Saturday, June 30, 2012

பேதை நெஞ்சே

இன்னுமொரு முறைசொல்வேன்,பேதை நெஞ்சே!
எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே
வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்!
பின்னையொரு கவலையுமிங் கில்லை,நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்!

நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,
நினைத்தபயன் காண்பதவன் செய்கையன்றோ?
மனமார உண்மையினைப் புரட்டலாமோ?
மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ?
எனையாளும் மாதேவி,வீரார் தேவி,
இமையவருந் தொழுந்தேவி, எல்லைத் தேவி,
மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி,
மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே!

சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்;
சங்கரனென் றுரைத்திடுவோம்,கண்ணன் என்போம்;
நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி,
நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி
பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,
பசிபிணிக ளில்லாமற் காக்கச் சொல்லி,
உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,.
உலகளந்த நாயகிதாள் உரைப்பாய்,நெஞ்சே!

செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்.
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்;
கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்.
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்
துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
ந்லலவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்.
‘நமோநமஓம் சக்தி’ யென நவிலாய் நெஞ்சே!

பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்;
பயனனிறி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!
கேட்டதுநீ பெற்றிடுவாய்,ஐயமில்லை;
கேடில்லை,தெய்வமுண்டு,வெற்றி யுண்டு;
மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதிச சக்தி,
வேதத்தின் முடியினிலே விளங்கும் சதி,
நாட்டினிலே சனகனைபோல் நமையும் செய்தாள்;
‘நமோநம,ஓம் சக்தி‘ யென நவிலாய் நெஞ்சே!

Friday, June 29, 2012

மகாத்மா காந்தி பஞ்சகம்


வாழ்க நீ! எம்மான்,இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா!நீ வாழ்க!வாழ்க!

அடிமைவாழ் வகன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து,செல்வம்,
குடிமையி னுயர்வு,கல்வி,ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குளே முதன்மை யுற்றாய்!

வேறு


கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
டிமின்னல் தாங்கும் கடைசெய்தான் என்கோ?
என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
வெம்பிணி யகற் றிடும் வண்ணம்
படிமிசைப் புதைதாச் சாலவும் எளிதாம்
படிக்கொரு சூழ்ச்சிநீ படைத்தாய்! 


தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்;
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்;
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
இழிபடு போர், கொலை,தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திடத் துணிந்தனை,பெருமான்! 

பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்;
அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவிழி யென் றுநீ அறிந்தாய்;
நெருங்கிய பயன்சேர்-‘ஒத்துழை யாமை’
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே!

Thursday, June 28, 2012

கண்ணம்மா என் காதலி

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.
திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள்.

“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”

Wednesday, June 27, 2012

ஞானபானு

திருவளர் வாழக்கை,கீர்த்தி,தீரம்,நல் லறிவு,வீரம்,
மருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்,
வருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு.

கவலைகள்,சிறுமை,நோவு,கைதவம் வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்
நவமுறு ஞான பாநு நண்ணுக;தொலைக பேய்கள்.

அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம்.

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும்,ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தினோடும்
நண்ணிடும் ஞான பாநு,அதனைநாம் நன்கு போற்றின்.

Tuesday, June 26, 2012

திரான்ஸ்வால் இந்தியரின் கஷ்டம்


டிசம்பர் 8, 1906

ஓநாய் ஆட்டுக்குட்டிகளிருக்கும் இடத்திற்கு வந்தால் ஓநாயின் பாடு வெகு உல்லாசம்தான். ஆனால் ஓநாய்கள் இருக்குமிடத்திற்கு ஆட்டுக்குட்டி செல்லுமானால் இதன் பாடு வெகு கஷ்டம். இந்தியர்களுக்கும் வெள்ளை ஜாதியாருக்கும் இப்போதிருக்கும் சம்பந்தம் மேற்கண்ட விதமாகவே இருக்கிறது. இந்தியாவுக்கும் ஒரு ஐரோப்பியன் வந்தால் அவனுக்கு வேட்டகத்திற்கு வந்த மாப்பிள்ளைக்கு நடக்கும் உபசாரங்களெல்லாம் குறைவின்றி நடக்கின்றன. அவன் திரும்பின இடத்திலேயெல்லாம் உத்தியோகம். அவன் கால் வைத்த இடம் எல்லாம் பணம். சென்ற இடமெல்லாம் மதிப்பு. கையிலே அரைக்காசு இல்லாமல் இங்கே வந்து சேர்கிறான். திரும்ப ஊருக்குப் போகும்போது பிரபுவாகப் போகிறான். அவனுடைய தசை அப்படியிருக்கிறது. இது நிற்க. 

ஆங்கிலேய ஆட்சிக்க்குட்பட்ட திரான்ஸ்வால், கேப் காலனி, ஆஸ்டிரேலியா முதலிய தேசங்களில் இவன் (இந்தியன்) கதி மஹா பரிதாபகரமாய் விடுகிறது. இவர் வர்த்தகம் செய்து செழிப்படையவிடுகிறதில்லை. உத்தியோகங்களென்று மூச்சுவிடக்கூடாது. “அங்கே நடக்கக்கூடாது இங்கே வீடு கட்டக்கூடாது, தண்ணீர் சாப்பிடத் தீர்வை கொடுக்க வேண்டும், மூச்சுவிட வரி செலுத்த வேண்டும்” என்பதாக எண்ணிறந்த இடைஞ்சல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நமது “காருண்ய”! கவர்ன்மெண்டாரிடம் முறையிட்டுத் தொண்டை வற்றிப்போய்விட்டதேயொழிய ஒரு காசுக்குப் பயன் கிடையாது. சிறிது காலத்திற்கு முன்பு திரான்ஸ்வாலில் “ஏஷ்யாக்காரர்விதி” (Asiatic Ordinance) என்பதாக ஒரு விதியேற்படுத்தப்பட்டது. இது இந்தியர்களுக்கு வெகு அவமானமான விதி. இதை மாற்றவேண்டுமென்ற திரான்ஸ்வாலின் இந்தியர்கள் பிரதிநிதிக் கூட்டமொன்று இங்கிலாந்துக்குச் சென்று அங்குள்ள மந்திரிகளையும் ராஜதந்திரிகளையும் பிரார்த்தனை புரிந்தது. எத்தனையோ பிராயாசைக்கப்பால் இங்கிலாந்து கவர்ன்மெண்டார் விதி கொஞ்ச நாளைக்கு நிறுத்திவைக்கப்படுமென்றும், முற்றிலும் மாற்றிவிட வேண்டுமானால் அது மிகவும் யோசனை செய்து முடிவுவேண்டிய காரியமென்றும் சொல்லி இருக்கிறார்கள். இது என்ன அவமானம்! என்ன நிந்தை! ஆரிய புத்திரர்களே! தூங்கிக்கொண்டா இருக்கிறீர்கள்? இந்த மானமற்ற பிழைப்பு இன்னும் எத்தனை காலம் பிழைக்கவேண்டுமென்று உத்தேசித்திருக்கிறீர்கள்!

