Friday, August 31, 2012

ஓநாயும் வீட்டுநாயும்

தென் இந்தியாவிலுள்ள மன்னார்கடற்கரையை யடுத்த "ஒரு பெருங்காடு இருக்கிறது.அக் காட்டிற்கும் அதைச் சுற்றியிருந்த அநேககிராமங்களுக்கும் அதிபதியாய் ஒரு பாளையக்காரர்இருந்தார். அவர் பெயர் உக்கிரசேனப் பாண்டியன்.அவர் யுத்தப் பிரியர். அவர் புலி, கரடி, யானை, சிம்மம் முதலான காட்டு மிருகங்களை வேட்டையாடுவதில் சமர்த்தர். பலவகையான வேட்டைநாய்கள் அவரிடத்தில் இருந்தன. அதிகாலையில் ஒருநாள் அவர் வேட்டைக்குப் புறப்பட்டார். தான் மிகுந்தஅன்பு பாராட்டி வளர்த்துவந்த ''பகதூர்'' என்ற ஒரு நாயைத் தன்கூட கூட்டிக்கொண்டு சென்றார். அந்தநாயானது வெகுகாலமாய் காட்டிலே இருந்தபடியால்அந்தக் காட்டில் யதேச்சையாய்ச் சுற்றித் திரிய சமயம்வாய்த்தவுடனே ஆனந்த பரவசப்பட்டு கண்டகண்டவிடத்திற்கெல்லாம் ஓடியது.

''பகதூர்'' பார்வைக்கு அழகாய் இருந்தது.மிகுந்த சதைக் கொழுப்பு அதற்குண்டு. அதன் உடம்புதினந்தோறும் கழுவப்பட்டு வந்ததால் தளதளப்பாய்இருந்தது. அக்காட்டில் ஓநாய்கள் விசேஷமாய் இருந்தன.ஓநாய் வேட்டை தன் அந்தஸ்துக்குத் தகாதென்பதுஉக்கிரசேனனுடைய கொள்கை. அக்காரணத்தாலேதான்அந்த ஆரண்யத்தில் ஓநாய்கள் நிர்ப்பயமாய் சஞ்சரித்தன.அன்று ஒரு ஓநாய் தன் வழியில் குறுக்கிட்ட ''பகதூரை''ப்பார்த்து அதிசயப்பட்டு அத்துடன் சம்பாஷிக்க விருப்பங்கொண்டது.

ஓநாய்:- ஹே ஸகோதரா, நான் உன்னைச்சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன். எனக்குத்தயவுசெய்து விடைகள் அளிப்பாயா?

வீட்டு நாய்:- அடா ஓநாயே, நாம் நம்முடைய அந்தஸ்துக்குக் குறைவான எந்த நாயோடும்ஸ்நேஹம் பாராட்டுவதில்லை. ஆயினும், உன்மேல்நம்மை யறியாமலே நமக்குப் பிரீதி ஏற்படுகிறபடியால்நீ கேட்கும் கேள்விகளுக்கு ஜவாப் சொல்ல ஸம்மதித்தோம்.

ஓநாய்:- ஐயா, உம்முடைய " அந்தஸ்தென்ன? நீ வஸிக்கும் இடம் எங்கே?இக்காட்டிற்கு வந்த காரணமென்ன? உமக்குஇவ்வளவு சுகமான வாழ்க்கை எங்ஙனம் ஏற்பட்டது?

வீடு நாய்:- நாம் உக்கிரசேன பாண்டியனிடத்தில் இருக்கிறோம். அவர் நமக்குராஜோபசாரஞ் செய்து வருகிறார். நமக்கும்அவரிடத்தில் பக்தியுண்டு. நம்மை அவர்மற்றெந்த நாய்களைக் காட்டிலும் மேலாக மதித்து வருகிறார்.

ஓநாய்:- அண்ணா, என் வாழ்க்கையும்ஒரு வாழ்க்கையா? காற்றிலும் மழையிலும்,வெயிலிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரைதேடவேண்டியிருக்கிறது. பசியின் கொடுமையைச்சகிக்க முடியாததாய் இருக்கிறது.

வீட்டு நாய்:- தம்பி, உன்னுடையஊழ்வினைப் பயனை நீயே அனுபவித்துத் தீரவேண்டும். பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியத்தின்பலனாய் நமக்கு இப்போது இந்தப் பதவி கிடைத்தது.

ஓநாய்:- நாயாரே, நானும் உக்கிரசேனனுடைய நட்பை நாடி வரலாமா? சுகதுக்கங்களே ஸமரஸமாய் இருந்தால் மாத்திரமேஇவ்வுலக வாழ்வு சகிக்கத்தக்கது. என்னுடையகஷ்டகாலத்திற்கும் ஓர் வரை வேண்டும்.

வீட்டு நாய்:- நல்லதப்பா, என் கூட வா.

இருவரும் சம்பாஷித்துக் கொண்டே வழிநடந்தார்கள். திடீரென்று ஓநாய்க்கு ஒரு சமுசயம் தோன்றிற்று. பகதூரின் கழுத்தைச் சுற்றி அகலமானதழும்பு இருந்தது. ஓநாய் அதைப் பார்த்தவுடன் ஒருகேள்வி கேட்டது.

ஓநாய்:- பகதூர், உமது கழுத்தில் அவ்வளவு பெரிய தடம் படக் காரணமென்ன?

பகதூர் (வீட்டு நாய்):- ஓ, அது ஒன்றுமில்லை எனக்குக் கழுத்தில் தங்கப்பட்டைபோட்டிருந்தது. அதன் தடம் தெரியலாம்.

ஓநாய்:- அந்தப் பொன் பதக்கம் எங்கே?நீர் ஏன் அதைப் போட்டுக்கொண்டு வரவில்லை?

பகதூர்:- என்னை வெள்ளிச் சங்கிலியால்கட்டும் பொழுதுதான் அதை என் கழுத்தில் போடுவார்கள்.

ஓநாய்:- உம்மை ஏன் கட்டவேண்டும்,யார் கட்டுகிறார்கள்?

பகதூர்:- என்னுடைய எஜமானன் என்னைக் கட்டுவார். அவரைப் பார்க்க வரும் மனிதர்கள் என்னைக் கண்டு அஞ்சாதிருக்கும்படி என்னைக் கட்டிவைப்பார்.

ஓநாய்:- தூ! பிரஷ்டப் பயலே! என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா? நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப் பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன். எனக்கு எஜமானனும் இல்லை, சங்கிலியும் இல்லை. கஷ்ட வாழ்வாய் இருப்பினும் நான் சர்வ சுதந்திரன். யதேச்சையாய் எங்கும் செல்வேன், எதையும் தின்பேன், எதையும் சொல்வேன், எவரோடும் சேர்வேன். பராதீனம் பிராண சங்கடம்; ஒருவருடைய ஆக்கினைப்படி வரவோ போகவோ, உண்ணவோ உறங்கவோ, மலம் ஜலம் கழிக்கவோ ஸம்மதித்து இருப்பவன் மகா நீசனாய் இருக்கவேண்டும்.

இவ் வார்த்தைகளைக் கேட்ட பகதூர் வெட்கமடைந்து திரும்பிப் பாராமல் ஓடிப்போய்விட்டது.

Thursday, August 30, 2012

தேவ விகடம்

நாரதர் கைலாசத்துக்கு வந்தார். நந்திகேசுரர் அவரை நோக்கி, "நாரதரே, இப்போது ஸ்வாமி தரிசனத்துக்கு சமயமில்லை. அந்தப்புரத்தில் ஸ்வாமியும் தேவியும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு ஜாமம் சென்ற பிறகு தான் பார்க்க முடியும். அதுவரை இங்கு உட்கார்ந்திரும், ஏதேனும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கலாம்" என்றார். அப்படியே நாரதர் வலப்பக்கம் உட்கார்ந்தார். அங்கே பிள்ளையாரும் வந்து சேர்ந்தார். பக்கத்தில் நின்ற பூதமொன்றை நோக்கி நந்திகேசுரர் "முப்பது வண்டி கொழுக்கட்டையும், முந்நூறு குடத்தில் பாயசமும் ஒரு வண்டி நிறைய வெற்றிலை பாக்கும் கொண்டுவா" என்று கட்டளையிட்டார்.

இமைத்த கண் மூடுமுன்பாக மேற்படி பூதம் பக்ஷணாதிகளைக் கொண்டு வைத்தது. பிள்ளையார் கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டார். நாரதரோ ஒரு கொழுக்கட்டை யெடுத்துத் தின்று அரைக்கிண்ணம் ஜலத்தைக் குடித்தார். நந்திகேசுரர் பக்கத்தில் வைத்துக்கொண்டிருந்த இரண்டு மூட்டை பருத்திக் கொட்டையையும், இரண்டு கொள்ளு மூட்டைகளையும், அப்படியே இரண்டு மூட்டை உளுந்தையும், இரண்டு மூன்று கட்டுப் புல்லையும் ஒரு திரணம்போலே விழுங்கிவிட்டுக் கொஞ்சம் தீர்த்தம் சாப்பிட்டார்.

பிறகு வார்த்தை சொல்லத் தொடங்கினார்கள்.

பிள்ளையார் கேட்டார்: நாரதரே, சமீபத்தில் ஏதேனும் கோள் இழுத்து விட்டீரா? எங்கேனும் கலகம் விளைவித்தீரா?

நாரதர் சொல்லுகிறார்: கிடையாது ஸ்வாமி. நான் அந்தத் தொழிலையே விட்டுவிடப் போகிறேன். இப்போதெல்லாம் தேவாசுரர்களுக்குள்ளே சண்டை மூட்டும் தொழிலை ஏறக்குறைய நிறுத்தியாய் விட்டது. மனுஷ்யர்களுக்குள்ளே தான் நடத்தி வருகிறேன்.

பிள்ளையார்: சமீபத்தில் நடந்ததைச் சொல்லும்.

