Saturday, March 31, 2012

நாற்குலம்


சாதூர் வர்ண்யம்

சென்ற ‘காங்கிரஸ்’ ஜனஸபை ‘லக்நெள’ நகரத்தில் கூடிக் கலைந்த  பிறகு, ஸ்ரீமான் லோகமாnனய் பால கங்காதர திலகர் தமது இஷ்டர்களுடன் கான்பூருக்கு வந்தார். அங்கு ராமலீலை நாடகவெளியில் பதினையாயிரம் ஜனங்கள் சேர்ந்த பொதுக்கூட்டம் ஒன்று கூடி அவரை ஸ்வராஜ்ய போதனை செய்யும்படி வேண்டினார்கள். ஸ்வராஜ்ய பேச்சுக்கிடையே அவர் ஜாதிக்கட்டை முறித்துச் சொல்லிய சில வார்த்தைகளை இங்கு மொழிபெயர்த்துக் காட்டுகிறேன்.
திலகர் சொன்னார்:- “பழைய காலத்து நான்கு வர்ணப் பிரிவுக்கும் இப்போதுள்ள ஜாதி வேற்றுமைக்கும் பேதமிருக்கிறது. திருஷ்டாந்தமாக, இப்போது ஒரே பந்தியில் இருந்துண்ண விரும்பாதிருத்தல் சாதிப் பிரிவுக்கு லக்ஷணம் என்று பலர் நினைக்கிறார்கள். பழைய காலத்து விஷயம் இப்படியில்லை. 

‘நான்கு வர்ணங்கள் பிறப்பினாலேயல்ல, குலத்தாலும்  தொழிலாலும் உண்டாயின’ என்று கீதை சொல்லுகிறது. அதன்படி பார்த்தால் இப்போது நமக்குள்ளே க்ஷத்திரியர்; எங்கேயிருக்கிறார்கள்? நம்மைக்காப்போர் ஆங்கிலேயர்கள்; ஹிந்துக்களுள் க்ஷத்திரியரைக் காணோம். இந்தக் கான்பூர் பெரிய வியாபார ஸ்தலம். ஆனால், இங்குள்ள வைசியர் பிற தேசத்து வியாபாரிகளின் வசத்தில் நிற்கிறார்கள். செல்லவத்தலைமை நமக்கில்லை; இப்போதுள்ள பிராமணர் தாமே தேசத்தின் மூளையென்று சொல்லுகிறார்கள். ஆனால் இந்த மூளை மண்ணடைந்து போய், நாம் வெளி்யிலிருந்து அதிக மூளை இறக்குமதி செய்யும்படி நேரிட்டிருக்கிறது.

“நான்கு   வர்ணத்தாருக்குரிய நால்வகைத் தொழில்களும் ஹிந்துக்களல்லாத பிறர் நியமனப்ப்டி நடக்கின்றன. நாமெல்லோரும் தொண்டர் நிலையிலே இருக்கிறோம். தேசம் கெட்ட ஸ்தி்தியிலே இருக்கிறது. உங்களுடம்பில் பிராமண ரத்தம் ஓடுவதாகவும் க்ஷத்திரிய ரத்தம் ஓடுவதாகவும் நீங்கள் வாயினால் சொல்லலாம். ஆனால், உங்களுடைய வாழ்க்கை அப்படியில்லை.”
இவ்வாறு திலகர் சொல்லியதிலிருந்து நமது தேசத்திற்கு மிகுந்த நன்மை யுண்டாகக் கூடும். ஏனென்றால், இவர் தேச முழுவதிலும் சுதேசியக் கட்சியாருக்குத் தலைவராக இருப்பது மாத்திரமேயன்றி, மஹாராஷ்டிரத்து வைதீகப் பிராமணர்களி்ன் தலைவராகவும் விளங்குகிறார். வேத சாஸ்திர் ஆராய்ச்சியில் உயர்ந்த கீர்த்திபெற்றவர். நெடுங்காலமாக இடைவிடாது செய்துவரும் ஆராய்ச்சியினாலும், உயர்ந்த மேதையினாலும், நமது பூர்வீகமான ஜாதி தர்மத்தின் உட்கருத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு நமது தற்காலப் பிரிவுகளைக் கண்டிருக்கிறார். புராதன  தர்மமே பின்பற்றத்தக்கது. ஹிந்துக்களாகி்ய நாமெல்லோரும் இவருடைய உபதேசப்படி நடந்தால் நன்மையுண்டாகும். இப்போதுள்ள ஜாதி  விரோதங்களும் தாழ்வுகளும் நீங்கி எல்லோருக்கும் மேன்மையுண்டாகும்.

