27 ஜூலை 1916 நள ஆடி 13
திருநெல்வேலி வட்டத்தில் குட்டையூர்
என்றொரு ஜமீன் உண்டு. அங்கே ஜனங்களெல்லாம் மிகவும் ஏழைகள். மறவர் குடி 200, 300 வீடுகளுண்டு.
மற்ற குடிகளைக் காட்டிலும் இந்த மறவர் அதிக ஏழைகள். இவர்களில் சிலர் ஜமீந்தாருக்குப்
பல்லக்குச் சுமப்போர். அடைப்பக்காரர் சிலர். வெளியே பருத்தி நிலங்களிலே வேலை செய்து
பிழைப்பவர் சிலர். அநேகருக்கு வேலை கிடையாது. பக்கத்துக் கிராமங்களி்லே போய்த் திருடிக்கொண்டு
வருவார்கள். அதிலும் அதிக வரும்படி கிடைப்பதில்லை. இந்த இலாகாவே ஏழை இலாகா. ஓரிரவு
திருடிக்கொண்டு வந்த பொருளில் ஊர்க்காவல் சேவகருக்குப் பாதி கொடுத்தது போக மிச்சம்
ஐந்தாறு நாள் ஜீவனத்துக்குக் கூடப் போதாது. சுமார் 25 வருஷங்களுக்கு முன்பு அங்கே ஜமீந்தாராக
இந்த வெள்ளையப்ப நாய்க்கர் இறந்துபோன சமயத்தில், அவருடைய மகனுக்கு 12 வயதுதான் ஆயிருந்தது.
ஆதலால், அவனைச் சென்னைப் பட்டணத்திலுள்ள ஜமீந்தார்ப் பிள்ளைகளின் பள்ளிக்கூடத்தில்
சேர்த்துவிட்டு, அவனுக்குத் தகுந்த வயதாகும்வரை ஜமீன் அதிகாரத்தைக் ‘கோட்டா வாசுக்’
(கோர்ட் ஆப் வார்ட்ஸ்) காரர் நடத்த வேண்டுமென்று ஸர்க்கார் அதிகாரிகள் தீர்மானம் செய்தார்கள்.
திருச்சினாப்பள்ளியிலே டிப்டிகலெக்டராகவிருந்த துரைசாமி அய்யரைக் ‘கோட்டா வாசுக்’ கார்யஸ்தராக
நியமனம் செய்தார்கள். பழைய ஜமீந்தாரை அடுத்துப் பிழைத்தவர்களிலே அநேகருக்குச் சம்பளம்
நின்று போய்விட்டது. ஊரிலே கஷ்டம் அதிகப்பட்டது. மறவர் தரித்திரத்தில் முழுகிப் போயினர்;
களவுகள் அதிகப்பட்டன; உள்ளூரிலேயே திருடத் தொடங்கிவிட்டார்கள். இந்த மறவரில் நமது பூச்சித்தேவன்
ஒருவன்.
பூச்சித்தேவன் களவுகள்
பூச்சித்தேவன் உடம்பில் நல்ல வலிமையுடையவன்.
ஆனால் களவிலே நல்ல தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் பெரிய திருடன் இவனைச் சேர்த்துக் கொள்வதில்லை.
சிறு சிறு களவுகளிலே இவன் திருப்தி கொண்டிருந்தான். நாளைக்கு வேண்டுமே யென்ற கவலை இவனுக்குக்
கிடையாது.. அந்தந்த நாள் ஆகாரத்துக்குக் கிடைத்தால் போதும். பெரிய களவுகளிலே சேராதபடியால் இவனை டாணாக்காரர் தொல்லைப்படுத்தவில்லை. பிராமண வீதிகளுக்கு வருவான். வெளிப்புறத்திலே வேஷ்டிகள்,
பாட்டிமாருடைய சேலைகள் உலரப் போட்டிருக்கும். ஏதேனுமொன்றை அழித்துக் கொண்டு போய் எங்கேனும்
ஒன்றரையணாவுக்கு விற்று அன்று பகல் போஜனத்திற்கு வழி தேடிக் கொள்ளுவான்.
இராக் கொள்ளை
மேலைத் தெருவின் ஓரத்தில் புன்செய்
வெளியை அடுத்த வீட்டில் ஒரு கிழவி தனது பிள்ளையுடனே குடித்தனம் பண்ணிக் கொண்டிருந்தாள்.
