Tuesday, June 26, 2012

திரான்ஸ்வால் இந்தியரின் கஷ்டம்


டிசம்பர் 8, 1906

ஓநாய் ஆட்டுக்குட்டிகளிருக்கும் இடத்திற்கு வந்தால் ஓநாயின் பாடு வெகு உல்லாசம்தான். ஆனால் ஓநாய்கள் இருக்குமிடத்திற்கு ஆட்டுக்குட்டி செல்லுமானால் இதன் பாடு வெகு கஷ்டம். இந்தியர்களுக்கும் வெள்ளை ஜாதியாருக்கும் இப்போதிருக்கும் சம்பந்தம் மேற்கண்ட விதமாகவே இருக்கிறது. இந்தியாவுக்கும் ஒரு ஐரோப்பியன் வந்தால் அவனுக்கு வேட்டகத்திற்கு வந்த மாப்பிள்ளைக்கு நடக்கும் உபசாரங்களெல்லாம் குறைவின்றி நடக்கின்றன. அவன் திரும்பின இடத்திலேயெல்லாம் உத்தியோகம். அவன் கால் வைத்த இடம் எல்லாம் பணம். சென்ற இடமெல்லாம் மதிப்பு. கையிலே அரைக்காசு இல்லாமல் இங்கே வந்து சேர்கிறான். திரும்ப ஊருக்குப் போகும்போது பிரபுவாகப் போகிறான். அவனுடைய தசை அப்படியிருக்கிறது. இது நிற்க. 

ஆங்கிலேய ஆட்சிக்க்குட்பட்ட திரான்ஸ்வால், கேப் காலனி, ஆஸ்டிரேலியா முதலிய தேசங்களில் இவன் (இந்தியன்) கதி மஹா பரிதாபகரமாய் விடுகிறது. இவர் வர்த்தகம் செய்து செழிப்படையவிடுகிறதில்லை. உத்தியோகங்களென்று மூச்சுவிடக்கூடாது. “அங்கே நடக்கக்கூடாது இங்கே வீடு கட்டக்கூடாது, தண்ணீர் சாப்பிடத் தீர்வை கொடுக்க வேண்டும், மூச்சுவிட வரி செலுத்த வேண்டும்” என்பதாக எண்ணிறந்த இடைஞ்சல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நமது “காருண்ய”! கவர்ன்மெண்டாரிடம் முறையிட்டுத் தொண்டை வற்றிப்போய்விட்டதேயொழிய ஒரு காசுக்குப் பயன் கிடையாது. சிறிது காலத்திற்கு முன்பு திரான்ஸ்வாலில் “ஏஷ்யாக்காரர்விதி” (Asiatic Ordinance) என்பதாக ஒரு விதியேற்படுத்தப்பட்டது. இது இந்தியர்களுக்கு வெகு அவமானமான விதி. இதை மாற்றவேண்டுமென்ற திரான்ஸ்வாலின் இந்தியர்கள் பிரதிநிதிக் கூட்டமொன்று இங்கிலாந்துக்குச் சென்று அங்குள்ள மந்திரிகளையும் ராஜதந்திரிகளையும் பிரார்த்தனை புரிந்தது. எத்தனையோ பிராயாசைக்கப்பால் இங்கிலாந்து கவர்ன்மெண்டார் விதி கொஞ்ச நாளைக்கு நிறுத்திவைக்கப்படுமென்றும், முற்றிலும் மாற்றிவிட வேண்டுமானால் அது மிகவும் யோசனை செய்து முடிவுவேண்டிய காரியமென்றும் சொல்லி இருக்கிறார்கள். இது என்ன அவமானம்! என்ன நிந்தை! ஆரிய புத்திரர்களே! தூங்கிக்கொண்டா இருக்கிறீர்கள்? இந்த மானமற்ற பிழைப்பு இன்னும் எத்தனை காலம் பிழைக்கவேண்டுமென்று உத்தேசித்திருக்கிறீர்கள்!

No comments:

Post a Comment