Wednesday, December 14, 2011

லோக குரு - 1

சென்ற ஜூன் மாதம் பன்னிரண்டாம் தேதி ஜப்பான் ராஜதானியாகிய டோக்கியோ நகரத்தில் ஸாம்ராஜ்ய ஸர்வகலா சங்கத்தாரின் முன்பு, ரவீந்திரநாதர் செய்த பிரசங்கம் பூமண்டலத்தில் சரித்திரத்திலே ஒரு புதிய நெறியைக் காட்டுவது. விவேகாநந்தர் செய்துவிட்டுப் போன தொழிலை வளர்ப்போரில் ரவீந்திரர் ஒருவன். 

விவேகாநந்தர் ஆத்மாவின் பயிற்சியை மாத்திரம் காட்டினார். ரவீந்திரர், ‘உலகவாழ்க்கையும், உண்மையான கவிதையும், ஆத்ம ஞானமும் ஒரே தர்மத்தில் நிற்பன’ என்பதை வெளி நாடுகளுக்குச் சொல்லும் பொருட்டாக, பாரத மாதாவினால் அனுப்பப்பட்டிருக்கிறார்.
‘பாரத தேசமே லோக குரு’ என்ற செய்தி ஏற்கனவே பல ஜப்பானியப் பண்டிதருக்குத் தெரியும். எனினும், நம்மவர் ஒருவர் நேரே போய் அந்த ஸ்தானத்தை நிலை நிறுத்துவதற்கு இதுவரை அவகாசப்படாமல் இருந்தது. வங்காளத்து மஹாகவியாகிய ரவீந்திரநாத தாகூர் போய் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தார். இந்தத் தொழிலுக்கு அவர் மிகவும் தகுதியுடையவர். அவருடைய கவிதையின் கீர்த்தி பூமண்டல முழுவதும் ஏற்கனவே பரவியிருக்கிறது. உலகத்து மஹாகவிகளின் தொகையில் அவரைச் சேர்த்தாய்விட்டது. 

‘கீதாஞ்சலி’ முதலாவதாக, அவர் இங்கிலீஷ் பாஷையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் நூல்கள் மிகவும் சிறியன; பார காவியங்களல்ல, பெரிய நாடகங்களல்ல; தனிப்பாடல்கள் சில காண்பித்தார், உலகம் வியப்படைந்தது. நல்வயிரமணிகள் பத்துப் பன்னிரெண்டு விற்றால், லக்ஷக்கணக்கான பணம் சேர்ந்துவிடாதோ? தெய்விகக் கதையிலே பத்துப் பக்கம் காட்டினால் உலகத்துப் புலவரெல்லாம் வசப்படமாட்டாரோ?

கோபோ நகரத்தில் உயேனோ என்றதோர் பூஞ்சோலை இருக்கிறது. அதனிடையே அழகான பெளத்தக் கோயில் ஒன்று இருக்கிறது. அந்தச் சோலையிலே குளிர்ந்த மரங்களின் நிழலில் பல ஜப்பானிய வித்வான்கள் கூடி அவருக்கு நல்வரவுப் பத்திரிகை படித்தார்கள். ஜப்பானிய ஸாம்ராஜ்யத்தில் முதல் மந்திரியாகிய ஒகூமாப் பிரபு என்பவரும், வியாபார மந்திரியாகிய ஸ்ரீமான் கோனோவும், கல்வி மந்திரியாகிய பண்டித தகாத்தாவும் வேறு பல பெரிய கார்யஸ்தர்களும் அந்தச் சபைக்கு வந்திருந்தார்கள். நல்வரவுப் பத்திரிகை வாசித்து முடிந்தவுடனே, ரவீந்திரநாதர் பின் வருமாறு வங்காளி பாஷையில் பேசலானார்: “எனக்கு ஜப்பானிய பாஷை தெரியாது. இங்கிலீஷ் தெரியும்; ஆனால் அது உங்களுடைய பாஷையன்று. உங்களிடம் அந்தப் பாஷை பேச எனக்கு ஸ்ம்மதமில்லை. மேலும், எனக்கே அது இரவல் பாஷை; ஆனபடியால் ஸரளமாக வராது. ஆதலால் வங்காளியிலே உங்களிடம் பேசுகிறேன்” என்றார். பண்டித கிமுரா என்ற ஜப்பானிய வித்வான் ஒருவர் வங்கத்து மொழி தெரிந்தவராதலால் ரவீந்திர நாதரின் வார்த்தைகளைச் சபையாருக்கு ஜப்பானிய பாஷையில் மொழிபெயர்த்துச் சொன்னார். 

