Saturday, December 3, 2011

சிதம்பரம்


காலை பத்து மணி இருக்கும். நான் ஸ்நானம் செய்து, பூஜை முடித்து, பழம் தின்று, பால் குடித்து, வெற்றிலை போட்டு, மேனிலத்திற்கு வந்து நாற்காலியின் மேல் உட்கார்ந்துகொண்டு இன்ன காரியம் செய்வதென்று தெரியாமல் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கே எதிரே வானம் தெரிகிறது. இளவெயில் அடிக்கிறது. வெயிற்பட்ட மேகம் பகற் சந்திரம் நிறங்கொண்டு முதலையைப் போலும் ஏரிகரையைப் போலும் நானாவிதமாகப்  படுத்துக் கிடக்கிறது. எதிர் வீட்டில் குடி இல்லை. அதற்குப் பக்கத்து வீட்டிலிருந்து சங்கீத ஓசை வருகின்றது. வீதியிலிருந்து குழந்தைகளின் சப்தம் கேட்கிறது. வண்டிச் சப்தம், பக்கத்து வீட்டு வாசலில் விறகு பிளக்கிற சப்தம், நான்கு புறத்திலும் காக்கைகளின்  குரல், இடையிடையே குயில் கிளி புறாக்களின் ஓசை, வாசலிலே காவடி கொண்டுபோகும் மணியோசை, தொலையிலிருந்து வரும் கோயிற் சங்கின் நாதம், தெருவிலே சேவலின் கொக்கரிப்பு, இடையிடையே தெருவில் போகும் ஸ்திரீகளின் பேச்சொலி, அண்டை வீடுகளில் குழந்தை அழும் சப்தம், ‘நாராயணா, கோபாலா!’ என்று ஒரு பிச்சைக்காரனின் சப்தம், நாய் குலைக்கும் சப்தம், கதவுகள் அடைத்துத் திறக்கும் ஒலி, வீதியில் ஒருருவம் ‘ஹுகும்’ என்று தொண்டையை லேசாக்கி இருமித் திருத்திக் கொள்ளும் சப்தம், தொலையில் காய்கறி விற்பவம் சப்தம், ‘அரிசி, அரிசி’ என்று அரிசி விற்றுக் கொண்டு போகிற ஒலி – இப்படிப் பலவிதமான ஒலிகள் ஒன்றன்பின் மற்றொன்றாக வந்து செவியில் படுகின்றன. இந்த ஒலிகளையெல்லாம் பாட்டாக்கி இயற்கைத் தெய்வத்தின் மஹாமெளனத்தைச் சுருதியாக்கி என் மனம் அநுபவித்துக் கொண்டு இருந்தது. 

வல்லூறு நாயக்கர்

இப்படி இருக்கையில், என் முன்னே வேதபுரம் ஸ்ரீ கிருஷ்ணகான சபையாரின் காரியதரிசியாகிய வல்லூறு நாயக்கர் வந்து நின்றார். உட்காரும்படி சொன்னேன்; உட்கார்ந்தார். “விஷயமென்ன?” என்று கேட்டேன். அவர் சொல்லுகிறார்: “அடுத்த செவ்வ்யாக்கிழமை இரவு நமது சபையின் ஆதரவின் கீழ் நடைபெறும் ராமாயண உபந்நியாசக் கோவையில் இரண்டாவது பகுதியாகிய சீதா கல்யாணம் நடக்கிறது. முதல் கதையாகிய ஸ்ரீராமஜனனம் சென்ற புதன்கிழமை நடந்தது. தஞ்சாவூரிலிருந்து மிகவும் நன்றாகப் பாடக்கூடிய பின்பாட்டுக்காரர் வந்திருக்கிறார். இவருக்குச் சன்னமான சாரீரம்; ஆனால், பெண் குரல் அன்று. நன்றாகப் பாடுவார். ஒருதரம் வந்து கேட்டால் உங்களுக்கே தெரியும். மேலும், இந்த ராமாயணக் கதையில் வசூலாகும் பணத்தில் ஒரு சிறு பகுதி நமது அரசாங்கத்தாரின் சண்டைச் செலவிற்கு உதவி செய்வதாக அதிகாரிகளிடம் வாக்குக் கொடுத்திருக்கிறோம். நான்கு ரஸிகர் வந்து கேட்டால்தானே பாகவதர்க்குச் சந்தோஷம் ஏற்படும். ரஸிகராக இருப்பவர் வந்து கேட்டால் மற்ற ஜனங்களும் வருவார்கள். நம் சபைக்கு லாபம் உண்டு. பாகவதர் ராமாயணப் பிரசங்கத்தில் தேர்ச்சி உடையவர். மிருந்தங்கம் அடிக்கிற பிராமணப்பிள்ளை பதினைந்து வயதுடையவன்; ஆனால் மிகவும் நன்றாக அடிக்கிறான். தங்கள் அவசியம் வரவேண்டும்” என்றார். 

