(ஈ) மதப் படிப்பு
நான்கு வேதங்கள், ஆறு தர்சனங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள்,
இதிஹாஸங்கள், பகவத்கீதை, சித்தர் பாடல்கள், சித்தர் நூல்கள் – இவற்றை ஆதாரமாகக் கொண்டது
ஹிந்து மதம். ஹிந்து மதத்தில் கிளைகள் இருந்தபோதிலும், அக்கிளைகள் சில சமயங்களில் அறியாமையால்
ஒன்றை யொன்று தூஷணை செய்து கொண்டபோதிலும், ஹிந்துமதம் ஒன்றுதான்; பிரிக்க முடியாது.
வெவ்வேறு வ்யாக்யானங்கள் வெவ்வேறு அதிகாரிகளைக் கருதிச் செய்யப்பட்டன. பிற்காலத்தில்
சில குப்பைகள் நம்முடைய ஞான ஊற்றாகிய புராணங்கள் முதலியவற்றிலே கலந்துவிட்டன. மத த்வேஷங்கள்,
அனாவசிய மூட பக்திகள் முதலியவனே அந்தக் குப்பைகளாம். ஆதலால், தேசீயப் பள்ளிக்கூடத்து
மாணாக்கர்களுக்கு உபாத்தியாயர் தத்தம் இஷ்ட தெய்வங்களினிடம் பரம பக்தி செலுத்தி வழிபாடு
செய்து வரவேண்டும் என்று கற்பிப்பதுடன், இதர தெய்வங்களைப் பழித்தல், பகைத்தல் என்ற
மூடச் செயல்களை கட்டோடு விட்டுவிடும்படி போதிக்கவேண்டும். ‘ஏகம் ஸ்த் விப்ரா பஹுதா வதந்தி’ (கடவுள் ஒருவரே, அவரை
ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர்) என்ற
ரிக்வேத உண்மையை மாணாக்கரின் உள்ளத்தில் ஆழப் பதியுமாறு செய்ய வேண்டும். மேலும், கண்ணபிரான்
‘எல்லா உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்’ என்று கீதையில் கூறியபடி, ஈ, எறும்பு,
புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர் – எல்லா உயிர்களும் பரமாத்மாவின்
அம்சங்களே என்பதை நன்கறிந்து அவற்றை மனமொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல்,
இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையை செய்துவர வேண்டும்’ என்பது ஹிந்துமதத்தின்
மூல தர்மம் என்பதை மாணாக்கர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். மாம்ஸ
போஜனம் மனிதன் உடல் இறைச்சியைத் தின்பதுபோலாகும் என்றும், மற்றவர்களைப் பகைத்தலும்
அவர்களைக் கொல்வது போலே யாகும் என்றும் ஹிந்து மதம் கற்பிக்கிறது. ‘எல்லாம் பிரம்ம
மயம்’, ‘ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்ற வசனங்களால் உலக முழுதும் கடவுளின் வடிவமே என்று
ஹிந்து மதம் போதிக்கிறது. ‘இங்ஙனம் எல்லாம் கடவுள்மயம் என்றுணர்ந்தவன் உலகத்தில் எதற்கும்
பயப்படமாட்டான்; எங்கும் பயப்பட மாட்டான். எக்காலத்திலும் மாறாத ஆனந்தத்துடன் தேவர்களைப்
போல் இவ்வுலகில் நீடூழி வாழ்வான்’ என்பது ஹிந்து மதத்தின் கொள்கை. இந்த விஷயங்களெல்லாம்
மாணாக்கருக்கு தெளிவாக விளங்கும்படி செய்வது உபாத்தியாயர்களின் கடமை. மத விஷயமான போராட்டங்கள்
எல்லாம் சாஸ்த்ர விரோதம்; ஆதலால், பரம மூடத்தனத்துக்கு லக்ஷணம். ஆசாரங்களை எல்லாம்
அறிவுடன் அனுஷ்டிக்கவேண்டும். ஆனால், ஸமயக் கொள்கைக்கும் ஆசார நடைக்கும் தீராத ஸம்பந்தம்
கிடையாது. ஸமயக் கொள்கை எக்காலத்திலும் மாறாதது. ஆசாரங்கள் காலத்துக்குக் காலம் மாறுபடும்
இயல்புடையன.
