோட்டத்தொழில்கள், கிணறுகளில் ஜலமிறைத்தல் முதலியவற்றால் ஏற்படும்
சரீரப் பயிற்சியே மிகவும் விசேஷமாகும். பிள்ளைகளுக்குக் காலையில் தாமே ஜலமிறைத்து ஸ்நானம்
செய்தல், தத்தம் வேஷ்டி துணிகளைத் தோய்த்தல் முதலிய அவசியமான கார்யங்களில் ஏற்படும்
சரீரப் பயிற்சியும் நன்றேயாம். இவற்றைத் தவிர, ஓட்டம், கிளித்தட்டு, சுடுகுடு முதலிய
நாட்டு விளையாட்டுகளும், காற்பந்து (Foot Ball) முதலிய ஐரோப்பிய விளையாட்டுகளும், பிள்ளைகளுடைய
படிப்பில் பிரதான அம்சங்களாகக் கருதப்பட வேண்டும். குஸ்தி, கஸரத், கரேலா முதலிய தேசீயப்
பயிற்சிகளும் இயன்றவரை அனுஷ்டிக்கப்படலாம். ஐரோப்பிய முறைப்படி பிள்ளைகளைக் கூட்டமாகக்
கூட்டி, கபாத்து (ட்ரில்) பழக்குவித்தல் இன்றியமையாத அம்சமாகும். ஸெளகர்யப்பட்டால்
இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிக்கும் மரக்குதிரை, ஸமக் கட்டைகள் (parallel
bars), ஒற்றைக் கட்டை (horizontal bar) முதலிய பழக்கங்களும் செய்விக்கலாம். படிப்பைக்
காட்டிலும் விளையாட்டுக்களில் பிள்ளைகள் அதிக சிரத்தை எடுக்கும்படி செய்ய வேண்டும்.
‘சுவரில்லாமல் சித்திரமெழுத முடியாது.’ பிள்ளைகளுக்கு சரீரபலம் ஏற்படுத்தாமல் வெறுமே
படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர்களுக்கு நாளுக்குநாள் ஆரோக்யம் குறைந்து, அவர்கள்
படித்த படிபெல்லாம் விழலாகி, அவர்கள் தீராத துக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி
நேரிடும்.
(ஓ) யாத்திரை (எக்ஸ்கர்ஷன்)
பிள்ளைகளை உபாத்தியாயர்கள் பக்கத்தூர்களிலும் தமதூரிலும் நடக்கும்
உற்சவங்கள் திருவிழாக்கள் முதலியவற்றுக்கு அழைத்துச் சென்று, மேற்படி விழக்களின் உட்பொருளைக்
கற்பித்துக் கொடுத்தல் நன்று. திருவிழாவுக்கு வந்திருக்கும் பலவகை ஜனங்களின் நடையுடை
பாவைகளைப் பற்றிய ஞானம் உண்டாகும்படி செய்ய வேண்டும். வனபோஜனத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும்.
அங்கு பிள்ளைகள் தமக்குள் நட்பும், அன்பும், பரஸ்பர ஸம்பாஷணையில் மகிழ்ச்சியும் எய்தும்படி
ஏற்பாடு செய்ய வேண்டும். மலைகள் கடலோரங்களுக்கு அழைத்துச் சென்று, இயற்கையில் அழகுகளையும்
அற்புதங்களையும், பிள்ளைகள் உணர்ந்து மகிழும்படி செய்ய வேண்டும். பலவிதமான செடி கொடிகள்,
மரங்கள், லோஹங்கள், கல்வகைகள் முதலியவற்றின் இயல்பைத் தெரிவிக்க வேண்டும்.
பொதுக் குறிப்புகள்
மேலே காட்டிய முறைமைப்படி தேசீயப் பள்ளிக்கூடம் நடத்துவற்கு
அதிகப் பணம் செலவாகாது. மாஸம் நூறு ரூபாய் இருந்தால் போதும். இந்தத் தொகையை ஒவ்வொரு
கிராமத்திலுள்ள ஜனங்களும் தமக்குள்ளே சந்தா வசூலித்துச் சேர்க்கவேண்டும். செல்வர்கள்
அதிகத் தொகையும், மற்றவர்கள் தத்தமக்கு இயன்றளவு சிறு தொகைகளும் கொடுக்கும்படி செய்யலாம்.