இவ்விருவருக்கும் அந்த ஊர் சத்திரத்திலிருந்து நாளொன்றுக்கு மூன்று படி அரிசியும்,
மேல் சாமானும், படிச்செலவாக கொடுக்கும்படி பழைய ஜமீந்தார் காலத்தில் ஏற்பாடாயிருந்தது.
அது ‘சோட்டா வாசு’க் காலத்திலே கூட நிற்கவில்லை. இவர்கள் வீட்டிலே மண் பாண்டங்களைத் தவிர வேறொரு சாமானும் கிடையாது. இங்கேதான்
பூச்சித்தேவன் அடிக்கடி திருட வருவான். நடு நிசியில் கொல்லைக் கதவை எளிதாக திறந்துகொண்டு உள்ளே நுழைவான். கூடத்திலே பழஞ் சோற்றுப் பானை வைத்திருக்கும்.
அதைத் திறந்து பழையதை எடுத்துக் கொண்டு போவான். சத்தத்திலே கிழவி கண்விழித்துவிடுவாள்.
“அது யாரடா அங்கே, பாடையில் போவாய், படக்கென
விழுவாய், யாரெங்கே!” என்று கத்துவாள். “நாந்தானம்மா, பூச்சித்தேவன். பானையைத் தொடவில்லை.
கோலாலே கை படாமல் சோற்றை மாத்திரம் துணியிலே கவிழ்த்துக்கொண்டு போகிறேன். போய் வருகிறேனம்மா”
என்று சொல்லிவிட்டுப் போவான். கிழவி வைதுகொண்டே மறுபடி கதவை நேரா அடைத்துவிட்டு வந்து
படுத்துக் கொள்ளுவாள்.
சுந்தரய்யங்கார் வீட்டுச் செப்பு
ஒரு நாள் பகல் 2 மணியிருக்கும்;
மாடத் தெரு சுந்தரய்யங்கார் வீட்டிலே அவருடைய தாயார் மாத்திரம் தனியாகக் குடியிருந்தாள்.
அய்யங்காரும் அவருடைய மனைவியும் வெளியூருக்குப் போயிருந்தார்கள். கிழவி வெளித் திண்ணையிலே
உட்கார்ந்து ராம ஜபம் பண்ணிக் கொண்டிருந்தாள். அப்போது பூச்சித்தேவன் அங்கே போய்,
“தாகத்துக்குத் தண்ணீர் கொடுங்களம்மா” என்று கேட்டான். கிழவி உள்ளே போய், ஒரு செம்பிலே
ஜலம் கொண்டு வந்து வைத்தாள். அதை இவன் எடுத்துக் குடித்துக் கொண்டிருக்கையில், கிழவி
சூத்திரன் தொட்ட பாத்திரத்தை தான் தொடக்கூடாதாகையால் அதைக் கழுவும் பொருட்டு மற்றொரு
பாத்திரத்திலே ஜலம் கொண்டு வருவதற்காக உள்ளே போனாள். திரும்பி வந்து பார்க்கையில் பூச்சித்தேவனையுmம
காணவில்லை; செம்பையும் காணவில்லை. கிழவி கூவே கூகூவே கூ என்று கத்துகிறாள். இந்தக்
கூக்குரலைக் கேட்டுப் பக்கத்து வீட்டுச் சுப்பா சாஸ்திரி குடுகுடுவென்று வெளியே ஓடிவந்து,
“என்ன ஸங்கதி?” என்று கேட்டார்.
“அந்தப் படுபாவி பூச்சித்தேவன்
வந்து குடிக்கத் தீர்த்தம் கேட்டான். செம்பிலே கொண்டுவந்து கொடுத்துவிட்டு உள்ளே போய்ப்
பாத்திர சுத்திக்கு வேறே தீர்த்தம் கொண்டு
வருமுன்னே ஆளைக் காணவில்லை. செம்பைக் கொண்டு போய்விட்டான். நான் என்ன செய்வேன்? நல்ல செம்பு. வாங்கி மூன்று மாதங் கூட ஆகவில்லை” என்று
கிழவி சொன்னாள்.
“எவ்வளவு நாழிகை யாச்சுது?” என்று
கேட்டார் சுப்பா சாஸ்திரி. அதற்குக் கிழவி,
“இப்போதுதான். ஒரு நிமிஷங்கூட ஆகவில்லை” என்றாள்.