ஸ்ரீராமாயண மஹாபாரதங்களைப் பற்றி பிரஸ்தாபம் நடத்துகையிலே, நான்
ஏற்கனவே சரித்திரப் பகுதியிற் கூறியபடி, இதிஹாஸ புராணங்களில் உள்ள வீரர், ஞானிகள் முதலியோரின்
குணங்களை நாம் பின்பற்றி நடக்க முயலவேண்டும். உண்மை, நேர்மை, வீர்யம், பக்தி, ஸ்வஜனாபிமானம்,
ஸர்வ ஜீவ தயை முதலிய புராதன வீரர்களின் குணங்களையும் பிள்ளைகளுக்கு நன்றாக உணர்த்த
வேண்டும். சிபி சக்கரவர்த்தி புறாவைக் காப்பாற்றும் பொருட்டாக தன் சதையை அறுத்துக்
கொடுத்த கதை முதலியவற்றின் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டி, மாணாக்கர்களுக்கு ஜீவகாருண்ணியமே
எல்லா தர்மங்களிலும் மேலானது என்பதை விளக்கவேண்டும். ஏழைகளுக்கு உதவி புரிதல், கீழ்
ஜாதியாரை உயர்த்திவிடுதல் முதலியனவே ஜன ஸமூஹக் கடமைகளில் மேம்பட்டன என்பதைக் கற்பிக்க
வேண்டும்.
(உ) ராஜ்ய சாஸ்திரம்
ஜனங்களுக்குள்ளே ஸமாதானத்தைப் பாதுகாப்பதும், வெளி நாடுகளிலிருந்து
படை எடுத்து வருவோரைத் தடுப்பதும் மாத்திரமே ராஜாங்கத்தின் காரியங்கள் என்று நினைத்துவிடக்கூடாது.
ஜனங்களுக்குள்ளே செல்வமும், உணவு, வாஸம் முதலிய ஸெளகர்யங்களும், கல்வியும், தெய்வ பக்தியும்,
ஆரோக்கியமும், நல்லொழுக்கமும், பொது சந்தோஷமும் மேன்மேலும் விருத்தியடைவதற்குரிய உபாயங்களை
இடைவிடாமல் அனுஷ்டித்துக் கொண்டிருப்பதே ராஜாங்கத்தின் கடமையாவது.
குடிகள் ராஜாங்கத்தைத் தம்முடைய நன்மைக்காகவே சமைக்கப்பட்ட கருவியென்று
நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். குடிகளுடைய இஷ்டப்படியே ராஜ்யம் நடத்தப்படவேண்டும்.தீர்வை
விதித்தல், தீர்வைப் பணத்தை பலதுறைகளிலே வினியோகித்தல், புதுச்சட்டங்கள் சமைத்தல்,
பழைய சட்டங்களை அழித்தல் முதலிய ராஜாங்கக் காரியங்களெல்லாம் குடிகளால் நியமிக்கப்பட்ட
பிரதிநிதிகளின் இஷ்டப்படியே நடத்தவேண்டும்.
குடிகளின் நன்மைக்காகவே அரசு ஏற்பட்டிருப்பதால், அந்த அரசியலைச்
சீர்திருத்தும் விஷயத்தில் குடிகளெல்லாரும் தத்தமக்கு இஷ்டமான அபிப்பிராயங்களை வெளியிடும்
உரிமை இவர்களுக்கு உண்டு. இந்த விஷயங்களையெல்லாம் உபாத்தியாயர்கள் மாணாக்கர்களுக்கு
கற்பிக்குமிடத்தே, இப்போது பூமண்டலத்தில் இயல்
பெறும் முக்கியமான ராஜாங்கங்கள் எவ்வளவு தூரம் மேற்கண்ட கடமைகளைச் செலுத்தி வருகின்றன
என்பதையும் எடுத்துரைக்க வேண்டும்.