100 ரூபாய் வசூல் செய்ய முடியாத கிராமங்களில் 50 ரூபாய் வசூலித்து உபாத்தியாயர் மூவருக்கும்
தலைக்கு மாஸச் சம்பளம் 12 ரூபாய் கொடுத்து, மிச்சத் தொகையை பூகோளக் கருவிகள், “ஸயன்ஸ்”
கருவிகள், விவசாயக் கருவிகள் முதலியன வாங்குவதில் உபயோகப்படுத்தலாம். 100 ரூபாய் வசூலிக்கக்கூடிய
கிராமங்களில் உபாத்தியாயர் மூவருக்கும், தலைக்கு 20 ரூபாய் வீதம் சம்பளம் ரூபாய் அறுபது
போக, மிச்சத் தொகையை மேற்அடி கருவிகள் முதலியன வாங்குவதில் உபயோகப்படுத்தலாம். மேற்படி
கருவிகள் எப்போதும் வாங்கும்படி நேரிடாது. முதல் இரண்டு வருஷங்களுக்கு மாத்திரம் மாஸந்தோறும்
மிஞ்சிந் தொகையை இங்ஙனம் கருவிகள் வாங்குவதிலும் புஸ்தகங்கள் வாங்குவதிலும் செலவிட்டால்
போதும். அப்பால் மாஸந்தோறும் மிஞ்சுகிற பணத்தைப் பள்ளிக்கூடத்துக்கு க்ஷேம நிதியாக
ஒரு யோக்கியமான ஸ்ரீமானிடம் வட்டிக்குப் போட்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறன்றி
ஆரம்பத்திலேயே கருவிகள் முதலியன வாங்குவதற்குப் பிரத்யேகமான நிதி சேகரித்து அவற்றை
வாங்கிக் கொண்டுவிட்டால் பிறகு தொடக்க முதலாகவே மிச்சப் பணங்களை வட்டிக்குக் கொடுத்துவிடலாம்.
மாசம் நாற்பது ரூபாய் வீதம் மிச்சப் பணங்களை க்ஷேமநிதியாகச்
சேர்த்துவந்தால் பதினைந்து வருஷங்களுக்குள்ளே தகுந்த தொகையாய்விடும். பிறகு மாஸவசூலை
நிறுத்திவிட்டுப் பள்ளிக்கூடத்தை அதன் சொந்த நிதியைக் கொண்டே நடத்திவரலாம். தவிரவும்,
அப்போதப்போது அரிசித் தண்டல், கலியாண காலஙக்ளில் ஸம்பாவனைகள், விசேஷ நன்கொடைகள் முதலியவற்றாலும் பள்ளிக்கூடத்து நிதியைப் போஷணை
செய்து வரலாம்.
எல்லாவிதமான தானங்களைக் காட்டிலும் வித்யாதானமே மிகவும் உயர்ந்தது
என்று ஹிந்து சாஸ்த்ரங்கள் சொல்லுகின்றன. மற்ற மத நூல்களும் இதனையே வற்புறுத்துகின்றன.
ஆதலால் ஈகையிலும் பரோபகாரத்திலும் கீர்த்திபெற்றதாகிய நமது நாட்டில், இத்தகையப் பள்ளிக்கூடமொன்றை
மாஸ வசூல்களாலும், நூற்றுக் கணக்காகவும், ஆயிரக் கணக்காகவும் அல்லது சிறு சிறு தொகைகளாகவும்
சேகரிக்கப்படும் விசேஷ நன்கொடைகளாலும் போஷித்தல் சிரமமான காரியம் அன்று. இது மிகவும்
எளிதான காரியம்.
இந்தப் பள்ளிக்கூடங்களை ஒரு சில மனிதரின் ப்ரத்யேக உடைமையாகக்
கருதாமல், கோயில், மடம், ஊருணி முதலியன போல் கிராமத்தாரனைவருக்கும் பொது உடைமையாகக்
கருதி நடத்த வேண்டும். பொது ஜனங்களால் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுக்கப் படுவோரும்,
ஜந்து வருஷவங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டியவருமாகிய பத்து கனவான்களை ஒரு நிர்வாக
ஸபையாகச் சமைத்து, அந்த ஸபையின் மூலமாகப் பாடசாலையின் விவகாரங்கள் நடத்தப்பட வேண்டும்.