சாஸ்திரி திரும்பிப் பார்த்தார்.
ஏறக்குறைய 15 வீடுகளுக்கப்பால் எதிர்ப் பத்தியிலேயிருந்த ஒரு கடையின் முன்பு பூச்சித்தேவன்
நின்றுகொண்டிருப்பதைக் கண்டு, ஒரே ஓட்டத்தில் கடைக்குப் போய்ச் சேர்ந்தார்.
அங்கே பூச்சித்தேவன் பாத்திரத்தைக்
கடைச் செட்டியிடம் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு கால் ரூபாய் கொடும், செட்டியாரே.
நாளைக் காலையில் வந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டுச் செம்பை வாங்கிக்கொண்டு
போகிறேன்” என்று சொன்னான். செட்டி செம்பைக் கையிலே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பூச்சித் தேவன் கோபத்துடன், “என்ன செட்டியாரே,
செம்பை அழகு பார்க்கிறீரோ?? இதை வைத்துக் கொண்டு கால் ரூபாய் கொடுக்க வலிக்கிறதோ?
ஸம்மதமுண்டானால் பாரும். இல்லாவிட்டால் செம்பைக் கொடும் இங்கே. பக்கத்துத் தெரு சோணாசலஞ் செட்டியால் நல்ல மனுஷ்யன்.
அவர் நமக்குச் செம்பு, கிம்பு வைக்காமல் சும்மா கடன் கொடுப்பார். அவரிடம் வாங்கிக்
கொள்கிறேன். நீட்டும், சொம்பை நீட்டும் இங்கே” என்றான். கடைச் செட்டி, “பொறு தம்பி
பொறு. இதோ கொடுக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தான். இந்த சந்தர்ப்பத்திலேதான் சுப்பா
சாஸ்திரி அவ்விடம் போய்ச் சேர்ந்தார்.
பூச்சித்தேவனை நோக்கி அதன் மகனே
இதன் மகனே என்று சுப்பா சாஸ்திரி சோனாமாரியாக
வையத் தொடங்கினார்.
பூச்சித்தேவன், “என்ன சாமி, பயித்தியம்
கியித்தியம் பிடிச்சுக்கொண்டதா? சங்கதி என்ன?
ஏன் வைகிறீர்? சொல்லும்” என்றான். “அட அயோக்கியப் பயலே! சுந்தரய்யங்கார் வீட்டுச் செம்பைத் திருடிக்கொண்டு வந்து கடையிலே விற்கப் போகிறாய்!
ஏன் வைகிறேனென்று வேறே கேட்கிறாயா? என்னோடு வாடா நீ. டாணாவுக்குப் போகலாம் வாடா நீ,
வா” என்று அட்டகாஸம் பண்ணினார் சுப்பா சாஸ்திரி.
பூச்சித்தேவன் கலகலவென்று சிரித்துக்கொண்டு,
“சாமி, நீர் கூப்பிட்டால் உம்மோடு நானாக டாணாவுக்குப் போய் மாட்டிக்கொள்ள வேண்டுமென்று
எனக்கு ஆத்திரமா? புத்தியில்லாமல் பேசுகிறீரே. நடக்கவேண்டிய சங்கதியைச் சொல்லும்” என்றான்.
சுப்பா சாஸ்திரி மஹா கோபத்துடன், “செம்பை ஏனடா திருடிக்கொண்டு வந்தாய்?” என்று கேட்டார்.
பூச்சித்தேவன், “ஐயோ, திருட்டுக்
கிருட்டென்று பேசக்கூடாது, தெரியுமா? ஜாக்கிரதை! பெரிய களவு கண்டு பிடித்துவிட்டார்.
இவர்! உம்! செட்டியாரே! பார்ப்பான் கையிலே செம்பைக் கொடுத்துப் போகச் சொல்லும். களவு
கண்டுபிடிக்க வந்தார் பெரிய களவு!” என்று நகைத்துக் கொண்டே அங்கிருந்து போய்விட்டான்.
செம்பு சுந்தரய்யங்கார் வீடு போய்ச் சேர்ந்தது.