நாரதர் சொல்லுகிறார்: விழுப்புரத்திலே ஒரு செட்டியார், அவன் பெரிய லோபி; தஞ்சாவூரிலே ஒரு சாஸ்திரி, அவன் பெரிய கர்வி. செட்டிக்குச் செலவு மிகுதிப்பட்டுப் பார்ப்பானுக்குக் கர்வம் குறையும்படி செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று. ஆறு மாதத்துக்கு முன்பு இந்த யோசனை யெடுத்தேன். நேற்றுதான் முடிவு பெற்றது. முதலாவது, பார்ப்பான் விழுப்புரத்துக்கு வரும்படி செய்தேன்.

பிள்ளையார்: எப்படி?

நாரதர்: செட்டியின் சொப்பனத்திலே போய்த் தஞ்சாவூரில் இன்ன தெருவில் இன்ன பெயருள்ள சாஸ்திரியிருக்கிறார். அவரைக் கூப்பிட்டால், உனக்குப் பலவிதமான தோஷ சாந்திகள் செய்வித்து ஆண் பிள்ளை பிறக்கும்படி செய்வார் என்று சொன்னேன். அப்படியே செட்டியினிடம் போனால் உனக்குப் பணமும் கீர்த்தியும் மிகுதிப்பட வழியுண்டென்று பார்ப்பானுடைய கனவிலே போய்ச் சொன்னேன். செட்டி காயிதம் போடு முன்பாகவே பார்ப்பான் விழுப்புரத்தில் செட்டி வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

செட்டி குழந்தை பிறக்கும்படி ஹோமம் பண்ணத்தொடங்கினான். பார்ப்பான் காசை அதிகமாகக் கேட்டான். பாதியிலே செட்டி ஹோமத்தை நிறுத்திவிட்டுப் பார்ப்பானை வீட்டுக்குப் போகும்படி சொல்லிவிட்டான். பிறகு பக்கத்துத் தெருவில் ஒரு வீட்டில் ஒரு வருஷ காலமிருந்து பகவத்கீதை பிரசங்கம் செய்யும்படி சாஸ்திரியை அந்த வீட்டுப் பிரபு வேண்டிக் கொண்டான்.

மேற்படி பிரபுவுக்கும் அந்தச் செட்டிக்கும் ஏற்கெனவே மனஸ்தாபம். செட்டி தனக்கு முப்பதினாயிரம் பொன் கொடுக்க வேண்டுமென்று அந்தப் பிரபு நியாயஸ்தலத்தில் வழக்குப் போட்டிருந்தான். செட்டி அந்தப் பணத்தைத் தான் கொடுத்து விட்டதாகவும், நம்பிக்கையினால் கையெழுத்து வாங்கத் தவறினதாகவும், வேறு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை என்றும் சொன்னான். நியாயஸ்தலத்தில் செட்டி வாதத்திற்குத் தக்க ஆதாரமில்லை என்றும், பிரபுவுக்குப் பணம் சிலவுட்பட கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயிற்று.

செட்டியினிடமிருந்த (கழனித் தொழில்) அடிமையொருவன் கள்ளுக்குக் காசு வாங்குவதற்காக இவனிடம் வந்து, செட்டியாருக்கு யாரோ ஒரு அய்யர் சூனியம் வைக்கிறாரென்று மாரியம்மன் ஆவேசம் வந்தபோது தன்னுடைய பெண்டாட்டி சொன்னதாகச் சொல்லி விட்டான். செட்டி தன்னுடைய எதிரி வீட்டிலே போய் இருந்து தஞ்சாவூர்ப் பார்ப்பானே சூனியம் வைக்கிறானென்றும், அதனாலேதான் எதிரிக்கு வழக்கு ஜயமாகித் தனக்குத் தோற்றுப்போய் விட்டதென்றும் உறுதியாக நினைத்துக் கொண்டான். ஒரு மனுஷ்யனை அனுப்பித் தன் எதிரியின் வீட்டிலே எதிரியும் சாஸ்திரியும் என்ன பேசிக்கொள்ளுகிறார்களென்பதைத் தெரிந்து கொண்டு வரும்படி ஏற்பாடு செய்தான். அந்த ஆளுக்கு மூன்று பொன் கொடுத்தான். இந்த வேவுகாரன் போய்க் கேட்கையிலே அந்த சாஸ்திரியும் வீட்டுக்காரப் பிரபுவும் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"பிரமந்தான் சத்தியம்
மற்றதெல்லாம் சூன்யம்"

என்று சாஸ்திரி சொன்னான்.

இதைக் கேட்டு வேவுகாரன் செட்டியினிடம் வந்து எதிரிபக்கத்துக்குச் சூனியம் வைக்க வேண்டுமென்று பேசிக் கொள்ளுகிறார்கள் என்று கதை சொன்னான். செட்டி "பிரமாணம் பண்ணுவாயா?" என்று கேட்டான். "நிச்சயமாகப் பிரமாணம் பண்ணுவேன். சாஸ்திரி வாயினால் சூனியம் என்று சொன்னதை என்னுடைய காதினால் கேட்டேன். நான் சொல்வது பொய்யானால் என் பெண்டாட்டி வாங்கியிருக்கும் கடன்களையெல்லாம் மோட்டுத் தெருப் பிள்ளையார் கொடுக்கக்கடவது" என்று வேவுகாரன் சொன்னான்; இப்படி நாரதர் சொல்லி வருகையிலே, பிள்ளையார் புன்சிரிப்புடன் "அடா! துஷ்டப் பயலே! அவன் பெண்டாட்டியினுடைய கடன்களையெல்லாம் நானா தீர்க்க வேண்டும்! இருக்கட்டும். அவனுக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

அப்பால் நாரதர் சொல்லுகிறார்; மேற்படி வேவுகாரன் வார்த்தையைக் கொண்டு செட்டி தன் எதிரியையும் எதிரிக்குத் துணையான தஞ்சாவூர் சாஸ்திரியையும் பெரிய நஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் இடமாக்கிவிட வேண்டுமென்று துணிவு செய்து கொண்டான். ஒரு கள்ளனைக் கூப்பிட்டுத் தன் எதிரி வீட்டில் போய்க் கொள்ளையிடும்படிக்கும் சாஸ்திரியின் குடுமியை நறுக்கிக் கொண்டு வரும்படிக்கும் சொல்லிக் கைக்கூலியாக நூறுபொன் கொடுத்தான். இதுவரை செட்டியின் அழுக்குத் துணியையும், முகவளைவையும் கண்டு செட்டி ஏழையென்று நினைத்திருந்த கள்ளன் செட்டி நூறு பொன்னைக் கொடுத்ததிலிருந்து இவனிடத்திலே பொற்குவையிருக்கிறதென்று தெரிந்துகொண்டான். மறுநாள் இரவிலே நான்கு திருடரை அனுப்பிச் செட்டி வீட்டிலிருந்த பொன்னையெல்லாம் கொள்ளைகொண்டு போய்விட்டான்.

செட்டியினிடம் கொண்ட பொருளுக்குக் கைம்மாறாக அவனிடம் ஏதேனும் கொடுக்க வேண்டுமென்று நினைத்துச் செட்டியின் கட்டளைப்படியே சாஸ்திரியின் குடுமியை நறுக்கிச் செட்டியிடம் கொண்டு கொடுத்தான்.பொன் களவு போன பெட்டியிலே இந்தக் குடுமியை வாங்கிச் செட்டி பூட்டி வைத்துக் கொண்டான்.

பார்ப்பான் கர்வமடங்கித் தஞ்சாவூருக்குப் போய் சேர்ந்தான். நேற்று மாலையிலே தான் தஞ்சாவூரில் தன் வீட்டிலே போய் உட்கார்ந்து, "தெய்வமே, நான் யாருக்கும் ஒரு தீங்கு நினைத்ததில்லையே! அப்படியிருந்தும் எனக்கு இந்த அவமானம் வரலாமா?" என்று நினைத்து அழுது கொண்டிருந்தான். அப்போது நான் ஒரு பிச்சைக்காரன் வேஷத்துடன் வீதியிலே பின்வரும் பாட்டைப் பாடிக்கொண்டு போனேன்.

"கடலைப் போலே கற்றோ மென்றே
கருவங் கொண்டாயே
கல்லா ரென்றே நல்லார்
தம்மைக் கடுமை செய்தாயே"

இவ்வாறு நாரதர் சொல்லியபோது நந்திகேசுரர் "இந்தக் கதை நடந்ததா? கற்பனையா?" என்று கேட்டார். நாரதர் "கற்பனைதான்; சந்தேகமென்ன?" என்றார். பிள்ளையார் கோபத்துடன் "ஏன் காணும்! நிஜம் போல் சொல்லிக் கொண்டிருந்தீரே! உண்மை யென்றல்லவோ நான் இதுவரை செவி கொடுத்துக் கேட்டேன். இதெல்லாம் என்ன, குறும்பா உமக்கு?" என்றார்.

"குறும்பில்லை. வேண்டுமென்றுதான் பொய்க் கதை சொன்னேன்" என்று நாரதர் சொன்னார்.

"ஏன்?" என்றார் பிள்ளையார்.

அதற்கு நாரதர் "நந்திகேசுரருக்குப் பொழுது போக்கும் பொருட்டாகக் கதை சொல்லச் சொன்னார்; சொன்னேன். தாங்கள் கேட்டதையும் அதோடு சேர்த்துக் கொண்டேன்' என்றார்.

"நான் கேட்டதை விளையாட்டாக்கி நீர் நந்திக்குத் திருப்தி பண்ணினீரா? என்ன நந்தி இது? எஜமான் பிள்ளை நானா நீயா?" என்று பிள்ளையார் கோபித்தார்.