Monday, June 25, 2012

தியானங்களும் மந்திரங்களும்


விடுதலைக்கு வழி

என் அறிவில் தெய்வத் தன்மை காணப்படுகிறது. நான் ஒரு தேவனைப்போலே சிந்தனை செய்யவல்லேன். இனி என் செய்கைகளிலும் தெய்வத்தன்மை விளங்குதற்குரிய வழி செய்ய வேண்டும்.

நான் இவ்வுலகத்துப் பொருள்களின்மீது பேரவாக் கொள்வதில்லை. நான் இவ்வுலகத்தின் நாதன். இதற்கு நான் அடிமையில்லை. என் கையில் இயற்கை கொணர்ந்து தரும் பொருள்களைக் கொண்டு நான் திருப்தி எய்தக் கடவேன்.

நான் வேண்டிக் கரையத்தக்கது யாது? அதிகாரத்தை வேண்டி வருந்துவேனா? ருஷிய ஜார் சக்கரவர்த்தி வரம்பற்ற அதிகாரம் படைத்திருந்தான். அதினின்றும் என்ன பயனைக் கண்டான்? அன்றி, நான் செல்வத்தை வேண்டு அழுங்குவேனா? செல்வம் என்ன பயன் தரும்? நோவின்றிக் காக்குமோ? அன்று; நோவுகளை விளைக்கும்; பகையின்றிக் காக்குமோ? அன்று; பகையைப் பெருக்கும்; கவலைகளும் அச்சங்களும் இன்றிக் காக்குமா? அன்று; அவற்றை மிகுதிப்படுத்ஹ்டும் மரணமின்றிக் காக்குமா? காக்காது. எனில், அதனை வேண்டி அழுங்குதல் பெரும் பேதமையன்றோ?
இரப்போன் தன்னைத்தான் விலைபடுத்திக் கொள்கிறான். பசுவுக்குத் தண்ணீர் வேண்டும் என்றுகூடப் பிறரிடம் யாசித்தல் பெரிய அவமானம் என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். நான் எவரிடத்தும் ஒரு பொருள் வேண்டுமென்று கேட்கமாட்டேன். கடவுள் தன் அருளால் கொடுப்பவற்றை ஏற்று மகிழ்வேன்.

ஆரோக்கிய ஸம்பந்தமான மந்திரங்கள்

நான் நோயற்றேன். நான் வலிமையுடையேன். என் உடம்பின் உறுப்புகள் என் தெய்வ வலிமையைப் பெற்றுக்கொண்டு விட்டன. அவை திறனுடையன; இலாகவமுடையன; இன்பந் தரித்தன; மிக எளிதில் இயங்குவன; மஹாசக்தியின் வீடுகளாயின். என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது. நான் நோய்களையெல்லாம் புறத்தே வீசியெறிந்துவிட்டேன். நான் ஸுகம்; நானே பலம்; நான் சக்தி. பொய் பலஹீன முடையது; நான் ஸத்யம்; நான் கடவுள்; நான் ஆற்றல்; நான் வலிமையின்றி நோயுறல் யாங்ஙன மியலும்?

ஆஹா! வலிமையும், நோயின்மையும், ஆற்றலுமிருப்பதால் எனக்கு விளையுமின்பத்தை என்னென்றுரைப்பேன்? தேவத்தன்மையால் நான் எய்தும் ஆனந்தத்தை ஏதென்று சொல்வேன்? நான் தேவன்; நான் தேவன்; நான் தேவன்.

என் தலை, என் விழிகள், எனது நாசி, என் வாய், என் செவிகள், என் கழுத்து, மார்பு, வயிறு, கைகள், இடை, கால்கள் – இவையெல்லாம் முற்றிலும் ஆரோக்கியமுடையன; நோயற்றன; நோயுறத்தகாதன; எக்காலும் நோயுற மாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவுகொண்டது. என் மனமும், ஹ்ருதயமும் எவ்வித நோய்ப் பூச்சிகளாலும் காக்கப்படாதன. 

நோய்களையும் அசுத்தங்களையும் நான் அறவே எறிந்துவிட்டேன். அவை மீண்டு வராதபடி அவற்றைச் சூன்யத்திற்குள்ளே வீழ்த்து விட்டேன். 

நானே ஆரோக்கியம். நான் தேவன்.

அமரத் தன்மையைக் குறித்த மந்திரங்கள்

நான் அமரன். எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக. நாட்கள் ஒழிக. பருவங்கள் மாறுக. ஆண்டுகள் செல்க. நான் மாறுபட மாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். என்றும் உயிர்வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதை யெல்லாம் நான் தேர்ந்து கொண்டேன். இஃதெல்லாம் உண்மையென்று அறிவேன்.
நான் கடவுள், ஆதலால் சாகமாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன்.

Sunday, June 24, 2012

சுதந்திரப் பெருமை

(“தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர் திரும்பியும்
வருவாரோ?” என்னும் வர்ண மெட்டு)

வீர சுதந்திரம் வேண்டிநின் றார்பின்னர்
    வேறொன்று கொள்வாரோ? - என்றும்
ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
    அறிவைச் செலுத்துவா ரோ?         

புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
    பொய்யென்று கண்டாரேல் - அவர்
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
    இச்சையுற் றிருப்பா ரோ?          (வீர)     2

பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
    பெற்றியை அறிந்தாரேல் - மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
    சுகமென்று மதிப்பா ரோ?      

மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
    வாய்மையை உணர்ந்தாரேல் - அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
    உடன்படு மாறுளதோ?         

விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
    மின்மினி கொள்வா ரோ? - தம்
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
    கைகட்டிப் பிழைப்பாரோ?         

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
    மாண்பினை யிழப்பா ரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
    கைகொட்டிச் சிரியா ரோ?         

வந்தே மாதரம் என்று வணங்கியபின்
    மாயத்தை வணங்குவரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
    என்பதை மறப்பா ரோ?         