ஏனென்றால், எல்லாச் செய்கையும் ஈசனுடைய செய்கை. சோம்பர் ஒன்றுதான் இழிவு; அதுதான் சண்டாளத்தனம். எந்தத் தொழிலையும் நேரே செய்வோர் மேன்மக்கள்.
ஒருவன் தான் பிராமணனாக வேண்டும் என்று கருதினால், அவன் உண்மை ஆராய்ச்சியே முதற்காரியமாகக் கொண்டு வாழக்கடவான். க்ஷத்திரிய  பதவி வேண்டுமானால், தன்னுயிர்க்கிரங்காமல் மன்னுயிரைக் காப்பதே விரதமாகக் கொண்டு வாழக்கடவான். இங்ஙனமே மற்றவையும் கொள்ளுக. குணத்தாலும் தொழிலாலும் ஏற்படுகிற  மேன்மையைக் கண்டு யாரும் பழிகூற இடமில்லை. குணத்திலும் தொழிலிலும் கடைப்பட்ட ஒருவன் பிறப்பைக் காரணமாக வைத்துக்கொண்டு, “நான் மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவன்” என்று சொல்லும் போது, மற்றவருக்குக் கோபம் உண்டாகிறது.

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தான்”

என்று, தாம் வள்ளுவர் மரபில் பிறந்தாலும் நமது முன்னோரால் பிரமதேவனுடைய அவதாரமென்று போற்றப்பட்ட திருவள்ளுவ நாயனார் சொல்லுகிறார். ஒருவன் குணகர்மங்களால் பிராமணனாக இருப்பானாகில், அவனுக்கு நாட்டில் முதலாவது மதிப்புண்டாதல் பொதுவாக எல்லாத்தேசங்களிலும் இயற்கையாக நடந்து வரும் நெறி. ஏனென்றால் எல்லா தொழில்களுக்கும் சாஸ்திரமே நேத்திரம். சரீர இன்பங்களைத் தேடுவதே முதற்காரியமாகக்  கொண்ட மனிதர் மிகுந்து போயிருக்கும் இவ்வுலகத்தில், சிலர் அந்தப் படியைக் கடந்து மேல் ஏறிப்போய் உண்மை தேடுவதே முதற்காரியமென்றும், மற்றதெல்லாம் அதற்குப் பிறகுதான் என்றும் உணர்ந்து நடப்பாராயின், அவரே தலை மக்கள். மற்ற வருணத்து நெறிகளையும் இப்படியே வகுத்தறிந்து கொள்ளுதல் எளிது.

Friday, March 30, 2012

வேப்ப மரம்


26 ஜூன் 1919                                 சித்தார்த்தி ஆனி 7

இளவேனிற்காலத்தில் ஒரு நாள். காலை வேளையில் நான் மலயகிரிச் சார்பிலே தனியாக உலாவிக் கொண்டிருந்தேன். நெடுந்தூரம் சுற்றிய பி்றகு என் உடம்பிலே சற்றே இளைப்புண்டாயிற்று. அந்த இளைப்புத் தீரும் பொருட்டாக அங்கொரு தோப்புக்குள்ளே போய் ஒரு வேப்ப மரத்தடியில் படுத்துக் கொண்டேன். இன்பமான காற்று வீசிற்று. சிறிது நேரத்துக்குள் கண்ணயரந்து நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன். அப்போது நான் கண்ட அபூர்வமான கனவை இங்கெழுதுகிறேன்.

நான் தூங்கிக் கொண்டிருக்கையிlல், “ஏ மனிதா, ஏ மனிதா, எழுந்திரு; எழுந்திரு” என்று அமானுஷிகமாக ஒலியொன்று கேட்டது. இந்த ஒலியைக் கேட்டவுடன் கண்ணை விழித்தேன். உண்மையாகவே விழிக்கவில்லை. கனவில் விழித்தேன். அதாவது விழித்துக் கொண்டதாகக் கனவு கண்டேன். 

விழித்து, “யார் கூப்பிட்டத்து?” என்று கேட்டேன்.

“நான் தான் வேப்பமரம்; நான் தான் கூப்பிட்டேன்; எழுந்திரு” என்று மறுமொழி உண்டாயிற்று.
உடனே நான் யோசிக்கலானேன்:-

“ஓஹோ, ஓஹோ! இது பேயோ, பிசாசோ, யக்ஷர், கிந்நரர், கந்தர்வர் முதலிய தேவ ஜாதியாரோ, வனதேவதைகளோ, யாரோ தெரியவில்லை. இல்லாவிட்டால் வேப்பமரம் எங்கேனும் பேசுவதுண்டோ? அட, போடா, பேயாவது? அதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை யன்றோ? நாம் உண்மையாகவே கண்ணை விழித்து ஜாக்ர நிலையடையவில்லை. இன்னும் கனவு நிலையிலே தானிருக்கின்றோம். இந்த ஒலி கனவில் கேட்கும் கற்பனையொலி” – இங்ஙனம் நான் யோசனை செய்துகொண்டிருக்கையில்,  “ஏ மனிதா, ஏ மனிதா, எழுந்திரு” என்று மறுபடி சத்தமுண்டாயிற்று. 