அப்போது நந்திகேசுரர் முகத்தைச் சுளித்துக்கொண்டு, "பிள்ளையாரே, உனக்கு எவ்வளவு கொழுக்கட்டை கொடுத்தாலும் ஞாபகமிருப்பதில்லை. வாயில் காக்கும் வேலை எனக்கு; உனக்குப்போது போகாது போனால் வேலை செய்பவரை வந்து தொல்லைப்படுத்துகிறாயா? முருகக் கடவுள் இப்படி யெல்லாம் செய்வது கிடையாது. அவர் மேலேதான் அம்மைக்குப் பக்ஷம். நீர் இங்கிருந்து போம். இல்லாவிட்டால் அம்மையிடம் போய்ச் சொல்லுவேன்" என்றார்.

அப்போது நாரதர் சிரித்து, "தேவர்களுக்குள்ளே கலக முண்டாக்கும் தொழிலை நான் முழுதும் நிறுத்தி விடவில்லை" என்றார்.

பிள்ளையாரும், நந்திகேசுரரும் வெட்கமடைந்து நாரதருடைய தலையில் இலேசான வேடிக்கைக் குட்டு இரண்டு குட்டினார்கள்.

அப்போது நாரதர் சிரித்துக் கொண்டு சொல்லுகிறார்: நேற்றுக் காலையிலே பிருஹஸ்பதியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் இன்று என்னுடைய ஜன்ம நக்ஷத்திரத்திற்குள்ளே அவருடைய கிரகம் நுழையப் போகிற தென்றும், அதனால் இன்று என்னுடைய தலையில் நந்திகேசுரரும் பிள்ளையாரும் குட்டுவார்களென்றும் சோதிடத்திலே பார்த்துச் சொன்னார். உம்முடைய கிரகசாரங்களெல்லாம் நம்மிடத்திலே நடக்காதென்று சொன்னேன். பந்தயம் போட்டோம். நீங்கள் இருவரும் என்னைக் குட்டினால் நான் அவரிடத்தில் பதினாயிரம் பஞ்சாங்கம் விலைக்கு வாங்குவதாக ஒப்புக்கொண்டேன். நீங்கள் குட்டாவிட்டால் நமக்கு தேவலோகத்தில் ஆறு சங்கீதக் கச்சேரி இந்த மாதத்தில் ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தார். அவர் கக்ஷி வென்றது. பதினாயிரம் பஞ்சாங்கம் விலைக்கு வாங்க வேண்டும்.

அப்போது பிள்ளையார் இரக்கத்துடன் "பதினாயிரம் பஞ்சாங்கத்துக்கு விலை யென்ன?" என்று கேட்டார்.

நாரதர், "இருபதினாயிரம் பொன்னாகும்" என்றார். பிள்ளையார் உடனே ஒரு பூதத்தைக் கொண்டு நாரதரிடம் இருபதினாயிரம் பொன் கொடுத்துவிடச் சொன்னார். பூதம் அப்படியே அரண்மனைப் பணப் பெட்டியிலிருந்து இருபதினாயிரம் பொன் நாரதரிடம் கொடுத்துப் பிள்ளையார் தர்மச் செலவு என்று கணக்கெழுதி விட்டது. பிறகு பிள்ளையார் நாரதரை நோக்கி "இந்தப் பந்தயக் கதை மெய்யா? அல்லது, இதுவும், பொய்தானா?" என்று கேட்டார்.

"பொய்தான்; சந்தேகமென்ன?" என்று சொல்லிப் பணத்தைக் கீழே போட்டுவிட்டு நாரதர் ஓடியே போய் விட்டார்.

Wednesday, August 29, 2012

புதுமைகள்

2 மார்ச் 1921                                                             ரெளத்திரி மாசி 19

ஸோவியட் ருஷ்யாவில் பணம் தொலைந்தது!

லாரின் என்பவருடைய அறிக்கையின்மீது ஸோவியட் கவர்ன்மெண்டார் (ருஷியக் குடியரசு ராஜாங்கத்தார்) ஓர் தீர்மானம் பிறப்பித்திருக்கிறார்கள். அதன்படி அரசிறை யாட்சித் தலைவர் தகுந்த உத்யோகஸ்தர்களுடனே கலந்துகொண்டு இன்னும் ஒரு மாஸ காலத்துக்குள்ளே ஒரு ‘நகல்’ சட்டம் தயார் செய்து பிரதிநிதி ஸபையாருக்குத் தெரிவிக்க வேண்டும். அந்தச் சட்டத்தின் கருத்து யாதென்றால், தொழிலாளருக்கும், வேலையாட்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் உலவிலாகாவில் கொடுக்கப்பட்ட, முதல், இரண்டாந் தரத்து ஆஹாரச் சீட்டுகளுக்குத் தரப்படுவன உட்பட்ட எல்லா சாமான்களுக்கும் பணம் கொடுக்கும் முறையை ஒழித்துவிட வேண்டும் என்பது. ராஜாங்கத்துக்குரிய அல்லது நகர ஸபைகளுக்குரிய வீடுகளில் குடியிருக்கும் தொழிலாளர், வேலையாட்கள், அவர்களுடைய குடும்பத்தார்களிடமிருந்து பண வாடகை வாங்குவதை நிறுத்திவிடுவதும் அந்தச் சட்டத்தின் நோக்கம். இங்ஙனமே, தொழிலாளருக்கும் வேலையாட்களுக்கும் ஸங்க ஸ்தாபனங்களுக்கும் முடிய ௸ இலாகாவால் கொடுக்கப்படும் அடுப்புக்கரி வகைகளனைத்திற்கும் பணக் கிரயம் கொடுக்க வேண்டியதில்லை யென்றும், வாயு, மின்ஸாரம், டெலிபோன், நீர், சாக்கடை முதலியவற்றுக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை யென்றும் அச்சட்டம் நியமிக்கும்.

ராஜாங்கப் “பணத் தொலைத்தல்” கமிஷன்

இதனிடையே ருஷிய ராஜாங்கத்தார் ஒரு விசேஷ ஸமிதி யேற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஸமிதியில் ஒரு மாஸ காலத்திற்குள்ளே பணக்கிரயங்கள் என்ற ஏற்பாட்டையே அழித்துவிடுதற்குரிய விஸ்தாரமான திட்டமொன்று சமைத்துக் கொடுக்கும்படி உத்தரவு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றுள், பாங்க் கணக்கு, ஸோவியட் தொழிற் சாலைகளினிடையேயும் ஸோவியட் ஸங்கங்களினிடையேயும் பரஸ்பரம் செய்யப்படும் கொடுக்கல் வாங்கல் முதலியனவும் அடங்கும். இந்த ஏற்பாடுகளெல்லாம் விரைவாக அநுஷ்டானத்திற்கு வந்து விடுமென்று மேலே கூறிய ஸ்ரீமான் லாரின் என்பவரே அமெரிக்கப் பத்திரிகை யொன்றில் எழுதியிருக்கிறார். இதே காலத்தில் ஸ்ரீமான் லாரினால் சொல்லப்பட்ட மற்றொரு யோசனையும் நிறைவேற்றப்பட்டு மென்று தெரிகிறது. இந்த யோசனையை ஏற்கெனவே ராஜாங்கத்தார் அங்கீகாரம் புரிந்துவிட்டனர். அதாவது, ரயில் பாதை வழியாகப் போகும் ஸாமான்களுக்குத் தீர்வைப் பணம் வசூல் செய்யாமை, ஏறக்குறைய பெரும்பான்மை ரயில்வே யாத்திரைக் கட்டணங்கள் வாங்குவதை நிறுத்திவிடுதல் முதலியவற்றைக் குறித்தது.

ஆரம்பங்கள்

1918ம் வருஷத்தில் மாஸ்கோவில் நடைபெற்ற “ஸோஷலிஸ்ட்” ஸமாஜத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கும் ஆஹாரம் முதலியவற்றுக்கும் தொழிலாளருக்குக் கொடுக்கும் ஆஹாரம், துணி, வாஸஸ்தலம் முதலியவற்றுக்கும் பணம் வாங்கக் கூடாதென்ற யோசனை ஸ்ரீமான் லாரினாலே சொல்லப்பட்டது. அதை ஸமாஜத்தார் ஒரு மனதுடன் அங்கீகாரம் செய்து கொண்டனர். அவ்வருஷ ஏப்ரல் மாஸத்தில் குழந்தைகளுக்கெல்லாம் ருஷியாவில் இனாம் ஆஹாரம் போடுவதாக ராஜாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குழந்தைகளின் வயதளவு 14-ஆக வைத்திருந்து பின்பு 16-ஆக உயர்த்தப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, வேலையாட்களுக்கெல்லாம் இனாமாகத் துணி கொடுக்கப்பட்டது. அப்பால் சவர்க்காரம் எல்லாத் தொழிலாளருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. அப்பால் சாதாரணக் கடிதங்களுக்குத் தபாற் கிரயமாகப்பணம் செய்லுத்தும் வழக்கம் நிறுத்தப்பட்டது. அப்பால் வேளையாட்களின் கூலிக்கு பணம் கொடுப்பதனிடத்தில் ஸாமான் கொடுப்பதென்றேற்பட்டது. இப்போது மேற்கூறியவற்றை யெல்லாந்திரட்டி, ஒரேயடியாக ஸர்வ விஷயங்களிலும் பணமில்லாதபடி செய்துவிடத் தீர்மானித்திருக்கிறார்கள்.

உண்மையான புதுமை

மனுஷ்ய நாகரிகத்தின் ஆரம்பகாலந் தொட்டே பணப் பழக்கமிருந்து வருகிறது. இதனால் விளைந்த துன்பங்கள் எண்ணற்றன. அந்தப் பழக்கத்தை இப்போது மனித ஜாதியில் பத்திலொரு பங்கு ஜனத் தொகையை ஆளும் ராஜாங்கத்தார் திடீரென்று நிறுத்த உத்தேசித்திருக்கிறார்கள். இதனால் புதிய ஸெளகர்யங்களேற் படுவதுடனே, பணப் பழக்கத்தால் இயன்று வரும் பழைய ஸெளகர்யங்களுக்கு இடையூறில்லாமல் செய்து விடக் கூடுமானால், ருஷியாவை இவ்விஷயத்தில் உலகத்தார் பின்பற்ற முயல்வார்களென்பதில் ஸந்தேஹமில்லை.

