Monday, December 5, 2011

பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்


தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான். இதைக் காரணங்கள் காட்டி ருஜுபடுத்த வேண்டுமானால், அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவு பெறமாட்டாது. ஆனால் அநுபவத்தில் பார்த்துக் கொள்ளலாம். 

ஒருவன் மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றி மறையும் தோற்றங்களெல்லாம் தியானமாகமாட்டா. புதர்க் கூட்டத்திலே தீப் பிடித்தாற்போல மனத்திலுள்ள மற்றக் கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியானமென்று கூறுகிறோம். உள்ளத்தில் இவ்வித அக்னி ஒன்று வைத்துக்கொண்டிருப்போமானால், உலகத்துக் காரியாதிகளெல்லாம் நமது உள்ள நிலைக்கு இணங்கியவாறே மாறுபடுகின்றன. 

சுவாமிகள் ஆத்ம நாசத்திற்கு இடமான ஒருவகை இன்பத்தையே தியானமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகத்திலுள்ள மெய்யான இன்பத்தையெல்லாம் நுகர்ந்து, தமக்கும் பிறர்க்கும் நிலைத்த பயன்கள் விளைவதற்குரிய நற்காரியங்கள் செய்து, உள்ளத்திலுள்ள குழப்பங்களும் துன்பங்களும் நீங்கி, ஸந்தோஷமும் புகழும் பெற வேண்டுமென்ற இச்சை உடையவர்கள் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்வது அசாத்தியமன்று. அது இவ்வுலகத்திலேயே இந்த ஜன்மத்திலேயே சாத்தியமாகும். 

அஃதெப்படி என்றால், தமது உள்ளத்திலே தீரத்தன்மை, அமைதி, பலம், தேஜஸ், சக்தி, அருள், பக்தி, சிரத்தை இந்த எண்ணங்களையே நிரப்ப வேண்டும். 

’இவற்றையெல்லாம் நான் எனது உடமையாக்கிக் கொள்வேன், இவற்றுக்கு எதிர்மறையான சிந்தனைகள் எனது அறிவினுள்ளே நுழைய இடங்கொடுக்கமாட்டேன்’ என்று ஒவ்வொருவனும் உறுதி செய்து கொள்ளவேண்டும். 

’தனது உள்ளத்திலே இன்ன இன்ன எண்ணங்களைத்தான் வளரவிடவேண்டும்; இன்ன இன்ன எண்ணங்களை வளரவிடக்கூடாது’ என்று நிச்சயிக்கும் அதிகாரம்-திறமை-ஒவ்வொருவனுக்கும் இயற்கையிலேயே ஏற்பட்டிருக்கின்றது. இதை அநுபவத்துக்குக் கொண்டுவரும்போது ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் உண்டாகும். உன்னை எதிர்த்துச் சில விகாரமான சிந்தனைகள் அறிவிற்குள் வந்து நுழைந்து கொண்டு, ‘வெளியே பிடித்துத் தள்ளினாலும் போகமாட்டோம்’ என்று பிடிவாதஞ் செய்யும். அங்ஙனம் சிறுமைக்கு உரிய எண்ணங்கள் உன் அறிவில் புகுந்து கொண்டு தொல்லைப்படுத்துமானால், நீ அவற்றை வெளியே தள்ளுவதில் நேராக வேலை செய்ய வேண்டாம். நீ அதைத் தள்ளத் தள்ள, அது அங்கே தான் இருக்கும். அதற்கு யுக்தி வேறு. நீ அந்த எண்ணத்திற்கு நேர்மாறான வேறொரு நல்ல சிந்தனையில் அறிவு செலுத்துக. அப்போது அந்த நல்ல சிந்தனை வந்து அறிவில் இருந்துகொள்ளும். உன்னைத் தொல்லைப்படுத்திய குட்டிச்சாத்தான் தானாகவே ஓடிப்போய்விடும். தெய்வபக்தி உள்ளவர்களாயினும், நாஸ்திகர்களாயினும், எந்த மார்க்கஸ்தர்களாக இருந்தாலும், ஒரு மார்க்கத்தையும் சேராதவர்களாக இருந்தாலும், அவர்களுக்குத் தியானம் அவசியம்.

பாரததேசத்தில் ஒவ்வொருவனுக்கும் தற்காலத்தில் நல்ல தியானம் உணவைக் காட்டிலும் இன்றியமையாதது. சோற்றை விட்டாலும் விடு. ஒரு தனியிடத்தே போயிருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்கக் கூடிய சிந்தனைகள்,  பலம் தரக்கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள் – இவற்றால் அறிவை நிரப்பிக்கொண்டு தியானம் செய்வதை ஒருநாளேனும் தவறவிடாதே. தெய்வ பக்தியுடையவர்கள் இஷ்ட தெய்வத்தை அறிவில் நிறுத்தி, அதனிடம் மிகுந்த தாகத்துடனும் உண்மையுடனும் மேற்கூறியவாறு பெருமைகள் உண்டாகுமாறு ப்ரார்த்தனை செய்ய வேண்டும். வாயினால் பழங்கதை ஒன்றை முணு முணுப்பது அதிகப் பயன் தரமாட்டாது. உன்னுடைய உள்ளுயிரிலிருந்து அந்தப் பிரார்தனை வெளியேற வேண்டும். நீயாக உனது சொந்தக் கருத்துடன் சொந்த வசனங்களில் உயிர்கலந்து தியானம் செய்வதே பயன்படும். நாஸ்திகர் கூட, இஷ்ட தெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று. “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ள” என்பது குறள்.

பரிபூர்ண விருப்பத்துடன் தியானம் செய். சோர்வும் அதைரியமும் விளைவிக்கத்தக்க எண்ணங்களுக்கு இடங்கொடாதே. ஊற்றிலிருந்து நீர் பெருகுவதுபோல, உனக்குள்ளிருந்து தெளிந்த அறிவும், தீரத்தன்மையும், சக்தியும் மேன்மேலும் பொங்கிவரும். உன் இஷ்ட சித்திகளெல்லாம் நிறைவேறும். இது சத்தியம் அநுபவத்திலே பார்.

No comments:

Post a Comment