இந்த நிர்வாக ஸபையாரைத் தெரிந்தெடுப்பதில் கிராமத்து ஜனங்களில் ஒருவர் தவிரமல் அத்தனை
பேருக்கும் சீட்டுப் போடும் அதிகாரம் ஏற்படுத்த வேண்டும்.
இத்தகைய கல்வி கற்பதில் பிள்ளைகளிடம் அரையணாக் கூடச் சம்பளம்
வசூலிக்கக் கூடாது. தம்முடைய பிள்ளைகளுக்குச் சம்பளங்கொடுக்கக்கூடிய நிலைமையிலிருந்து,
அங்ஙனம் சம்பளங்கொடுக்க விரும்புவோரிடம் அத்தொகைகலை நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், மிகவும் ஏழைகளான பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடத்திலிருந்தே இயன்றவரை புஸ்தகங்களும்,
வஸ்த்ரங்களும், இயன்றவிடத்தே ஆஹாரச் செலவும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆண்மக்களுக்கு மட்டுமன்றி, இயன்றவரை பத்து வயதுமட்டுமேனும் பெண்குழந்தைகளும்
வந்து கல்வி கற்க ஏற்பாடு செய்யலாம். அங்ஙனம் செய்தல் மிகவும் அவசியமாகவே கருதத் தகும்.
ஆனால், ஜனங்கள் அறியாமையால் இங்ஙனம் பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் சேர்ந்து படிக்கும்
விஷயத்தில் அக்ஷேபம் சொல்லக்கூடிய கிராமங்களில், இதை வற்புறுத்தாமல், முதலில் ஆண்பிள்ளைகளுக்கு
மாத்திரமாவது தேசீயக் கல்வி பயிற்ற ஏற்பாடு செய்யலாம். பெண்குழந்தைகளுக்கு இதே மாதிரியாக
உபாத்திச்சிமார் மூலமாக கல்வி பயிற்றக்கூடிய இடங்களில் அதனையும் செய்யலாம்.
பாடசாலை வைப்பதற்குத்தக்க இடங்கல் செல்வர்களால் ஏற்படுத்திக்
கொடுக்கப்பட வேண்டும். இது ஸெளகர்யப்படாத இடங்களில் கோயில்கள், மடங்கள் முதலிய பொது ஸ்தலங்களிலே பாடசாலை நடத்தலாம்.
அதிகப் பணச்செலவின்றி ஸெளகர்யமும், நல்ல காற்றோட்டமும் ஒளிப்பெருக்கமுடைய கூறைக் கட்டிடங்கள்
கட்டி அவற்றிலே பாடசாலை நடத்தினால் போதும். இடம் பெரியதாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
ஏராளமான பணஞ் செலவுசெய்து கட்டிடங்கள் கட்ட வேண்டிய அவசியமுமில்லை. ஸாதாரண ஸெளகர்யங்கள்
பொருந்திய இடங்களில் கல்வி நன்றாகக் கற்பித்தால் அதுவே போதும்.
இங்ஙனம் ஆரம்பப்பாடசாலைகளில் படித்துத் தேறும் பிள்ளைகள் அந்த
அளவிலே ஏதேனும் தொழில் அல்லது வியாபாரத்துறையில் புகுந்து தக்க ஸம்பாத்யம் செய்யத்
தகுதியுடையோராய் விடுவார்கள். அங்ஙனமின்றி, நாட்டிலுள்ள பல உயர்தரப் பாடசாலைகளில் அவர்கள்
சேர்ந்து மேற்படிப்பு படிக்க விரும்பினாலும் அதற்கு இப்பள்ளிக் கூடங்கள் தக்க ஸாதனங்களேயாகும்.
மேலும் அவ்விதமான ஆரம்பப் பாடசாலைகள் நன்கு நடந்து வெற்றி பெற்றுவிடுமாயின், அப்பால்
இதே கொள்கைகளை ஆதாரமாகக் கொண்ட மேல்தர தேசீயப் பாடசாலைகள் ஏற்படுத்தக் கூடிய இடங்களில்
அங்ஙனம் செய்யலாம்.
முக்கியமான குறிப்பு:- ஹிந்துக்களல்லாத பிள்ளைகள் இப்பாடசாலைகளில்
சேர்ந்தால் அவரவர் மதக்கொள்கைகளை அன்னியமத தூஷணையின்றி பெருந்தன்மையாகக் கற்றுக்கொடுப்பதற்குரிய
வழிகள் செய்யவேண்டும்.
