Tuesday, July 31, 2012

ஆனந்த மையா!

உலகைத் துறந்தீர் உருவைத் துறந்தீர்
மலையைப் பிளந்துவிட வல்லீர் -- இலகுபுகழ்
ஞானம் தவம் கல்வி நான்குந் துறக்கலீர்
ஆனந்த மையா ஹரீ.


ஆதாரம்: http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=327

Monday, July 30, 2012

போத்தன்னா என்ற தெலுங்கக்கவிராயர்

சென்னைப் பட்டணத்திலிருந்து பம்பாய்க்குப் போகும் (மதறாஸ் தென் மராட்டிய) ரெயில் பாதையில் 'வொண்டி மிட்ட' என்றொரு ஸ்டேஷன் இருக்கிறது. அதற்குப் பக்கத்திலுள்ள 'வொண்டிமிட்ட' என்னும் ஊர் மிகவும் அழகுடையது. 'வொண்டிமிட்ட' என்றால் 'ஒற்றைமலை' என்று அர்த்தம். ஒற்றைக் குன்று; அதனடியிலே பெரிய ஏரி. மேலே இராமலிங்கேசர் ஆலயம். தெலுங்குப் பாஷையில் மிகச் சிறந்த காவியமாக ஸ்ரீ பாகவதத்தை எழுதிய 'போத்தன்னா' என்ற மகாகவி அந்த ஊரிலே பிறந்தவர். இவருடைய பாகவதம் நம்முடைய இராமாயணத்தைப்போல "ஸம்ஸ்கிருத நூலைத் தழுவி எழுதப்பட்ட வழிநூல் ஆயினும் படிப்பவருக்கு முதனூலத்தனை பெருமை தோன்றும்படி அமைந்திருக்கிறது. நாம் கம்ப ராமாயணத்தைக் கொண்டாடுவது போலவே, தெலுங்கர் 'போத்தன்னா' வின் பாகவதத்தைக் கொண்டாடுகிறார்கள். சில தினங்களின் முன்பு 'ஹிந்து'ப் பத்திரிகையில் மேற்படி 'போத்தன்னா'வைப் பற்றி கும்பகோணம் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக இருக்கும் ஸ்ரீ வெங்கடேசய்யர் என்பவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். 'போத்தன்னாவின் ஜன்ம நக்ஷத்திரத்தைக் கண்டுபிடித்து அதனை 'வொண்டிமிட்டா'வில் வருஷந் தோறும் கொண்டாட வேண்டுமென்றும் அதற்குத் தெலுங்கு தேசத்திலும் வெளிப் பக்கங்களிலுமுள்ள ஆந்திர பாஷாபிமானிகள் எல்லோரும் வந்து கூடவேண்டுமென்றும் ஸ்ரீ வெங்கடேசய்யர் சொல்லுகிறார். அவருடைய ஜன்ம நக்ஷத்திரம் நிச்சயமாகத் தெரியாத பக்ஷத்தில், ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியன்று அவர் ஞாபகத்தைக் கொண்டாடலாமென்கிறார். இது சரியான வார்த்தை.

கம்பர், திருவள்ளுவர், இளங்கோ

ஆனால், தமிழ் நாட்டில் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரருக்கும் கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும், அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடியவரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்?

எதனை விரும்புகிறாமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது; பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரிகளையும், வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்போகும். தமிழ்நாட்டில் இப்போது 'புதிய உயிர்' தோன்றியிருப்பதால், நாம் இவ்விஷயத்தில் தமோ குணஞ் செலுத்தாமல், கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகாகவிகளுக்கு ஞாபகச் சிலைகளும் வருஷோத்ஸவங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். திருவள்ளுவர் மயிலாப்பூரிலே பிறந்தவர். அங்கே திருவள்ளுவர் கோயில் இப்போது இருக்கிறது. ஜன்மதினம் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு வேளை அந்தக் கோயிற் பூசாரிக்குத் தெரியக்கூடும்.

ஐந்து மகா காவியங்களிலே சிறந்ததாய் 'சிலப்பதிகாரம்' செய்த இளங்கோ முனிவர் வஞ்சி நகரத்தில் பிறந்தவர். இந்த வஞ்சி நகரம் இப்போது திருச்சினாப் பள்ளிக்கு அருகேயுள்ள கரூர் என்று பண்டித மு. ராகவய்யங்கார் தீர்மானம் செய்கிறார். இந்த ஆசிரியரது ஜன்ம தினத்தையும் நிச்சயமாகச் சொல்வதற்கு வழியில்லை.

மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயிலைச் செம்மையாகக் கட்டவேண்டும். இப்போது மிகவும் ஏழை நிலைமையில் இருக்கிறது. திருவெழுந்தூரிலும், கரூரிலும் ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்த வேண்டும். ஜன்ம தினங்கள் நிச்சயப் பட வழியில்லை. ஆதலால் ஸரஸ்வதி பூஜைக்கு முன்பு அல்லது பின்பு குறிப்பிட்டதொரு தினத்தில் இந்த மகான்களின் ஞாபகத்தைக் கொண்டாடுதல் பொருத்த முடைய செய்கையாகும். நவராத்திரி உத்ஸவங்கள் நமக்குள் வழக்கமாக உள்ளதால், அந்த ஸமயத்தை ஒட்டி நமது மகாகவிகளுக்குத் திருவிழாக் கொண்டாடுதல் ஸுலபமாக இருக்கும்.

பண்டித ஸபைகளையும், பொதுஜன ஆரவாரங்களையும் கோலாஹலமாக நடத்தி, எல்லா வர்ணத்தாரும் எல்லா மதஸ்தரும் சேர்ந்தால், சந்தோஷமும் அறிவுப்பயனும் உள்ள மாண்பும் பெற இடமுண்டாகும். மதபேதங்கள் பாராட்ட இடமில்லாத திருவிழாக்கள்தமிழ் நாட்டில் எவ்வளவு அவசிய மென்பதை ஒவ்வொரு அறிவாளியும் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.

Sunday, July 29, 2012

சிட்டுக் குருவி

சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை, துளித் துளிக் கால்கள்.

இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்துகொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண். மற்றொன்று பெண். இவை தம்முள்ளே பேசிக் கொள்கின்றன. குடும்பத்துக்கு வேண்டிய உணவு தேடிக்கொள்கின்றன. கூடுகட்டிக் கொண்டு, கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசியில்லாமல் காப்பாற்றுகின்றன.

சிட்டுக்குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு அடிக்கடி பொறாமையுண்டாகும். ஆஹா! உடலை எவ்வளவு லாகவத்துடன் சுமந்து செல்கின்றது. இந்தக் குருவிக்கு எப்போதேனும் தலை நோவு வருவதுண்டோ? ஏது, எனக்குத் தோன்றவில்லை. ஒருமுறையேனும் தலை நோவை அனுபவித்த முகத்திலே இத்தனை தெளிவு இருக்க நியாயமில்லை. பயமும் மானமும் மனிதனுக்குள்ளது போலவே குருவிக்கும் உண்டு. இருந்த போதிலும், க்ஷணந்தோறும் மனிதருடைய நெஞ்சைச் செல்லரிப்பது போலே. அரிக்குங் கவலைத் தொகுதியும், அதனால் ஏற்படும் நோய்த்திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்கமாட்டாயா? பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும், அதன் கட்டுகளையும், நோய்களையும், துன்பங்களையும், பொய்களையும் உதறி எறிந்துவிட்டு, நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்லமாட்டேனா? ஆஹா! எத்தனை தேசங்கள் பார்க்கலாம்! எத்தனை நாடுகள், எத்தனை பூக்கள்! எத்தனை மலைகள், எத்தனை சுனைகள், எத்தனை அருவிகள், எத்தனை நதிகள், எத்தனை கடல் வெளிகள்! வெயில், மழை, காற்று, பனி இவையெல்லாம் என் உடம்புக்கு நன்றாய் வழக்கப்பட்டு இவற்றால் நோய்கள் உண்டாகாமல் எப்போதும் இன்ப உணர்ச்சிகளே உண்டாகும் இந்த நிலை எனக்கு அருளபுரிய லாகாதா? குருவிக்குப் பேசத் தெரியும்; பொய் சொல்லத்தெரியாது. குருவியில் ஆண் பெண் உண்டு; தீராத கொடுமைகள் இல்லை. குருவிக்கு வீடுண்டு; தீர்வை கிடையாது. நாயகனில்லை; சேவகமில்லை.

