Friday, December 2, 2011

உலக வாழ்க்கையின் பயன்

உலக வாழ்க்கையில் மானிடராலும் மற்ற உயிர்களாலும் விரும்பப்படும் மிகச் சிறந்த பயன் யாது? எப்போதும் நீங்காத, எப்போதும் மாறாத, எப்போதும் குறையாத இன்பமெய்தி வாழ்தல். 

இவ்வகையான இன்பத்தை எய்தும்பொருட்டாகவே மானிடர் கல்வி கற்பதும், பொருள் சேர்ப்பதும், தவங்கள் செய்தலும், அரசாள்வதும், களவு செய்தலும், கொலை செய்வதும், பேசுதலும், சிரித்தலும், ஆடுதலும், பாடுதலும், அழுதலும், உழுதலும் – எல்லாத் தொழிலும் செய்கிறார்கள். மனிதர் மட்டுமேயன்றி மற்ற எல்லா உயிர்களும் தாம் செய்யும் எல்லாத் தொழில்களையும் மேற்கூறிய ஒரே நோக்கத்தோடுதான் செய்கின்றன. 

ஆயினும், இதுவரை மேற்படி நித்யானந்த நிலையை எந்த உயிரும் எய்தவில்லையென்பது தெளிவு. உலகத்தில் தவிக்க முடியாத துக்கம் நிறைந்திருப்பதே, புத்தர் கண்டதாகக் கூறப்படும் நான்கு உண்மைகளில், முதலாவது. இங்ஙனம் தீராத துன்பம் இருப்பதற்குக் காரணம் ஒவ்வோர் உயிரும் தன்னையேனும் பிற உயிர்களையேனும் பார்த்தும் கருதியும் ஓயாமல் அருவருப்பும் பயமும் அடைகின்றனவாதலேயாம். 

இங்ஙனம் ஒவ்வொரு உயிர்க்கும் தன்னிடத்தும் பிற உயிர்களிடத்தும் பொருள்களிடத்தும் தீராத சகிப்பின்மையும், பயமும், வெறுப்பும், கவலையும் ஏற்படுவதற்குக் காரணம், அநாதி காலந்தொட்டு ஜீவர்களுக்குள்ளே நிகழ்ந்துவரும் ஓயாத போராட்டத்தால் ஏற்பட்ட பழக்கந் தவிர வேறொன்றுமில்லை. 

எல்லா வஸ்துக்களும் எல்லாக் குணங்களும் ஒன்றென்னும் வேதாந்த ஞானத்தால் இந்த அஞ்ஞானப் பழக்கத்தை நீக்க வேண்டும். மேற்படி ஞானம், உலகம் தோன்றிய கால முதலாக, எத்தனையோ பண்டிதர்களின் மனத்திலும் கவிகளின் மனத்திலும் உதித்திருக்கிறது; எத்தனையோ கோடிக்கணக்கான பாமரர் மனத்துள் அவை அழுத்தாமல், வாயினால் பிதற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

ஆயினும், பண்டிதர்களுக்கும் பாமரர்களுக்கும் ஒருங்கே அந்த ஞானத்தை நித்ய அநுபவத்தில் கொண்டுவர முடியாதபடி, பழைய அஞ்ஞானம் தடுக்கிறது. 

‘அஞ்ஞானத்தை வென்றால், தீராத இன்பநிலையெய்தி வாழலாம்’ என்று சாஸ்திரம், யுக்தி, அநுபவம் –மூன்று பிரமாணங்களாலும் விளங்குகிறது. எனினும், அந்த அஞ்ஞானப் பிசாசையும் அதன் குட்டிகளாகிய காமம், குரோதம்,  மோஹம், லோபம், மதம்,  மாத்ஸர்யம் என்ற ஆறு யமதூதர்களையும் வெல்ல மனிதனுடைய சித்தம் இடங்கொடுக்கமாட்டேன் என்கிறது. நாயைக் குளிப்பாடி நல்ல உணவளித்து நடுவீட்டில் வைத்தால், அது மறுபடியும் அசுத்த உணவை விரும்பு வாலை குழைத்துக் கொண்டு ஓடத்தான் செய்கிறது. எத்தனை புதிய இன்பங்களைக் காட்டியபோதிலும், மனம் அவற்றில் நிலைபெறாமல், மீண்டும் ஏதேனும் ஒரு துன்பக் குழியிலே கண்ணைத் திறந்து கொண்டு போய்விழுந்து தத்தளிக்கத் தொடங்குகிறது. 

மனம் கலங்கிய மாத்திரத்தில் புத்தி கலங்கிப் போய்விடுகிறது. ஆகையால், புத்தியை நம்பி எவனும் மனத்தைக் கலங்க விடாதிருக்கக் கடவன். மனத்தைக் கலங்கவிடாமல் பயிற்சி செய்வதே எல்லாவித யோகங்களிலும் சிறந்த யோகமாகும். மனம் தவறி ஒரு துன்பக் குழியில் போய் விழுங்காலத்தில்,  புத்தி சும்மா பார்த்துக் கொண்டு நிற்கிறது. ஒரு வேளை புத்தி தடுத்தபோதிலும், அதை மனம் கவனிப்பதில்லை. புத்தியை மீறி உழலும் சக்தி மனத்துக்கு இருக்கிறது. 

ஆதலால், மனம் துன்பத்தில் நழுவி விழத் தொடங்கும்போது, அதை உறுதி அல்லது தைர்யம் என்ற கடிவாளத்தால் பிடித்து நிறுத்திப் பழகுவதே சரியான யோகப் பயிற்சியாம். இந்தப் பயிற்சி ஏற்படுத்திக் கொள்ளுமாறு சிலர் உலகத்தை விட்டு நீங்கித் தனியிடங்களிலிருந்து கண்ணை மூடிக் கொண்டு பழகுகிறார்கள். வேறு சிலர் மூச்சைப் பல இடங்களில் கட்டியும் அவயங்களைப் பலவாறு திருப்பியும் பழகுகிறார்கள்; தனியே இருந்து ஜபம் பண்ணிப் பார்க்கிறார்கள். 

இதிலெல்லாம் இது வேகாது. உலகத்தாருடன் கூடி எல்லா வகைகளிலும் மற்ற உலகத்தாரைப் போலவே தொழில் செய்துகொண்டு உலக விவகாரங்களை நடத்திய வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங்கொடாதபடித் தன் மனத்தைக் கட்டக் கூடிய திறமையே பயன் தரக் கூடியது. மற்ற முயற்சிகளெல்லாம் வீண். 

நீதி, ஸ்மாதானம்,  ஸம்த்துவம்,  அன்பு இவற்றாலேயே இவ்வுலகத்தில் தீராத தைரியமும், அதனாலே தீராத இன்பமும் எய்தலாம். வேறு வழியில்லை.

No comments:

Post a Comment