முடிவுரை
தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசீயக் கல்வி இன்றியமையாதது.
தேசீயக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள்
கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம். இந்த விஷயத்தை ரவீந்தரநாத் தாகூர், ஆனி பெஸண்ட்,
நீதிபதி மணி அய்யர் முதலிய ஞானிகள் அங்கீகரித்தும், நம் நாட்டில் தேசீயக்கல்வியைப்
பரப்புதற்குரிய தீவிரமான முயற்சிகள் செய்கின்றனர். ஆதலால், இதில் சிறிதேனும் அசிரத்தை
பாராட்டாமல், நமது தேச முழுதும், ஒவ்வொரு கிராமத்திலும் மேற்கூறியபடி பாடசாலைகள் வைக்க
முயலுதல் நம்முடைய ஜனங்களின் முதற் கடமையாம்.
தேசீயக் கல்வி (2)
ஸ்ரீமான் ஜினராஜ தாஸரின் கருத்து
“கல்வியைப் பற்றிய மூலக் கருத்துக்கள் எல்லா நாடுகளுக்கும் பொது,
ஆனால், அந்தக் கொள்கைகளை வெவ்வேறு தேசங்களில் பிரயோகப்படுத்தும்போது இடத்தின் குணங்களுக்கும்,
ஜனங்களின் குணங்களுக்கும் தக்கபடி கல்வி வழியும் வெவ்வேறாய்ப் பிரிந்து தேசீயமாகி விடுகிறது.
இங்கிலாந்தின் கல்வி முறையில் பலவகை விளையாட்டுகளும் சரீரப்பயிற்சி முறைகளும் கட்டாயமாக
ஏற்பட்டிருக்கின்றன. இத்தாலியின் அவை புறக்கணிக்கப்படுகின்றன. அங்கு கற்பனா சக்தியும்,
சிற்பம் முதலிய கலைகளும் தலைமையாகக் கொண்ட கல்வியே பயிற்றப்படுகிறது. இதன் காரணம்,
இங்கிலாந்தில் பயிர் விளைவு குறைவு; ஆதனால், அநேக ஜனங்கள் வெளித்தேசங்களில் குடியேறி
ஜீவனம் செய்தல் அவசியமாகிறது; அதற்குரிய குணங்களை ஆங்கிலக் கல்வி முக்கியமாகக் கருதுகிறது.
அமெரிக்காவில், ஜனாதிகாரமே மேலான ராஜ்ய தர்மமென்றும், எத்தனை பெரிய ஏழையும் எத்தனை
பெரிய செல்வனும் தம்முள் ஸமமேயன்றி அவர்களில் ஏற்றத்தாழ்வு கிடையாதென்றும், பிறரைச்
சார்ந்து நிற்காமல் தன்மதிப்புடன் பிழைக்கத்தகுந்த கூலி தரும் எவ்விதமான கைத்தொழிலிலும்
அவமானத்துக்கு இடமில்லையென்றும் பாடசாலைகளில் முக்கிய போதனையாகக் கற்பிக்கிறார்கள்.
இந்தியாவில் மாத்திரம் சுதேசீயக் கல்வி இல்லை. இந்நாட்டுக் கல்வி முழுதும் பிரிட்டிஷ்
குணமுடையதாக இருக்கிறது. ஒரு வாரத்தில் இரண்டு மூன்று மணிநேரம் ஹிந்துதேச சரித்திரமும்
தேசபாஷைகளும் கற்றுக்கொடுத்தால் போதாது. அதினின்றும் சுதேசீய ஞானம் ஏற்படாது. சென்னையில்
‘பிரெஸிடென்ஸி காலெஜ்’ என்று சொல்லப்படும் மாகாணக் கலாசாலையின் கட்டடம் நமது தேசமுறையைத்
தழுவியதன்று. பழைய இத்தாலி வழியொன்றை அனுஸரித்தது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ்
ஸங்கங்களின் கட்டிடம் இத்தாலி முறையிலா கட்டியிருக்கிறார்கள்? அதுபோலவே, பாரததேச முறைமைப்படி
கட்டிய கட்டிடங்களில் கற்றுக்கொடுக்காத கல்வி இங்கு சுதேசீயக் கல்வி என்று சொல்லத்தகுந்த
யோக்யதை பெறாது.”