தெய்வமே, எனக்கு இவ்விதமான வாழ்க்கை தரலாகாதா? குருவிக்கில்லாத பெருமைகள் எனக்கும் சில அருள் செய்திருக்கிறாய் என்பது மெய்தான். ஆராய்ச்சி, பக்தி, சங்கீதம், கவிதை முதலிய இன்பங்கள் மனிதனுக்குக் கைகூடும்; குருவிக்கு இயல்பில்லை. ஆனாலும், இந்த இரண்டுவித இயல்பும் கலந்து பெற்றால் நான் பரிபூரண இன்பத்தை அடையமாட்டேனா?

இந்தக் குருவி என்ன சொல்லுகிறது? ''விடு'' ''விடு'' ''விடு'' என்று கத்துகிறது. இஃது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பதுபோலிருக்கிறது.

விடு, விடு, விடு - தொழிலை விடாதே. உணவை விடாதே. பேட்டை விடாதே. கூட்டை விடாதே. குஞ்சை விடாதே. உள்ளக்கட்டை அவிழ்த்துவிடு. வீண் யோசனையை விடு. துன்பத்தை விடு.

இந்த வழி சொல்லுவதற்கு எளிதாயிருக்கிறது. இதனை நன்றாக உணர்ந்து கொள்ளுதல் எளிதன்று. உணர்ந்த பின்னும் இவை வழக்கப்படுத்துதல் அருமையிலும் அருமை.

'விடு' என்ற பகுதியிலிருந்து "வீடு" என்ற சொல் வந்தது. வீடு என்பது விடுதலை. இதை வடமொழியில் முக்தி என்கிறார்கள். இந்த நிலைமையை இறந்துபோனதன் பின்பு பெறவேண்டும் என்று பெரும்பாலோர் விரும்புகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையிலேயே, இப்போதே, அந்நிலையை விரும்புதல் நன்று.

விடுதலையே இன்பத்திற்கு வழி; விடுதலை பெற்றோர் வறுமையிலிருந்து மாறி செல்வமடைவார்கள். மெலிவும் நோயும் நீங்கி வலிமையும் உறுதியும் பெறுவார்கள். சிறுமை நீங்கிப் பெருமை காண்பார்கள் துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துவார்கள்.

வா; நெஞ்சே, பராசக்தியை நோக்கிச் சில மந்திரங்கள் சாதிப்போம்.

நான் விடுதலை பெறுவேன்; எனது கட்டுக்கள் அறுபடும். நான் விடுதலை பெறுவேன்; என்னிச்சைப்படி எப்போதும் நடப்பேன். என்னிச்சையிலே பிறருக்குத் தீங்கு விளையாது. எனக்கும் துன்பம் விளையாது. நன்மைகளே என்னுடைய இச்சைகள். இவற்றை நான் எப்போதும் நிறைவேற்றும்படியாக க்ஷணந்தோறும் எனக்குப் பிராண சக்தி வளர்ந்து கொண்டு வருக. உயிர் வேண்டுகிறேன். தலையிலே இடி விழுந்த போதிலும் சேதப்படாத வயிர உயிர். உடலை எளிதாகவும், உறுதியுடையதாகவும், நேர்மையுடையதாகவும் செய்துகாக்கின்ற உயிர்.

அறிவு வேண்டுகிறேன்; எந்தப் பொருளை நோக்குமிடத்தும், அதன் உண்மைகளை உடனே தெளிந்து கொள்ளும் நல்லறிவு; எங்கும் எப்போதும், அச்சமில்லாத வலிய அறிவு.

பிறவுயிருக்குத் தீங்கு தேடமாட்டேன்; என்னுடைய உயிருக்கு எங்கும் தீங்கு வரமாட்டாது.

பராசக்தி, நின்னருளால் நான் விடுதலை பெற்று இவ்வுலகத்தில் வாழ்வேன்.

Saturday, July 28, 2012

விசாரனை


கைதிகளை அன்புடன் நடத்தவேண்டும். அவர்களும் மனிதர்தானே? ஏன் குற்றம் செய்தார்களேன்று கோபிக்கிறாயா? ஏதோ தெரியாமல் செய்துவிட்டார்கள். ஒழுங்கானபடியிருந்தால் செய்திருப்பார்களா? தெளிந்த புத்தியிருந்தால் நடந்திருக்குமா? நல்ல ஸஹவாஸத்திலே பழக்கப்படுத்தி யிருந்தால் இந்தநிலைக்கு இழிந்திருப்பார்களா? ஜன சமூஹத்திலே சிலரை நாகரீக நிலைமைக்குக் கீழே அமிழ்த்துவைத்த குறை யாரைச் சேர்ந்தது? இப்போதுகூட சிறுபிள்ளைகள் குற்றம் செய்தால் கடூர தண்டனை விதிப்பதில்லை. 'திருத்தம் கூட'த்திலே போடுகிறார்கள். அமெரிக்க, முதலிய நாகரீக தேசங்களில், கைதிகளுக்கு நாள்தோறும் அதிகஸௌகர்யங்களும் க்ஷமையும் இரக்கமும் காட்டி வருகிறார்கள். பழைய காலத்தில் இங்கிலாந்திலும் நமது தேசத்திலும் பெரும்பாலும் எல்லாத் தேசங்களிலும் சொற்பக் "குற்றங்களுக்கெல்லாம் மிகவும் கடூர தண்டனை விதித்து வந்தார்கள். இக்காலத்தில் எந்ததேசத்திலும் அப்படி நிஷ்டூரமான தண்டனை கிடையாது. விசேஷமாக, ராஜ்ய சம்பந்தமான குற்றங்கள் செய்து சிறைப்படுவோரை இங்கிலாந்து முதலிய தேசங்களில் ஸாமான்யக் கைதிகளைப்போல் நடத்துவதில்லை. பலவிதமான குற்றங்களுக்குத் தண்டனை குறைந்துவருகிறது. மேலும் புராதன ராஜ்யங்களிலே மதத் திருத்தம், ராஜ்யத்திருத்தம் முதலியவற்றை விரும்புதல் குற்றம் என்று நீதிக்காரர் பாவித்திருக்கும் பல திருஷ்டாந்தங்கள் உண்டு. இப்போது அப்படியில்லை. பெரும்பான்மையான தேசங்களில் மேற்கண்ட திருத்தக்காரருக்கு ராஜ்ய ஸன்மானமும் உயர்ந்த பதவிகளும் கிடைக்கும். ஆனால், இக்காலத்திலே கூட சில தேசங்களில் ராஜ்யத் திருத்தம், மதத் திருத்தம் முதலியவற்றை நீதிக்காரர், குற்றமென்று சொல்லாவிட்டாலும், சற்றே சினந்த முகத்துடன் நோக்குகிறார்கள். இப்படி நடப்போர் நீதி சாஸ்திரத்தின் ஆதார வலிமைகளை நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை.

தண்டனையின் கருத்து

குற்றஞ் செய்த மனிதனைச் சீர்திருத்தி இனிமேல் அவன் அக்குற்றஞ் செய்யாதபடி அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட வழி செய்யவேண்டும். இந்தக்கருத்துடன் தண்டனை செய்வோரையே தர்ம தேவதை க்ஷமிக்கலாம். பழிக்குப் பழி வாங்கிவிடவேண்டும் என்ற கருத்துடன் தண்டனை செய்கின்ற அதிகாரம் மனிதனுக்கே கிடையாது. ஏழையைப் பணக்காரனாக்கினால் பிறகு திருடமாட்டான். பேராசைக்காரனைக் கொஞ்சம் ஏழையாக்கினால் பிறகு திருடமாட்டான். மூடனுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுத்தால், இந்திரியங்களைக் கட்டியாள முடியாதவனை விரதங்களிலே போட்டால், உயர்ந்த பதவியிலிருப்போர் எப்பொழுதும் நியாயத்தையே செய்து காட்டினால், பிறகு களவு இராது.

''பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகளை அதிகப்படுத்தினால், சிறைச்சாலைகள் குறையும்'' என்பதை அநேக நீதி சாஸ்திரக்காரர் தெரிந்து சொல்லுகிறார்கள். வாத்தியார்களின் தொகை அதிகப்பட்டால் போலீஸ் ஸேவகரின் தொகை குறையும். நியாயமான அதிகாரத்தின் கீழ் பள்ளிக்கூடமும் வாத்தியாரும்மிகுதிப்படும்; போலீஸ் ஸேவகமும் சிறைச்சாலையும் குறையும்.