மேலும், உலகத்து ராஜாங்கங்களில் சுவேச்சாராஜ்யம், ஜனப்பிரதிநிதியாட்சி,
குடியரசு முதலியன எவையென்பதையும், எந்த நாடுகளில் மேற்படி முறைகள் எங்ஙனம் மிசிரமாகி நடைபெறுகின்றன என்பதையும் எடுத்துக்
காட்டவேண்டும்.
மேலும், உலகத்து கிராம பரிபாலனம், கிராம சுத்தி வைத்தியம் முதலியவற்றில்
குடிகளனைவரும் மிகுந்த சிரத்தை காட்ட வேண்டுமாதலால், மாணாக்கர்களுக்கு இவற்றின் விவரங்கள்
நன்றாக போதிக்கப்பட வேண்டும்.
கோயிற் பரிபாலனமும், அங்ஙனமே ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதும்,
தொழில் ஏற்படுத்திக் கொடுத்து, உணவு தருவதும் ராஜாங்கத்தாரின் கடமை என்பது மட்டுமன்றி,
கிராமத்து ஜனங்கள் அத்தனை பேருக்கும் பொதுக் கடமையாகும்.
(ஊ) பொருள் நூல்
பொருள் நூலைப்பற்றிய ஆரம்பக் கருத்துக்களை மாணாக்கர்களுக்கு
போதிக்குமிடையே, தீர்வை விஷயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஜனங்களிடம் தீர்வை
எத்தனைக்கெத்தனை குறைவாக வசூல் செய்யப்படுகிறதோ, அங்ஙனம் குறைவாக வாங்கும் தீர்வையிலிருந்து
பொது நன்மைக்குரிய காரியங்கள் எத்தனைக் கெத்தனை மிகுதியாக நடை பெறுகின்றனவோ, அத்தனைக்கத்தனை
அந்த ராஜாங்கம் நீடித்து நிற்கும்; அந்த ஜனங்கள் ஷேமமாக வாழ்ந்திருப்பார்கள். வியாபார
விஷயத்தில், கூட்டு வியாபாரத்தால் விளையும் நன்மைகளை மாணாக்கர்களுக்கு எடுத்துக் காட்டவேண்டும்.
மிகவும் *ஸமான இடத்தில் விலைக்கு வாங்கி, மிகவும் லாபகரமான சந்தையில் கொண்டுபோய் விற்கவேண்டும்
என்ற பழைய வியாபாரக் கொள்கையை எப்போதும் பிரமாணமாகக் கொள்ளக் கூடாது. விளைபொருளும்
செய்பொருளும் எஞ்சிக்கிடக்கும் தேசத்தில்
விலைக்கு வாங்கி, அவை *ண்டியிருக்குமிடத்தில் கொண்டுபோய் விற்கவேண்டும் என்பதே வியாபாரத்தில்
பிரமாணமான கொள்கையாகும்.
வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ங்கம் சிறந்தோ அதுபோலவே கைத்தொழிலிலும்
கூட்டுத் தொழிலே சிறப்பு வாய்ந்ததாம். முதலாளி யொருவன் கீழே தொழிலாளிகள் கூடி நடத்தும்
தொழிலைக் காட்டிலும் தொழிலாளிகள் பலர் கூடிச் செய்யும் தொழிலே அதிக நன்மையைத் தருவதாகும்.
செல்வம் ஒரு நாட்டில் சிலருக்கு வசப்பட்டதாய் பலர் ஏழைகளாக இருக்கும்படி
செய்யும் வியாபார முறைகளைக் காட்டிலும், சாத்தியப்பட்டவரை அநேகரிடம் பொருள் விரவியிருக்கும்படி
செய்யும் வியாபார முறைகள் மேன்மையாக பாராட்டத்தக்கனவாம்.
