“இல்லறம் பெரிதா, துறவறம் பெரிதா/” என்பது கேள்வி.
ரிஷி சொல்லுகிறார்; “அரசனே, நீ என்னோடு பாதசாரியாக வருவாயானால்
தெரியப்படுத்துகின்றேன்” என்று.
அப்படிக்குப் பாதசாரியாகப் போகும்போது கன்னட தேச ராஜகுமாரத்திக்கு
விவாகம் நிச்சயத்திருப்பதால், ஐம்பத்தாறு தேசத்துராஜாக்களும் ராஜகுமாரத்தியின் விவாகத்திற்கு
வந்திருக்கிறபோது அவ்விடத்திற்கு மேற்படி அரசனும் ரிஷியும் இருவருமாகப் போய்ச் சேர்ந்தார்கள்.
இப்படி எல்லோரும் விவாகமண்டபத்திலே கூடியிருக்க, அந்த விவாகமண்டபத்தில் ஒரு பால்ய ஸ்ந்நியாஸியும்
வேடிக்கை பார்க்க வந்தார். “கன்னடத்து ராஜகுமாரி! எந்த ராஜகுமாரனை விவாகம் செய்துகொள்ளுகிறாய்?”
என்று தோழியானவள் கேட்டுக்கொண்டே போனாள். அவ்விடத்து ராஜகுமாரர்களையெல்லாம் ‘வேண்டாம்,
வேண்டாம்’ என்று களைந்துபோய், இந்த பால்ய ஸ்ந்நியாஸியைக் கண்டு புஷ்பமாலையை அணிந்தாள்.
அந்தப் புஷ்பமாலையானது பாம்பாகி, மேற்படி பால்ய ஸ்ந்நியாஸியின் கழுத்தில் யமனுடைய பாசம்போல்
வந்துவிழ, அவன் திடுக்கிடாமல் “ஓம் சக்தி”, “ஓம் சக்தி” என்ற மந்திரத்தை ஜபித்து மனத்தைத்
தைரியப்படுத்திக் கொண்டான். பிறகு அதே மாலை மீண்டும் பிரமள கந்தமுடைய புஷ்பமாலையாய்விட்டது.
இதனை மேற்படி மஹரிஷியானவர், அந்த ராஜனிடத்திலே காண்பித்து,
“இல்லறத்தில் வாழ்ந்தால் இப்படிப்பட்ட தைரியத்துடன் வாழவேண்டும். மணமாலையே பாம்பாக
வந்து விழுந்தபோதிலும் மனம் பதறக்கூடாது. தைரியம் பாம்பைக்கூட மணமாலையாக மாற்றிவிடும்.
இவ்விதமான தைரியத்துடன் இல்லறத்தில் நிற்பார் வீடு பெறுவர். துறவறத்துக்கும் இதுவே
வழி. ஆகவே இரண்டும் ஒன்றுதான்” என்று சொன்னார்.
வரலக்ஷ்மி நோன்பு சில தினங்களுக்குமுன் நடைபெற்றது. அதன் விவரம்:
அன்றைத் தினம் பெண்மக்களெல்லாம் ஸ்நானம் செய்துவிட்டு, பழையபட்டுக் கயிறுகளைக் கட்டிக்கொண்டு
நெற்றியில் பொட்டிட்டுக்கொண்டு கூந்தல்களில் புஷ்பங்களை அணிந்துகொண்டு, பார்க்கிற பார்வைக்கு
வரலக்ஷ்மியைப் போலவே, அதிபக்தி விநயத்துடன் இருந்து சில பலகாரங்களையும் பழவர்க்கங்களையும்
வைத்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்து, பெண் குழந்தைகளுக்கு விநியோகப்படுத்தி, அன்றிரவு
பூர்த்தி செய்து, மறுதினம் காலையில் பெளர்ணமி பூஜை, சாப்பாடு செய்து அவர்களுக்குரிய
இஷ்டகாம்யார்த்த சித்தி பெற்று, ஜீவகோடிகள் அம்பாள் அனுக்ரஹத்தினால், அவள் திருவடியை
முடிமீது சூட்டி, ஞானசித்தியை உணர்ந்து, ஸதா முக்தர்களாக வாழும் வழியைக் காட்டுகிறார்கள்.
No comments:
Post a Comment