இது ஜினராஜதாஸர் சில தினங்களின் முன்பு சென்னைப் பத்திரிகைகளில்
பிரசுரம் செய்திருக்கும் ஒரு வ்யாஸத்தின் ஸாரமாம். இதில் கடைசி அம்சம் மிகவும் கவனிக்கத்
தகுந்தது. நமது தேசத்து முறைமைப்படி கட்டிய கட்டிடத்திலேயன்றிப் பிறநாட்டு முறை பற்றிக்
கட்டிய மனைகளிலேகூட தேசீயக்கல்வி பயிற்றுதல் ஸாத்யமில்லையானால், ஓஹோ, பாஷை விஷயத்தை
என்னென்று சொல்வோம்! தமிழ் நாட்டில் தேசீயக்கல்வி கற்பிக்க வேண்டுமானால், அதற்குத்
தமிழே தனிக் கருவியாக ஏற்படுத்த வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?
தமிழ் நாட்டுப் பெண்கள்
தமிழ் நாட்டு ஸ்திரீகளையும் சேர்த்துக் கொண்டு, அவர்களுடைய யோசனைகளையும்
தழுவி நடத்தாவிடின் அக்கல்வி சுதேசீயம் ஆக மாட்டாது. தமிழ்க் கல்விக்கும் தமிழ்க் கலைகளுக்கும்
தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க்கோயில், தமிழரசு, தமிழ்க்கவிதை,
தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ?
இப்போது ஸ்ரீமதி அனிபெஸண்ட் தம்முடன் திலகர் ரவீந்த்ரநாதர் முதலிய மஹான்கள் பலரையும்
சேர்த்துக்கொண்டு மீளவும் எழுப்பியிருக்கும் தேசீயக்கல்வி முயற்சியில் ஏற்கெனவே நீதிபதி
ஸதாசிவ அய்யர், பத்தினி ஸ்ரீமதி மங்களாம்பாள் முதலிய ஓரிரண்டு ஹிந்து ஸ்த்ரீகள் ஸ்ர்வகலாஸங்கத்தின்
ஆட்சிமண்டலத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது போதாது. தேசியக் கல்வியின்
தமிழ்நாட்டுக் கிளையென ஒரு கிளை ஏற்பட வேண்டும். அதன் ஆட்சிமண்டலத்தில் பாதி தொகைக்குக்
குறையாமல் தமிழ் ஸ்த்ரீகள் கலந்திருக்க வேண்டும். ஒரு பெரிய ஸர்வ கலா ஸங்கத்தின் ஆட்சிமண்டலத்தில்
கலந்து தொழில் செய்யத்தக்க கல்விப் பயிற்சியும் லெளகிக ஞானமும் உடைய ஸ்த்ரீகள் இப்போது
தமிழ் நாட்டில் பலர் இலர் என ஆக்ஷேபங் கூறுதல் பொருந்தாது. தமிழ் நாடு முழுதுந் தேடிப்பார்த்தால்
ஸ்ரீமதி மங்களாம்பாளைப் போல இன்னும் பத்து ஸ்த்ரீகள் அகப்படமாட்டார்கள் என்று நினைக்க
ஹேதுவில்லை. எதற்கும் மேற்படி ஆட்சி மண்டலம் சமைத்து, அதில பத்துப் பெண்களைக் கூட்டி,
நடத்த வேண்டிய காரியங்களைப் பச்சைத் தமிழில் அவர்களிடம் கூறினால், அதினின்றும் அவர்கள்
பயன்படத்தக்க பல உதவி யோசனைகளையும், ஆண்மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புது
ஞானங்களையும் சமைத்துக் கொடுப்பார்கள் என்பதில் ஸந்தேஹமில்லை. முன்பு தமிழ் நாட்டை
மங்கம்மா ஆளவில்லையோ? ஒளவையார் உலக முழுவதும் கண்டு வியக்கத்தக்க நீதி நூல்கள் சமைக்கவில்லையோ?