(எ) ஸயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம்
ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும்
பரீக்ஷைகள் மூலமாகவும் பிள்ளைகளுக்கு கற்பித்துக்கொடுத்தல் மிகவும் அவசியமாகும். பிள்ளைகளுக்கு
தாங்களே ‘ஸயன்ஸ்’ சோதனைகள் செய்து பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
வியாபார விஷயங்களுக்கு ரஸாயன சாஸ்திரம் மிகவும் பிரதானமாகையால், ரஸாயனப் பயிற்சியிலே
அதிக சிரத்தை காண்பிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாத நுட்பமான பூச்சிகள் தண்ணீர்
மூலமாகவும், மண்மூலமாகவும் பரவி நோய்களைப் பரப்புகின்றன என்ற விஷயம் ஐரோப்பிய ‘ஸயன்ஸ்’
மூலமாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பதில் ஒரு சிறிது உண்மை இருப்பது மெய்யேயாயினும், மனம்
சந்தோஷமாகவும் ரத்தம் சுத்தமாகவும் இருப்பவனை அந்தப் பூச்சிகள் ஒன்றும் செய்யமாட்டா
என்பதை, ஐரோப்பியப் பாடசாலைகளில் அழுத்திச் சொல்லவில்லை. அதனால், மேற்படி சாஸ்திரத்தை
நம்புவோர் வாழ்நாள் முழுதும் ஸந்தோஷமாய் இராமல் தீராத நரக வாழ்க்கை வாழ்கிறார்கள்.
ஆதலால், நமது தேசீய ஆரம்பப் பாடசாலையில் மேற்படி பூச்சிகளைப்பற்றின பயம் மாணாக்கருக்குச்
சிறிதேனும் இல்லாமல் செய்துவிட வேண்டும்.
உலகமே காற்றாலும், மண்ணாலும், நீராலும் சமைந்திருக்கிறது. இந்த
மூன்று பூதங்களை விட்டு விலகி வாழ யாராலும் இயலாது. இந்த மூன்றின் வழியாகவும் எந்த
நேரமும் ஒருவனுக்கு பயங்கரமான நோய்கள் வந்துவிடக்கூடும் என்ற மஹா நாஸ்திகக் கொள்கையை
நவீன ஐரோப்பிய சாஸ்திரிகள் தாம்நம்பி ஓயாமல் பயந்துபயந்து மடிவது போதாதென்று, அந்த
மூடக்கொள்கையை நமது தேசத்தின் இளஞ்சிறுவர் மனதில் அழுத்தமாகப் பதியும்படி செய்துவிட்டார்கள்.
சிறு பிராயத்தில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வலிமை உடையன, அசைக்க முடியாதன,
மறக்கமுடியாதன; எனவே, நமது நாட்டிலும் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்த பிள்ளைகள்
சாகுமட்டும் இந்தப் பெரும்பயத்துக்கு ஆளாய் தீராத கவலை கொண்டு மடிகிறார்கள். பூச்சிகளால்
மனிதர் சாவதில்லை; நோய்களாலும் சாவதில்லை; கவலையாலும் பயத்தாலும் சாகிறார்கள். இந்த
உண்மை நமது தேசீயப் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படி செய்ய
வேண்டும்.
பெளதிக சாஸ்த்ரங்கள் கற்றுக் கொடுப்பதில், மிகவும் தெளிவான எளித
தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும் ஸுலபமாக விளங்கும்படி சொல்லிக்கொடுக்க வேண்டும்.
இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகபப்டுத்த வேண்டும்.
திருஷ்டாந்தமாக, “ஆக்ஸிஜன்”, “ஹைட்ரஜன்”, முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கெனவே தமிழ்
நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராணவாயு, ஜலவாயு என்ற நாமங்களையே வழங்க வேண்டும்.
தமிழ்ச் சொற்கள் அகப்படாவிட்டால் ஸமஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக்
கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல்
பொருந்தும். இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே
உபயோகப்படுத்தலாம். ஆனால், குணங்கள், செயல்கள், நிலைமைகள் – இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை
ஒருபோதும் வழங்கக் கூடாது. பதார்த்தங்களின் பெயர்களை மாத்திரமே இங்கிலீஷில் சொல்லலாம்,
வேறு வகையால் உணர்த்த இயலாவிடின்.
No comments:
Post a Comment