Friday, December 9, 2011

தர்மம்

“ஹிந்துஸ்தான் ரெவ்யூ” என்று அலஹாபாத்தில் பிரசுரமாகும் மாதப் பத்திரிகையில் ஸ்ரீ வாடியா என்பவர் “ஒழுக்கம்” என்பதைப்பற்றி மிகவும் நேர்த்தியான லிகிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் சில ரஸமான கேள்விகள் கேட்கிறார். அவருடைய வசனங்களை முழுதும் மொது பெயர்க்காமல் அந்தக் கேள்விகளின் ஸாரத்தை இங்கே சொல்லுகிறேன்:-

“தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போரென்று ஸாமான்யர் சொல்லுகிறார்கள். சில சமயங்களில் தர்மங்களே ஒன்றுக்கொன்று முட்டுகின்றன. ஒரு தந்தை தன் மகனைக் கொலைத் தண்டனையிலிருந்து மீட்கும் பொருட்டாய்ச் சாட்சி சொல்வதாக வைத்துக்கொள்வோம். அவனுடைய செய்கையை எவ்விதமாகத் தீர்மானஞ் செய்வோம்? மகனைக் காப்பது தந்தையின் கடமை. ராஜ்யத்தில் நீதி பரிபாலனத்திற்குத் தான் துணை புரிவதும் கடமை. இரண்டும் தர்மம். ஆனால் ஒன்றுக்கொன்று முட்டுகின்றன. தவிரவும், பூர்வ சரித்திரங்களை ஆராய்ச்சி செய்யுமிடத்தில், யூனியுஸ் புரூத்தஸ் என்ற ரோம தேசத்தான் தேசபக்தியின் மிகுதியால் தன் சொந்த மகனைக் கொன்றான். மார்க்குஸ் புரூத்தஸ் அதே காரணத்தைச் சொல்லி யூலியுஸ் கேஸரைக் கொன்றான். பதிவிரதை நோன்பு பெரிதென்று கருதி லூக்ரெஸியா தற்கொலை செய்து கொண்டாள். ஸீதை ராமனுடைய ஸ்ந்தேக நிவிர்த்திக்காக நெருப்பிலே விழத் துணிந்தாள். ஹிந்து மதத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்ற அவாவினால் சிவாஜி அப்ஜுல்கானைக் கொலை செய்தான். தர்மங்களுக்குள்ளே பரஸ்பர முட்டுப்பாடு அவசியம் ஏற்படத்தான் செய்கிறது. தர்ம சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொண்டால் இரண்டு பக்கமும் பேசுகிறது. இதற்குத் தீர்ப்பு என்ன?”

மேலும், “ஒழுக்கம் என்ற சொல்லுக்கே பொருள் சில இடங்களில் சரியாக வழங்கவில்லை” என்று அவர் சொல்லுகிறார். ஒழுக்கத்திற்குப் பணிவு, கீழ்ப்படிதல் அவசியமென்று சிலர் சொல்லுகிறார்கள். சரித்திரத்தில் மேன்மை கொண்ட பெரியோர்களைக் கருதுவோம்,  புராதன உலகத்தில் அலெக்ஸாந்தர், யூலியுஸ் கேஸர், ஹானிபால் என்பாரும், இங்கிலாந்தில் க்ராம்வெல், சேதாம் என்பாரும், நெப்போலியன்,  பிஸ்மார்க், அக்பர், சிவாஜி, ஹைதர் அலி முதலிய சக்திமான்களும், இலக்கியத்தில் மில்டனும், கெத்தேயும் மிகுந்த கீழ்ப்படிவுள்ள குணத்துடன் இருக்கவில்லை. தன்னம்பிக்கை அவர்களிடம் பரிபூரணமாக இருந்தது. “நமது காலத்தில் நாம் மஹத்தான கார்யங்கள் செய்வோம்; இளைக்க மாட்டோம்; பின்வாங்க மாட்டோம்” என்று ஒரே தீரமாக வேலை செய்தார்கள்; சரித்திரத்தின் நாயகராயினர். நீதி சாஸ்திரம் இன்னும் நேரே வகுத்தாகவில்லை.
“அட போ; பழமொழிகளை நம்பி ஒழுக்கத்தை நடத்துவோமென்று நினைப்பதும் பயனில்லை’ என்று மேற்படி வாடியா சொல்கிறார். “பதறின காரியம் சிதறும்” என்பதாக ஒரு பழமொழி சொல்லுகிறது. “சோற்றுக்கு முந்திக்கொள்” என்று மற்றொரு பழமொழி சொல்லுகிறது. எந்தப் பழமொழியை நம்பலாம்? “ஒழுக்கமாவது மனோதைரியம்; இஷ்டத்தைக் கைவிடாத மேன்மைக் கொள்கை; மற்றதெல்லாம் அதற்கிணங்க வைத்துக்கொண்டால் அதுவே சரியான தீர்ப்பு” என்று ஸ்ரீ வாடியா சொல்கிறார். 

கடைசியாகத் தம்முடைய முடிவை ஒருவிதமாக மேற்படி லிகிதகர்த்தா காட்டுகிறார்: -
“ஆரம்பத்தில் சொல்லியபடி பொய்ச் சாஷி கூறி மகனுயிரை நீதி வஞ்சனையால் மீட்கக் கருதிய பிதாவினுடைய திருஷ்டாந்தத்தை எடுப்போம். அவன் கேவலம் தன்னுடைய குடும்ப தர்மமே உயர்வென்று நினைக்காமல் லோகதர்மம் மேலென்றும் நினைத்து அதன்படி உண்மை கூறியிருந்தால், மகனுயிர் போய்விடலாம், நெஞ்சு தகரலாம், மானம் அழியாமலும் தர்ம ஸ்ம்பத்துக்கு வழியாகவும் இருக்கும்” என்பது மேற்படி லிகித ஸாரம்.

No comments:

Post a Comment