ஸென்ட் நிஹல்ஸிங் சொல்வது

ஸ்ரீமான் ஸென்ட்-நிஹல்ஸிங் “பால் மால்” கெஜட்டின் தலையங்கப் பக்கத்தில் எழுதியிருக்கும் வ்யாஸ மொன்றில் நம் எதிர்கால வைஸ்ராயாகிய லார்டு ரீடிங்குக்குச் சில புத்தி வசனங்கள் சொல்லியிருக்கிறார். ப்ரிடிஷார் மீட்டு மீட்டும் வாக்குறுதிகள் செய்து அவற்றை உடைப்பதினின்றும் இந்தியாவில் அமைதி ஏற்படாதென்று ஸ்ரீமான் ஸிங் எச்சரிக்கிறார். இந்தியச் சட்டப் புஸ்தகத்திலுள்ள அடக்குமுறைச் சட்டங்களையும் உத்தரவுகளையும் அறவே ஒழித்து விடுவதாக லார்ட் ரீடிங் இந்தியாவில் இறங்கியவுடனே உறுதி மொழி கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீமான் ஸிங் விரும்புகிறார். அவ்வுறுதி மொழியை விரைவில் நிறைவேற்றவும் வேண்டுமென்கிறார். ரெளலட் சட்டத்தையும், இந்தியாவில் பேச்சு ஸ்வதந்த்ரத்தையும் பத்திரிகை ஸ்வதந்த்ரத்தையும் சுருக்கக்கூடிய மற்றச் சட்டங்களையும் அழிக்கும்படி சிபாரிசு செய்கிறார். இந்தியர்களின் ஸம்மதத்தின்மீது இந்தியாவை ஆளுவதாக ப்ரிடிஷார் ஒருபுறம் கதை சொல்லிக் கொண்டு மற்றொரு பக்கத்தில் அடக்கு முறைகளை நடத்திக் கொண்டிருந்தால், ப்ரிடிஷ் வாக்குறுதிகளை இந்தியர் நம்புதல் ஸாத்யப்படாமற் போகுமென்பதைக் குறிப்பிடுகிறார். இவ்விஷயம் ராய்ட்டர் தந்தி மூலமாக இந்தியாவுக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் ஸ்ரீமான் ஸிங் சொல்வதை இங்கிலாந்திலுள்ள சிலர் ஆதரிக்கக் கூடுமெனினும், இங்குள்ள அதிகாரிகள் அவர் விருப்பத்தைத் தாமும் ஆதரிக்கமாட்டார்கள்; லார்ட்-ரீடிங் ஆதரிக்க இடம் கொடுக்கவும் மாட்டார்களென்று தோன்றுகிறது. இங்குள்ள அதிகாரி வர்க்கத்தார் பாக்ய ஹீனராகிய (ப்ரான்ஸ் தேசத்து) பூர் போன் ராஜ குடும்பத்தாரைப் போலவே எதனையும் புதிதாகத் தெரிந்துகொள்வதுமில்லை. எதனையும் மறப்பதுமில்லை என்று “ஹிந்து” பத்திராதிபர் எடுத்துக் காட்டியிருப்பது மெய்யேயாம். இவர்களைச் சீர்திருத்து முன்பு இந்தியாவுக்கு ப்ரிடன் மேறென்ன சீர்திருத்தங் கொடுத்த போதிலும் இந்தியாவில் அமைதியேற்படாதென்பது திண்ணம். பரிபூர்ணஸ்வராஜ்யங் கொடுப்பதே இந்தியா, ப்ரிடன் இரண்டு தேசங்களுக்கும் ஹிதமான வழி; அதுதான் சரியான சீர்திருத்தம். மற்ற எவ்விதமான சீர்திருத்தங்களையும் இங்குள்ள அதிகாரிகள் குட்டிச்சுவராக்கிவிடுவார்கள்.

Tuesday, August 28, 2012

மஹாமகம்


24 பிப்ரவரி 1921                           ரெளத்திரி மாசி 13

இந்த்ரனை தேவதேவன் என்பர். மற்ற மனிதருக்கு வானவர் எப்படியோ, அப்படி வானவர்க்கவன் என்பது குறிப்பு. வடமொழியில் வால்மீகி, காளிதாஸர்களையும், தமிழில் கம்பனையும் புகழேந்தியையும், இங்கிலீஷில் ஷெல்லியையும், “கவிகளின் கவி” என்று சிறப்பித்துச் சொல்லுகிறார்கள். அதாவது மற்ற மனிதருக்குக் கவிகளால் எத்தனை புதிய சுவை கிடைக்கிறதோ அத்தனை புதிய சுவை கவிஞருக்கு அவ் வால்மீகி முதலியவர்களிடம் கிடைக்கிறதென்பது குறிப்பு.

அதுபோல கும்பகோணத்திலுள்ள அமிர்த வாவிகள் என்று சொல்லப்பட்ட பொற்றாமரைக் குளம், மஹாமகக் குளம். இவ்விரண்டும் புண்ய தீர்த்தங்களுக்குப் புண்ய தீர்த்தமென்று புராணம் சொல்லுகிறது. அதெப்படியெனில் முற்காலத்தில் ஒன்பது தீர்த்த தேவதைகளும் ஈசனிடத்தில் சென்று, “கடவுளே, உலகத்திலுள்ள பாவிகளெல்லாரும் எங்களிடம் வந்து மூழ்கித் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களுக்குக் கரைத்து விட்டுவிட்டுப் புண்யாத்மாக்களாகிச் செல்லுகின்றனர். நாங்கள் சம்பாதிக்கும் இந்தப் பாவங்களுக்கெல்லாம் விமோசனம் அருள் புரிய வேண்டும்” என்று ப்ரார்த்தனை செய்தனர். அவர்களிடம் கருணை பாலித்து எம்பெருமான், “புண்ய தீர்த்தங்களே! பாவங்களாலே தீண்டப்படாத அமிர்த வாவிகள் இரண்டு நான் கும்பகோணத்தில் சமைத்திருக்கிறேன். அவற்றில் சென்று ஸ்நானம் புரிந்தால் உங்களுடைய பாவங்கள் விலகிவிடும்” என்று கட்டளை புரிந்தார். 

பன்னிரண்டு வருஷங்களுக் கொருமுறை இங்கு கங்கை முதலிய தீர்த்த தேவதைகள் வந்து ஸ்நானம் புரியும் ஸமயமாகிய மஹாமக புண்ய காலம் நேற்று (பெப். 22) செவ்வாய்க்கிழமையன்று கும்பகோணத்தில் கொண்டாடப்பட்டது. லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் நேற்று அதில் ஸ்நானம் செய்திருப்பார்கள். 

ஆனால், இத்தனை பேர்களும் ஸ்ர்வ பாப ரஹிதர்களாய்ப் பரம சுத்தத் தன்மை யெய்தி விடுவார்களோ என்று சில மதப் பற்றில்லாதார் ஆக்ஷேபிக்கலாம். தீர்த்த ஸ்தலங்கள், புண்ய க்ஷேத்ரங்கள், எல்லா மதஸ்தர்களுக்கும் பொதுவாக அமைந்திருக்கின்றன. யூதர்கள் யெருஸலேமைப் புண்ய க்ஷேத்ரமென்கிறார்கள். கிருஸ்தவர்கள் யெருஸலேம், நஜரேத், ரோமாபுரி முதலிய பல பல புண்ய க்ஷேத்திரங்களைக் கொண்டாடுகிறார்கள். முஸ்லிம்கள் மக்கம், மதீனம், யெருஸலேம்  முதலிய கணக்கற்ற க்ஷேத்ரங்களைக் கொண்டாடுகிறார்கள் பெளத்தர் கயை முதலிய ஆயிரக் கணக்கான புண்ய க்ஷேத்ரங்களைப் போற்றி வருகிறார்கள். எனவே, அறியாமை காரணமாகவோ, மறதி காரணமாகவோ சில கிறிஸ்தவப் பாதிரிகள்  புண்ய க்ஷேத்ர யாத்திரை ஹிந்துக்களுக்கு மாத்திரம் விசேஷமாக ஏற்பட்ட வழக்கமென்று கருதுவார் போல், ஹிந்து மதத்தின் மீது இவ்விஷயத்தில் பழி கூறுவதை நாம் புறக்கணித்து, மதவாதிகளுக்குள்ளே இவ்வழக்கத்தை மறுத்துரைப்போர் யாருமிருக்க நியாயமில்லை யாதலால் மதப் பற்றில்லாதவர்களே மேற்கூறிய கேள்வி கேட்டார்களென்று குறிப்பிட்டோம்.
ஆனால், மதப் பற்றுடையார், அஃதற்றோர் என்னும் இரு திறத்தாரும் உணர்ந்து கொள்ளும்படி, இதுபோன்ற தீர்த்த யாத்திரைகளின் தத்துத்தை இங்கு விளக்குவோம். இவற்றில் பாவமழிந்து புண்யத் தன்மை பெற வேண்டுமானால், உண்மையான நம்பிக்கை யிருக்க வேண்டுமென்று நம்முடைய புராதன ஹிந்து சாஸ்த்ரங்கள் மிகத் தெளிவாக வற்புறுத்தி யிருக்கின்றன. உண்மையான மனக்கோளின்றி கங்கையில் முழுகினாலும், மஹாமகத்தில் மூழ்கினாலும் பாப கர்மந் தொலையாதென்று சாஸ்த்ரங்கள் தெளிவுபடத் தெரிவிக்கின்றன. இனிமேல் நாம் பாவம் பண்ணுவதில்லையென்ற மனோ நிச்சயம் வேண்டும். 