பின்பு, ரவீந்திர நாதர் பேசுகிறார்: “கோபோ நகரத்தில் வந்து இறங்கியவுடனே எனக்கு ஜப்பான் விஷயத்தில் அதிருப்தி உண்டாய்விட்டது. எதைப் பார்த்தாலும் மேற்குத் தேசங்களின் மாதிரியாகவே இருக்கிறது. ஜப்பானியர் தமது ஸ்வயமான தர்ம ஸ்ம்பத்தை இழந்துவிடலாகாது” என்றார். இந்தக் கருத்தின் விவரத்தைப் பின்னே நாம் படிக்கப் போகிற டோக்கியோ ஸ்ர்வகலா ஸங்க உபந்யாஸத்திலே விஸ்தாரமாகக் காணலாம். அப்போது மஹா மேதாவியாகிய முதல் மந்திரி ஒகூமா எழுந்திருந்து ரவீந்திரருக்கு நன்றி கூறினார். ஸ்ரீமான் ஒகூமா கூறியது: “எனக்கு இங்கிலீஷ் நேரே தெரியாது. இவர் வங்காலி பாஷை பேசியதை நான் இங்கிலீஷ் என்று நினைத்தேன். நல்ல தருணத்திலே இவர் நமது தேசத்துக்கு வந்தார். நியாயமான எச்சரிக்கை கொடுத்தார். நமது தேசத்தின் சித்த நிலை இப்போது இரண்டுபட்ட பாதைகளின் முன்பு வந்திருக்கிறது. நமதறிவு எந்த வழியிலே திரும்புதல் தகும் என்பதை இப்போது நிச்சயிக்க வேண்டும். இத்தருணத்தில் நமக்கு நல்வழி காட்டும் பொருட்டாக இந்த மஹான் தோன்றினார்” என்றார். 

டோக்யோ உபந்யாஸத்தைப் பற்றி ஒரு தனிப் பகுதி எழுத வேண்டும். 

அதன் ஸாராம்சம்: “உறங்கின ஆசியாவை ஜப்பான் எழுப்பிவிட்டது. அதன்பொருட்டு நாமெல்லோரும் ஜப்பானுக்கு நன்று செலுத்த வேண்டும். உறங்கும் பூமண்டலத்தைப் பாரத நாடு தலைமையாக ஆசியா எழுப்பிவிடப் போகிறது.’ இந்தக் கருத்தை ஜப்பானிய பண்டிதர் அந்நாட்டுப் பத்திரிகைகளில் அங்கீகாரம் செய்துகொண்டு மிகவும் அழகாக நன்றி வார்த்தைகள் சொல்லியிருக்கிறார்கள். 

டோக்யோ ஸாம்ராஜ்யக் கலா சங்கத்தில் பாரத கவி ரவீந்திரர் செய்த ஆச்சரியமான பிரசங்கத்திலே அவர் சொன்னதாவது: “முதலாவது, உங்களுக்கு நன்று சொல்லுகிறேன். ஆசியா கண்டத்திலே பிறந்த எல்லா ஜனங்களும் உங்களுக்கு நன்றி செலுத்தக் கடன்பட்டிருக்கிறோம். எல்லாப் பந்தங்களைக் காட்டிலும் இழிவான பந்தம் உள்ளச் சோர்வு. இதனால் கட்டுண்டவர் தந்நம்பிக்கை இல்லாதவர். கேட்டீர்களா, சிலர் சொல்லுவதை: “ஆசியக் கண்டம் பழமையிருளில் மூழ்கிக் கிடக்கிறது; அதன் முகம் பின்னே முதுகுப் புறமாக திருப்பிவைக்கப்பட்டிருக்கிறது” என்று. இப்படி வார்த்தை சொல்வோரின் பேச்சை நாமும் நம்பினோம். சிலர் இதையே ஒரு தற்புகழ்ச்சியாக்கி “அப்படித்தான்; நாங்கள் பழமையிலேதான் இருப்போம். அதுதான் எங்களுக்குப் பெருமை” என்றார்கள். 