க்ஷமை

பொதுவாக அநேகரிடத்தில் ஒரு துர்க்குணமிருக்கிறது. தான் ஒரு குற்றஞ்செய்தால், அதைச் சுண்டைக்காய் போலவும், அதே குற்றத்தை மற்றவன் செய்தால், அதைப் பூசணிக்காய் போலவும் நினைக்கிறார்கள். மாமியார் உடைத்தால் மண்கலம்; மருமகள் உடைத்தால் வெண்கலம். மனிதனுக்கு, உண்மையாகவே புத்தித் தெளிவும் யோக்யதையும் தொடங்கும்போது, பிறர் குற்றங்களை க்ஷமிக்கவேண்டுமென்ற எண்ணமுண்டாகிறது. மூடன் தான் செய்த குற்றத்தை மறந்துவிடுகிறான்; அல்லதுபிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான்; அல்லது, பொய்க் காரணங்கள் சொல்லி அது குற்றமில்லை என்று ருஜூப்படுத்தமுயற்சி செய்கிறான். குற்றத்திற்குக் காரணம் அறியாமை; அதைநீக்கும் வழி ஸத்ஸங்கமும் தைர்யமும். பிறர் "குற்றங்களைக்ஷமிக்கும் குணம் குற்றமில்லாதவர்களிடத்திலே தான் காணப்படும். குற்றம் செய்வோர் பரஸ்பரம் மிகுந்த எரிச்சலோடிருப்பார்கள். ஒரு தொழிலைச் சேர்ந்தவர்களுக்குள்ளே பொறாமையுண்டாவது ஸஹஜந்தானே!

நீதி

நீதி என்பது பொது ஒழுக்கம். ஒரு கிராமத்தில்வலியவனுக்கு வேறு நியாயம்; எளியவனுக்கு வேறு நியாயமாக இருந்தால், அங்குள்ள நீதிக்காரரை உடனே மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், கிராமம் விரைவில் அழிந்துவிடும். ஜனங்கள் குற்றஞ்செய்யாமல் நீதிக்காரர் பார்த்துக்கொள்ள வேண்டும். நீதிக்காரர் குற்றஞ் செய்யாமல் ஜனங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். நீதிக்கா ரரிலே இரண்டு பெரிய பிரிவு உண்டு; நியாயஸ்தலங்களிலிருந்து நீதியைப் பரிபாலனம் செய்வோர் ஒரு பகுதி; நீதி (சட்ட) சபைகளிலிருந்து விதிகள் ஏற்படுத்துவோர் மற்றொரு பகுதி; இவ்விரு திறத்தாரும் கோணல் வழியிலே இறங்காமல் அடக்க வேண்டிய பொறுப்பு பொதுஜனங்களைச் சேர்ந்தது.

வாக்குச் சீட்டு

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா - அநேகதேசங்களில் சட்டங்கள் செய்யும் ஸபைக்கு "ஜனஸபை" என்றுபெயரிட்டு ஸபைக்காரர் (மெம்பர்) ஒவ்வொருவரையும் பொதுஜனங்கள் வாக்குச் சீட்டுப் போட்டு நியமனம் செய்யும் வழக்கம் பலவாறாக நடை பெற்று வருகிறது. ஜனஸபையார் நியாயமில்லாத சட்டங்கள் செய்தால், அடுத்த தடவை ஜனங்கள் தம்மைத் தள்ளி விடுவார்கள் என்ற பயம் . ஜனங்களுடைய அதிகாரத்திற்குட்படாத சட்ட ஸபையார் மனம்போனபடியெல்லாம் சட்டம் போடுவார்கள். அதிலே பல விபரீதங்கள் ஏற்படும். வாக்குச்சீட்டு (வோட்) விஷயத்தில் பலவித அனுஷ்டானங்கள் இருக்கின்றன. இங்கிலாந்திலே வாக்குச் சீட்டுப்போடும் உரிமை சிலருக்கில்லை. பிரான்ஸ்தேசத்திலே எல்லாரும் சீட்டுப்போடலாம். அமெரிக்காவிலே பல ஜில்லாக்களிலே பெண்கள் ஜனஸபைக்குச் சீட்டுப் போடுகிறார்கள். இந்த முறையை தேச முழுமைக்கும் பொதுவாக்கி, ராஜ்யத்தில் ஆணையும் பெண்ணையும் நிகராக்கி விடவேண்டும் என்று அந்த நாட்டிலே மிஸ்டர் ஹியூஸ், மிஸ்டர் வில்ஸன் போன்ற பெரிய செல்வாக்கு உடைய தந்திரிகள் விரும்புகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் அமெரிக்காவில் எல்லா நாடுகளிலும் பெண் சீட்டு வழக்கமாய் விடும் என்று தோன்றுகிறது. வாக்குச் சீட்டே புருஷலக்ஷணமென்று மேற்கு தேசத்தார் சொல்லிக்கொண்டு வந்தார்கள். இப்போது பெண்ணுக்குக்கூட அந்த உரிமை இல்லாவிட்டால் இழிவுஎன்று தீர்மானம் செய்து வருகிறார்கள்.

Friday, July 27, 2012

பாரஸீக தேசத்தில் பிரதிநிதி ஆட்சி முறைமை


மார்ச் 16, 1907

கீழ் திசையிலுள்ள தேசத்தாருக்குக் கொடுங்கோலரசு தான் பொருந்தி வருமென்றும், ஜனப் பிரதிநிதிகள் சேர்ந்து பொதுஜன விருப்பத்திற்கிணங்க அரசாகும் முறைமை பொருந்தமாட்டாதென்றும் நம்புவது ஐரோப்பியர்களின் மூட பக்திகளிலே ஒன்று. நமக்குள்ளே கிராம பஞ்சாயத்துக்கள் இருந்ததை வெள்ளைக்காரர்கள் மறந்து விடுகிறார்கள். பூர்வத்திலே பிரதிநிதி ஆட்சி முறைமை இருந்ததா? இல்லையா? என்பதுகூட நமக்கு இப்போது முக்கிய விவகாரமில்லை. இனி நமக்கு இஷ்டமுண்டானால் அவ்வித ஜன ஆட்சி முறைமை ஏற்படுத்திக் கொள்ளமுடியுமா, முடியாதா என்பது இப்போது முக்கியமாக ஆலோசிக்க வேண்டிய விஷயம். முடியாதென்று ஐரோப்பியரின் எண்ணம். ஏனென்றால் கீழ்திசை ஜனங்கள் தம்மைத்தாம் கவனித்துக்கொள்ள முடியாமலிருக்கும் வரை தானே ஐரோப்பியர் கீழ் திசையாரை வந்து இம்சிக்கவும், கொள்ளையிடவும் சாத்தியமாகும். ஆதலால் கீழ்திசைக்காரரின் ஜன்மஸ்வபாவத்திற்கே பொதுஜன ஆட்சி பொருத்தமில்லாத விஷயமென்று ஐரோப்பியர்கள் தாம் நம்புவதுடன், நம்மையும் நம்புமாறு பலவந்தம் செய்து வருகிறார்கள். இடையே ஜப்பான் தேசமென்று வந்து சேர்ந்தது. ஜப்பான் தேசவாஸிகள் பிரதிநிதி ஆட்சி முறைமை ஏற்பாடு செய்துகொண்டு வெகுநேர்த்தியாக நடத்திவரத் தொடங்கிவிட்டார்கள். இதைப் பார்த்தவுடனே ஐரோப்பியர்க்கு மூஞ்சி சுருங்க ஆரம்பித்தது. ஜப்பான் மட்டும் ஏதோ விதிவிலக்காக இவ்வாறு மேம்பாடு பெற்றதேயன்றி மற்ற நாடுகளுக்கெல்லாம் அவ்விதம் நடத்திவர இயலாதென்று நமது ஐரோப்பிய நண்பர்கள் சொல்லத் தொடங்கினார்கள். சமீபத்தில், பாரஸீக (பெர்ஷியா) தேசம் பிரதிநிதியாட்சி முறைமை ஸ்தாபனம் செய்துகொண்டது. நமது ஐரோப்பிய நண்பர்களுக்கு யோசனை ஜாஸ்தியாய் விட்டது. இதென்னடா! வெள்ளை நிறமற்ற ஜனங்களிடம்கூட மனுஷபாவம் இருக்கிறது போல் தோன்றுகிறதே, என்று அவர்கள் ஆச்சரியமடைந்து வருகிறார்கள்.
 