Saturday, June 23, 2012

வெறும் வேடிக்கை


1 டிசம்பர் 1920   ரெளத்திரி கார்த்திகை 17 


திராவிடக் கக்ஷி

நான், ஸமீபகாலம் வரை, திருநெல்வேலி ஜில்லாவின் மேற்கோரத்தில் ஒரு நாகரிகமடைந்த கிராமத்தில் குடியிருந்தேன். பொதுப்படையாக நல்ல நாகரிகமடைந்த அந்த கிராமத்துக்கு ஜாதி பேத விரோதங்கள் ஒரு களங்கமாக ஏற்பட்டிருக்கின்றன. கிறிஸ்தவப் பாதிரிகளின் செல்வாக்கு இந்தியாவில் மற்றெந்தப் பகுதியைக் காட்டிலும் அதிகமாகச் சென்னை மாகாணத்திலும், இந்த மாகாணத்தில் மற்றப் பிரதேசங்களைக் காட்டிலும் மிகுதியாகத் திருநெல்வேலி ஜில்லாவிலும் ஏற்பட்டிருக்கிறதென்ற செய்தி நம்மவரில் பெரும்பான்மையோருக்கும் தெரிந்திருக்கக்கூடும். ஆதலால், இங்கிலிஷ் படித்த பிள்ளைகளுக்குள் அந்த ஜில்லாவில் அநேகர் கிறிஸ்தவப் பாதிரிகள் உபதேசத்துக்கு அதிகமாகச் செவி கொடுத்துவிட நேர்ந்ததென்று நான் தெரிவிப்பது பலருக்கோர் வியப்பாகத் தோன்றாது. ஹிந்து மதத்தை வேரறுத்து, இந்தியாவில் கிறிஸ்து மதத்தை ஊன்றுவதே முக்ய நோக்கமாகக் கொண்டு வேலை செய்துவரும் அப்பாதிரிகள், ஹிந்து மதத்துக்கு பிராமணரே இதுவரை காப்பாளிகளாக இருந்து வருதல் கண்டு, அந்தப் பிராமணரை மற்ற ஜாதியார் பகைக்கும்படி செய்தால் தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினார்கள். இங்ஙனம், மற்ற ஜாதிப் பிள்ளைகளுக்கு ஹிந்து மதத்தில் துவேஷ புத்தியுண்டாக்குவதற்கு அடிப்படையாக பிராமணத் துவேஷம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமென்ற கருத்துடையோர் சென்னை நகரத்து முக்யமான கல்வி ஸ்தலங்கள் சிலவற்றிலுமிருந்து நெடுங்காலமாக வேலை செய்து வருகிறார்கள். காமம், குரோதம் முதலிய தீய குணங்களை வேதம் அஸுரரென்று சொல்லி, அவற்றைப் பரமாத்மாவின் அருள் வடிவங்களாகிய தேவர்களின் உதவியால், ஆரியர் வெற்றி பெறுதற்குரிய வழிகளைப் பற்றிப் பேசுகிறது; இந்த உண்மையறியாத ஐரோப்பிய ஸம்ஸ்க்ருத வித்வான்கள் சிலர் அஸுரர் என்று முற்காலத்தில் ஒரு வகுப்பு மனிதர் இந்தியாவிலிருந்தார்களென்றும், அவர்களை ஆரியர் ஜயித்து இந்தியாவின் ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டு, அதன் பூர்வக் குடிகளைத் தாழ்த்திவிட்டன ரென்றும் அபாண்டமான கதை கட்டிவிட்டார்கள். இதை மேற்கூறிய கிறிஸ்தவப் பாதிரிகள் மிகவும் ஆவலுடன் மனனம் செய்து வைத்துக்கொண்டு தம்மிடம் இங்கிலிஷ் படிப்புக்காக வரும் பிள்ளைகளில் பிராமணரைத் தவிர மற்ற வகுப்பினர்-தென் இந்தியாவில் மாத்திரம்- அஸுர வம்சத்தாரென்றும், ஆதலால் பிராமணர் இவர்களுக்குப் போன யுகத்திலே (வேதமொழுகிய காலத்தில்!) விரோதிகளாக இருந்தனரென்றும் ஆதலால் இக்காலத்தில் அந்தப் பிள்ளைகள் அஸுரக் கொடியை மீளவும் தூக்கிப் பிராமணரைப் பகைக்க வேண்டுமென்றும் போதிக்கத் தொடங்கினார்கள். இந்தியாவிலுள்ள ஜாதி பேதங்களைத் தீர்த்துவிட்டு இங்கு ஸமத்வ தர்மத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அந்தப் பாதிரிகள் இந்த வேலை செய்யவில்லை. ஹிந்து மதத்துக்குக்கேடு சூழவேண்டுமென்ற நோக்கத்துடன் செய்தார்கள். ஆனால், இதில் மற்றொரு விநோதமுண்டு. அஃதியாதென்றால் இந்தியாவில் பிராமணர்களிலேயே முக்காற் பங்குக்குமேல் பழைய சுத்தமான ஆர்யர்களல்லரென்றும் விசேஷமாகத் தென் இந்தியாவில் இவர்கள் பெரும்பகுதி அஸுர வம்சத்தாருடன் கலந்துபோனவர்களின் சந்ததியாரென்றும், அப்பாதிரிகளும் அவர்களுக்கு இந்த அம்சத்தில் குருக்களான ஐரோப்பிய பண்டிதரும் தெரிவிக்கிறார்கள். எனவே பிராமணராகிய நாங்கள் இப்போது உங்களைப்போல் அஸுர ராக்ஷஸராய்விட்ட பிறகும் நீங்கள் எங்களைப் பகைக்கவேண்டுமென்று அந்தப் பாதிரிகள் போதிப்பது முன்னுக்குப் பின் முரண்படுகிறதன்றோ? மேலும் இந்த “திராவிடர்” என்போர் அஸுர, ராக்ஷசர்களின் ஸந்ததியாரென்பதும் அவர்களிடமிருந்து பிராமணர் ராஜ்யம் பிடித்த கதையும் யதார்த்தமென்று வேடிக்கைக்காக ஒரு க்ஷணம் பாவனை செய்து கொள்வோம். அப்படிக்கிருந்தாலும் அந்த ஸம்பவத்தில் பிராமணரின் மந்திரத்தால் அஸுரர்களை ஜயித்ததாகத் தெரிகிறதேயன்றி மாக்ஸ் முல்லரின் கருத்துப் படிக்கும் பிராமணர் அரசாண்டதாகத் தெரியவில்லை. பிராமணர்களையடுத்து, க்ஷத்திரியர்களே ராஜ்யமாண்டனரென்று தெரிவிக்கப்படுகிறது. தவிரவும் அந்த ஸம்பவம் நடந்து இப்போது புராணங்களின் கணக்குப்படி பார்த்தால் பல லக்ஷங்களோ கோடிகளே வருஷங்கள் கடந்து போயின. ஐரோப்பியப் பண்டிதரின் கணக்குப்படி பார்த்தாலும் எண்ணாயிர வருஷங்களுக்குக் குறைவில்லை. இப்படியிருக்க அந்தச் சண்டையை மறுபடி மூட்டுவது என்ன பயனைக் கருதி? யதார்த்தமாகவே, இந்தியா தேச சரித்திரத்தில் ஹிந்துக்களுக்குள்ளேயே தமிழருக்க்கும் தெலுங்கருக்கும், தெலுங்கருக்கும் ஒட்டருக்கும், ஒட்டருக்கும் வங்காளிகளுக்கும், வங்காளிகளுக்கும் ஹிந்துஸ்தானிகளுக்கும், பஞ்சாபிகளுக்கு, பஞ்சாபிகளுடன் ராஜபுத்திரருக்கும், இவர்களுடன் மஹாராஷ்ட்ரருக்கும், மகாராஷ்ட்ரருடன் ஏறக்குறைய மற்றெல்லாப் பிரிவினருக்கும், இவற்றைத் தவிர, ஹிந்துக்களுக்கும் மஹமதியருக்கும் இடையே கணக்கற்ற யுத்தங்களும், அரசு புரிந்தலும் அடக்கியாளுதலும் நடந்து வந்திருக்கின்றன. இதுபோல், ஒரு நாட்டின் உட்பகுதிகளுக்குள் யுத்தங்கள் இந்தியாவில் மாத்திரமன்றி, ஆஸ்திரேலியா முதல் இங்கிலாந்துவரையுள்ள ஸகல தேசங்களிலும் ஓயாமல் நடந்து வந்திருப்பதாகச் சரித்திரம் தெரிவிக்கிறது. இங்ஙனம் நம் நாட்டில், சமீபகால சரித்திரத்திலேயே நிகழ்ந்த எண்ணற்ற போராட்டங்களை மறந்து இன்று தெலுங்கர், தமிழர் முதலிய ஹிந்துக்களும் மஹமதியரும் ஸஹோதரரைப்போல் வாழ வேண்டுமென்ற உணர்ச்சி பரவியிருக்க, எண்ணாயிர வருஷங்களுக்கு முன் “மந்திரங்களாலும், யாகங்களாலும், அஸுர, ராக்ஷஸர்களை ஜயித்த பிராமணர்களை மாத்திரம் நமம்வர் எக்காலத்திலும் க்ஷமிக்காமல் உலக முடிவு வரை விநோதம் செலுத்திவர வேண்டுமென்று சொல்லுதல் பெரும் பேதமையன்றோ? தவிரவும், இந்த நவீன “அல்லாதார்” தாங்கள் அஸுர வம்சத்தாரென்று செல்வதே முற்றிலும் தவறென்பதை ஏற்கெனவே நன்கு நிரூபணம் செய்திருக்கிறேன். ஜாதி பேதங்களின் கொடுமைகளை உடனே அழித்துவிட வேண்டுமென்பதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்.