“நீ யார்?” என்று பின்னுங் கேட்டேன். 

“நான் வேப்பமரம். என் அடியிலே தான் நீ படுத்திருக்கிறாய். உனக்குச் சில நேர்த்தியான விஷயங்கள் கற்றுக் கொடுக்கும் பொருட்டாக எழுப்புகிறேன்” என்று மறுமொழி வந்தது. 

அப்போது நான்:- “சரி, நமக்குத் தெரியாத விஷயங்கள் உலகத்தில் எத்தனையோ உண்டென்று ஷேக்ஸ்பியரே சொல்லியி்ருக்கிறார். அந்தப்படி மரங்களுக்குப் பேசும் சக்தி இருக்கலாம். அவ்விஷயம் நமக்கு இதுவரை தெரியாமலிருக்கலாம். ஆதலால் இந்த மரத்துடன் ஸம்பாஷணை செய்து விஷயத்தை உணர்ந்து கொள்வோம்” என்றெண்ணிக் கண்ணைத் திறந்துகொண்டெழுந்து நி்ன்றேன். 

(உண்மையாகவே எழுந்து நிற்கவில்லை. எழுந்து நின்றதாகக் கனவு கண்டேன்.)
எழுந்து நின்று கொண்டு:- “வேப்பமரமே. உனக்கு மனித பாஷை எப்படித் தெரிந்தது? மனிரதைப்போல் நெஞ்சு, வாய், தொண்டை, அண்ணம், நாக்கு, பல், உதடு என்ற கருவிகளில்லாத போது மனித பாஷை பேசுவது ஸாத்யப்படாதே? எங்களிலே பல் மாத்திரம் விழுந்தவர்களுக்கும் உச்சரிப்பு நேரே வராமல் போகிறதே. அடி நாக்கில்லாதவர்கள்  ஊமையாய்ப் போகிறார்களே. அப்படியிருக்க நீ மனித சரீரமே யில்லாமல் மனித பாஷை எங்ஙனம் பேசுகிறாய்?” என்று கேட்டேன். 

அப்போது வேப்பமரம் சொல்லுகிறது:-

“கேளாய், மானுடா. மனிதனுக்கு ஒரே வாய்தானுண்டு. எனக்கு உடம்பெல்லாம் வாய். மனித பாஷை பேசுவதற்கு வாய் முதலிய புறக்கருவிகள் மனிதரைப் போலவே யிருத்தல் அவசியமென்று நீ நினைக்கிறாய். ஸாதாரண  ஸ்திதியில் அவை  அவசியந்தான். ஆனால், நான் ஸாதாரண மரமில்லை. நான் அகஸ்த்ய முனிவரின் சிஷ்யன். தமிழ் பாஷையில் எனக்குள்ள ஞானம் இக்காலத்தில் அகஸ்த்யரைத் தவிர வேறு யாருக்குமே கிடையாது…”

வேப்பரம் பி்ன்னுஞ் சொல்லுகிறது:

“நடந்த கதையை அடியிலிருந்து சொல்லுகிறேன். மானுடா, கவனத்துடன் கேள். எனக்கு இப்போது முப்பது வயதுதானாகிறது. நான் இளமரம். பதினைந்து வருஷங்களின் முன்பு ஒரு நாள் வஸந்த காலத்தி்ன்போது இராவேளையில் ஆச்சர்யமான நிலா வீசிக்கொண்டிருந்தது. நான் விழித்துக் கொண்டிருந்தேன். ஸாதாரணமாக மரங்கள் மனிதரைப் போலவே பகல் முழுவதும் விழித்துக் கொண்டிருக்கும். இராவானவுடனே தூங்கும். அன்றிரவு எனக்கு எந்தக் காரணத்தாலோ தூக்கமே வரவில்லை. நிலாவையும், வானத்தையும், சூழ்ந்திருக்கும் மரங்களையும் பார்த்துக்கொண்டு பிரமாநந்தத்தில் மூழ்கியிருந்தேன். அப்போது  பதினாறு வயதுடைய, மிகவும் அழகான மனித ஆண் பிள்ளையொருவனும், அவனைக் காட்டிலும் அழகான பன்னிரண்டு வயதுடைய மனிதப் பெண் ஒருத்தியும் அதோ தெரிகிற நதியில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். சிறிது நேரத்துக்குள்ளே அவ்விருவரும் ஸாமான்ய மனிதரில்லையென்பது எனக்குத் தெளிவாய்விட்டது. சிறகுகளில்லாமல் அவர்கள் வானத்தில் பறந்து  விளையாடுவது கண்டேன். பிறகு ஒருவருக்கொருவர்  பேசிய வார்த்தைகளிலிருந்து அவர்கள் இன்னாரென்று தெரிந்து கொண்டேன். அவ்விருவரும் யாரெனில் அகஸ்திய மஹரிஷியும் தாம்ரபர்ணியம்மனும். அகஸ்தியர் ஸாதாரண காலத்தில் கட்டை விரலளவுடைய வடிவந் தரித்திருப்பது வழக்கம். ஆனால் அவர் காமரூபி. அதாவது, நினைத்தபோது நினைத்த வடிவந் தரிக்கும் திறமை படைத்தவர். தாம்ரபர்ணியம்மனும் அப்படியே. ஆதலால் அவ்விருவரும் அப்போது அதி சுந்தரமான மனுஷ்ய ரூபந்தரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கிரீடை பொழுது விடியும் வரை நடந்தது. அப்பால் தாம்ரபர்ணி மறைந்துவிட்டாள்….”

