Monday, December 12, 2011

உண்மை

ரத்தினக் களஞ்சியம்
பூமண்டலத்தில் வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு காலங்களிலே பிறந்து, மனுஷ்ய ஜாதியாருக்கு ஞானதானம் செய்த சில பெரியோரின் வசனங்களை இங்கே கோத்தெழுதுகிறேன். தயவு செய்து சிரத்தையுடன் படிக்கும்படி தமிழ் நாட்டு மஹா ஜனங்களை வேண்டுகிறேன்.
தெலுங்கு தேசத்து ஞானியாகிய வேமன்ன கவி சொல்லுகிறார் :

“கல்லைக் குவித்துப் பெரிய கோயில்கள் ஏன் கட்டுகிறீர்கள்? தெய்வம் உள்ளுக்குள்ளே இருப்பதை அறியாமல், வீணாக ஏன் தொல்லைப்படுகிறீர்கள்?”

ஸ்வாமி விவேகானந்தர்: “ஒவ்வொரு மனிதனுடைய அறிவிலும் பரமாத்மா மறைந்து நிற்கிறது. வெளியுலகத்தையும் உள்ளுலகத்தையும் வசப்படுத்தி உள்ளே மறைந்திருக்கும் தெய்வத்தை வெளிப்படுத்துவதே நாம் செய்ய வேண்டிய காரியம். செய்கை, அன்பு, யோகம், ஞானம் இவற்றினால் அந்தப் பொருளை அடைந்து விடுதலைபெற்று நில்லுங்கள். தர்மம் முழுதும் இஃதேயாம். மற்றப்படி மதங்கள், கொள்கைகள், கிரியைகள், சாஸ்திரங்கள், கோயில்கள், ஆசாரங்கள் எல்லாம் இரண்டாம் பக்ஷமாகக் கருதத் தக்க உபகரணங்களேயன்றி வேறில்லை.” 

அமெரிக்கா தேசத்து மஹா வித்வானும் ஞானியுமாகிய எமெர்ஸன் சொல்லுகிறார்:
“எவன் வந்தாலும் சரி, அவனிடமுள்ள தெய்வத்தை நான் பார்ப்பதற்குத் தடை உண்டாகிறது. ஒவ்வொருவனும் தன்னுள்ளே இருக்கும் திருக்கோயிலின் கதவுகளை மூடி வைத்துவிட்டு மற்றொருவனுடைய தெய்வத்தையும், மற்றொருவனுக்கு வேறொருவன் சொல்லிய தெய்வத்தையும் பற்றிப் பொய்க் கதைகளை என்னிடம் சொல்ல வருகிறான்.”

த்ஸென் – தஸே – த்ஸுங் என்ற சீன தேசத்து ஞானி சொல்கிறார்: 

“பழைய காலத்திலிருந்து வந்ததென்று கருது ஒரு மதம் உண்மை என்பதாக நிச்சயித்து விடலாகாது. உண்மை இதற்கு நேர் மாறானது. மனித ஜாதி நாளாக நாளாக வாழ்க்கையின் உண்மைவிதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ளுகிறது. நம் பாட்டன்மாரும் பூட்டன்மாரும் நம்பிய விஷயங்களையே நாமும் நம்ப வேண்டுமென்ற விஷயமானது குழந்தையாக இருக்கும் போது தைத்த உடுப்புகளையே பெரியவனான போதும் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒப்பாகும்.”

மேற்கூறிய எமெர்ஸன் பண்டிதரின் சிஷ்யரும் நல்ல ஞானியுமான தோரோ சொல்லுகிறார்:
“என்ன ஆச்சரியம்! உண்மையின் பிரகாசங்களில் நமது காலத்துக்குப் பயன்படாத பழையனவற்றை உலகம் ஒப்புக் கொள்ளுகிறது. இப்போது புதிய ஞானிகள் கண்டுசொல்லும் உண்மைகளை வீணாக மதிக்கிறது; சிற்சில சமயங்களில் பகைக்கவும் செய்கிறது. என்ன ஆச்சரியம்!”
ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:

“ஆச்சரிய சித்திகள் காட்டுவதாகச் சொல்லும் மனிதர் இருக்குமிடத்துக்குப் போக வேண்டாம். அவர்கள் உண்மை நெறியினின்றும் தவறிவிட்டார்கள்.”

ருஷியா தேசத்து ஞானியாகிய டால்ஸ்டாய் (தோல்ஸ்தோய்):

“நமது மதக் கொள்கைகளில்  பயனில்லாதது, ஜடமாவது, புறவடிவமானது, தெளிவில்லாதது, நிச்சயமில்லாதது – இவற்றை நாம் பயமில்லாமல் தள்ளிவிட வேண்டும். அதன் ஸாரத்தை மாத்திரம் கொள்ள வேண்டும். எத்தனைக்கு எத்தனை இந்த ஸாரத்தை நாம் சுத்தப்படுத்துகிறோமோ, அத்தனைக்கு அத்தனை ஜகத்தின் உண்மை விதி நமக்குத் தென்படும்.”
எது தெய்வம்?

‘ஹெர்மெஸ்’ என்ற புராதன மிசிர (ஈஜிப்டு) தேசத்து ஞானி சொல்லுகிறார்:

“உடலில்லாதது, தோற்றமில்லாதது, வடிவமற்றது, ஜடமில்லாதது, நமது புலன்களுக்கு எட்டாதது – இது தெய்வம்.”

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்: “ஈசன் ஒளி; எல்லாப் பொருள்களிலும் திரைக்குள் மறைந்தது போல் மறைந்து நிற்கும் ஒளியே தெய்வம்.”

பட்டினத்துப்பிள்ளை: “எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கும் ஜோதி.”

தாயுமானவர்: “சுத்த அறிவே சிவம்.”

ரிக்வேதம்: “உண்மைப் பொருள் ஒன்று அதனைப் புலவோர் பலவாறு சொல்லுகிறார்கள்.”
நம்மாழ்வார்: “திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம், இவை மிசைப் படர் பொருள் முழுவதுமாய், அவையவைதோறும் உடம்மிசை உயிரெனக் கரந்துளன்.”

ஹெர்மெஸ்: “தெய்வம் எது? ஜகத்தின் உயிர்.”

முடிவுரை
எனவே, எல்லா மதங்களும் உண்மைதான்; ஒரு மதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதி மனிதர் பிரிந்துவிடக் கூடாது. எல்லா மதஸ்தரும் ஒரே தெய்வத்தைதான் வணங்குகிறார்கள். லெளகிக விஷயங்களைப் போலவே மதவிஷயங்களிலும் ஒப்பு, உடன்பிறப்பு, விடுதலை மூன்றும்  பாராட்ட வேண்டும்.

No comments:

Post a Comment