Friday, December 16, 2011

தைரியம்

நம் முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்.

அந்தப் பாஷையில் தைரியம் என்பதோர் சொல் உண்டு. தீரனுடைய இயற்கை தைரியம். தீரன் என்ற வார்த்தையின் தாதுப் பொருளைக் கவனிப்போமானால் அறிவுடையவன் என்ற அர்த்தமாகும். துணிவுடையவனுக்கும் அந்தப் பாஷையிலே அதுவே பெயராக வழங்கப்படுகிறது. எனவே ‘தைரியம்’ என்ற சொல் அறிவு உடைமை என்றும் துணிவு உடைமை என்றும் இருவித அர்த்தங்கள் உடையது. இங்ஙனம் இவ்விரண்டு கருத்துக்களுக்கும் ஒரே சொல்லை வழங்குவது அந்தப் பாஷையின் பெருமைக்குள்ள சின்னங்களிலே ஒன்றாகும். 

உலகத்தில் வேறு எந்தப் பாஷையிலும் மேற் கூறிய இரண்டு கருத்துக்களையும் சேர்த்துக் குறிப்பிடக்கூடிய ஒரே பதம் கிடையாது. எந்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்த மஹான்கள் வழங்கிய பாஷையாதலால் அந்தப் பாஷையிலே இவ்விரண்டு பொருள்களுக்கும் ஒரே பதம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

இதிலிருந்து தெரியக்கூடியது யாதென்றால், துணிவுள்ளவனையே அறிவுள்ளவனென்பதாக நம் முன்னோர்கள் மதிக்கிறார்கள். எடுத்ததற்கெல்லாம் அஞ்சும் இயல்புடைய கோழையொருவன் தன்னைப் பல சாஸ்திரங்கள் கற்றவன் என்றும் அறிவாளி என்றும் சொல்வானானால் அவனை நம்பாதே; அவன் முகத்தை நோக்கிக் காறி உமிழ்ந்துவிட்டு, அவனிடம் பின்வருமாறு சொல்: ‘அப்பா, நீ ஏட்டைத் துளைக்கும் ராமபாணப் பூச்சியைப்போல், பல நூல்களைத் துளைத்துப் பார்த்து ஒருவேளை வாழ்நாளை வீணாக்கியிருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாகமாட்டாய். அஞ்சாமைக்கும் அறிவுக்கும் நம் முன்னோர்கள் ஒரே சொல்லை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். அதை நீ கேள்விப்பட்டதில்லை போகும்!’

ஆம், அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. விபத்துக்கள் வரும்போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன் தான். விபத்துக்கள் வரும்போது எவன் உள்ளம் நடுங்காமல் துணிவுடன் அவற்றையெல்லாம் போக்க முயற்சி செய்கிறானோ, அவனே ஞானி. ‘ஹரி: ஓம்’ என்று எழுதத் தெரியாதபோதிலும் அவன் ஞானி தான். 

சிவாஜி மஹாராஜா தமது சொந்தப் பிரயத்தனத்தினாலும், துணிவாலும், புத்திகூர்மையாலும் அவுரங்கசீப்பின் கொடுங்கோன்மையை அழித்து, மகாராஷ்டிரம் ஏற்படுத்தி, தர்மஸ்தாபனம் செய்தார். அவர் ஏட்டுப் படிப்பில் தேர்ந்தவர் அல்லர். இந்தக் காலத்தில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துப் பரீஷைகள் தேறி, 15 ரூபாயைக் கொண்டு பிழைப்பதற்காகத் தமது தர்மத்தையும் ஆத்மாவையும் விலைப்படுத்தக்கூடிய மனிதர்கள் ஆயிரக்கணக்கான சுவடிகள் படித்துக் கண்களை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவாஜிக்கு மகாராட்டிர ராஜ்யம் லாபம். இவ்விருவரிலே யார் சிறந்தவர், இவ்விருவரிலே யார் அறிஞர்?

பாரதவாசிகளாகிய நாம் இப்போது புனருத்தாரணம் பெறுவதற்குக் கல்வி வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். நாம் ‘துணிவு வேண்டும்’ என்கிறோம். துணிவே தாய்; அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன.

No comments:

Post a Comment