தீர்த்த யாத்திரையின் அர்த்தமும் பயனும்

இந்தத் தீர்மானந்தான் பரிசுத்தத் தன்மை கொடுக்கிறது. ஒருவன் இந்த க்ஷண முதல் பாவம் செய்வதில்லையென்று மனவுறுதி செய்து கொள்ளுதலாகிய அக்நி மயமான செய்கையாலேயே அவன் அதுவரை செய்த பாவமெல்லாம் எரித்துவிடப்படுகிறது. “ஞானாக்நிஸ் ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதேர்ஜுன” என்று பகவத் கீதையில் கடவுள் சொல்லியிருக்கிறார். பாவத்தை இனிச் செய்யவில்லையென்ற தீர்மானம் உண்மையாக இருக்க வேண்டும். ஞானமே அவ்வளவுதான். அதைக் காட்டிலும் பெரிய ஞானமே கிடையாது. சிலர் தவத்தால் ஞானமெய்த நாடுகிறார்கள். சிலர் தானத்தால், சிலர் ஆராய்ச்சியால், சிலர் தியானத்தால், சிலர் பூஜையால் ஞானமெய்த முயலுகிறார்கள். ஆனால் எல்லா வழிகளும் உண்மையான வழிகளே. இவையெல்லாம் ஞானத்தைத் தரும். ஆனால் எந்த வழியாலே தரும்? பாவத்தைத் தீர்த்து விடுதலாகிய வழியிலே தரும். அவற்றால் பாவம் நீங்கும். அதனால் மோக்ஷம் அல்லது அறிவு மயக்கம் தெளியும். அதிலிருந்து ஞானமுண்டாகும். ஞானமாவது எல்லாம் கடவுள் மயமென்ற அனுபவம். பாவமாவது தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவித்தல். இங்ஙனமே, புண்யமாவது தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பக் கலப்பில்லாத சுத்தமான இன்பம் விளைவித்ததற்குரிய செய்கையென்பது சாஸ்த்ர கோடிகளின் பரம ஸித்தாந்தம். எல்லாம் ஆத்மா – எல்லாம் கடவுள் ஆதலால், எல்லாம் தான் என்ற ஞானத்தால் பிற உயிருகளுக்குத் துன்பம் விளைவிக்கும் குணம் நீங்கிவிடும். அதாவது பாவம் போய்விடும். நியாயம் புண்யம்; அநியாயம் பாவம். ஹிதம் புண்யம்; அஹிதம் பாவம். ஸ்த்யம் புண்யம்; அஸத்யம் பாவம். திருப்தி புண்யம்; துக்கம் பாவம். 

மரணமாவது பாவத்தின் கூலியென்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது. 

“இங்ஙனம் பாவத்தை துறந்துவிட விரும்புவோனுக்கு மனோ நிச்சயமும், ஞான உதயமும் கதியாயின், பணச் செலவு செய்து ரயிலேறிக் கும்பகோணத்துக்கும், காசிக்கும், ராமேசுவரத்திற்கும் ஏன் போகவேண்டும்?” என்று சிலர் வினவக்கூடும்.

மன மாறுதல்கள் சாசுவதமான இடத்தே விரதங்கள் என்று கூறப்படும். பெரிய சாசுவதமான ஸங்கல்பங்கள் விரதங்களெனப்படும். இந்த விரதங்கள் மனிதருடைய நினைப்பில் நன்றாக அழுந்தும் பொருட்டு ஆன்றோர் உலகமெங்கணும் இவற்றுக்குச் சில சடங்குகள் வகுத்திருக்கிறார்கள். கல்வி தொடங்கப் போகிறபோது ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. விவாகம் பண்ணும்போது மிகவும் கோலாகலமான கிரியைகள் நடக்கின்றன. புதிய வீட்டில் குடி புகும்போது ஒரு சடங்கு நடத்துகிறோம். இவற்றின் நோக்கம், நாம் ஏதேனும் அமங்களத்தை நீக்கி மங்களத்தை சாசுவத உடைமையாகச் செய்து கொள்ள வேண்டுமென்பதேயாம். நான் மேலே கூறியபடி, மரணம் பாவத்தின் கூலி என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுவதைக் கருதுமிடத்தே, அமங்களமனைத்திலும் அமங்களமானது பாவமென்று விளங்குகிறது. எனவே, மங்களங்களிற் சிறந்தது புண்யமென்பதும் வெளிப்படையாம். 

இப்படிப்பட்ட பாவத்தைக் களைந்து புண்யத்தைப் போர்த்துக்கொள்வதாகிய ராஜ விரதத்துக்கு ஒரு சடங்கு வேண்டாவோ? அவ்விதச் சடங்கே மஹாமக முதலிய புண்ய தீர்த்த யாத்திரை யென்க.

Monday, August 27, 2012

ஒரு கோடி ரூபாய்


11 ஆகஸ்டு 1921                          துன்மதி ஆடி 27

ஸெப்டம்பர் மாஸத்துக்குள் ஸ்ராஜ்யம் கிடைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் இன்றியமையாத தென்றும், அது கொடுக்காவிட்டால் இந்தியா தேசத்து ஜனங்கள் ஸ்வராஜ்யத்தில் விருப்பமில்லாத தேசத் துரோகிகளே யாவார்களென்றும் ஸ்ரீமான் காந்தி முதலியவர்கள் சொல்லிக்கொண்டு வந்தனர். 

ஜனங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்து விட்டார்கள் அந்தத் தொகை எங்ஙனம் செலவிடப்படுகிறது? எப்போது செலவு தொடங்கப் போகிறார்கள்? ஒரு மாஸத்திலா, இரண்டு மாஸங்களிலோ, அன்றி இன்னும் ஒரு வருஷத்துக்குள்ளேயோ, ஸ்வராஜ்யம் கிடைக்க வேண்டுமாயின், அந்தத் தொகை ஏற்கெனவே செலவு தொடங்கியிருக்க வேண்டுமன்றோ?
“ஒரு கோடி ரூபாய் கிடைத்தால்தான் ஸ்வராஜ்யம் வரும்” என்று சொல்லப்பட்ட வார்த்தைக்கு ஒரு பொருள் தான் உண்டு. அதாவது, அந்தப் பணம் ப்ரசாரத் தொழிலிலே செலவிடப்படவேண்டும். நாமோ பலாத்கார முறையை அனுஸரிக்கவில்லை. எனவே, அந்தக் கோடி ரூபாயை ஸைந்யச் செலவுக்கு உபயோகப்படுத்துவதென்ற ஆலோசனைக்கு இடமில்லை. எனவே, ப்ரசாரத் தொழில் ஒன்றுதான் கதி. மேற்படி தொகையில் ஒரு பகுதிக்கு ராட்டினங்கள் வாங்கி ஜனங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று கருதினால் அங்ஙனம் தாராளமாகச் செய்யலாம். வேறு எத்தனை வகைகளில் செலவு செய்ய விரும்பினாலும் செய்யலாம். ஆனால் அத்தனைக்கும் ஆதாரமான மூலவழி ப்ரசாரந்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஏற்கெனவே, ப்ரசாரத்தில் இத்தொகையை எங்ஙனம் செலவு செய்யலாமென்பதைக் குறித்துச் சில வழிகள் இப்பத்திரிகையிலே குறிப்பிட்டிருக்கிறேன். ஜில்லாவுக்கு 4 பேருக்குக் குறையாமல் மஹா நிபுணராக ஸ்வதேசீய ப்ரசாரகர் ஏற்பட வேண்டும். 

ஆனால், ப்ரசாரத் தொழில் இதுவரை தொடக்கமுறாமல் இருப்பதன் காரணம் யாதென்பது துலங்கவில்லை. 

இந்த விஷயத்தைக் குறித்துச் சென்னை மாகாணத்தில் வசூல் தொழிலை முக்கியஸ்தராக இருந்து நடத்திய என் நண்பர் சேலம் ஸ்ரீ ராஜகோபாலாசார்யரும் பிறரும் ஸ்ரீமான் மஹாத்மா காந்திக் கெழுதி வேண்டியன செய்வார்களென்று நம்புகிறேன்.

மற்றப்டியுள்ள காங்க்ரஸ் ஸங்கங்களில் அங்கத்தினராலும் அனுதாபிகளாலும் மிகவும் சிரமப்பட்டு வசூல்செய்யப்பட்ட மேற்படி தொகை வீணாய்விடாதபடி கவனிக்க வேண்டும். உலக சரித்திரத்தில் இந்த சந்தர்ப்பம்  மிக முக்கியமானது. இதில் உலக முழுமையிலும் பல அற்புதமான மாறுதல்கள் தோன்றி வருவது மாத்திரமேயன்றி, உலகத்திலுள்ள தேசங்களுக்கெல்லாம் விடுதலை பொதுவாகி விடுமென்றும் புலப்படுகிறது. இத்தருணத்தில் விரைவிலே இந்தியா எங்ஙனமேனும் தன் ஸ்வதந்த்ரத்தை உறுதி செய்து கொள்ளுதல் அதன் கடமையாம். இதுவே, நமது தேசத்தில் பொதுஜனங்களின் மனதில் எப்போதும் விடாமற் பற்றியிருக்கும் பேராவலாகிவிட்டது. அது பற்றியே, மஹாத்மா காந்தி கேட்டபோது, ஜனங்கள் சிறிதேனும் லோபத்தன்மையின்றித் தங்கள் அளவிறந்த வறுமையையும் பாராட்டாமல், பணத்தை யதேஷ்டமாகவும் விரைவாகவும் கொடுத்துத் தங்கள்மீது பழிச் சொல்லுக்குச் சிறிதேனும் இடமின்றிச் செய்து கொண்டார்கள்.

ஒப்பந்தத்தில் ஒரு பாதி நிறைவேறிப் போய்விட்டது. அதாவது ஜனங்கள் பக்கத்திலே விதிக்கப்பட்ட கடமை நிறைவேறிவிட்டது. இனித் தலைவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டியதைத் தவிர வேறொன்றும் இல்லை. 