ஜப்பான் தேசத்து திருஷ்டாந்தம்

ஜப்பானில் தீண்டாத வகுப்பினருட்படப் பலவித ஜாதி பேதங்களிருந்தன. எனினும் காலஞ்சென்ற மிகாடோ சக்ரவர்த்தி நவீன உலகத்தின் அவஸரங்களைக் கருதி அங்கு ராஜாங்க விஷயங்களில் ஜாதி பேதங்களைக் கருதக்கூடாதென்று சட்டஞ்செய்தார். எத்தனையோ, நூற்றாண்டுகளாக இயல்பெற்ற வந்த பேதக் கொடுமைகள் அங்கு ராஜரீகத் துறையில் மட்டுமேயன்றி, ஸமூஹ வாழ்விலும் புலப்படாதபடி அதிசீக்கிரத்தில் மறைந்து போய் விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் இதுதான் வழி. நாம் ஏற்கெனவே தெரிவித்தபடி ஸ்வராஜ்யம் கிடைத்தால் இந்த ஜாதி பேதத் தொல்லைகளையெல்லாம் சட்டம் போட்டு நீக்கிவிடலாம். இப்போதுள்ள அதிகாரிகள் இவ்விதமான சட்டம் ஏற்படுத்துவார்களென்று எதிர்பார்ப்பதே தவறு. ஆதலால் இந்தியாவின் ஸமூஹ வாழ்க்கையில் ஸமத்வமேற்படுத்த விரும்புவோர் முதலாவது ராஜரீகத் துறையில் ஸமத்வமேற்படுத்த முயலும் “காங்கிரஸ்” கக்ஷியாருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.

Friday, June 22, 2012

பெல்ஜியத்திற்கு வாழ்த்து


அறத்தினால் வீழ்ந்து விட்டாய்!
அன்னியன் வலிய னாகி
மறத்தினால் வந்து செய்த
வன்மையைப் பொறுத்தல் செய்வாய்:
முறத்தினாற் புலியைத் தாக்கும்
மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினால் எளியை யாகிச்
செய்கையால் உயர்ந்து நின்றாய்! 

வண்மையால் வீழ்ந்து விட்டாய்!
வாரிபோற் பகைவன் சேனை
திண்மையோடு அடர்க்கும் போதில்
சிந்தனை மெலித லின்றி
ஒண்மைசேர் புகழே மேலென்று
உளத்திலே உறுதி கொண்டாய்;
உண்மைதேர் கோல நாட்டார்
உரிமையைக் காத்து நின்றாய்! 

மானத்தால் வீழ்ந்து விட்டாய்!
மதிப்பிலாப் பகைவர் வேந்தன்
வானத்தாற் பெருமை கொண்ட
வலிமைதான் உடைய னேனும்.
ஊனத்தால் உள்ள மஞ்சி
ஒதுங்கிட மனமொவ் வாமல்
ஆனத்தைச் செய்வோ மென்றே
அவன்வழி யெதிர்த்து நின்றாய்! 