“விஷயங்கள் இந்த ஸ்திதியில் இருக்கும்போது நாமெல்லாம் ஒரு மோஹ நித்திரையில் வீழ்ந்திருந்த காலத்திலே, ஜப்பான் தனது கனவு நிலைமை நீங்கி எழுந்தது; நடக்கத் தொடங்கிற்று; பூதாகரமான அடியெடுத்து வைத்தது; நிகழ்காலத்தை அதன் முடியிலே போய்ப் பற்றிக் கொண்டது. எல்லோரும் தட்டி எழுப்புண்டோம். ‘பூமியில் மேலே, சில எல்லைக் குள்ளிருக்கும் சில தேசத்தாருக்கு மாத்திரம் முன்னேற்றம் வசப்படாது’ என்ற மாயை போய்விட்டது. ஆசியா கண்டத்தில் பெரிய ராஜ்யங்கள் ஸ்தாபனம் செய்திருக்கிறோம். பெரிய சாஸ்திரம், கலை, காரியம் – எல்லாம் இங்கே தழைத்தன. உலகத்திலுள்ள பெரிய மதங்களெல்லாம் இங்கே பிறந்தன. ‘இந்த மனிதனுடைய சுபாவமே மதிச் சோர்வும் வளர்ச்சிக் குறையும் உண்டாகும்’ என்று சந்தேகப்பட வேண்டாம். பல நூற்றாண்டு நாம் நாகரிக விளக்கைத் தூக்கி நிறுத்தினோம். அப்போது மேற்கு உலகம் இருளில் தூங்கிக் கொண்டிருந்தது. நமக்குப் புத்தி உண்டு. நம்முடைய புத்தி ஒரு நத்தைப் பூச்சி இல்லை. நம்முடைய கண் மாலைக்கண்னில்லை.

“ஆசியா ஜப்பானுக்குக் கொடுத்தது அந்தப் பயிற்சி, அந்தப் பயிற்சி. 

“ஜப்பான் இக்காலத்திலே புதியவளும் பழையவளுமாக விளங்குகிறாள். குல உரிமையால் கீழ்த்திசையில் நமது பழைய பயிற்சி அவளுக்குக் கிடைத்திருக்கிறது. ‘மெய்யான செல்வமும் மெய்யான வலிமையும் வேண்டுமானால், ஆத்மாவுக்குள்ளே நோக்கத்தைச் செலுத்தவேண்டும்’ என்று கற்பித்த பயிற்சி, ஆபத்து வரும்போது பிரார்த்தனை தவறாதபடி காப்பாற்றும் பயிற்சி, மரணத்தை இகழச்சொல்லிய பயிற்சி, ‘உடன் வாழும் மனிதனுக்கு நாம் எண்ணற்ற கடமைகள் செலுத்த வேண்டும்’ என்று தெளிவித்த பயிற்சி, ‘கண்ட வஸ்துக்களிலே, அகண்ட வஸ்துவைப் பார்’ என்று காட்டிய பயிற்சி. ‘இவ்வுலகம் ஒரு மூடயந்திரமன்று. இதற்குள்ளே தெய்வம் இருக்கிறது; இது யதேச்சையாக நிற்பதன்று. கண்ணுக்கு எட்டாத தொலையில் வானத்தில் இருக்கவில்லை; இங்கே இருக்கிறது அந்தத் தெய்வம்.’ இந்த ஞானத்தை உயர்த்திய பயிற்சி. அநாதியாகிய கிழக்குத் திசையில் புதிய ஜப்பான் தாமரைப்பூவைப்போல் எளிது தோன்றிவிட்டாள். பழைய மூடாசாரங்களை ஜப்பான் உதறித் தள்ளிவிட்டாள்; சோம்பர் மனதிலே தோன்றிய வீண் பொய்களை மறந்துவிட்டாள்; நவீன யுகத்தின் ஸ்ம்மானங்களை நிர்ப்பயமாகக் கேட்டாள்; நவீன நாகரிகப் பொறுப்புகளைத் தீவிரமாகவும் தகுதியாகவும் தரித்து வருகிறாள். 

“ஜப்பான் ஆசியாவுக்குத் தைரியம் கொடுத்தது. ‘உள்ளே உயிர் இருக்கிறது. நமக்குள் வலிமை இருக்கிறது. மேல் தோல்தான் காய்ந்து கொண்டிருக்கிறது. அதைக் கழற்றி எறிந்துவிட்டு, அதற்கு அப்பால், ஓடுகிற காலநதியிலே முழுகி ஸ்நானத்தைப் பண்ணி எழவேண்டும். தற்காலத்துக்குப் பயந்து, முற்காலத்திலே போய்த் தலையை நுழைத்துக் கொள்ளுவோன் உயிர் இருந்த போதிலும் செத்தவனுக்கு ஸமானமே.’ இது ஜப்பான் சொல்லிக் கொடுத்த விஷயம். ‘பழைய விதையிலே உயிர் ஸத்து நீங்கவில்லை. புதிய காலமாகிய வயலிலே நடவேண்டும்.’ இது ஜப்பான் சொல்லிக் கொடுத்த விஷயம். 