நாம் இங்ஙனம் எழுதிக்கொண்டு வருகையிலே, ஸ்ரீமான் ராஜகோபாலாசார்யர் ஒரு கணக்கு ப்ரசுரம் செய்திருக்கிறார். அதில் சென்னை மாகாணத்து வசூல் எவ்வளவென்பதையும் அதில் செலவம்சங்கள் எவையென்பதையும் விவரித்துக் கணக்குகள் தெரிவிக்கிறார். அதில் மிகவும் சொற்பமான தொகையொன்று சுமார் (50,000 ரூபாயென்று நினைக்கிறேன்) ப்ரசாரச் செலவுக்காகப் போடப்பட்டிருக்கிறது. இந்த ரூபாய் போதாதென்பது என்னுடைய அபிப்ராயம். ப்ரசார விஷயத்தில் இந்தியா முழுதையும் ஒன்றாகப் பாராட்ட வேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே திட்டம். ஒரே முறைமை, ஒரே ப்ரசார ஸங்கம் தலைமையாக இருந்து இந்த ஸ்வராஜ்ய ப்ரசாரத்தை நடத்தில் வராவிட்டால் நமக்கு எண்ணிறந்த ஸங்கடங்கள் விளையும். “கர்மம் உனக்குரியது; நீ பயனைக் கருதுதல் வேண்டா” என்று கண்ணபெருமான் பகவத் கீதையில் சொல்லியிருப்பதற்கு இக்காலத்தில் பலர் பொருளுணர்ந்து கொள்ள மாட்டாதவர்களாக இருக்கின்றனர். 

பயனே மனிதருக்குக் கிடைக்காத நிலைமையில் தொழில் புரிய வேண்டுமென்பது கீதையில் சொல்லப்பட்டதாகச் சிலர் நினைக்கிறார்கள். அந்த அர்த்தத்தில் பகவான் அந்த வசனத்தை வழங்கவில்லை என்பது கீதை முற்றிலும் வாசித்துப் பார்த்தவர்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும்.

தொழில் புரிந்துவிட்டு வெற்றி அகப்படுமோ அகப்படாதோ என்று எவரும் மனம் புழுங்குதல் வேண்டா. பயனுடைய தொழிலென்று புத்தியாலே நிச்சயிக்கப்பட்ட தொழிலை, ஒருவேளை அது பயன் தராதோ என்ற பேதை ஸம்சயத்தால் நாம் நிறுத்தி வைத்தல் தகாது. தொழிலுக்குப் பயன் நிச்சயமாக உண்டு. கடவுள் பின்னொரு பகுதியிலே சொல்லுகிறார்:- “பார்த்தா, தொழிலுக்கு வெற்றி இந்த உலகத்தில் மிகவும் விரைவாகவே எய்தப்படும்” என்று. தவிரவும், “மகனே, நற்றொழில் புரிந்த எவனும் இவ்வுலகத்தில் தீ நெறி எய்துவதில்லை” என்று பின்னே கடவுள் மற்றோரிடத்தில் விளக்கியிருக்கிறார். 

எனவே, வெற்றியைக் கடவுளின் ஆணையாகக் கண்டு, பயனைப்பற்றி யோசனையே புரியாமல், நம்மவர் ஸ்வராஜ்யத்துக்குரிய தொழில்களை இடைவிடாமல் செய்துகொண்டு வரக் கடவர். அதனை உடனே தொடங்கவும் கடவர். அதில் திரிகரணங்களை மீட்சியின்றி வீழ்த்திவிடவும் கடவர்.

Sunday, August 26, 2012

என் ஈரோடு யாத்திரை

4 ஆகஸ்ட் 1921

ஈரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். அது கொங்கு நாடு. ஆனால், அதற்கும் தென்பாண்டி நாட்டிற்கும் யாதொரு வேற்றுமையும் தென்படவில்லை. ஸ்வதேசீய நிகழ்ச்சி தோன்றிய காலம் முதலாக தமிழகத்தின் உட்பகுதிகளுக்கிடையே உள்ள அகவேற்றுமைகள் குறைவுபட்ட காரணத்தாலே புற வேற்றுமைகளும் குறைவுபடுகின்றன.

இதற்குச் ‘சுதேசமித்திரன்’ முதலிய பத்திரிகைகள் பெரிதும் உதவி புரிந்தன என்பது நிச்சயம்.

கட்டை வண்டி ஒன்று கிடைத்தது. கட்டை வண்டியில் ஒரு மனிதன் நிமிர்ந்து உட்கார இடமில்லை. ஒன்றரை அடி நீளம். மாடு ஒரு சிறு பூனைக்குட்டி போன்று இருந்தது. நான் ஒன்று; வண்டிக்குடையவன் இரண்டு; அவனுக்குக் கீழே கூலிக்கு வண்டி ஓட்டும் சிறுவன் ஒருவன்; எங்கள் மூவரையும் மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப் பூனை இழுத்துக்கொண்டு போயிற்று.

அரை மைல் தூரத்தில் உள்ள கருங்கல் பாளையத்தில் எனக்கு வேலை. அங்கு ஒரு சிநேகிதருடைய அழைப்பிற்கிணங்கிச் சென்றிருந்தேன். கருங்கல் பாளையத்துக்குப் போய்ச் சேருமுன்னே மாடு வெயர்த்துப் போய்விட்டது. அதன் மேலே குற்றஞ் சொல்வதில் பயனில்லை. அது சிறு ஜந்து. அதன் மேலே நாங்கள் மூன்று தடி மனிதரும் ஒரு கழுத்தளவுக்குச் செய்யப்பட்ட விதானத்தை உடைய வண்டியும் சவாரி பண்ணுகிறோம்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்குள்ளே கருங்கல்பாளையம் என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்தக் கிராமத்தில் ஆண் மக்கள் எல்லோரும் மஹா யோக்கியர்கள், மஹா பக்திமான்கள்; புத்திக் கூர்மையிலும், சுறுசுறுப்பிலும், தேசாபிமானத்திலும் மிகவும் பாரட்டுதற்குரியவர்கள்.

இவர்களுடன் ஸல்லாபம் எனக்கு எல்லா வகைகளிலும் இன்ப மயமாக இருந்தது.

அங்கே ஒரு புஸ்தகசாலை இருக்கிறது. வாசக சாலை. அதன் காரியதரிசி ஒரு வக்கீல். மிக நல்ல மனிதர்; மஹா புத்திமான்; தேசபக்தியில் மிகவும் பாராட்டுதற்குரியவர்.

அந்த வாசகசாலை அவ்வூராரை நாகரிகப்படுத்துவதற்குப் பெரியதோர் சாதனமாக விளங்குகிறது. இங்ஙனம் அதனால் அவ்வூருக்குப் பலவித நன்மைகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை கனம் நரசிம்மையர் (சேலம் வக்கீல்), ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு, ஸ்ரீ கல்யாணசுந்தர முதலியார் முதலிய முக்கியஸ்தர்கள் தம் நற்சாக்ஷிப் பத்திரங்களாலே தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தச் சபையின் வருஷோத்ஸவக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயந்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம்.

ப்ரஹ்லாதனைப் போன்ற தெய்வ பக்தியும், மன்மதனைப் போன்ற ஏக பத்தினி விரதமும் ஒருவன் கைக்கொண்டிருப்பானாயின், அவன் இந்த உலகத்திலேயே ஜீவன் முக்தியடைந்து, எல்லா அம்சங்களிலும் தேவ பதவி எய்தியவனாய், எப்போதும் மகிழ்ச்சி கொண்டிருப்பான் என்பது என்னுடைய கொள்கை. இந்தக் கொள்கையை நான் வேதபுராண சாஸ்த்ரங்கள், இதர மத நூல்கள், ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்கள், ஸ்ரீமான் ஐகதீஸ்சந்திர வஸுவின் முடிபுகள் என்னும் ஆதாரங்களாலே ருஜுப்படுத்தினேன். அங்குள்ள பெரிய வித்வான்கள் எல்லோரும் கூடி என்னுடைய தர்க்கத்தில் யாதொரு பழுதுமில்லையென்று அங்கீலாரஞ் செய்துகொண்டார். பிறகு மறு நாள் என்னை ஈரோட்டுக்கு வந்து வாய்க்கால் கரையில் ஒரு பொதுக்கூட்டத்திலே, ‘இந்தியாவின் எதிர்கால நிலை’ என்ற விஷயத்தைக் குறித்துப் பேசும்படி கேட்டுக்கொண்டார்கள். நான் உடம்பட்டேன். மறுநாள் கூட்டத்தைப்பற்றிய விஷயங்களை விவரித்துக் கொண்டு போனால் இந்த வியாசம் மிகவும் நீண்டு போய்விடும். ஆதலால் இன்று இவ்வளவோடு நிறுத்தி மற்றை நாள் சம்பவங்களைப்பற்றி நாளை எழுதுகிறேன்.

Saturday, August 25, 2012

திலகர் முனிவர் கோன்


நாமகட்குப் பெருந்தொண் டியற்றிப்பல்
        நாட்டினோர்தம் கலையிலும் அவ்வவர்
தாமகத்து வியப்பப் பயின்றொரு
       காத்திரக்கட லென்ன விளங்குவோன்;
மாமகட்குப் பிறப்பிட மாகமுன்
       வாழ்ந்திந்நாளில் வறண்டயர் பாரதப்
பூமகட்கு மனந்துடித் தேயிவள்
      புன்மைபோக்குவல் என்ற விரதமே. 

நெஞ்சகத்தோர் கணத்திலும் நீங்கிலான்
      நீதமேயோர் உருவெனத் தோன்றினோன்;
வஞ்சகத்தைப் பகையெனக் கொண்டதை
     மாய்க்குமாறு மனதிற் கொதிக்கின்றோன்;
துஞ்சுமட்டுமிப் பாரத நாட்டிற்கே
     தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
    அன்பொடோதும் பெயருடை யாரியன் 

வீரமிக்க மராட்டியர் ஆரதம்
    மேவிப் பாரத தேவி திருநுதல்
ஆர வைத்த திலக மெனக்திகழ்
    ஐயன்நல்லிசைப் பாலகங் காதரன்
சேரலர்க்கு நினைக்கவுந் தீயென
    நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீரடிக்க லத்தினை வாழ்த்துவேன்
    சிந்தைதூய்மை பெறுகெனச் சிந்தித்தே.