வீரத்தால் வீழ்ந்து விட்டாய்!
மேல்வரை யுருளுங் காலை
ஓரத்தே ஒதுங்கித் தன்னை
ஒளித்திட மனமொவ் வாமல்,
பாரத்தை எளிதாக் கொண்டாய்;
பாம்பினைப் புழுவே யென்றாய்;
நேரத்தே பகைவன் றன்னை
‘நில்’லென முனைந்து நின்றாய் 

துணிவினால் வீழ்ந்து விட்டாய்!
தொகையிலாப் படைக ளோடும்
பிணிவளர் செருக்கி னோடும்
பெரும்பகை எதிர்த்த போது
பணிவது கருத மாட்டாய்;
பதுங்குதல் பயனென் றெண்ணாய்;
தணிவதை நினைக்க மாட்டாய்
‘நில்’லெனத் தடுத்தல் செய்தாய். 

வெருளுத லறிவென் றெண்ணாய்;
வித்தையோர் பொருட்டாக் கொள்ளாய்;
சுருளலை வெள்ளம் போலத்
தொகையிலாப் படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன்
வலிமையாற் புகுந்த வேளை
"உருளுக தலைகள், மானம்
ஓங்குகெ"ன் றெதிர்த்து நின்றாய். 

யாருக்கே பகையென் றாலும்
யார்மிசை இவன்சென் றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி
உத்தர வெண்ணி டாமல்,
போருக்குக் கோலம் பூண்டு
புகுந்தவன் செருக்குக் காட்டை
வேருக்கும் இடமில் லாமல்
வெட்டுவேன் என்று நின்றாய், 

வேள்வியில் வீழ்வ தெல்லாம்
வீரமும் புகழும் மிக்கு
வீள்வதுண் டுலகிற் கென்றே
வேதங்கள் விதிக்கும் என்பார்;
ஆள்வினை செய்யும் போதில்
அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண் டுடனே மீளக்
கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல்.


விளக்கொளி மழுங்கிப் போக
வெயிலொளி தோன்று மட்டும்,
களக்கமா ரிருளின் மூழ்குங்
கனகமா ளிகையு முண்டாம்;
அளக்கருந் தீதுற் றாலும்
அச்சமே யுளத்துக் கொள்ளார்,
துளக்கற ஓங்கி நிற்பர்;
துயருண்டோ துணிவுள் ளோர்க்கே?

Thursday, June 21, 2012

என்றன் நெஞ்சகம் ஏந்திழை பாலதே

மந்த மாருதம் வீசுறும் போதினும்
           வானில் மாமதி தேசுறும் போதினும்
கந்த மாமலர் கண்ணுறும் போதினும்
           கானநல்லமுது உண்ணுறும் போதினும்
சந்தமார் கவி கற்றிடு போதினும்
           தாவில் வான்புகழ் பெற்றிடு போதினும்
எந்த வாறினும் இன்புறு போதெல்லாம்
           என்றன் நெஞ்சகம் ஏந்திழை பாலதே

(சகரவர்த்தினி 1906 பிப்ரவரி இதழில் வெளிவந்த துளஸிபாயி என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்என்ற கதையின் இரண்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது இப்பாடல்.)

Wednesday, June 20, 2012

வெங்கடேசு ரெட்டப் பூபதி - ஓலைத்தூக்கு

ராஜமகா ராஜேந்திர ராஜகுல
        சேகரன் ஸ்ரீ ராஜராஜன்
    தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
        டேசுரெட்ட சிங்கன் காண்க
    வாசமிகு துழாய்த்தாரான் கண்ணனடி
        மறவாத மனத்தான், சக்தி
    தாசனெனப் புகழ்வளரும் சுப்ரமணிய
        பாரதிதான் சமைத்த தூக்கு.
   
    மன்னவனே! தமிழ்நாட்டில் தமிழறிந்த
        மன்னரில்லை யென்று மாந்தர்
    இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
        புனைந்தபொழுது இருந்த தன்றே!
    சொல்நலமும் பொருள்நலமும் சுவைகண்டு
        சுவைகண்டு துய்த்துத் துய்த்துக்
    கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள் போல்
        தமிழ்ச்சுவைநீ களித்தா யன்றே!   


    புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
        தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும்
    கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
        வசைஎன்னால் கழிந்ததன்றே!
    "சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது
        சொற்புதிது, சோதி மிக்க
    நவகவிதை, எந்நாளும் அழியாத
        மகாகவிதை", என்று நன்கு  


    பிரான் ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
        புலவோரும் பிறரு மாங்கே
    விராவுபுகழ் ஆங்கிலத்தீங் கவியரசர்
        தாமுமிக வியந்து கூறிப்
    பராவி யென்றன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
        போற்றுகின்றார்; பாரோ ரேத்தும்
    தராதிபனே! இளசை வெங்க டேசுரெட்டா!
        நின்பால்அத் தமிழ் கொணர்ந்தேன்.  


    வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
        கவிதையினை வேந்த னே!நின்               
    நயப்படு சந்நிதிதனிலே நான்பாட
        நீகேட்டு நன்கு போற்றி
    ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
        பொற்பைகள், ஜதிபல் லக்கு,
    வயப்பரிவா ரங்கள்முதல் பரிசளித்துப்
        பல்ஊழி வாழ்க நீயே! 

Tuesday, June 19, 2012

புதுச்சேரியில் புயற் காற்று


27 நவம்பர் 1916                                            நள கார்த்திகை 13

இரவு

நள வருஷம் கார்த்திகை மாதம் 8ம் தேதி புதன்கிழமை இரவு புதுச்சேரியில் யுகப் பிரளயத்தைப் போலே யிருந்தது.

நெடும் பொழுதாக – புதன்கிழமை மாலை தொடங்கியே – மழையும் காற்றும் கடுமையாகத் தான் இருந்தன. இடைவிடாத மழை. இடைவிடாத காற்று.

இரவு பதினொரு மணிக்குமேல் பெரிதாக வளர்ந்துவிட்டது. ஊழிக் காற்று; படீல், படீல், படீல்.
வீடுகள் இடிந்து விழுகின்றன; மரங்கள் சாய்கின்றன; காந்த விளக்குக் கம்பி அறுந்து போகிறது. நான்கு சுவர்களும் மேலே விழுந்துவிடும் போலிருந்தன; நல்ல கோட்டை போன்ற வீட்டிலே இருந்தேன். இருந்தாலும் சத்தம் பொறுக்க முடியவில்லை ஊழிக்காற்று. மருத்துக்களின் களியாட்டம். 