“ஜப்பான் பிறரைப்போல் வெளியபிநயம் காட்டி இந்தப் பெரிய ஸ்தானத்தை அடையவில்லை. பிறரைப் பார்த்து நாமும் அவர்களைப்போல் ஆகவேண்டுமென்று பாவனைகள் காட்டினால், வலிமை உண்டாகாது. பிறரிடம் சாஸ்திர ஞானம் வாங்கிக் கொள்ளுதல் வெளியபிநயம் அன்று. பிறர் கல்வியை நாம் வாங்கலாம்; கோணல்களை வாங்கக்கூடாது. தேசத்தாருக்கென்று பிரிவுபட்ட தனித்தனிக்குணங்கள் பல உண்டு. எல்லா தேசத்தாருக்கும் பொதுவான மானுஷிகக் குணங்கள் பல உண்டு. பிறரிடம் ஒன்றை வாங்கிக் கொள்ளும் போது, ஸாவதானமாக வாங்கிக் கொள்ள வேண்டும்.”

ரவீந்திர கவியின் உபந்யாஸத்தை ஜப்பான் தேசத்தார் மிகவும் பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகள் உயர்ந்த புகழ்ச்சி பேசுகின்றன. நல்ல காரியம் செய்தார். இப்படியே, இங்கிலாந்து முதலிய எல்லாத் தேசங்களிலும் போய்,  பாரத தேசத்தின் அறிவு மஹிமையை மற்றொரு முறை விளக்கி வரும்படி புறப்பட்டிருக்கிறார் போலும். 

’டோக்கியோ மானிச்சி’ என்ற ஜப்பானியப் பத்திரிகை சொல்லுகிறது: “அறிவில் ஜப்பான் பாரத தேசத்திற்குக் கடன்பட்டிருக்கிறது. ஜப்பான் நாகரிகம் பெறாதிருந்த காலத்தில், பாரத தேசம் அதில் உயர்ந்திருந்தது. பாரத ஞானம் பூ மண்டலம் முழுதையும் தீண்டியிருக்கிறது. ‘ப்லாத்தோ’வுக்கு உபதேசம் பாரத தேசத்திலிருந்து கிடைத்தது. ஸ்வேதன்போர்க், ஷாபன்ஹோவர் என்ற பிற்காலத்து ஞானிகளும் பாரத தேசத்தின் அறிவுக்கு வசப்பட்டார்கள். பாரத நாகரிகம் நமக்குச் சீனா, கொரியா வழியாக வந்தது, நாம் இந்தியாவின் கடனைத் திரும்பக் கொடுக்க வேண்டும். ரவீந்திர நாதரை நாம் மிகவும் கெளரவப்படுத்த வேண்டும்.”

“யோர்த்ரை” என்ற ஜப்பானியப் பத்திரிகை சொல்லுகிறது: “ ‘உலக வாழ்க்கையும் கவிதையும் சுதி சேர்ந்து நிற்க வேண்டும்’ என்பது ரவீந்திரர் கொள்கை. ஜப்பான் பாரத நாட்டுக்கு மிகவும் அறிவுக்கடன் பட்டிருக்கிறது.”

இவ்வாறு ரவீந்திரருடைய பேச்சு வரும்போது, ஜப்பானியப் பத்திரிகைகள் தமது நாடு பாரத பூமிக்கு அறிவு கடன்பட்டிருப்பதை நினைத்துக் கொள்ளுகின்றன. ரவீந்திரருடைய கீர்த்தி உலகத்தில் அதிகமாகப்பரவி ஏறக்குறைய நான்கு வருஷங்கள் ஆகவில்லை. இந்த நான்கு வருஷங்களுக்குள், ஜப்பான் தேசத்தில் ஸ்ம்ஸ்கிருத இலக்கணப் புஸ்தங்கள் எப்போதைக் காட்டிலும் அதிகமாக விலையாகின்றனவாம். ‘பாரத தேசமே லோக குரு’ என்பதை உலகத்தார் அங்கீகாரம் செய்வார்கள். நாம் போய் நினைப்பூட்ட வேண்டும்.

No comments:

Post a Comment