வேப்பமரம் சொல்லுகிறது::- “கேளாய், மானுடா, கவனத்துடன் கேள். தாம்ரபர்ணியம்மன் பகலைக் கண்டவுடன் மறைந்து சென்று விட்டாள் அகஸ்தியர் மாத்திரம் தனியாக வந்து எனதடியில் இப்போது நீ நிற்குமிடத்தில் படுத்துக்கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்தனர். எனக்கு அந்த ஸமயத்தில் அகஸ்த்யருடைய சக்திகளெல்லாம் நன்றாகத் தெரியாது. ஆதலால், அவர் யோகத்திலிருக்கி்றாரென்பதை அறியாமல் ஜலக்கிரீடையின் சிரமத்தால் ஸாதாரண நித்திரையி்லிருக்கிறாரென்று நினைத்தேன். பொழுது விடிந்து ஏறக்குறைய ஒரு ஜாமமாயிற்று. அப்போது அதோ, உனக்கெதிரே ஒரு புளியமரம் நிற்கிறது பார் – அந்த மரத்தின் கீழேயுள்ள புற்றிலிருந்து ஒரு பெரிய நல்லபாம்பு ‘ஹுஸ்’ என்ற சீத்காரம் செய்துகொண்டு அகஸ்தியர் படுத்திருந்த இடத்தை  நோக்கிப் பாய்ந்து பாய்ந்து வரலாயிற்று. அதைக் கண்ட மாத்திரத்தில் நான் திடுக்கிட்டுப் போனேன். ஐயோ; இந்தக் கொடிய பாம்பு இந்த மஹா புருஷனைக் கொன்றுவிடப் போகிறதே! இவரை எப்படியேனும் கண் விழிக்கும்படி செய்வோமானால் தம்முடைய தவ வலிமையினால் பாம்பை அடக்கிவிடுவார்” என்றெண்ணி அவரை விழிக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் என் இலைகளை அவர் மீது சொரிந்தேன். அவர் விழிக்கவில்லை. இதற்குள் பாம்பும் அவரை நெருங்கி வந்து அவருடைய பாதத்தில் இரண்டு முறை கடித்தது. மூன்றாம் முறை கடிக்கும் பொருட்டும் படத்தைத் தூக்கிற்று. அத்தருணத்தில் அவர் கண்ணைத் திறந்து பார்த்துக் கயிற்றைத் தூக்குவதுபோல் எளிதாக அந்தப் பாம்பைக் கையால் எடுத்துக் கழுத்தில் வளைய வளையைச் சுற்றிக்கொண்டார். அந்தப் பாம்பும் கயிற்றைப் போலவே ஒன்றும் செய்யாமல் பரம ஸாதுவாக அவர் கழுத்தில் கிடந்தது. கடியுண்ட இடத்தில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அதில் அவர் கொஞ்சம் மண்ணை யெடுத்துப் பூசினார். புண் உடனே ஆறி்ப்போய் சாதாரணத் தோலாய்விட்டது. இதைக் கண்டு நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். இப்படிப்பட்ட மஹானிடம் ஒரு வார்த்தை பேசக்கூட யோக்கியதையில்லாமல், ஊமை மரமாய்ப் பிறந்து விட்டோமே என்றெண்ணித் துயரப்பட்டேன். எப்படியேனும் எனது கருத்தை அவருக்குத் தெரிவிக்க விரும்பி அவர் காலின்மீது சில மலர்களையும் இலைகளையும் சொரிந்தேன். அவர் தலையை நிமிர்த்தி என்னை  நோக்கி;-

‘வேப்பமரம’ என்று கூப்பிட்டார்.