வெளியே என்ன நடக்கிறதென்று சாளரத்தைத் திறந்தால் மழை நீர் சரேலென்று வெள்ளமாக உள்ளே பாய்கிறது. ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒரே பேரிருள். திறந்த சாளரத்தை மூடுவது பிரமப் பிரயத்தனம்.

காலைப் பொழுது

கார்த்திகை மாதம் 9ம் தேதி வியாழக்கிழமை நல்ல பொழுது விடிந்தது. புயற்காற்று நின்றது.
ஊர்க்காரர் வெளியேறி வீதிக்கு வந்தார்கள். புதுச்சேரிப் பட்டணத்தை நேற்றுப் பார்த்த கண்ணுக்கு இன்று அடையாளம் தெரிய இடம் இல்லை; தெருவெல்லாம் ஒடிந்த மரங்கள். தென்னையும் பூவரசும் வீதிகளில் அதிகம். நூற்றில் எண்பது முறிந்து கிடந்தன. ஓடுகளும், மாடங்களும், கூரைகளும் சேதப்படாத வீடு நான் ஒன்றுகூடப் பார்க்கவில்லை. சில கூரைகள் நெடுந்தூரம் தள்ளி விழுந்து கிடந்தன. காலையில் தபால் வரவில்லை. தந்திக் கம்பிகளும் காந்த விளக்குத் தொழிற்சாலையின் தலை விழுந்துவிட்டது. சுற்று வீதியில் ஏழைக் குடிசைகள் அழிந்து போய்விட்டன. உயிர்ச் சேதமும் நிகழ்ந்திருக்கிறது. தொகை தெரியவில்லை…

இதுவரை கிடைத்த தகவல்:-

முத்தியால் பேட்டையில் 6000 வீடு நெசவு காரருண்டு. அனேகமாக அத்தனை வீட்டிலும் தறி, சாமான் எல்லாம் சேதம். பெரும்பாலும் வீடுகளே சேதம். மொத்த நஷ்டம் கணக்கிட முடியவில்லை. ஜனச் சேதம் அதிகமில்லை.

பாக்கமுடையான் பேச்சையில் கிராமத்தில் பெரும்பகுதி அழிந்து போய்விட்டது. ஜனச் சேதம் அதிகம்.

அரியாங்குப்பம், குறிச்சிக்குப்பம் முதலிய பாக்கத்துக் கிராமங்களிலெல்லாம் ஜனச் சேதமும் வீடு நஷ்டமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

பல வாலிபர்கள் ஜனக் கஷ்டத்தை இயன்ற வரை நீக்கும் பொருட்டாக அன்னதானம் செய்து வருகிறார்கள். இன்று கூட ஊதலடிக்கிறது.

புயற்காற்றுத் தேவரை வணங்குகிறோம் அவர்கள் உலகத்தில் சாந்தி யேற்படுத்துக.

(வெள்ளி நவம்பர் 24, புதுச்சேரி)

புதன்கிழமை ராத்திரி அடித்தது புயற்காற்றில்லை. அது மருத்து தேவர்களின் களியாட்டம். தெருவெல்லாம் ஒடிந்த மரம். காடு தோட்டமெல்லாம் அழிந்த வனம். பயிரெல்லாம் வெள்ளம் போன தரை. 

வீடெல்லாம் இடி சுவர்; பல கிராமங்களிலே கூடை வீடுகள் அநேகமாக ஒன்றுமில்லை யென்று சொல்லுகிறார்கள். கடற்பாலத்திலே போட்டிருந்த ஆஸனப் பலகைகளைக் காற்றுக் கொண்டு போய்விட்டது. கலவை காலேஜில் பெரிய மகிழ மரம் ஒடிந்து விழுந்துவிட்டது. ஜன்னல்கள் சேதம். இன்று வெள்ளிக்கிழமையான போதிலும் காற்றுக்காக ரஜா. பெரிய காலேஜிலும் ரஜா.

அனேகமாக எல்லாக் கச்சேரிகளிலும் ரஜாவாகவே நடந்து வருகிறது. காந்த விளக்குக் கம்பிகளை இப்போதுதான் ஒரு ஓரத்தில் ஓட்டத் தொடங்கியிருக்கிறார்கள். தெருவில் வெட்டுண்டு கிடக்கும் மரங்களை இன்னும் எல்லா இடங்களிலும் எடுக்கத் தொடங்கவில்லை. பல இடங்களில் காக்கைகள் விழுந்து செத்துக் கிடக்கின்றன. இந்த மாதிரி உற்பாதம் எந்தக் காலத்திலும் பார்த்தது கிடையாது என்று பெரிய கிழவர்களெல்லாம் சொல்லுகிறார்கள்.

ராஜாத் தோட்டம்

இந்த ஊரில் ராஜாத் தோட்டம் ஒன்றிருந்தது. ஆஹா! என்ன நேர்த்தியான உபவனம். வாயு அந்தத் தோட்ட முழுவதையும் அழித்துவிட்டான். மரங்களெல்லாம் கையாலே ஒடிக்கப்பட்ட கரும்பைப் போலே ஓடியுண்டிருக்கின்றன. ஊரைச் சுற்றிலும் நாலு குக்கிராமங்கள் ஜலத்துக்குக் கீழே. இங்கே பஞ்சம். வாழைத் தோட்டங்களை இழந்தார் பலர். வெற்றிலைத் தோட்டமிழந்தவர் பலர். நேற்றுப் பகலில் சலவைப் பங்களாவுக்கு எதிரே வயல் நடுவிலுள்ள ஒரு திட்ட மேலே ஏழெட்டுப் பேர் நின்று கொண்டிருந்தார்கள். சுற்றிலும் தண்ணீர். ராத்திரி மழைக்கெல்லாம் அந்தத் திட்டை வெளியிலே நின்று விறைத்தார்கள். பகலிலே ஆட்கள் போய் நீரிலே நீந்தி இழுத்துக்கொண்டு வந்தார்கள். தண்ணீரில் எத்தனை ஜனங்கள், எத்தனை ஆடுமாடுகள் மிதந்து போயிருக்கக் கூடுமோ? கணக்குத் தெரிய இடமில்லை. விறகு வெட்டிகளுக்கு நல்ல லாபம். தென்னை மரத்தை வெட்டித் தள்ளினால் இரண்டு ரூபாய் கூலி. வீடு காப்புக்காக அபாயமாகத் தோன்றும் தென்னை மரங்களையெல்லாம் வெட்டுகிறார்கள்…

அன்னதானம்

அன்னதானம் பல இடங்களில் நடக்கிறது. கஞ்சி விடுகிறார்கள். கஷ்ட நிவர்த்தி போதாது. ஏழை ஜனங்களின் கஷ்டங்கள் பொறுக்கக்கூடிய நிலைமையிலேயில்லை. தெய்வந்தான் ரக்ஷிக்க வேண்டும்.