மீர்ஜா ஸமி உல்லா பேக்
முன்பு முகம்மதிய ஸர்வ கலா ஸங்கம் ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்
எழுந்த முயற்சியில் தலைவர்களில் ஒருவராக உழைத்த மீர்ஜா ஸமி உல்லா பேக், “ஜாதி மத பேதங்களால்
சிதைந்து போயிருப்பதால், பாரத தேசத்தார் மேலே எழமாட்டார்களென்று பிறர் கூறும் அவலச்
சொல்லை நீங்கள் கேட்காதிருக்க வேண்டினால், மேலும் ஸ்வராஜ்யத்துக்குத் தகுதியுடையோராக
உங்களைக் காட்டிக்கொள்ள விரும்பினால், தேசீயக் கல்விக்குத் துணை செய்யுங்கள். இந்தத்
தருணம் தவறினால், இனி வேறு தருணம் இப்படி வாய்க்காது” என்கிறார். தேசீயக் கல்வியும்
ஸ்வராஜ்யமும் தம்முள்ளே பிரிவு செய்யத் தகாதன என்றும், இவ்விரண்டினுள் ஒன்றன் அவசியத்தை
அங்கீகாரம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அரவிந்த கோஷ் சொல்லியதும் மேற்படி ஸமி உல்லா
சொல்வதும் பொருத்தமாகவே காணப்படுகின்றன. எந்த வினைக்கும் காலம் ஒத்து நின்றாலொழிய அதை
நிறைவேற்றுதல் மனிதனுக்கு ஸாத்தியமில்லை. விதியின் வலிமை சாலவும் பெரிது. ஆனால் விதி
இப்போது தேசீயக்கல்வி முயற்சிக்கு அநுகூலமான காலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது
என்ற செய்தியை மீர்ஜா ஸமி உல்லா நம் நாட்டாருக்கு நினைப்பூட்டுகிறார்.
‘காளயுக்தி’ என்பது காலயுக்தி; அதாவது காலப் பொருத்தம். காலம்
இந்த வர்ஷத் தொடக்கத்தில் எந்தப் பெருஞ் செயலுக்கும் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.
பகவத் கீதையில் துர்க்காஸ்துதி முதலிய சில அம்சங்கல் சேர்ந்தும்,
ஹம்ஸ யோகி என்பவரின் ‘கீதா ரஹஸ்யம்’ என்னும் உரைநூலில் கூறப்பட்டதைத் தழுவி 18 அத்யாயக்
கணக்கை 24 அத்யாயமாக மாற்றியும், சென்னை சுத்த தர்ம மண்டலத்தார் ஒரு புதிய பதிப்புப்
போட்டிருக்கிறார்கள்.
இதற்கு நீதி நிபுண மணி அய்யர் ஒரு முகவுரை எழுதியிருக்கிறார்.
அந்த முகவுரையில் சக்தி தர்மத்தை மிகவும் உயர்த்திக் கொண்டாடுகிறார்.
இப்படிப்பட்ட மணி அய்யரும் அனி பெஸண்ட் அம்மையும் கலந்து நடத்தும்
தேசீயக்கல்வி முயற்சியில் பெண்களின் ஆதிக்கம் மேன்மேலும் ஓங்கி வளரும் என்பது சொல்லாமலே
விளங்கும்.
மேற்பதிப்பின் முதல் ஏட்டின் முதுகுப் புறத்தின் தலைப்பில்
‘ஓம் நம; ஸ்ரீ பாமர்ஷிப்யோ யோகிப்ய: (யோகிகளாகிய
தலைமை முனிவரைப் போற்றுகிறோம் ஓம்) என்று அச்சிட்டு, அடியில்,
“ஸ்ரீம்; ஶ்ரைம்; ஶ்ரைம்; ஓம் –தாஸ”:
என்ற மந்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இம்மந்திரங்களின் பொருள் யாதெனில்-
ஸ்ரீம் – லக்ஷ்மியை
(ஸ்ரீ, திரு, என்றவை ஒரு மொழியின் வடிவங்கள்)
ஶ்ரைம் – ஆச்ரயிக்கிறேன், சார்ந்து நிற்கிறேன்;
ஆதலால்,
ஶ்ரைம் – அசைகிறேன்,
ஓம் – ப்ரணவப் = ப்ர+நவம்= மேன்மேலும்
புதியநிலை;
எப்போதும் க்ஷணந்தோறும் புதிய புதிய உயிருடன்
என்றும் அழியாத அமிர்த நிலை பெற்று விளங்குவேன்.
தாஸ:=அடியேன்.
இப்பொருளுடைய மந்திரங்களை துர்க்காஸ்துதி
சேர்ந்த கீதைப் பதிப்புடன் ஆரம்பத்திலே போட்டது மிகவும் பொருத்த முடைய
செய்கையேயாம்.
