பாப புண்ணியங்களுக்கு இணங்க மானிடரின் கர்மத்தினுடைய பலனாக அடுத்த
ஜன்மத்தில் உயர்ந்த பிறப்பேனும் தாழ்ந்த பிறப்பேனும் கிடைக்கும் என்பது நமது தேசத்துப்
பொது நம்பிக்கை. பாவம் செய்யும் ஒருவனை ‘நீ அடுத்த ஜன்மம் மிருகமாகப் பிறப்பாய்’ என்றால்
அவனுடைய மனம் பதைக்கிறது. ஆனால், இந்த ஜன்மத்திலேயே மனிதர்கள் தாம் மிருகங்களைப் போலிருப்பதைக்
கவனிப்பது கிடையாது. ஒவ்வொரு நிமிஷத்திலேயும் ஒருவன் நினைக்கும் நினைப்புகளும் செய்யும்
செய்கைகளும் அவன் பலவிதப் பிறவிகளை அடைவதற்குக் காரணமாகின்றன. இந்த உலகத்திலேயே, இப்பொழுதே,
ஒரே சரீரத்திலுள்ள ஒருவன் ஆயிரம் பிறவிகள் பிறந்து மடிகின்றான். ‘ஒவ்வொரு க்ஷணமும்
ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து பிறந்து மடிகின்றான்; ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொருவனும்
பிறந்து பிறந்து மாய்கிறான்’ என்று கூறத்தகும். மிருகங்களைப் போன்ற மனிதர்களை நாம்
பார்த்ததில்லையா? நம்மை நாம் கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருகங்களாக இருந்திருக்கிறோம்
என்பது தெரியும். வஞ்சனையாலும், குத்திரத்தாலும், சமயத்திற்கேற்பப் பலவித கபடங்கள்
செய்து ஜீவிப்பவன் நரிதானே? ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனஞ்சோர்ந்து
தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. மறைந்திருந்து பிறகுக்குத் தீங்கு செய்பவன்
பாம்பு. தாமதத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல், அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன்
பன்றி. சுயாதீனத்திலே இச்சையில்லாமல், பிறர்களுக்குப் பிரியமாக நடந்துகொண்டு, அவர்கள்
கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய். கண்ட விஷயங்களிலெல்லாம் திடீர் திடீர் என்று
கோபமடைகிறவன் வேட்டை நாய். காங்கிரஸ் சபையிலேயும் சேர்ந்துகொண்டு, ஆங்கிலேய அதிகாரிகளுக்கும்
ஹிதமாக நடக்க வேண்டுமென்ற விருப்பமுடைய ‘மேத்தா’ கட்சியைச் சேர்ந்தவன் வெளவால். அறிவுத்துணிவால்
பெரும் பொருள்களைத் தேர்ந்து கொள்ளாமல், முன்னோர் சாஸ்திரங்களைத் திரும்பத் திரும்ப
வாயினால் சொல்லிக்கொண்டிருப்பவன் கிளிப்பிள்ளை. பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்தியபோதிலும்,
அவன் அக்கிரமத்தை நிறுத்த முயலாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன்
கழுதை. வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிறவன் வான்கோழி. கல்வியிறிவில்லாதவனை
மிருகக் கூட்டத்திலேயும் சேர்க்கலாகாது. அவன் தூண். தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை
அபகரித்து உண்ணுபவன் கழுகு. ஓர் நவீன உண்மை வரும்போது, அதை ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல்
வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக் கொண்டு அஞ்சும்) ஆந்தை.
ஒவ்வொரு நிமிஷமும் சத்தியமே பேசித் தர்மத்தை ஆசரித்துப் பரமார்த்தத்தை
அறிய முயலுகிறவனே மனிதனென்றும் தேவனென்றும் சொல்வதற்கு உரியவனாவான். மிருக ஜன்மங்களை
நாம் ஒவ்வொருவரும் க்ஷணந்தோறும் நீக்க முயலவேண்டும்.
No comments:
Post a Comment