என்ன செய்யலாம். பாவம்! உலகம் முழுவதும் சதாகாலத்திலும் ஐரோப்பியர்களே உன்னத நிலையிலிருந்து தம்மிஷ்டப்படி இம்சை செய்துவர முடியாதென்றே காணப்படுகின்றது!
லண்டன் “டைம்ஸ்” பத்திரிகை இவ்விஷயமாக சில தினங்களின் முன்பு பிரஸ்தாபம் செய்திருப்பதில் பெர்ஷியாவில் ஏற்பட்டிருக்கும் புது ஆட்சி முறைமை நிலைத்து நிற்குமா என்பதைப்பற்றி வெகு சந்தேகத்துடன் எழுதுகிறது. இப்படி இவர்கள் ஒருபுறம் விசாரமடைந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் கீழ்திசை நாடுகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அபிவிருத்தியடைந்து கொண்டு வருகின்றன. இந்தியாகூட பிரதிநிதியாட்சி வேண்டுமென்று கேட்கிறது. சுய ஆட்சி வேண்டுமென்கிறது. சும்மா சொல்வதுமட்டுமா? சீக்கிரம் பெற்றுவிடவும் செய்யும் என்று தோன்றுகிறது. ஸ்ர்வலோக நாயகர்களாகிய வெள்ளை ஜனங்களுக்கு இவ்வாறு அடிக்கடி துக்கங்கள் நேர்ந்து வருவதுபற்றி நாம் மிகவும் அனுதாபம் தெரிவிக்கின்றோம்.

Thursday, July 26, 2012

நேசக் கக்ஷியாரின் “மூட பக்தி”


11 பிப்ரவரி 1921

“ரெயிக் ஸ்தாக்” என்ற ஜெர்மன் ஜனப் பிரதிநிதிகளின் ஸபையில் ஹெர் வோன் ஸிமோன்ஸ் என்ற ஜெர்மானிய மந்திரி சில தினங்களின் முன்பு நேசக் கக்ஷியாரின் பாரீஸ் ஸமாஜத்தில் முடிவு செய்யப்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகைகளைப் பற்றிப் பேசுகையில், ஜெர்மனியுடன் ஸமரஸமான வாதங்கள் செய்து பெறக்கூடியதைக் காட்டிலும் ஜெர்மனிக்குக் “கட்டளை” பிறப்பிப்பதனால் அதிகம் பெறக்கூடுமென்ற மூட பக்தியை நேசக் கக்ஷியார் நீக்கிவிடுதல் தகுமென்று எச்சரிக்கை செய்தார். ஏற்கெனவே ப்ருஸ்ஸெல்ஸ் நகரத்தில் நடைபெற்ற அர்த்த சாஸ்த்ர நிபுணர்களின் ஸங்கத்தில் ப்ரெஞ்ச் பிரதிநிதியாகிய ஸ்ரீமான் லேதூ என்பவரால் திட்டஞ் செய்யப்பட்டு மற்ற ஆங்கில, ப்ரெஞ்சு அதிகாரிகளாலும் அங்கீகரிக்கப் பெற்றிருக்கும் ஏற்பாட்டை நேசக் கக்ஷியார் இங்ஙனம் திடீரென்று கைவிட்டு விட்டதைக் குறித்து ஹெர் வோன் ஸிமோன்ஸ் வியப்புத் தெரிவித்தனர். லண்டனில் நடத்தப்போகிற ஸபைக்கு ஜெர்மன் பிரதிநிதிகளையும் அமைக்கப் போவதாக மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜின் கருத்து. ஆனால் அதன் ஸம்பந்தமான அழைப்புக் கடிதம் இன்னும் தங்கள் வசம் கிடைக்கவில்லையாதலால், அந்த ஸபையில் சேர்வதா, அல்லது அதை பஹிஷ்காரம் செய்வதா என்பதைக் குறித்து இன்னும் ஜெர்மானியர் நிச்சயமுறைக்க இயலாதென்று வோன் ஸிமோன்ஸ் கூறினார் ஆயினும், நேசக் கக்ஷியாரின் தீர்மானங்களை ஆதாரமாகக் கொண்டு மேலே விவாதங்கள் நடத்துவது ஸாத்யமில்லையென்றும், அத்தீர்மானங்களுக்கெதிரிடையாக ஜெர்மானிய ஆலோசனைகளை வெளியிடப் போவதாகவும் அந்த மந்திரி தெரிவித்தார்.

நேசக் கக்ஷியாரின் பாரீஸ் தீர்மானங்களின்படி ஜெர்மனி நாற்பத்திரண்டு வருஷங்களில் இருபத்தீராயிரத்து அறுநூறு கோடி (26000,000,000) தங்க “மார்க்” அல்லது முந்நூராயிரங் கோடி (3000,000,000,000) காயித “மார்க்” செலுத்த வேண்டுமென்றும்,  அதனுடனே, இன்னும் 42 வருஷங்கள் வரை ஜெர்மனியின் ஏற்றுமதிகளில் கிரயத்தில் 100க்கு 12 வீதம் செலுத்திக் கொண்டு வரவேண்டு மென்றும் விதிக்கப்பட்டிருக்கிறது. பிந்திய வகையில் இன்னும் ஓரிரண்டாயிரம் கோடி “மார்க்” அதிகமாகத் தட்டலாமென்று நேசக் கக்ஷியார் நினைப்பதாக வோன் ஸிமோன்ஸ் சொல்லியபோது ரெயிக் ஸ்தாக் அங்கத்தினர் நகைத்தார்களென்று ராய்ட்டர் தந்தி தெரிவிக்கிறது. இதினின்றும் ஜெர்மானியர் நஷ்ட ஈட்டுத்தொகை செலுத்தும் விஷயத்தில் நேசக் கக்ஷியாரின் கட்டளையை உடனே எதிர்ப் பேச்சில்லாமல் நிறைவேற்றுவார்களென்று நினைக்க இடமில்லாமலிருக்கிறது. இந்தத் தீர்மானங்களை ஜெர்மானியர் அங்கீகரியாவிடின், அவர்களுக்கு விதிப்பதாக எண்ணியிருக்கும் தண்டனைகளுக்கிடையே அவர்களை ஸர்வதேச ஸங்கத்தில் சேர்க்கமாட்டோமென்ப தொன்று. ஆனால் அந்த ஸங்கத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி ஜெர்மனி இன்னும் பிரார்த்தனையனுப்பவில்லை யாதலால், அந்த தண்டனை அதிகமாகப் பொருட் படுத்தத் தக்கதன்றென்று வோன் ஸிமோன்ஸ் குறிப்பிட்டபோது “ரெயிக் ஸ்தாக்” அங்கத்தினர் கரகோஷம் புரிந்தார்களாம்.

அமெரிக்கப் பத்திரிகைகளிற் பெரும்பாலனவும் ராஜதந்திரிகளிற் பெரும்பாலோரும், இவ்விஷயத்தில் ஜெர்மனிக்கனுகூலமாகவே பேசுதல் குறிப்பிடத்தக்கது. ஜெர்மானியரால் இந்த பாரத்தைச் சுமக்க முடியாதென்றும், இந்த ஏற்பாட்டிலிருந்து அமெரிக்க வியாபாரத்துக்கு இடையூறு விளையுமென்றும் அமெரிக்காவில் பலமான நம்பிக்கை யேற்பட்டிருப்பதாக ராய்ட்டர் தெரிவிக்கிறார். ஜனாதிபதி வில்ஸனுடைய பத்திரிகையாகிய “நியூயார்க் உலகம்” என்பது- ‘ஜெர்மன் ஏற்றுமதிகளின் மீது விதிக்கும் தீர்வையால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் வஸ்துக்களின் அளவு குறைந்துவிடும். இதினின்றும் விளைபொருள் வாங்குவதற்கு வேண்டிய நாணயம் ஜெர்மனிக்குக் குன்றிப் போகும். எனவே ஜெர்மனி மீளவும் உத்தாரணம் பெறுதல் இயலாது போய்விடும்’ என்றெழுதுகிறது.

இவ்வாறு அமெரிக்காவில் ஜெர்மனிக்குத் தக்க உபபலமிருப்பதைக் கருதுமிடத்தே, வோன் ஸிமோன்ஸ் சொல்லியபடி நேசக் கக்ஷியாரின் திட்டம் வெறும் மூடபக்தியாகத்தான் முடியுமென்ற எண்ணம் எவருக்குமுண்டாகக்கூடும். ஆனால், இங்ஙனம், மஹாயுத்தத்தால் நேசக் கக்ஷியார்களுக்கு விளைந்திருக்கும் நஷ்டங்களை சிரமமில்லாமல் ஜெர்மனியின் தலையில் கட்டித் தாம் தப்பிவிடலாமென்று கருதும் மூட பக்தியைக் காட்டிலும் மற்றொரு பெரிய மூட பக்தியிருக்கிறது. அதைக் குறித்துச் சில வார்த்தைகள் சொல்லுதல் நமது கடமை என்று நினைக்கிறோம். அந்த மூட பக்தி நேசக் கக்ஷியாருக்குள்ளே பொதுவாக இருப்பினும், அவர்களுக்குள் மந்திராலோசனை முதலிய விஷயங்களில் தலைமை பூண்டிருக்கும் இங்கிலாந்தினிடம் மிகவும் விசேஷமாகக் காணப்படுகிறது. இதனை ஒரு திருஷ்டாந்த மூலமாக விளக்குகிறோம்.