அதற்கு நான், “சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம், லக்ஷ்மண சக்தி, பட்டாபிஷேகம் என்கிற நான்கு கதைக்கும் நான் வரலாமென்று உத்தேசிக்கிறேன்; நிச்சயமாகச் சொல்ல முடியாது. பட்டாபிஷேகத்தன்று நிச்சயமாக வருகிறேன். எனக்கு இரவிலே தூக்கம் விழிப்பது கொஞ்சம் சிரமம். ஆயினும், தங்கள் பொருட்டாகவு, தங்கள் சபையின் தலைவராகிய ஓங்காரச் செட்டியார் பொருட்டாகவும், அந்தச் சிரமத்தைப் பார்க்காமல் வருவேன்” என்றேன். “இராமாயணப் பிரசங்கத்தில் வரும் தொகையிலே ராஜாங்கத்தாரின் சண்டைச் செலவிற்காக உதவி செய்யப்படும் என்ற விஷயத்தைத் தனியாகக் காட்டு ஒரு விசேஷ விளம்பரம் போடப்போகிறோம். அதின் என்ன மாதிரி வக்கணை எழுதவேண்டும் என்பதைத் தாங்கள் தெரிவிக்கவேண்டும்” என்று வல்லூறு நாயக்கர் பிரார்த்தித்துக் கொண்டார். நான் வக்கணை சொன்னேன். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் குள்ளச்சாமி வந்து சேர்ந்தார்.

ஜீவன் முக்தி: அதுவே சிதம்பரம்

குள்ளச்சாமி யாரென்பதை நான் முன்னொரு முறை சுதேசமித்திரம் பத்திரிகையில் எழுதிய ’வண்ணான் கதை’யில் சொல்லியிருக்கிறேன். இவர் ஒரு பரமஹம்ஸர். ஜடபரதரைப்போல், யாதொரு தொழிலும் இல்லாமல்,  முழங்காலுக்கு மேல் அழுக்குத்துணி கட்டிக்கொண்டு, போட்ட இடத்தில் சோறு தின்றுகொண்டு, வெயில் மழை பாராமல் தெருவிலே சுற்றிக்கொண்டிருக்கிறார். இவருடைய ஒழுக்க விநோதங்களை மேற்படி வண்ணான் கதையிலே காண்க. இவர் வந்து சோறு போடு என்று கேட்டார். தாம் திருவமுது செய்யுமுன்பாக, ஒரு பிடி அன்னம் என் கையில் நைவேத்தியமாகக் கொடுத்தார். நான் அதை வாங்கியுண்டேன். அப்போது சாமியார் போஜனம் முடித்த பிறகு, என்னுடன் மேல் மெத்தைக்கு வந்தார். ’கண்ணை மூடிக்கொள்’ என்றார். மூடிக் கொண்டேன். நெற்றியில் விபூதியிட்டார். ‘விழித்துப்பார்’ என்றார். கண்ணை விழித்தேன். நேர்த்தியான தென்றல் காற்று வீசுகிறது. சூரியனுடைய ஒளி தேனைப்போலே மாடமெங்கும் பாய்கின்றது. பலகணி வழியாக இரண்டு சிட்டுக் குருவிகள் வந்து கண் முன்னே பறந்து விளையாடுகின்றன. குள்ளச்சாமியார் சிரிக்கிறார். கடைக்கண்ணால் தளத்தைக் காட்டினார். கீழே குனிந்து பார்த்தேன். ஒரு சிறிய ஓலைத் துண்டு கிடந்தது. அதை நான் எடுக்கப் போனேன். அதற்குள்ளே அந்தக் குள்ளச்சாமி சிரித்துக்கொண்டு வெளியே ஓடிப்போனார். அவரைத் திரும்பவும் கூப்பிட்டால் பலனில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் இஷ்டமானபோது வருவார்; இஷ்டமானபோது ஓடிப்போவார். சிறு குழந்தை போன்றவர். மனுஷ்ய விதிகளுக்குக் கட்டுப்பட்டவரில்லை. ஆகவே, நான் அவரைக் கூப்பிடாமலே கீழே கிடந்த ஓலையை எடுத்து வாசித்துப் பார்த்தேன். 

"1. எப்போதும் வானத்திலே சுற்றும் பருந்து போல், போக விஷயங்களினால் கட்டுப்படாமல், பரமாத்மாவின் ஞானக் கதிரை விழித்து நோக்குதலே விடுதலை. அதுதான் சிதம்பரம். மகனே! சிதம்பரத்துக்குப் போ. 2. சிதம்பரத்தில் நடராஜருடன் சிவகாம சக்தி பக்தருக்கு வரதானம் கொடுக்கிறார். போய் வரம் வாங்கு. 3. சிதம்பரமே ஸ்ரீரங்கம்; அதுவே பழனி மலை. எல்லாப் புண்ணிய க்ஷேத்திரங்களும் ஜீவன் முக்திச் சின்னங்கள் என்று தெரிந்துகொள். உனக்கு க்ஷேமமும் நீண்ட வயதும் ஜீவன் முக்தியும் விளைக” என்று எழுதியிருந்தது. இந்த வசனங்கள் நமது புராதன வேத தர்மத்திற்கு முற்றும் ஒத்திருக்கிறபடியால், அவற்றைச் சுதேசமித்திரன் பத்திரிகை மூலமாக வெளியிடலானேன்.

No comments:

Post a Comment