மஹா சக்தியே தாய் அல்லது மனைவி வடிவத்தில்
மனிதன் உயிருக்குத் துணைபுரிகிறாள். ஆதலால் பெண்ணை ஆச்ரயித்த வாழ்க்கையே
தேவவாழ்க்கை. “வந்தே மாதரம்” என்பதும், “ஓம் ஸ்ரீம்” என்பனவும் நம்முடைய தேசக்
கல்விச் சாலைகளின் வாயிற்கதவுகளிலும் கொடிகளிலும் பொறிக்கத்தக்க மந்திரங்களாம்.
மேலும் அந்த பதிப்பின் மூன்றாம் ஏட்டின்
முதுகுப் புறத்தைத் திருப்பினால், அதில், நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கண்ணன்
நடத்த, அதில் அர்ஜுனன் வீற்றிருப்பதைப் போல் சித்திரம் வரையப்பட்டிருக்கிறது; இஃது
ஆண் மக்கள் ஒருவருக்கொருவர் நட்புச் செலுத்த வேண்டிய நெறியைக் காட்டுவது.
ஆண்மக்கள் இருவர் பரஸ்பரம் எங்ஙனம் *பாவனை*
செய்ய வேண்டும்? நர நாராயணரைப்போலே, நீ உனது மித்திரனைக் கண்ணனாகவும், உன்னைப்
பார்த்தனாகவும், அவன் உன்னைக் கண்ணனாகவும், தன்னைப் பார்த்தனாகவும் உணர்ந்து கொள்ள
வேண்டிய நெறி மேற்படி மந்திரங்களாலும் சித்திரத்தாலும் குறிக்கப்படுவது.
இந்த நெறி தேசியக் கல்விச் சாலைகளில் கற்பிக்கும்
விஷயங்களுள் ஒன்றாகக் கற்பிக்கப்படவேண்டும்.
ஹிந்து முஹம்மதிய ஸமரஸம்
தேசியக் கல்வியின் முஹம்மதியர் எத்தனைக்கெத்தனை
சேர்ந்துழைக்கிறார்களோ, அத்தனைக் கத்தனை அம் முயற்சி அதிகப் பயன் அடையும். மத
பேதங்களை வ்யாஜமாகக் காட்டி ஹிந்து முஹம்மதியர் ராஜரீக முதலிய பொது விஷயங்களிலும்
கூடியுழைக்காமல் தடுக்க வேண்டும் என்று ஆங்கிலோ-இந்திய பத்திராதிபர் முதலிய பொதுச்
சத்துருக்கள் செய்த தீய முயற்சிகளெல்லாம் விழலாய்விட்டன. மஹான் முஹம்மது ஆலி, அவர்
அண்ணன் ஷெளகத் ஆலி, ஸேட் யாகுப் ஹுஸேன், பெரிய ஜினா, மஹமதாபாத் ராஜா முதலிய மேலோர்களின்
ப்ரயத்னத்தால் ஹிந்து முஹம்மதியர் அண்ணன் தம்பிகளென்பது தென் அமெரிக்காக்
கண்டத்தாருக்குக்கூட ஸம்சயம் ஏற்பட இடமில்லாமல் பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணி போல்
நிலைநிறுத்தப்பட்டு விட்டது.
மேலும் இந்தியாவிலுள்ள முஸல்மான்களில் பலர் ஹிந்து
ஸந்ததியார். அவர்களுடைய நெஞ்சில் ஹிந்து ரத்தம் புடைக்கிறது. இங்ஙன மில்லாமல்
வெறும் *பிரட்டாணிய* அராபிய பாரஸீக மொகாலய ஸந்ததியாக இருப்போரும் இந்த தேசத்தில்
ஆயிர வருஷங்களுக்கு மேலாக வாழ்வதால், ஹிந்து ஜாதியாராகவே கருதத்தக்கவர் ஆவர்.
எங்ஙனமெனில், ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன்; சீனத்தில் பிறந்தவன் சீனன். ஹிந்து
தேசத்தில் பிறந்தவன் ஹிந்து; இதர தேசங்களில் தேச எல்லையே ஜாதி எல்லையாகக்
காணப்படுகிறது; இந்த நாட்டிலும் அதே மாதிரி ஏன் செய்யக்கூடாது?
இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின்
திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்துஜாதி.