Friday, August 24, 2012

சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ் நாடும்

30 நவம்பர் 1920                                                                 ரெளத்திரி கார்த்திகை 16

வடக்கே, ஸ்ரீ காசியினின்றும், தெற்கே தென்காசியினின்றும் இரண்டு தினங்களின் முன்னே, இரண்டு கடிதங்கள் என் கையில் சேர்ந்து கிடைத்தன. அவையிரண்டும் சிறந்த நண்பர்களால் எழுதப்பட்டன. அவற்றுள் ஒன்று “பஹிரங்கக் கடிதம்.” மற்றது ஸாதாரணக் கடிதம். ஆனால் இரண்டிலும் ஒரே விஷயந்தான் எழுதப்பட்டிருக்கிறது; ஒரே விதமான கேள்விதான் கேட்கப்பட்டிருக்கிறது. அதே கேள்வியைச் சென்னையிலுள்ள வேறு சில நண்பர்கள் என்னிடம் நேராகவும் கேட்டனர். இந்த நண்பர்களுக் கெல்லாம் இங்கு பொதுவாக மறு மொழி யெழுதிவிடுதல் பொருந்துமென்றும், அவர்களுக்கு இஃது திருப்தி தருமென்றும் நினைக்கிறேன். இவர்களெல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வியின் சுருக்கம் பின்வருமாறு:-

“ஒத்துழையாமை விஷயத்தில் உம்முடைய முடிவான கொள்கை யாது? சுதேசமித்திரன் பத்திரிகை ஒத்துழையாமையை பகிரங்கமாகவும் முடிவாகவும் எதிர்க்காவிடினும், அதில் உள்ளூர அபிமான மில்லாதது போல் காணப்படுகிறதே? அப்படியிருக்க, நெடுங்காலத்து தேசாபிமானியாகிய நீர் இந்த ஸமயத்தில் அப்பத்திரிகையில் வேலை செய்ய அமர்ந்தது நியாயமா?” என்று கேட்கிறார்கள்.

இவர்களுக்கு நான் தெரிவிக்கும் உத்தரம் பின் வருமாறு. தென் இந்தியாவில் தேசீயக் கக்ஷிக்கு மூலபலமாக சுதேசமித்திரன் பத்திரிகையொன்று தான், ஆரம்பமுதல் இன்றுவரை, ஒரே நெறியாக, நிலை தவறாமல் நின்று, வேலை செய்துகொண்டு வருகிறதென்ற செய்தியைத் தமிழ் நாட்டில் யாரும் அறியாதாரில்லை. ஸமீபத்தில் நடந்த கல்கத்தா விசேஷ காங்கிரஸ் தீர்மானங்களில் ஒன்றின் விஷயத்தில் மாத்திரம் ஸ்ரீமான் சுதேசமித்திரன் பத்திராதிபர், பெரும் பகுதியாரின் தீர்மானம் இப்போது கார்யத்தில் நிறைவேற்ற முடியாதென்று சொல்லும் ஸ்ரீயுத விபின சந்த்ரபாலர், சித்த ரஞ்ஜனதாஸர் முதலிய பழுத்த தேசாபிமானத் தலைவர்களின் கொள்கையை ஆமோதிக்கிறார். ஒத்துழையாமையைத் தவிர தேச விடுதலைக்குச் சரித்திர பூர்வாங்கமான வேறு வழிகள் இருக்கின்றன. இந்த ஒத்துழையாமை முறையையே மிகவும் உக்ரமாகவும், ‘தீர்வை மறுத்தல்’ முதலிய அதன் இறுதிப் படிகளை உடனே உட்படுத்தியும், அனுஷ்டித்தால், ஒருவேளை அன்ய ராஜாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்வதாகிய பயன் அதானல் விளையக்கூடும்.

எனினும் இப்போது காண்பிக்கப் பட்டிருப்பதாகிய படியின் முறைகளால் அந்தப் பயன் எய்துவது ஸாத்தியமில்லை. தேசாபிமானிகள் மாத்திரமே சட்ட ஸபை ஸ்தானங்களை பஹிஷ்காரம் செய்ய மற்ற வகுப்பினர் அந்த ஸ்தானங்களையெல்லாம் பிடித்துக் கொள்வதினின்றும் இந்தியாவில் ஆங்கில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்தல் அரிதென்று தோன்றுகிறது. இங்ஙனமே வக்கீல்கள் தம் உத்தியோகங்களையும், பிள்ளைகள் படிப்பையும் விடும்படி செய்தல் இப்போது நம்மால் முற்றிலும் ஸாதிக்க முடியாத விஷயமாகத் தோன்றுவதுடன், அதனால் குறிப்பிட்ட பயனெய்திவிடுமென்று தீர்மானிக்கவும் இடமில்லை.

என்னுடைய சொந்த அபிப்பிராயப்படி, ஸ்வதேசியக் கொள்கைகளை மேன்மேலும் ` தெளிவாகவும், உறுதியாகவும், ஜனங்களுக்குள்ளே ப்ரசாரம் புரிவதும், ராஜரீகச் சதுரங்க விளையாட்டில், ஸமாதானமாகவே, எதிரி கலங்கும்படியானதோர் ஆட்டமாடி, ஸரியான ஸமயத்தில் ஸ்வராஜ்யத்தைக் கட்டியெடுத்துக் கொள்ள முயற்சி புரிவதுமே-சரித்திர ஸம்மதமான உபாயங்களாகும். இந்த முறையில் ஜனங்கள் சட்டத்தை யுடைக்கவும், அதிகாரிகள் யந்திர பீரங்கிகளை வைத்துக்கொண்டு ஜனங்களைச் சூறையாடுவதும் நேருமென்ற ஸம்சயத்துக் கிடமில்லாமலே வேலை செய்ய முடியும். ஏனைய முறைகள் நாட்டைக் குழப்பத்திலே கொண்டு சேர்க்கவும் கூடும். ராஜ வீதி யிருக்கையிலே சந்து, பொந்துகளின் ழியாக ஏன் செல்ல வேண்டும்? குழப்பம் சிறிதேனும் நேராதபடிக்கே, நமக்கு ஸ்வராஜ்யம் கிடைக்கும்படி காலதேச வர்த்தமானங்களும், தெய்வ சக்தியும் நமக்கனுகூலமாக இருப்பது வெளிப்படையாகவும் நிச்சயமாகவும் தெரியும் போது, பல இந்தியருக்குப் பிராணச் சேதமும் மற்றப் பெருஞ் சேதங்களும் விளைக்கக் கூடிய குழப்ப வழியில் நாமேன் போக வேண்டும்? ஸ்ரீமான் காந்தியின் கூட்டத்தாரும் உண்மையாகவே தேச நலத்தை விரும்புகிறார்களாதலால், சுதேசமித்திரன் பத்திரிகை அவர்களை எவ்வகையிலும் புண்படுத்த மனமில்லாமல், ஸ்வ ஜனங்களென்ற அன்பு மிகுதியால் அவர்களை இயன்றவரை ஆதரித்துக் கொண்டும் வருகிறது. அபிப்ராய பேத முடையவர்களும் தேசாபிமானிகளாக இருப்பாராயின், அவர்களை நாம் மிக மதிப்புடன் நடத்த வேண்டுமென்ற நியாயத்துக்கு இத்தருணத்தில், சுதேசமித்திரன் பத்திரிகை ஓரிலக்கியமாகத் திகழ்ந்து வருகிறது. இங்ஙனம் பெருந்தன்மை பாராட்டும் பத்திரிகையைக் கூட மஹாத்மா காந்தியின் புது முறையை முற்றிலும் அனுஷ்டித்துத் தீர வேண்டுமென்ற கருத்துடைய என் நண்பர் சிலர் பொதுமையும், தீர்க்காலோசனையுமின்றிப் பல வழிகளிலே பழி கூறி வருவதைக் காணுமிடத்து எனக்கு மிகுந்த மன வருத்த முண்டாகிறது. தேச பக்தர்களுக்குள்ளே முடிவான கொள்கைகளைப் பற்றியன்று; வெறுமே தற்கால அனுஷ்டானங்களைப் பற்றி அபிப்பிராய பேதமுண்டாகும் போது, உடனே பரஸ்பரம் ஸம்சயப்படுதலும் பழி தூற்றுதலும் மிகக் கொடிய வழக்கங்களென்று நான் நிச்சயமாகவே கூற வல்லேன். இந்த நிலைமை என் மனதில், சில வைஷ்ணவர்களுக்குள்ளே வடகலை, தென்கலைச் சண்டைகள் நடப்பதையும், வீடு வெள்ளை பூசுதல் விஷயமான ஓரபிப்பிராய பேதத்தைக் கொண்டு தமக்குள்ளே சண்டை செய்து பிரியும் மதி கெட்ட ஸ்திரீ புருஷரின் நடையும் நினைப்புறுத்துகிறது.

இந்தக் குணத்தை நம்மவர் அறவே விட்டொழித்தாலன்றித் தற்காலம் இந்தியா இருக்கும் நிலையில், நாம் விடுதலைக்காகப் பொது முயற்சி செய்வதில் பல இடுக்கண்கள் விளையக் கூடும். எடுத்ததற்கெல்லாம் ஜாதிப்ரஷ்டம் செய்யத் தீர்மானிக்கும் குணத்தை நாம் ராஜாங்க விஷயங்களில் செலுத்தினால், பெருங் கேடுகள் வந்து குறுக்கிடும். “உன்வழி உனக்கு; என்வழி எனக்கு; இந்தியாவுக்கு உடனே ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற லக்ஷ்யத்தில் நீயும் நானும் ஒன்று பட்டிருக்கிறோம். எனவே நாம் பரஸ்பரம் இயன்ற வரையிலெல்லாம் உதவி செய்து கொள்ளக் கடவோம். உதவி புரிதல் இயலாத இடத்தே வெறுமே இருப்போம். ஆனால் எக்காரணம் பற்றியும், நம்முள் பகைக்க வேனும், பழி கூற வேனும், ஸம்சயப்பட வேனும், வேறெவ்வகையிலும் இடுக்கண் புரியவேனும் ஒரு போதும் மாட்டோம்” என்ற பரஸ்பர உணர்ச்சி தேசபக்தர்களுக்குள் எப்போதும் குன்றாதிருக்க வேண்டும்.