வேப்பமரம் பின்னுங் கதை சொல்லுகிறது:- கேளாய், மானுடா, கவனத்துடன் கேள். இங்ஙனம் என்னை அகஸ்த்யர் கூப்பிட்டவுடனே என்னையறியாமல் என் கிளைகளிலுள்ள வாய்களினின்றும், ‘ஏன் முனிவரே?’ என்ற தமிழ் சொற்கள் உதித்தன. என் உடம்பு முழுவதும் புளகிதமாய் விட்டது. மாற்றிப் பிறக்க வகையறிந்து கொண்டேன். வேப்பமரப் பிறவி போய் எனக்கு மனிதப் பி்றவி யுண்டாயிற்றென்று தெரிந்து கொண்டேன். உடம்பு மாறவில்லை. உடம்பு மாறினாலென்ன, மாறாவிட்டாலென்ன? நாம் உடம்பில்லை. நான் ஆத்மா. நான் போதம். நான் அறிவு. திடீரென்று வேப்பமரச் சி்த்தம் மாறிப்போய் எனக்குள் மனுஷ்ய சித்தம் சமைந்துவிட்டது. மனுஷ்ய சித்தம் ஏற்பட்டாலன்றி மனித பாஷை பேச வருமா? கோடி ஜன்மங்களில் நான் பெற்றிருக்க வேண்டிய பயனை அந்த முனிவர் எனக்கு ஒரே கணத்தில் அருள் செய்தார். எனக்கேற்பட்ட ஆனந்த மிகுதியால் என் பூக்களையும் இலைகளையும் கணக்கில்லாமல்  அவருடைய பாதத்தின் மீது வர்ஷித்தேன். அவர் மி்கவும் மகிழ்ச்சி பூத்தவராய் ‘ஏ, வேப்ப மரமே, நேற்றிரவு நானும் தாம்ரபர்ணியும் இங்கு ராம நதியில் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்த காலத்தில் நீ பார்த்து பெரு  மகிழ்வெய்திப் பல ஆசீர்வாதங்கள் கூறினாய். அதை நான்  ஞான திருஷ்டியால் உணர்ந்தேன். அப்பால் சிறி்து, நேரத்திற்கு முன்பு நான் யோக சமாதியிலிருந்த போது இந்தப் பாம்பு வருவதைக் கண்டு நீ என்னைக் காக்க விரும்பி என்னை எழுப்பும் பொருட்டாக என் மீது நின் இலைகளையும் பூக்களையும்  சொரிந்தாய். இங்ஙனம் நீ என்னிடம் காட்டிய அன்பிற்குக் கைம்மாறாக உனக்கு நான் ரிஷிபோதம் கொடுக்கிறேன். இதனால் உனக்கு ஸகல ஜந்துக்களின் பாஷைகளிலும் சிறந்த ஞானம் இயல்பாகவே உண்டாய்விடும். எல்லா ஜந்துக்களினிடத்திலும் ஸமமான பார்வையும் ஸமமான அன்பும் உண்டாகும். எல்லா உயிர்களிடத்திலும் தன்னையே காண்பதாகிய தேவ திருஷ்டி ஏற்படும். இவற்றால் நீ ஜீவன் முக்தி பெறுவாய்’ என்றார். அது முதல் நான்  அவர் கூறிய சக்திகளெல்லாம் பெற்று யாதொரு கவலையுமில்லாமல் யாதொரு பயமுமில்லாமlல் ஜீவன் முக்தி பதமடைந்து வாழ்ந்து வருகிறேன்” என்று வேப்பமரம் சொல்லிற்று. உடனே நான் அந்த வேப்பமரத்தடியில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினேன். “உனக்கென்ன வேண்டும்?” என்று கேட்டது. அப்போது நான் அந்த வேப்ப மரத்தை நோக்கி:- “உனக்கெப்படி அகஸ்தியர் குருவோ அப்படியே நீ எனக்கு குரு. அந்த முனிவர் உனக்கருள் புரிந்த ஜீவன் முக்தி பதத்தை நீ எனக்கருள் புரியவெண்டும்” என்று பிரார்த்தனை செய்தேன்.

“கொடுத்தேன்” என்றது வேப்ப மரம்…

இந்த ஸமயத்தில் நான் உண்மையாகவே தூங்கந் தெளிந்து கண்ணை விழித்தெழுந்த் நின்றேன்; எழுத்தாணிக் குருவிகளும், சிட்டுக் கருவிகளும் வேறு பலவிதமான குருவிகளும் பறந்து கூவி விளையாடிக் கொண்டிருந்தன. அணில்களும் ஒந்திகளும் ஆடியோடிக்கொண்டிருந்தன. காக்கைகளும், கிளிகளும், பருந்துகளும், தட்டான் பூச்சிகளும், வேறு பலவகை வண்டுகளும் ஒளிக்கடலிலே களித்தோணி கொண்டு நீந்துவதுபோல் உலாவி வந்தன. கண்ணுக்குப் புலப்படாத மறைவிலிருந்து ஓராண் குயிலும் ஒரு பெண் குயிலும் ஒன்றுக் கொன்று காதற் பாட்டுகள் பாடிக்கொண்டிருந்தன.

ஆண்குயில் பாடுகிறது:-
“துஹூ, துஹூ, துஹு
துஹூ, துஹூ, துஹு
ராதா ரே.”
[இதன் பொருள்:-
நீ, நீ, நீ
நீ, நீ, நீ
ராதை யடீ.]
“துஹூ, துஹூ, துஹு
ராதா க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண.”