ரெயிக் ஸ்தாக்கில் மேற்கூரிய ஸ்ரீ ஸிமோன்ஸின் உபந்யாஸம் இந்த மாஸம் (பெப்ருவரி) முதல் தேதியன்று நடைபெற்றது. அதே முதல் தேதியன்று ஐர்லாந்தில் கார்க் நகரத்தில் ராணுவ விசாரணைக் கொலைத் தண்டனையொன்று நினைவேற்றப்பட்டது. ராணுவ விசாரணையின் தீம் இதுதாஅன். முதலாவது கொலைத் தண்டனை யென்று ராய்ட்டர் தெரிவிக்கிறார். கொரி யென்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவனிடம் அனுமதிச் சீட்டில்லாத கைத் துப்பாக்கி யொன்றிருந்ததாகக் குற்றஞ்சாற்றி, அக்குற்றத்துக்காக அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அடக்கு முறைகளால் ஐர்லாந்துக் கலகத்தை நசுக்கிவிடத் தீர்மானஞ் செய்திருக்கிறார்களென்று இதனால் நன்கு விளங்குகிறது. இதைத்தான் நாம் பரம மூடபக்தியென்று சொல்லுகிறோம். ஜனங்கள் ஏற்கெனவே கொடுமையை எதிர்த்துக் கலகம் புரியும்போது, அந்தக் கலகத்தை அடக்க இன்னும் அதிகக் கொடுமையை வழங்குதல் உபயோகமற்ற தீமையை மிகுதிப்படுத்தக் கூடிய – முறை யென்பதை உலக சரித்திரம் மீட்டும், மீட்டும், மீட்டும் எத்தனையோ திருஷ்டாந்தங்களால் விளக்கியிருக்கிறது. எனினும் அதே முறையைத்தான் ஸிரியாவில் ப்ரான்ஸ் தேசத்தார் கையாள முயலுகிறார்கள். மெஸபொடோமியாவிலும் அராபியாவிலும் ஆங்கிலேயர் அதைத்தான் கையாண்டு வருகிறார்கள். அச்சம், சினம் முதலிய சித்த விருத்திகள் தோன்றும் போது ஸாதாரன மனிதர் புத்திதவறி வேலை செய்தல் ஸஹஜம். அந்த ஸமயத்தில் ஜனங்களுக்கு யுக்தி, அனுபவம், சாஸ்திரம் என்ற மூன்று வித ப்ரமாணங்களும் மறந்துபோய் விடுகின்றன. எனவே புத்தி ஹீனமான கார்யங்கள் செய்து பெரிய நஷ்டங்களுக்குள்ளாகின்றனர். 

ஆனால், இவ்விதமான கார்யங்களை ராஜாங்கத்து மந்திரிகள் செய்வாரானால், அவர்கள் ராஜ்ய பாரத்துக்குத் தகுதியற்றோராய் விடுகிறார்கள். மேலும், மனுஷ்ய ஸஹோதரத்வம், ஸமத்வம் இவை ஐர்லாந்துக்குண்டா, இல்லையா? அரபியாவுக்கும் மெஸபொடோமியாவுக்கும், இந்தியாவுக்கும், எகிப்துக்கும் அவை உண்டா, இல்லையா? இல்லையெனில், ஏன் இல்லை? தெய்வ விதிகளுக்கு மாற்றில்லை. கொடுமையும் அநீதியும் செய்வோர் கொடுமைக்கும் அநீதிக்கும் இரையாவர். பிறரை அடிமைப்படுத்துவோர், தாம் அடிமைகளாக்கப்படுவர். அநியாயம், ஸமத்வ விரோதம் முதலியவற்றால் ஐரோப்பிய மஹாயுத்தத்தில் அபாரமான கஷ்டங்களுக்குட்பட்டும், ஐரோப்பிய ராஜதந்திரிகளுக்கு இன்னும் புத்தி தெளியாமலிருப்பது பற்றி விசனப்படுகிறோம்.

Wednesday, July 25, 2012

ஹே காளீ!

எண்ணி லாத பொருட்குவை தானும்
ஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்த்திடும் ஒளியும்
வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்
தண்ணி லாவின் அமைதியும் அருளும்
தருவள் இன்றென தன்னை யென்காளீ;
மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்.
 
 தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,
வானம் மூன்று மழைதரச் செய்வேன்,
மாறி லாத வளங்கள் கொடுப்பேன்,
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்,
ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்;
நான் விரும்பிய காளி தருவாள்.

Tuesday, July 24, 2012

மாலை

நமக்கு முடியாத காரியத்தைக் கைவிடலாகாது. நம்மைக்காட்டிலும் திறமையுள்ள ஒருவன் கையிலே கொடுத்து அவன் கீழே சிற்றாளாயிருந்து தொழில் பழகிக் கொண்டு, பிறகுநாமாகச் செய்ய வேண்டும். இதை நாட்டுக் கோட்டைச்செட்டிகளும் கவனிக்கலாம். காங்கிரஸ் சபையாரும் கவனிக்கலாம். ஒரு தரம் ஒரு வழக்கம் ஏற்பட்டுப்போனால் பிறகு அதை மாற்ற முடியாது. ஆதலால் புதிய வழக்கத்தைத் தொடங்குவோர் பின் வரக்கூடிய பலாபலன்களைத் தீர யோசனை செய்தபிறகு தொடங்க வேண்டும்.

இது அனேகமாக எல்லா மனிதருக்கும் நினைப்பூட்டவேண்டிய விஷயம். மாறுதல் இயற்கை, நல்லபடியாக மாறிக்கொண்டு போதல் புத்திமான்களுக்கு லக்ஷணம்.

மஹம்மதிய புஸ்தக சாலைகள், வாசகசாலைகள் கல்விச் சங்கங்கள் முதலியவற்றிலே ஹிந்து பண்டிதர்களும், ஹிந்துக்களின் கல்விக் கூட்டங்களிலே முஹம்மதிய வித்வான்களும் வந்து உபந்யாஸங்கள் செய்யும் காட்சி சில நாளாக நமது தேசத்தில் அதிகப்பட்டு வருகிறது. நமது ஜனங்களுக்குக் கொஞ்சம்கொஞ்சம் கண் திறக்கிறது. எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். "ஒரு குழம்புக்குள்ளே இரண்டு "தான்" போட்டாளாம்; ''தான்'' தெரியாதா, குழம்புத் தான்; ஒன்று கத்திரிக்காய், ஒன்று உருளைக்கிழங்கு! இதிலே கத்திரிக்காய், உருளைக்கிழங்கைத் தின்று விட்டதாம்" என்றொரு பச்சைக்குழந்தைக் கதையுண்டு. கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம். முஹம்மதிய சாஸ்திரங்களைக் கற்றுக்கொண்டால்ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்.

ஒரு விரதமெடுத்தால் என்ன வந்தாலும் அதை கலைக்கக் கூடாது. ஆரம்பத்தில் கலைந்து கலைந்துதான் போகும். திருபத்திரும்ப நேராக்கிக் கொள்ள வேண்டும். நமது தேசத்திலே (ஸயின்ஸ்) சாஸ்திரப் படிப்பு வளரும்படி செய்ய வேண்டும் என்றுசில பண்டிதர்கள் அபேக்ஷிக்கிறார்கள். இதற்கு மற்ற ஜனங்களிடமிருந்து தக்க உபபலம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்த நோக்கத்தை மறந்து விடலாகாது. ஊதுகிறபோது ஊதினால் விடிகிறபோது விடியும். சாஸ்திரப்படிப்பு முக்கியம். அதிலேதான் நன்மையெல்லாம் உண்டாகிறது. ஸயின்ஸ் மனித ஜாதியை உயர்த்திவிடும். அது இஹத்துக்கு மாத்திரமேயன்றி பரத்துக்கும் ஸாதனம் ஆகும். காசிக்கு வழி தெற்கே காட்டுகிற மனிதன் கைலாயத்திற்கு நேர்வழிகாட்டுவானோ?