குறிப்பு:- இந்தக் கடுமையான புயற்காற்றைப் பற்றி கவிச் சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம் என்னும் நூலில் திரு.ஆக்கூர் அனந்தாச்சாரி அவர்கள் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்:-
‘ஓர் நாளிரவு முழுதும் பாண்டியில் கடும் புயலும் மழையும் மாறி மாறி அடித்தன. வெள்ளைக்காரத் தெருவில் பாபு அரவிந்த கோஷும், ஈசுவரன் தர்ம ராஜா கோவில் தெருவிலுள்ள வீடொன்றில் ஸ்ரீமான் பாரதியாரும், மற்றொன்றில் வ.வெ.சு. அய்யரும் குடியிருந்தனர். ஏறக்குறைய எல்லா வீடுகளும் புயலுக்கும் மழைக்கும் சரணாகதி யடைந்து தரையோடு தரையாய்ப் போயின. ஜனங்கள் மழை குளிர் இவற்றால் நடு நடுங்கிப் போயினர். வ.வெ.சு. அய்யர் வீட்டில் முழங்கால் வரை ஜலம். தமது குழந்தைகளைத் தோளின்மேல் சுமந்து நின்றவண்ணமாக இரவெல்லாம் இருந்தார். பாரதியார் அதற்கு முந்தின நாள் குடியிருந்த வீடு திடீரென்று விழுந்தது. ஆனால் அன்று புதிதாய்க் குடி புகுந்த வீடோ அப்பெரும் புயல் மழை இவற்றை லக்ஷியம் செய்யாமல் ஒருவாறு தாங்கியது. ஆனால் நெற்குவியல் மாத்திரம் நனைந்துவிட்டது. பாரதியார் வீட்டுக் கண்ணாடி ஜன்னல்களைச் சுவரில் ஓயாமல் மோத  வைப்பதே காற்றின் வேலையாயிருந்தது. கண்ணாடி உடைந்து தூள் படுத்திருக்கும் அவரது குழந்தைகள் மீது விழுந்தது. அப்போது அவைகளுக்கு எவ்வித ஆபத்தும் வரக் கூடாதெனப் பராசக்தியைப் பிரார்த்தித்தார். இச் சம்பவத்தால், 

‘காற்றடிக்குது கடல் குமுறுது’ முதல்
‘தீனக் குழந்தைகள் துன்பப்படா திங்கு
தேவியருள் செய்ய வேண்டுகின்றோம்.’

வரை உள்ளதோர் ஸ்வாரஸ்யமான கீதம் பிறந்தது.

Monday, June 18, 2012

வெங்கடேசு ரெட்டப் பூபதி - சீட்டுக்கவிபாரிவாழ்ந்திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின்கண்ணே
ஆரிய! நீயிந் நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால்
காரியங்கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்
நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லாயோ?

விண்ணள வுயர்ந்த வெங்கடேசு ரெட்ட மன்னா!
பண்ணள வுயர்ந்த தென்பண், பாவளவுயர்ந்த தென்பா;
எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ் கவிஞர் வந்தால்
அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ?

கல்வியே தொழிலாக் கொண்டாய்! கவிதையே தெய்வமாக
அல்லுநன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய்!
சொல்லிலே நிகரிலாத புலவர் நின்சூழலுள்ளால்
எல்லினைக் காணப்பாயும் இடபம்போல் முற்படாயோ?

எட்டயபுரம் - சுப்பிரமணியபாரதி
1919 மே 2

Sunday, June 17, 2012

காக்காய் பார்லிமெண்ட்

நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். “நாராயண பரம ஹம்ஸர்” என்று சொன்னார். “நீர் எங்கே வந்தீர்?” என்று கேட்டேன். “உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்” என்று சொன்னார். “சரி, கற்றுக் கொடும்” என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார்.
காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.

‘கா’ என்றால் ‘சோறு வேண்டும்’ என்றர்த்தம். ‘கக்கா’ என்றால் ‘என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே’ என்றர்த்தம். ‘காக்கா’ என்றால் ‘எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே’ என்றர்த்தம். இது ஆண்  காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை. ‘காஹகா’ என்றால் ‘சண்டை போடுவோம்’ என்றர்த்தம். ‘ஹாகா’ என்றால் ‘உதைப்பேன்’ என்றர்த்தம். இந்தப்படி ஏறக்குறைய மனுஷ்ய அகராதி முழுதும் காக்கை பாஷையிலே, க, ஹா, க்ஹ-முதலிய ஏழெட்டு அக்ஷரங்களைப் பல வேறுவிதமாகக் கலந்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதை முழுதும் மற்றவர்களுக்குச் சொல்ல இப்போது சாவகாசமில்லை. பிறருக்குச் சொல்லவும் கூடாது. அந்த நாராயண பரம ஹம்ஸருக்குத் தமிழ் தெரியாது. ஆகையால் அவர் பத்திரிகைகளை வாசிக்க மாட்டார். இல்லாவிட்டால் நான் மேற்படி நாலைந்து வார்த்தைகள் திருஷ்டாந்தத்துக்காக எழுதினதினாலேயே அவருக்கு மிகுந்த கோபமுண்டாய் விடும். ஒரு வார்த்தை கூட மற்றவர்களுக்குச் சொல்லக் கூடாதென்று என்னிடம் வற்புறுத்திச் சொன்னார். “போனால் போகட்டும். ஐயோ, பாவம்” என்று நாலு வார்த்தை காட்டி வைத்தேன்.