வேப்பமரம் தனது புதிய இலைகளை வெயிலில் மெல்ல மெல்ல அசைத்துக் கொண்டிருந்தது. “என்ன ஆச்சர்யமான கனவு கண்டோம்” என்றெண்ணி யெண்ணி வியப்புற்றேன். இதற்குள் வெயிலேறலாயிற்று. எனக்கும் பசியேறத் தொடங்கிற்று. வேப்ப மரத்துக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுத் தோப்பினின்று புறப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

Thursday, March 29, 2012

ஜப்பானியக் கவிதை


18 அக்டோபர் 1916                                    நள ஐப்பசி 5

ஸமீபத்தில் “மார்டன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர்  ஒரு லிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வதென்னவென்றால்:- இங்கிலாந்து அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன?

மேற்குக் கவிதையில் சொல்மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும், பல சொற்களைச் சேர்த்து வெறுமே, பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக்கொண்டே போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகமிருக்கிறது. தம்முடைய மனத்திலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர் கதைகளெழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்.

ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. கூடை கூடையாகpப பாட்டெழுதி அச்சிடவேண்டும் என்ற ஒரே ஆவலுடன் எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாகமாட்டான். கவி்தை யெழுதுபவன் கவியன்று; கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனி்மை, மோனம், பலர்களின் பேச்சு இவற்றிலே ஈடுபட்டுப் போய், இயற்கையுடனே ஒன்றாகி வாழ்பவனே கவி.

~

ஜப்பானிய பாஷையில் பதினேழசை கொண்ட ‘ஹொக்கு’ என்ற பாட்டு ஒரு தனிக் காவியமாக நி்ற்கும். முப்பத்தோரசையுள்ள ‘உத்தா’ (உக்தம்) என்பதும் அங்ஙனமே. அயோநே நோகுச்சி  தமது கருத்தை விளக்கும் பொருட்டுச்  சில திருஷ்டாந்தங்கள் காட்டியிருக்கிறார். அமெரிக்காவில் மிஸ் ரீஸ் (Miss Lizette Woolworth Reese) என்பதோர் கவிராணி யிருக்கிறார். வேண்டாதவற்றைத் தள்ளிவிடுவதில் அந்த மிஸ் ரீஸ் என்ற பெண் புலவர்  பெயர் வாங்கியிருக்கிறார். அநாவசியமான பதச் சேர்க்கை, அநாவசியமான கருத்து – விளக்கம் என்ற இரண்டுமில்லாமல் முத்துப்போலே பதங்கள் கோக்கும் நல்ல தொழிலாகிய, அக்கவிராணி இங்கிலீ்ஷ் பாஷையில் எழுதியிருக்கும் அடிகள் சிலவற்றை நோகுச்சி எடுத்துக் காட்டுகிறார்.

மழை
(மிஸ் ரீஸ் எழுதியதன் மொழிபெயர்ப்பு மாதிரியடிகள்)

ஓ! வெண்மையுடையது; மழை இளையது. கூரை மேலே சொட்டுச் சொட்டென்று விழுகிறது; வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் ஓடி வருகின்றன. பூண்டுகளின் மணம். பழமையின் நினைவு. இவை யெல்லாம் புல்லாந்தரையிலே குணந் தெரிகிறது. உடைந்த கண்ணாடித் துண்டு போலே. (1)

சிறிய வெளிக்கதவுகள் புடைக்கிறது பார். அதுவரை செவந்த கொடிப்பூண்டுகள்  நேரே ஓடிச் செல்லுகின்றன. (2(

ஓ! வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் வந்து நுழைகின்றன. கற்பூரச் செடியின் மணம். பழைய மகிழ்ச்சி பழைய துன்பம்; இளைய வெண்மழையிலே கிடைத்தன.  (3)

மேற்கூரிய பாட்டை எடுத்துக்காட்டிவிட்ட பிறகு நோகுச்சி சொல்லுகிறார்:-
“வெண்மையுடையது; மழை இளையது” என்ற முதலடியில் வியப்பில்லை. அதிஸாமான்யமான வார்த்தை. கடைசி விருத்தம் வயிரமபோலிருக்கிறது. அதை மாத்திரம் தனிக் கவிதையாக வைத்துக்கொண்டு மற்றதையெல்லாம் தள்ளிவிடலாம். ஜப்பானியப் புலவன் அப்படியே செய்திருப்பான். சிறிய பாட்டுப்போதும். சொற்கள், சொற்கள்,  சொற்கள் – வெறும் சொற்களை வளர்த்துக் கொண்டு போய் என்ன பயன்?

ஜப்பானிலே பதினெட்டாம் நூற்றாண்டில் “பூஸோன் யோஸாஹோ” என்ற ஜப்பானியக் கவிராயர் ஒரு ‘ஹொக்கு’ (பதினெழசைப்பாட்டு) பாடியிருக்கிறார். அதன் மொழிப்பெயர்ப்பு:-
“பருவமழையின் புழையொலி கேட்பீர், இங்கென் கிழச் செவிகளே.” இந்த ஒரு வசனம் ஒரு தனிக் காவியம். பாட்டே இவ்வளவு தான்.