நமது பூர்விகர் ஸயின்ஸ் தேர்ச்சியிலே நிகரில்லாமல்விளங்கினார்கள். அந்தக் காலத்து லௌகீக சாஸ்திரம் நமக்குத் தெரிந்த மாதிரி வேறு யாருக்குந் தெரியாது. இந்தக் காலத்து ஸங்கதிதான் நமக்குக் கொஞ்சம் இழுப்பு.

பசி வந்தால் கோபம் வருகிறது. பசி யடங்கினால்கோபம் அடங்குகிறது. இதைக் கருதி அறிவுடைய தகப்பன்தன் பிள்ளைக்கு வயிறு நிறைய சோறு சேர்த்துக் கொடுத்தபிறகு தான் பக்ஷணம், பழம், மிட்டாய் அல்லாவிட்டால் ஊதுகுழாய் வாங்கிக் கொடுக்கவேண்டும். ஒருவன் ஊருடன்கூடி வாழ விரும்பினால் ஊருக்கு வயிறு நிறைய அன்னம்போடவேண்டும். சிற்சிலர் புதிய புதிதான தர்மங்கள் கண்டுபிடிக்கிறார்கள். ஏழைக்கு அன்னம் போடுவதுதான் உத்தமதர்மம். இது முற்பாட்டனாருடைய தீர்மானம். என்னுடைய தீர்மானமும் அப்படியே. ஜனங்களுடைய வயிற்றுக்குக் கஞ்சிகாட்ட முடியாவிட்டால், அந்த தேசத்தில் எவ்வளவு பெரியவித்வானிருந்தும் பிரயோஜனமென்ன? நாகரீகம் உயர்வதினாலே போஜனம் குறைவாக இருந்தால் அந்த நாகரீகம்அவசியமில்லை. சில நாட்டுக் கோட்டைச் செட்டிகள் நாகரீகமாகி இந்தக் காலத்தில் பணம் செலவுபண்ணும் மாதிரியைப் பார்க்கும்போது பழைய காலத்து அநாகரீகமே விசேஷமென்று தோன்றுகிறது. முன்பெல்லாம் நாட்டுக்கோட்டைச் செட்டியார் கோயில் கட்டுவார், சத்திரங்கள்வைப்பார், பள்ளிக்கூடம் வைப்பார். இதெல்லாம் அநாகரீகமென்று தள்ளிவிட்டுச் சில புது நாகரீகச் செட்டிகள் காட்டுநெருப்பிலே பசு நெய்யைக்கொண்டு கொடுக்கிறார்கள். வேசைக்கும், கூத்துக்கும், வீண்விருந்துக்கும் செலவிடுகிறார்கள். நாகரீகம் வேண்டியதில்லை; முதலாவது சகல ஜனங்களுக்கும்சோறு கண்டுபிடி. நாட்டுக்கோட்டையார் மாத்திரமில்லை. எல்லாச்செட்டியாரும் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

ஒரு விரதமெடுத்தால் அது கலையவிடக்கூடாது. இன்னொருதரம் எதற்காகச் சொல்ல வந்தேன் தெரியுமா? ஒருவன் யோக சாஸ்திரம் பழகப்போய் மௌனவிரதம்எடுத்தான். அப்போது அவனுக்கு வயிற்றுக்கடுப்பு வந்தது.பல கடன்காரர்கள் வந்தார்கள். ஒரு புது சிஷ்யன் வந்தான். இராத்திரியில் இரண்டு திருடர்கள் வந்தார்கள். இரண்டு விருந்துகள் வந்தன. ஒரு கல்யாணம் வந்தது, அவசியமாய்ப்போய்த் தீரவேண்டியது. இன்னும் பல விஷயங்கள்வந்தன, ஒரே நாளில்! அவன் மௌனவிரதத்தைக் கலைத்துவிட்டான். உடனே வயிற்றுக்கடுப்பு திர்ந்து போய்விட்டது. கடன், சிஷ்யன், திருடன், கல்யாணம் தீர்ந்து போய்விட்டன. மறுநாள் ஒரு தொல்லையுமில்லை.

பிறகு "ஹா! இந்த ஸங்கடங்களெல்லாம் இத்தனைவிரைவாகத் தொலைந்துபோமென்று தெரிந்தால் நான் மௌனவிரதத்தைக் கலைத்திருக்கமாட்டேனே" என்று சொல்லி அந்தமனிதன் வருத்தப்பட்டான். எல்லா விரதங்களுக்கும் இதுதான்விதி. நாம் விரதம் எடுத்தவுடனே, அதை நிறைவேற்றத்தக்கமன உறுதி நமக்குண்டா என்று பார்ப்பதற்காக, இயற்கைத்தெய்வம் எதிர்பாராத பல ஸங்கடங்களைக் கொண்டு சேர்க்கும். அந்த ஸங்கடங்களையெல்லாம் உதறி யெறிந்துவிட்டு நாம் எடுத்த விரதத்தை நிறைவேற்றவேண்டும். விரதம் இழந்தார்க்குமானமில்லை. விரதத்தை நேரே பரிபாலனம் பண்ணினால் சக்தி நிச்சயம்.

Monday, July 23, 2012

கிரேக்க தேசத்தின் ஸ்திதி

19 நவம்பர் 1920

கிரேக்க தேசத்து ஜனங்கள் சமீபத்தில் நடந்த “எலெக்‌ஷன்”களில் வாக்குக் கொடுத்திருக்கும் மாதிரியைப் பார்க்கையிலே அவர்கள் முன்னிருந்த கான்ஸ்டன்டைன் ராஜாவே திரும்பப் பட்டத்துக்கு வரவேண்டுமென்று விரும்புகிறார்களென்பது நிச்சயமாகத் தெரிகிறது. இந்தக் கான்ஸ்டண்டைன் ராஜா கெய்ஸர் சக்ரவர்த்தியின் ஸஹோதரிகுக் கணவரென்பதையும், யுத்த காலத்தில் கெய்ஸருக்கனுகூலமாக இருந்தா ரென்பதையும் கருதி, முன்னர் அவரை ராஜ பதவியினின்றும் தள்ளியவர்களாகிய இங்கிலாந்து முதலிய நேசக் கஷியார் அவர் மீளவும் கிரேக்க தேசத்து ராஜாவாகக் கூடாதென்றூ தீர்மானித்திருக்கிறார்கள். கான்ஸ்டன்டைனுக்கப்பால் நேசக் கக்ஷியாரின் கைப்பொம்மையாகிய வெனிஜிலாஸ் என்ற கிரேக்க மந்திரியின் உதவியுடனே, கிரேக்க ஆட்சியைத் தங்களிஷ்டப்படி மாற்றிக் கான்ஸ்டண்டைனுடைய இளைய மகனொருவனைப் பட்டத்தில் வைத்திருந்தார்கள். இந்தப்பிள்ளை ஸமீபத்தில் குரங்கு கடித்ததனால் இறந்து போய்விட்டார். எனவே கிரேக்க தேசம் இப்போது ராஜா இல்லாமல் இருக்கிறது. கான்ஸ்டன்டைன் அரசரின் மற்றொரு குமாரரைப் பட்டத்துக்குக்கிருக்கச் சொல்லியதில் தமது பிதாவே ராஜா ஆகவேண்டுமென்று கருதி அவர் ராஜ பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். கிரேக்க ஜனங்கள் கான்ஸ்டன்டைன் ராஜாவுக்கே மறுபடி பட்டங் கொடுக்க வேண்டுமென்ற நிச்சயத்தோடிருக்கிறார். அந்தந்த தேசத்தாரிஷ்டப்படி அந்தந்த ராஜ்யம் ஆளப்பட வேண்டுமென்று நேசக்கக்ஷியார் வாயால் ஓயாது சொல்லுகிறார்களேயன்றிக் கார்யத்தில் வரும்போது, உலகத்து ராஜ்யங்களில் பலஹீனத்தோடிருப்பவனவற்றையெல்லாம், இவர்களுடைய ஸெளகர்யங்களுக்கிசைந்தபடி இந்நேசக் கக்ஷியார்களின் அபிப்பிராயங்களுக்கு, பலாத்காரமாகவேனும் உட்படுத்த முயற்சி செய்கிறார்கள். கிரேக்க தேசத்து ஜனங்கள் தங்களிஷ்டப்படி ராஜா ஏற்படுத்திக் கொள்வதைக்கூடத் தடுத்துப் பேசத் தங்களுக்கரிகாரமுண்டென்று நேசக் கக்ஷியார் நினைக்கிறார்கள். இதினின்றும் கிரேக்க நேசக் கக்ஷியின் கூட்டத்தை விட்டுப் பிரிந்து செல்லவும் விரும்பக் கூடுமென்று கருதுகிறேன். 