இன்று சாயங்காலம் அந்த பாஷையை பரீக்ஷை செய்து பார்க்கும் பொருட்டாக, மேல் மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. “நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வதுதான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. “போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?” என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன். அதைப்பற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்காய்ப் பார்லிமெண்டைக் குறித்துப் பேச்சு. அந்த நாற்பதில் ஒரு கிழக் காக்கை ராஜா. அந்த ராஜா சொல்லுகிறது: “மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தை விட ராஜாவுக்கு அதிக சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போயிருந்தேன். அங்கே ருஷியா தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால்படுகிறதாம். ஜார் சக்கரவர்த்தி கக்ஷி ஒன்று. அவர் யோக்கியர். அவரைத் தள்ளிவிட வேண்டுமென்பது இரண்டாவது கக்ஷி. இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்களாதலால் இரண்டையும் தொலைத்துவிட வேண்டுமென்று மூன்றாவது கக்ஷி. மேற்படி மூன்று கக்ஷியாரும் திருடரென்று நாலாவது கக்ஷி. இந்த நாலு கக்ஷியாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசுகிறிஸ்து நாதரைத் தொழ வேண்டுமென்று ஐந்தாவது கக்ஷி. இப்படியே நூற்றிருபது கக்ஷிகள் அந்த தேசத்தில் இருக்கின்றனவாம்.
“இந்த 120 கக்ஷியார் பரஸ்பரம் செய்யும் ஹிம்ஸை பொறுக்காமல் `இந்தியாவுக்குப் போவோம். அங்கேதான் சண்டையில்லாத இடம், இமயமலைப் பொந்தில் வசிப்போம்’’ என்று வந்ததாம். அது சும்மா பட்டணத்துக்கு வந்து அனிபெஸன்ட் அம்மாளுடைய தியஸாபிகல் சங்கத்துத் தோட்டத்தில் சில காலம் வசிக்க வந்தது. அந்தத் தோட்டக் காற்று சமாதானமும், வேதாந்த வாசனையுமுடையதாதலால் அங்கே போய்ச் சிலகாலம் வசித்தால், ருஷியாவில் மனுஷ்யர் பரஸ்பரம் கொலை பண்ணும் பாவத்தைப் பார்த்த தோஷம் நீங்கிவிடுமென்று மேற்படி கொக்கு இமயமலையிலே கேள்விப்பட்டதாம்.

“கேட்டீர்களா, காகங்களே, அந்த ருக்ஷியா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானு கோடியான சம்பளமாம். இப்போது நம்முடைய தேசத்திலேகூடத் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் ராஜா முதலிய ராஜாக்களுக்குக் கூட எல்லா ஜனங்களும் சேர்ந்து பெரிய பெரிய ஆஸ்தி வைத்திருக்கிறார்கள்.

“நானோ உங்களை வீணாக ஆளுகிறேன். ஏதாவது சண்டைகள் நேரிட்டால் என்னிடம் மத்தியஸ்தம் தீர்க்க வருகிறீர்கள். நான் தொண்டைத் தண்ணீரை வற்றடித்து உங்களுக்குள்ளே மத்தியஸ்தம் பண்ணுகிறேன். ஏதேனும் ஆபத்து நேரிட்டால், அதை நீக்குவதற்கு என்னிடம் உபாயம் கேட்க வருகிறீர்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு உபாயம் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். 
இதற்கெல்லாம் சம்பளமா? சாடிக்கையா? ஒரு இழவும் கிடையாது. தண்டத்துக்கு உழைக்கிறேன். எல்லாரையும் போலே நானும் வயிற்றுக்காக நாள் முழுவதும் ஓடி உழன்று பாடுபட்டுத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. அடே காகங்கள், கேளீர்:

“ஒவ்வொரு காக்கைக்கும் நாள்தோறும் கிடைக்கிற ஆகாரத்தில் ஆறிலே ஒரு பங்கு எனக்குக் கொடுத்துவிட வேண்டும். அதை வைத்துக் கொண்டு நானும் என் பெண்டாட்டியும், என் குழந்தைகளும், என் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என் வைப்பாட்டியார் ஏழு பேர், அவர்களுடைய குடும்பத்தார் இத்தனை பேரும் அரை வயிறு ஆகாரம் கஷ்டமில்லாமல் நடத்துவோம். இப்போது என் குடும்பத்துக் காக்கைகளுக்கும் மற்றக் காகங்களுக்கும் எவ்விதமான வேற்றுமையும் இல்லை. ஏழெட்டு நாளுக்கு முந்தி ஒரு வீட்டுக் கொல்லையிலே கிடந்தது. அது சோறில்லை; கறியில்லை; எலும்பில்லை; ஒன்றுமில்லை; அசுத்த வஸ்து கிடந்தது. அதைத் தின்னப் போனேன். அங்கே ஒரு கிழவன் வந்து கல்லை எறிந்தான். என் மேலே இந்த வலச்சிறகிலே காயம். இது சரிப்படாது. இனிமேல் எனக்குப் பிரஜைகள் ஆறில் ஒரு பங்கு கொடுத்துவிட வேண்டும்” என்று சொல்லிற்று.

இதைக் கேட்டவுடனே ஒரு கிழக் காகம் சொல்லுகிறது:

“மகாராஜா, தாங்கள் இதுவரையில்லாத புதிய வழக்கம் ஏற்படுத்துவது நியாயமில்லை. இருந்தாலும் அவசரத்தை முன்னிட்டுச் சொல்லுகிறீர்கள்! அதற்கு நாங்கள் எதிர்த்துப் பேசுவது நியாயமில்லை. ஆனால் தங்களுக்குள்ள அவசரத்தைப் போலவே என் போன்ற மந்திரிமாருக்கும் அவசரமுண்டென்பதைத் தாங்கள் மறந்துவிட்டதை நினைக்க எனக்கு மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. தங்களுக்கு ஒவ்வொரு காக்கையும் தன் வரும்படியில் பன்னிரண்டில் ஒரு பகுதி கட்ட வேண்டுமென்றும், அதில் மூன்றில் ஒரு பாகம் தாங்கள் மந்திரிமார் செலவுக்குக் கொடுக்கவேண்டுமென்றும், ஏற்படுத்துதல் நியாயமென்று என் புத்தியில் படுகிறது” என்று சொல்லிற்று.

அப்பொழுது ஒரு அண்டங் காக்கை எழுந்து: “கக்கஹா, கக்கஹா, நீங்கள் இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்கள். உங்களை உதைப்பேன்” என்றது. வேறொரு காகம் எழுந்து சமாதானப்படுத்திற்று. இதற்குள் மற்றொரு காகம் என்னைச் சுட்டிக்காட்டி: “அதோ அந்த மனுஷ்யனுக்கு நாம் பேசுகிற விஷயம் அர்த்தமாகிறது. ஆதலால் நாம் இங்கே பேசக்கூடாது. வேறிடத்துக்குப் போவோம்” என்றது. உடனே எல்லாக் காகங்களும் எழுந்து பறந்து போய்விட்டன.

இது நிஜமாக நடந்த விஷயமில்லை. கற்பனைக் கதை.

(நன்றி: அழியாச்சுடர்கள்)