மேற்படி ஹொக்க்ப் பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மனனம் செய்யவேண்டும். படிப்பவனுடைய அனுபவத்திற்கு தக்கபடி அதிலிருந்து நூறு வகையான மறைபொருள் தோன்றும். பல பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்ந கவிதையன்று. கேட்பவனுள்ளத்திலே கவிதை யுணர்வை எழுப்பி விடுவது சிறந்த கவிதை.

~

மற்றுமொரு நேர்த்தியான “ஹொக்குப்” பாட்டு. வாஷோ ம்த்ஸுவோ (Basho Matsuso) என்றொரு ஜப்பானியக் கவியிருந்தார். இவர் வறுமையே விரதமாகப் பூண்டிருந்தாராம். ஒரு சீடன் இவரிடம் கல்வி கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே இவரிடம் மூன்று ரியே (அதாவது ஏறக்குறைய முப்பது வராகன்) காணிக்கையாகக் கொடுத்தான். இவர் ஒருநாளுமில்லாதபடி புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தமக்குத் தொல்லையாதலால் வேண்டியதில்லை என்று திரும்பக் கொடுத்துவிட்டாராம்.

இவருக்கு காகா (Kaga) என்ற ஊரில் ஹொகூஷி என்றொரு மாணாக்கர் இருந்தார். இந்த  ஹொகூஷியின் வீடு தீப்பட்டெரிந்து போய்விட்டது. அந்தச் செய்தியை ஹொகூஷிப் புலவர் தமது குருவாகிய “வாஷோ-மத்ஸுவோ” என்பவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதியனுப்பினார்.
“தீப்பட்டெரிந்தது: வீழு மலரின் – அமைதியென்னே!”

மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும்போது எத்தனை அமைதியுடனிருக்கிறதோ அத்தனை அமைதியுடன் மனிதனுக்கு வருந்துன்பங்களை நோக்குகிறான். .‘வீடு தீப்பட்டெரிந்தது. ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போகவில்லை’ என்ற விஷயத்தை ஹொகூஷி இந்தப்  பாட்டின் வழியாகத் தெரிவித்தார்.

~

“சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” ஜப்பானியக் கவிதையின் விஷேசத் தன்மையென்று நோகுச்சிப் புலவர் சொல்வதுடன், ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது. “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.” கிழக்குத் திசையின் கவிதையிலேயே இவ்வி்தமான ரஸம் அதிகந்தான். தமிழ் நாட்டிலே முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும், ஒரேயடியாய் கவிதை சுருங்கியே போய்விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் “ஹொக்குப்” பாட்டன்று. நோகுச்சி சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.”

Wednesday, March 28, 2012

விளக்கு


10 மே 1917                                                         பிங்கள சித்திரை 28

“எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.”

வாத்தியாரும் சரி, தெய்வமும் சரி. கோயிற் குருக்களை கொண்டாவது போலே பள்ளிக் கூடத்து வாத்தியாரையும் கொண்டாட வேண்டும்.. பர்மாவில் ஆயிரம் ஆண் பிள்ளைகளில் எழுதப் படிக்kகடத் தெரிந்தவர்கள் 376 பேர் என்றும்; அதே மாதிரி கணக்கு பரோடாவில் 1000க்கு 175; திருவாங்கூரில் 248; கொச்சியில் 243; வங்காளத்தில் 140 என்றும், சென்னை மாகாணத்தில் எழுத்து வாசனையுடையவர்கள் 1000க்கு 13 பேரென்றும் 1911ம் வருஷத்து ஜனக் கணக்கில் தெரிகிறது. பர்மாவில் புத்த குருக்கள் படிப்புச் சொல்லிக் கொடுப்பதை ஒரு கடமையாக வைத்துக் கொண்டிருப்பதால் கொஞ்சம் நல்ல நிலையிலிருப்பதாகத் தோன்றுகிறது. பரோடாவில் கல்வி விருத்திக்கு வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திருவாங்கூர், கொச்சி ஸமஸ்தானங்களிலுள்ள சுதேசி அதிகாரிகள் தமது கடமையை பரோடாவுக்கு முந்தியே படிப்பு விஷயத்தில் கொஞ்சம் அதிக சிரத்தையுடன் செலுத்தத் தொடங்கியதாகவும் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் நம்மவர் சர்க்கார் அதிகாரிகளுடைய உதவியை எதிர்பார்ப்பது பயனில்லாத முறை. நாட்டை ஆளுவதிலே மிகுந்த செலவு  உண்டாவதால் படிப்பை விருத்தி செய்யப் பணமில்லை யென்று அதிகாரிகள் எத்தனையோ தரம் ஸாங்கோ பாங்கமாகச் சொல்லி்விட்டார்கள். “படிப்புச் செலவுக்கென்று தனித் தீர்வை போடுங்கள்; ஜனங்கள் சந்தோஷத்துடன் செலுத்துவார்கள்” என்று கோகலே விளக்கி விளக்கிச் சொன்னார். அது சர்க்காருக்கு சம்மதமில்லை. ஆகவே, நமது தேசத்து ஜனங்களை ஐரோப்பாவிலுள்ள ஜாதியாரைப் போலவும் ஜப்பானியரைப் போலும் படிப்பு மிகுந்த ஜனங்களாகச் செய்வதற்கு சர்க்கார் அதிகாரிகளிடமிருந்து பணம் கிடைக்குமென்று நம்பியிருப்போர் நெடுங்காலம் படிப்பில்லாமலே யிருப்பார்களென்பது  “உள்ளங்கை நெல்லிக்கனி போல” விளங்குகிறது. திருவள்ளுவர் சொன்னாrர்:-