Sunday, July 22, 2012

பாரஸீகத்துக்கு ஸெளக்ய காலம்


19 நவம்பர் 1920

பாரஸீகத்திலுள்ள ப்ரிடிஷ் துப்புகள், இந்தியத் துருப்புகள் முழுவதையும் ப்ரிடிஷ் கவர்ன்மெண்டார் அங்கிருந்து மீண்டு வரும்படி கட்டளை பிறப்பித்து விட்டார்களென்று ஸமீபத்தில் வந்த லண்டன் தந்தியொன்றில் விளங்குகிறது. இதுபோலவே, மெஸபடோமியாவில் ப்ரிடிஷாரால் அமைக்கப்பட்டு வரும் அராபிய ஆட்சியின் வசம் அந்நாட்டை ஒப்புவிப்பதாகிய நோக்கத்துடன் அங்குள்ள இந்திய, பிரிடிஷ் ஸைந்யங்களையும் மிகவும் குறைத்து விடும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சிறிது காலத்தின் முன்புகூட வடமேற்குப் பாரஸீகத்திலிருந்து போல்ஷ்விக்கரைத் துரத்தும் பொருட்டாக ப்ரிடிஷ் படைகள் உபயோகப்படுத்தப் பட்டனவென்று இந்தியா கவர்ன்மெண்டார் வெளியிட்ட அறிக்கையிலிருந்து லண்டன் “டைம்ஸ்” முதலிய ஆங்கிலப் பத்திரிகைகளுக்குக் கோபமூண்டு அவை ப்ரிடிஷ் கவர்ன்மெண்டாரைக் கண்டித்துதெழுகின்றன. “அந்த அறிக்கை உண்மையா, பொய்யா? பொய்யானால் அதனை உடனே ப்ரிடிஷ் கவர்ன்மெண்டார் மறுக்க வேண்டும். அதனை வெளியிட்டது பற்றி இந்தியா கவர்ன்மெண்டாரைக் கண்டிக்கவும் வேண்டும்” என்று லண்டன் “டைம்ஸ்” சொல்லுகிறது. எது  எப்படியிருந்தாலும், பாரஸீகத்திற்கு இவ்விஷயம் பெரியதோர் நிவர்த்தியாகவே கருதத் தக்கது. ஆரம்பத்தில் இதனால் பாரஸீகத்துக்கு அன்னியர்களிடமிருந்து இடையூறுகளும், கஷ்டங்களும் நேரிடலாம். எனினும், காலக்கிரமத்தில், இதினின்றும் பாரஸீகத்துக்கு வயிற்றுப் பூச்சி வெளியேறியதால் மனிதனுக்கு நலமேற்படுதல் போல முற்றிலும் நன்மைதானேற்படுமென்பது எனக்கு நிச்சயம்.

Saturday, July 21, 2012

பதிவிரதை

இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப் போகின்றன.பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகச் சிதறுகின்றன. பலஅநீதிகள் உடைக்கப்படுகின்றன. பல அநியாயக்காரர்கள் பாதாளத்தில் விழுகிறார்கள்.

இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது. பத்திரிகைகள்தான், இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள்.

'ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும்' என்றுஎல்லாரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்ன வென்றால், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ,அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே" காட்டுவதில்லை ஒவ்வொருவனும் ஏறக்குறைய தன் இனத்து ஸ்திரீகளைப் பதிவிரதை என்று நம்புகிறான்.

ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருந்தால் நன்மையுண்டாகும்; பதிவிரதைக்கு அதிக வீரமும் சக்தியும் உண்டு. சாவித்ரீ தனது கணவனை எமன் கையிலிருந்துமீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது. ஆனால், பதிவிரதை இல்லை என்பதற்காக ஒரு ஸ்திரீயை வதைத்து ஹிம்சை பண்ணி அடித்து ஜாதியை விட்டுத் தள்ளி ஊரார் இழிவாக நடத்தி அவளுடன் யாவரும் பேசாமல் கொள்ளாமல் தாழ்வுபடுத்தி அவளைத் தெருவிலே சாகும்படிவிடுதல் அநியாயத்திலும் அநியாயம்.

அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்? கற்பனைக்கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லக்ஷம் ஜனங்கள், ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம் ஆண்கள் பரஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக்கொள்வோம் அதிலிருந்து குறைந்த பக்ஷம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பரபுருஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும். இந்தக் கூட்டத்தில் இருபதினாயிரம் புருஷர்கள் தம் இச்சையை ஓரளவு" நிறைவேற்றுவதாக வைத்துக்கொள்வோம். எனவே குறைந்தபக்ஷம் இருபதினாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக இருத்தல் அவசியமாகிறது. அந்த இருபதினாயிரம் வ்யபசாரிகளில் நூறுபேர்தான் தள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் புருஷனுடன் வாழ்கிறார்கள். ஆனால், அவளவளுடைய புருஷனுக்கு மாத்திரம் அவளவள் வ்யபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது. தெரிந்தும் பாதகமில்லையென்று சும்மா இருப்பாருமுளர்.

ஆகவே, பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனே தான் வாழ்கிறார்கள். இதனிடையே, பாதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும்,கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன. சீச்சீ! மானங்கெட்ட தோல்வி, ஆண்களுக்கு! அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை!

இதென்னடா இது! ''என்மேல் ஏன் விருப்பம் செலுத்தவில்லை?''என்று ஸ்திரீயை அடிப்பதற்கு அர்த்தமென்ன? இதைப்போல் மூடத்தனம் மூன்று லோகத்திலும் வேறே கிடையாது.

ஒரு வஸ்து நம்முடைய கண்ணுக்கு இன்பமாக இருந்தால், அதனிடத்தில் நமக்கு விருப்பம் இயற்கையிலே உண்டாகிறது. கிளியைப் பார்த்தால் மனிதர் அழகென்று" நினைக்கிறார்கள். தவளை அழகில்லை என்று மனிதர் நினைக்கிறார்கள் இதற்காகத் தவளைகள் மனிதரை அடித்தும், திட்டியும், சிறையிலே போட்டும் துன்பப்படுத்த அவற்றுக்கு வலிமை இருப்பதாக வைத்துக் கொள்வோம் அப்படி அவைசெய்தால் நாம் நியாயமென்று சொல்லுவோமா?

தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசு செலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜ பக்தி செலுத்த வேண்டுமென்றும் அங்ஙனம் பக்தி செய்யாவிட்டால், சிறைச்சாலையிலே போடுவோம் என்றும் சொல்லுகிறார்கள்.அப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள் அவமதிக்கிறார்கள்.

அந்த அரசுபோலே தான், ஸ்திரீகள் மீது புருஷர்" செய்யும் ''கட்டாய ஆட்சியும்'' என்பது யாவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக விளங்கும். கட்டாயப்படுத்தி, என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா?

ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்கவேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்தவேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மைப்போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும்.

அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.

Friday, July 20, 2012

வள்ளிப்பாடு

ராகம்-கரஹரப்பிரியை தாளம்-ஆதி


பல்லவி

உனையே மயல் கொண்டேன், -- வள்ளீ!
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்!

சரணங்கள் 

எனையாள்வாய், வள்ளீ, வள்ளீ!
இளமயிலே, என் இதய மலர்வாழ்வே,
கனியே, சுவையுறு தேனே,
கலவியி லேஅமு தனையாய்! -- கலவியிலே

தனியே - ஞான விழியாய்! நிலவினில்
நினைமருவி, வள்ளீ, வள்ளீ!
நீயாகிட வே வந்தேன்.

Thursday, July 19, 2012

சீனாவிலே பிரதி நிதியாட்சி முறைமை

செப்டம்பர் 8, 1906

சீனா தேசமானது இந்தியாவைக் காட்டிலும் ஜனத்தொகையிலே பெரியது; இந்தியாவைப் போலவே மஹா புராதனமான நாகரீகம் உடையது என்ற போதிலும், கால அளவில் அது சிறிது சிறிதாக நாகரீகக்குறை வடைந்து போய் நவீன நாகரீகம் பெற்ற மேற்கு தேசத்தார்களால் சிறிதேனும் மதிக்கப் பெறாத நிலைக்கு வந்துவிட்டது.

ஆனால், ஜப்பான் மேல் திசையாருக்கு பாடம் கற்பித்துத் கொடுத்த பிறகு கிழக்குத் திசை நாடுகள் எல்லாவற்றுக்கும் புதிய உயிர் பிறந்திருக்கிற தல்லவா? மேலும், சீனா இந்தியாவைப்போல பராதீனப்பட்ட நாடில்லை. சுயாதீன சம்பத்துடையது. ஆதலால், அது எளிதில் அபிவிருத்தி பெறுவதைத் தடுக்க எதிரிகள் அதிகமாகவில்லை. எனவே, சீனா ஜப்பானுடைய திருஷ்டாந்தத்தால் உற்சாகம் பெற்றுத்தான் நாகரீகமடைந்து உலகத்து ஜாதியாருக்குள்ளே நிலைமையடைவதற்கு மிகவும் ஆவலுடன் பிரயத்தனங்கள் செய்து வருகிறது.
 