இவ்வித உணர்ச்சி நம்மவருள் பலப்பட்டு சுதேசமித்திரன் முதலிய மேன்மையார்ந்த கருவிகளைப் போற்றிக் கையாண்டு, நம்மவரெல்லாரும் கூடி முயன்று, பாரதமாதாவின் ராஜரீக விலங்குகளை நீக்கி, விடுதலை யேற்படுத்திக் கொடுக்கப்போகிற ஸுதினம்-நல்ல நாள் எப்போது வரப்போகிறதென்பதை ஒவ்வொரு நிமிஷமும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறேன்.

Thursday, August 23, 2012

உலக நிலை


19 ஜனவரி 1921                                           ரெளத்திரி தை 7

லார்ட் மில்நரைத் தள்ளியதன் முகாந்தர மென்ன?

குடியேற்ற மந்திரி ஸ்தானத்திலிருந்து லார்டு மில்நர் விலகிக் கொண்டதாகவும், அவர் எகிப்தின் விஷயத்தில் செய்த வேலையினால் அந்த விலகுதல் ஏற்படவில்லை யென்றும் ராய்ட்டர் இந்தியாவுக்கு மிக ஸங்கரஹமாக ஸாதித்திருக்கிறார். “என் பிதா மெத்தையில் ஒளிந்திருக்க வில்லை” யென்று, கதையில் ஸாக்ஷ்ய முரைத்த குழந்தையின் நல்லெண்ணத்தை எய்தியே ராய்ட்டர் இங்ஙனம் தந்தி கொடுத்திருக்கிறாரென்று வெளிப்படையாகவே தோன்றுகிறது. எகிப்துக்கு, ஆதியில், (ப்ரான்ஸ், அமெரிகா முதலிய தேச ராஜ்யங்களின் தூண்டுதலாலே) ஏறக்குறைய ஸ்வாதீனமே கொடுப்பதாக விளம்பரம் செய்துவிட்டார்கள். ஸுயேஸ் கால்வாயைத் தமக்கு வைத்துக் கொண்டார்கள். வேறு சில பூமிகளையும் பல உரிமைகளையும் கவர்ந்து கொண்டனர். இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு பரிபூர்ண ஸவாதீனம் கொடுப்பதாகவே வாக்குறுதி செய்து, பூமண்டலமறிய முழங்கி விட்டார்கள். இந்தியாவைப் போல் எகிப்து பண வரவுள்ள பூமியில்லை. மெஸபடோமியாவை விழுங்கியதற்கு இஃதொரு பரிஹாரம் போன்றதாய் முஸல்மான்களை நமக்கு வசப்படுத்தக் கூடும். ஸுயேஸ் கால்வாய்தான் எகிப்திலே ஸாராம்சம், அதை நாம் வைத்துக்கொண்டாய்விட்டது. மேலும் நமது படை எப்படியேனும் எகிப்திலிருக்குமாதலால், எகிப்து தேசத்து ராஜாங்கத்தாரை ஸ்வாதீனங் கொடுத்த பின்னரும், நமது கைப் பொம்மைகளாக நம் இஷ்டப்படி ஆட்டிவரலாம். இப்போதைக்கு ப்ரான்ஸ், அமெரிகா முதலிய நேச கோடிகளின் வயிற்றெரிச்சலுக்கு இஃதோர் ஆறுதல் போலாகக்கூடும். தவிரவும், அந்த தேசம் விடுதலைக்காக எப்பாடும் படக்கூடிய நிலைமையிருக்கிறது. என , இங்ஙனம் பல காரணங்களை உத்தேசித்து ஆங்கில மந்திரிகள் ஆரம்பத்தில் எகிப்துக்கு ஸ்வாதீனங் கொடுப்பதாகிய இதிஹாஸத்தை ப்ரசுரப் படுத்தினார்கள். பின்னிட்டு, “நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கிறது” என்ன செய்யலாம்? லாய்ட் ஜ்யார்ஜ் உபதேசம் பண்ணுகிறார். கடவுள் தீர்ப்புப் பண்ணுகிறார். 

எதிர்பாராத விளைவுகள்

ஆங்கில மந்திரிகள் தினை விளைத்தோ மென்று கருதித் தினையறுக்கச் சென்ற இடத்தே பனை முளைத்திருக்கிறது. எகிப்துக்கு இவர்கள் ஸ்வாதீன விளம்பரம் செய்ததினால், முஸ்லிம் உலகத்தின் கோபம் ஆறவில்லை. முன்னிலும் அதிகமாகக் கொதித்தெழுந்தது. எகிப்தை விடப் போகிறார்களா? வாஸ்தவந்தான். துருக்கியை ஏன் விடவில்லை? விடுவிக்கவில்லை? மெஸபொடோமியாவை, ஸிரியாவை ஏன் விடவில்லை?  விடுவிக்கவில்லை? பாரஸீகத்தை ஏன் விழுங்க முயன்றார்கள்? இந்தியாவுக்கு விடுதலை எப்போது? இத்தனை கேள்விகள் சீறுவாணம் வீசிக் கொண்டிருந்த இடத்தில் எகிப்துக்கு இவர்கள் ஸ்வாதீன விளம்பரம் செய்ததினின்றும் உலகத்து முஸல்மான்களின் புதிய மனக் கொதிப்புக்கள் அடங்கவில்லை. இப்படித்தான் நேருமென்பதை யாரும் முன் யோசனையால் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜுக்கும் அவருடைய ப்ரிய ராஜரீகத் துணைவருக்கும் ஊஹ சக்திகுறைவு. நாளைக்குக் காலையில் இன்னகார்யம் இப்படியாகக் கூடுமென்பதை யுணரும் எதிர்கால ஞானமில்லாதோர் மந்திரி ஸ்தானத்துக்குத் தக்கோரல்லர். எனினும், இவர்கள் அதனாலே ஸங்கடங்களுக்குட்படுவது கிடையாது. 

மாற்றிச் சொல்லும் வித்தையில் மஹா மஹோபாத்யாயர்

ஏனெனில் ஒரு முறை சொல்லியதை மறுமுறை மனஸ்ஸாக்ஷியை வீசி யெறிந்துவிட்டு, மாற்றிச் சொல்லும் வித்தையில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜும், அவருடைய ஸஹ மந்திரிகளும் மஹா மஹாபாத்யாயப் பட்டம் பெற்றிருக்கிறார்கள் அமெரிக்காவிலிருந்து “ஸ்வதந்தர பரியோஷணை ஸங்கத்தின் (!) அத்யக்ஷகர்களாகிய ஆங்கில மந்திரிகள் எதிர்பார்த்த கைம்மாறுகள் கிடைக்கவில்லையென்று புலப்படுகிறது. அதினின்றும், எகிப்துக்குக் கொடுத்த வாக்குறுதியை அசைக்கலா மென்ற உத்தேசம் மேற்படி அத்யக்ஷகர்களுக்கேற்பட்டு விட்டதோ என்றெமக்கோர் ஐயமுண்டாகிறது. அங்ஙனம் அந்த வாக்குறுதியைக் கொஞ்சம் புதிய வ்யாக்யானங்களுக் குட்படுத்துவதற்கு முகவுரையாக லார்ட் மில்நரைச் சிறிது காலத்துக்கு விலக்கி வைத்திருக்கிறார்களென்று தோன்றுகிறது. ஆனால் இதிலும் உத்தேசந்தான் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் கூட்டத்தாருக்குரியது. தீர்ப்பு கடவுளுக்குரியது. முதலாவது, கடவுளுக்கும் இரண்டாவது எகிப்துக்குமுரியது. 

“கிலாபத்” விஷயம்

ஸ்மர்னாவில் ஆஹாரமின்றி வருந்தும் முஸ்லிம்களுடைய ஸம்ரக்ஷிப்புக்கு பாரத மத்ய “கிலாபத்” ஸமிதியார் ஐயாயிரம் பவுன் அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. இது போன்ற செயல்களே உலகத்து முஸ்லிம்களுக்குள் ஏற்கெனவே யுள்ளதாகிய ஸஹோதரப் பற்றுதலை இன்னும் உறுதிப் படுத்தும் நற்செயல்களாம். இது நிற்க, கிலாபத் ஸமிதிகளின் முயற்சியால் ஒத்துழையாமைக் கொள்கை நாட்டில் உறுதியடைந்து வருதல் யாராலும் மறுக்க முடியாத செய்தி. இந்த ஸமயத்தில் இந்தியா கவர்ன்மெண்டார் அசிரத்தையாக இருப்பதைப் பார்த்து நமக்குப் பெரு வியப்புத் தோன்றுகிறது. “ஸெவர்” உடம்பாடு, அநீதி, நஷ்டம், அபகீர்த்தி – இவை வேண்டுமா? முஸ்லிம்களின் நட்பு, நீதி, கீர்த்தி, நஷ்டமெய்தாமை இவை வேண்டுமா? இந்திய முஸ்லிம்களே இக்காலத்தில் உலகத்து முஸல்மான்களுக்கு முக்யப் பிரதிநிதிகள். இந்திய முஸ்லிம்கள் என்ன நினைப்புகள் கொண்டிருக்கிறார்களென்பதை இந்தியா கவர்ன்மெண்டார் மேன் மேலும் அழுத்தமாக வற்புறுத்தித் தெரிவித்தாலன்றித் தாமாகவே தெரிந்து வேலை செய்யக்கூடிய அத்தனை புத்திமான்களுமல்லர் லாய்ட் ஜ்யார்ஜ் சபை மந்திரிகள்.