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.”

படியாதவனுக்கும் படித்தவனுக்கும் தாரதம்யம் எத்தனை யென்றால், மிருகத்துக்கும் மனிதனுக்கும் உள்ளதத்தனை.

கூடித் தொழில் செய்

இங்கிலீஷ், ஸம்ஸ்க்ருதம், தமிழ் என்ற பாஷைகளில் ஏதேனும் ஒன்று படித்து யாதொரு உத்தியோகமுமில்லாமல் சும்மா இருக்கும் பிள்ளைகளுக்kகு் நான் ஒரு யோசனை கண்டு பிடித்துக் கொடுக்கிறேன். இஷ்டமானால் அனுசரிக்கலாம். அனுசரித்தால் லாபமுண்டு. 

கூடி வினை செய்வோர்
கோடு வினை செய்வார்

கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து, கிராமந்தோறும் யாத்திரை செய்யுங்கள். ஊரூராகப் போய்ப் பள்ளிக்கூடங்கLள் போடுவதே கைங்கரியமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் வண்டிச் செலவுக்குப் பணமில்லையானால் நடந்து போகவேண்டும். மற்றபடி ஆஹார வ்யவஹாரங்களுக்கு நமது பூர்வ மதாசார்யார்களும், தம்பிரான்மாரும், ஞானிகளும், சித்தர்களும், பக்தர்களும் செய்தபடியே செய்யுங்கள். எங்கே போனாலும் உயர்ந்த மதிப்பும்,  உபசாரங்களும் ஏற்படும். கூட்டத்துக்கு விருந்து காட்டிலேகூடக் கிடைக்கும். அங்கங்கே திண்ணைப் பள்ளிக்கூடங்களும், குடிசைப் பள்ளிக் கூடங்களும் போட்டுத் திறமையுடையோரை வாத்தியாராக நியமித்துக்கொண்டு போகலாம். யாத்திரையின்பம், தேசத்தாரின் ஸத்காரம், வித்யாதான புண்யம், சரித்திரத்தில் அழியாத கீர்த்தி இத்தனையும் மேற்படி கூட்டத்தாருக்குண்டு. படிப்பு  எல்லா மதங்களுக்கும் பொது. எல்லா தேசங்களுக்கும் பொது. எல்லா ஜாதிகளுக்கும் பொது. திருஷ்டாந்தமாக, ஐரோப்பியர் அதிகப்  பயிற்சி செய்திருக்கும் ரஸாயனம் முதலிய சாஸ்த்ரங்கள் நமக்கு மிகவும் அவஸரம். எவ்விதமான  பயிற்சிகளும் தேச பாஷைகள் எழுதவும் படிக்கவும் செய்விப்பதே ஆதாரமாகும். அதை முதலாவது வேரூன்றச் செய்ய வேண்டும். ஹிந்துப் பிள்ளைகளே, உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு. கூட்டங் கூடி நாட்டைச் சுற்றுங்கள். தமிழ் வளர்ந்தால் தர்மம் வளரும். பிராமணர் முதலாகப் பள்ளர் வரையிலும், எல்லா ஜாதிகளிலும், எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மிகுதிப்பட்டால், அநாவசியப் பிரிவுகள் நிச்சயமாகக் குறைவு படும். நமக்குள் கைச்சண்டை மூட்டி விடுவோரையும், பாஷைச் சண்டை, சாதிச் சண்டை மூட்டிவி்டுவோரையும் கண்டால் ஜனங்கள் கை கொட்டிச் சிரிப்பார்கள். ஹிந்துக்களாகிய நாமெல்லாரும்  ஒரே கூட்டம், ஒரே மதம்,  ஒரே ஜாதி, ஒரே குலம், ஒரே குடு்ம்பம், ஒரே உயிர் என்பதை உலகத்தார் தெரிந்து கொள்ளுவார்கள். அதனால் பூமண்டலத்துக்கு ஷேமமுண்டாகும்.