  1.  சேனைகள் நவீன முறைப்படி தயார் செய்யப்படுகின்றன.
  2.  இளைஞர் அன்னிய தேசங்களுக்கு ராஜாங்கச் செலவில் அனுப்பப்பெற்று அன்னிய கைத்தொழில் முறைகள், நாகரீக புதுமைகள், சாஸ்த்ராபிவிருத்திகள் என்பனவற்றை பெற்றுத் திரும்புகிறார்கள்.
  3. மேற்கூறியவர்களுக்கே நாட்டில் உயந்த உத்தியோகங்கள் கொடுக்கப்படுகின்றன. 
  4. பெண்கல்வி அபிவிருத்தியின் பொருட்டாகச் செய்யும் முயற்சிக்கு அளவில்லை.
  5. உள்நாட்டிலேயே பல புதிய காலேஜ்களேற்படுத்தி நாகரீக தேசங்களிலிருந்து தக்க நிபுணர்களைத் தருவித்துக் கல்வி போதிக்கப்பட்டு வருகின்றது.
  6. கீழ்தர ஜனங்களுக்குள்ளேயும் கல்வி பரவும் பொருட்டாகப் பல முயற்சிகள் நடைபெறுகின்றன. இவை போன்ற அபிவிருத்திகள் எத்தனையோ உள.

இப்போது சிறிது காலமாக ஜனப்பிரதிநிதிகளை வைத்து ஆட்சி நடத்தும் மேல்நாட்டு முறைமை அனுசரிக்க வேண்டுமென்று ஆலோசனை நடைபெற்று வந்தது. ஜனப் பிரதிநிதிகளாலே ஜனங்கள் ஆளப்பெறுவதும், மனுஷ சுதந்திரமே தேசாபிவிருத்திக்கு இன்றியமையாத விஷயங்களென்றும் உலக சரித்திரம் நமக்கு நன்கு புலப்படுத்திவிட்டது. ஆதலால், இந்த பெரு விஷயத்தைப் பற்றி சீன கவர்ன்மெண்டார் கருதத் தொடங்கியது மஹா சந்தோஷகரமான சமாசாரம். இதன்பின், சீன சக்ரவர்த்தி “தேச ஜனங்கள் பக்குவநிலை அடைந்தவுடனே” பிரதிநிதியாட்சி முறைமை ஏற்படுத்தத் தான் தயாராயிருப்பதாக ஒரு சன்னத்துப் பிறப்பித்திருக்கிறாரென்பதாக ஓர் தகவல் கிடைத்திருக்கிறது. சுயாதீனப் பிரியர்களாகிய எல்லோர் மனதிலும் இது மகிழ்ச்சியுண்டாக்குமென்று நம்புகிறோம்.

சீனா தனது தூக்க நிலையிலிருந்து எழுந்துவிட்டதானால் பிறகு கீழ்த்திசை முழுவதும் உன்னத நிலைக்கு வந்துவிடுமென்பதில் சந்தேகமில்லை. இது நிற்க, சீன சக்கரவர்த்தியின் சன்னத்திலே “தேச ஜனங்கள் பக்குவ நிலையடைந்தவுடனே” என்று எழுதப்பட்டிருப்பது சிறிது அபிவிருத்திக்கு இடமாயிருக்கிறது. சுயாதீனம் கொடுத்துத்தான் ஜனங்களை சுயாதீனத்துக்கு தகுதியாக்க வேண்டும், அவர்கள் தகுதியடையும் வரை பார்த்திருந்து பிறகு கொடுக்கலாமென்பது மூடத்தனமான யோசனை. நீச்சுத் தெரிந்த பிறகுதான் தண்ணீரில் இறங்கலாமென்பது எவ்வளவு மடமை?

Wednesday, July 18, 2012

தீண்டாமை என்னும் பாதகம்

தேசபக்தி என்பது நம்மவருக்கு அந்நியரால் நேரும் தீண்டாமைகளை மாத்திரம் ஒழிக்கும் இயல்புடையதன்று. நமக்கு நாமே செய்து கொள்ளும் அநீதிகளையும் நீக்குமியல்புடையது. எனவே தேசபக்த சிகாமணியாகிய மஹாத்மா காந்தி நாம் இன்னும் ஒன்பது மாஸங்களுக்குள்ளே ஸ்வராஜ்யம் பெற்றுவிடுவோமென்று சொல்லிய போதிலும், அதற்கொரு முக்கியமான நிபந்தனை சொல்வதை நாம் கவனிக்க வேண்டும்.

தம்முடைய யெளவன இந்தியா பத்திரிகையில் மஹாத்மா பின்வருமாறெழுதுகிறார்:- “சில வகுப்பினரைத் தீண்டாதவராகக் கருதும் பாவத்தை ஹிந்துக்கள் அகற்றினாலன்றி ஸ்வராஜ்யம் ஒருவருஷத்திலும் வராது; நூறு வருஷங்களிலும் வராது. ஹிந்து மதத்தின் மீது படிந்திருக்கும் இந்தக் களங்கத்தை நீக்குதல் ஸ்வராஜ்யம் பெறுதற் கவசியமாகுமென்ற தீர்மானத்தைக் காங்க்ரஸ் ஸபையார் நிறைவேற்றியது நன்றேயாம்... மேலும் இந்தத் தீண்டாமை என்பது மதக் கொள்கைகளால் அனுமதி செய்யப்பட்டதன்று. இது சாத்தானுடைய தந்திரங்களில் ஒன்று” என்கிறார்.

அடிக்கடி “காந்தி கீ ஜேய்” என்ற ஆரவாரம் செய்யும் நம்மவர்கள் இந்த அம்சத்தில் மஹாத்மா சொல்லியிருக்கும் வார்த்தையைக் கவனிப்பார்களென்று நம்புகிறேன். நம்முடைய ஸமூஹ வாழ்வில் அநீதிகள் இருக்கும்வரை நமக்கு ஸ்வராஜ்யம் ஸித்தியாகா தென்ற கொள்கையை நான் அங்கீகரிக்கவில்லை. ஆனால், “வினை விதைப்பவன் வினையறுப்பான்”. நம்மவருக்குள் பரஸ்பர அநீதியுள்ளவரை தேசத்தில் ஸமாதானமிராது. நாம் பலவகைகளிலே துன்பப்பட நேரும்.

Tuesday, July 17, 2012

பரம்பொருள் வாழ்த்து - புதிய ஆத்திச்சூடி

ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

Monday, July 16, 2012

சக்தி திருப்புகழ்

சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்றோது;
சக்தி சக்தி சக்தீ என்பார்-சாகார் என்றே நின்றோது;


சக்தி சக்தி என்றே வாழ்தல்-சால்பாம் நம்மைச் சார்ந்தீரே!
சக்தி சக்தி என்றீ ராகில்- சாகா உண்மை கண்டீரே!


சக்தி சக்தி என்றால் சக்தி-தானே சேரும் கண்டீரே!
சக்தி சக்தி என்றால் வெற்றி-தானே நேரும் கண்டீரே!


சக்தி சக்தி என்றே செய்தால்-தானே செய்கை நேராகும்;
சக்தி சக்தி என்றால் அஃது-தானே முக்தி வேராகும்.


சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ என்றே ஆடோமோ?
சக்தி சக்தி சக்தீ யென்றே-தாளங் கொட்டிப் பாடோமோ?


சக்தி சக்தி என்றால் துன்பம்-தானே தீரும் கண்டீரே!
சக்தி சக்தி என்றால் இன்பம்-தானே சேரும் கண்டீரே!


சக்தி சக்தி என்றால் செல்வம்- தானே ஊறும் கண்டீரோ?
சக்தி சக்தி என்றால் கல்வி-தானே தேறும் கண்டீரோ?


சக்தி சக்தி சக்தீ சக்தீ-சக்தீ சக்தீ வாழீ நீ!
சக்தி சக்தி சக்தீ சக்தீ-சக்தீ சக்தீ வாழீ நீ!


சக்தி சக்தி வாழீ என்றால்-சம்பத் தெல்லாம் நேராகும்;
சக்தி சக்தி என்றால் சக்தி-தாசன் என்றே பேராகும்.