(2) கிறிஸ்தவர்
தேசீயக் கல்வி முயற்சிகளில் சேரக்கூடாதென்று ஒரு சில
மூடப் பாதிரிகள் சொல்லக்கூடும். அதை ஹிந்துக் கிறிஸ்தவர் கவனிக்கக்கூடாது. தேசீயக்
கல்வியில், ரிக்வேதமும், குரானும்,
பைபிலும் ஸமானம். கிறிஸ்து, கிருஷ்ணன் என்பது பர்யாய நாமங்கள். வங்காளத்தில்
ஹிந்துக்கள் கிருஷ்ணதாஸ பாலன் என்று சொல்வதற்குக் கிறிஸ்தோதாஸ் பால் என்று சொல்கிறார்கள்.
(3) மனுஷ்யத்தன்மை
ஆங்கிலேயர், பிராமணர், ஆஸ்திரேலியாவில்
முந்தி வேட்டைகளில் அழிக்கப்பட்ட புதர்ச்சாதியார் (Bushmen) – எல்லாரும் பொதுவில்
‘மனிதர் ஆதாம் ஏவாவழியில் பிறந்தவர்கள்’ என்று கூறி, முஹம்மதியக் கிறிஸ்தவ வேதங்கள்
‘மனிதர் எல்லோரும் ஒன்று’ என்பதை உணர்த்துகின்றன. மஹாபாரதத்தில், மனிதர் தேவர், புட்கள்,
பாம்புகள் எல்லோருமே காச்யப ப்ராஜபதியின் மக்களாதலால் ஒரே குலத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
வேதாந்த சாஸ்த்ரமோ, பிராமணர்,
நாயர், முதலை, கரடி, வெங்காயப்பூண்டு முதலிய ஸகல ஜீவன்களும் பரமாத்மாவின் அம்சங்களே
யன்றி வேறல்ல என்று பல நூற்றாண்டுகளாகப் பறையறைந்துகொண்டு வருகிறது.
ஆதலால், தேசீயக்கல்வி முயற்சியில்
ஜாதிமத வர்ணபேதங்களை கவனிக்கக் கூடாதென்று அரவிந்த கோஷ், திலக், அனி பெஸண்ட் முதலியவர்கள்
சொல்லுவதை இந்த நாட்டில் எந்த ஜாதியாரும், எந்த மதஸ்தரும், எந்த நிறத்தையுடையவரும்
மறுக்க மாட்டார்களென்று நம்புகிறேன்.
அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.
கான்பரன்ஸ் என்றும், மீட்டிங் என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தை சொல்லுகிறார்கள்.
கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே!
படிப்பில்லாத ஜனங்கள் மிருகங்களுக்குச் சமானமென்று திருவள்ளுவர் பச்சைத் தமிழிலே சொல்லுகிறார்.
நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும், நம்மிலே முக்காற் பங்குக்கு மேலே மிருகங்களாக
இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒருவழி பிறக்கவில்லையே! ஏன்? எதனாலே? காரணந்தான் என்ன?
‘காள யுக்தி’
காளயுக்தி என்பது கால யுக்தி;
அதாவது, காலத்தின் பொருத்தம்; காலம் இந்த வருஷத்தின் ஆரம்பத்தில் எந்தப் பெருஞ் செயல்களுக்கும்
மிகவும் பொருத்தமாகச் சமைந்திருக்கிறது.
தேசீயக் கல்வி, மனுஷ்யஜாதியின் விடுதலை, இவ்விரண்டு பெருங் காரியங்களைத்
தொடங்குவதற்கும் இப்போது காலம் மிகவும் பொருத்தமாக வாய்த்திருக்கிறது.
இவற்றுள் மனுஷ்யஜாதியின் விடுதலை நிறவேற வேண்டுமாயின் அதற்கு
பாரத தேசத்தின் விடுதலை இன்றியமையாத மூலாதாரமாகும்.
இங்ஙனம் பாரத தேசம் விடுதலை பெற வேண்டுமாயின் அதற்கு தேசீயக்
கல்வியே ஆதாரம்.
”அ….. ன்”
மேலே காட்டிய குறியின் பொருள் யாது?
தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர
முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது
பொருள்.
ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம்
செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ் மொழி வாயிலாகக்
கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்;
‘ஸ்லேட்’ ‘பென்ஸில்’ என்று சொல்லக்கூடாது.
No comments:
Post a Comment