பூச்சித்தேவனுக்குச் செல்வம் உண்டானது
பூச்சித்தேவன் கண்ணுக்கு நல்ல
லக்ஷணமாக இருப்பான். ஜில்பாக் குடுமி; கொம்பு மீசை; மிருகவுடம்பு: - பொதுவிலே அழகுள்ளவன்.
இப்படியிருக்கையிலே, ‘கோட்டாவாசு’க் காலம் போய், அடுத்த ஜமீந்தார் பட்டத்துக்கு வந்தார்.
அவருக்கு அழகான சேவகர் வைத்துக் கொள்வதிலே பிரியமதிகம். இவனை வேலைக்கமர்த்திக் கொண்டார்.
நாளாக நாளாக இவன் மேல் அவருக்கு எந்தக் காரணத்தினாலோ அளவு கடந்த அபிமான முண்டாய்விட்டது. எனவே, இவனுக்கு மறக்கூட்டத்தில்
கவுரவமதிகப்பட்டது. டாணாக்காரர் இவனைக் கண்டால் இரட்டை ஸலாம் போடுவார்கள். எங்கேனும்
பெரிய கொள்ளைகள், வழிப்பறிகள் நடந்தால் இவனுக்குப் பங்கு கொடுப்பதென்ற நியதியேற்பட்டது.
ஆபத்து வந்தால், ஜமீந்தாருடைய தயவு மூலமாக இவன் காப்பாற்றுவானென்ற எண்ணம் திருடருக்கெல்லாம்
உண்டாய்விட்டது. அக்காலத்தில் மதுரையிலே ஒரு பெரிய மிராசுதார் வீட்டில் களவு நடந்து பணமும் நகைகளுமாக ஐம்பதினாயிரம்
ரூபாய் போய்விட்டது. டாணாக்காரர் எவ்வளவோ பாடுபட்டுப்
பார்த்தும் துப்புத் துலங்கவில்லை. அதிலே பூச்சித்தேவன் சம்பந்தப்பட்டதாகக் குட்டையூரிலே
மாத்திரம் சிலருக்குச் சந்தேகமிருந்தது. ஆனால் அதை யாரும் அதிகாரிகளிடம் சொல்லத் துணியவில்லை.
பூச்சித்தேவனுக்கு விரோதமாக சாக்ஷி சொன்னால் தலை போய்விடுமென்ற பயம் எல்லாருக்குமிருந்தது.
என்ன காரணத்தாலோ, பூச்சித்தேவன் பெரிய செல்வனாகிவிட்டான். அரண்மனை வேலையிலிருந்தபடியாலும், ஜமீந்தார் இவனிடம் மிகுந்த பக்ஷம் பாராட்டினபடியாலும்
இவனுக்குப் பணம் பெருகிய விஷயத்தில் யாருக்கும் ஆச்சரியமுண்டாகவில்லை. ஊரிலே பூச்சித்
தேவர் என்ற பெயருண்டாயிற்று.
“அற்பனுkககு் பவிசு வந்தால் அர்த்த
ராத்திரி குடை பிடிப்பான்.” பூச்சித்தேவனுக்குக் கண், தலை தெரியவில்லை. ஊரில் யாரேனும்
தன்னிடம் அவமதிப்புக் கொண்டதாகச் சந்தேகமேற்பட்டால், அவர்களைத் தன் வீட்டுக்கு இழுத்துக்
கொண்டு வரச் சொல்லி அடிப்பான். தெருவில் யாரேனும் “பூச்சி” என்று சொன்னால் தன்னைத்தான்
சொல்லுகிறார்களென்று சண்டைக்குப் போய் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவான். ‘அந்தப்
பார்ப்பாரப் பயல்’, ‘இந்த முதலிப் பயல்’ என்று
யாரையும் இழிவாகப் பேசுவான். டம்பத்துக்காக ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் ஏற்படுத்தினான்.
அங்கே காலையில் பிள்ளைகளெல்லாம், “பூச்சியப்பத்தேவர் நீடூழி வாழ்க” என்று சொல்லிப்
பிள்ளையாரை கும்பிட்ட பிறகுதான் பாடஞ் சொல்லலாமென்று விதியேற்படுத்தினான். கிராமத்துப்
பெண்களைக் கெடுக்கலானான். ஏழைகள் பணத்தை நானா
விதங்களிலே அபகரித்தான். ஊர் முழுதும் இவனைப் பாவி” என்று பேசத் தலைப்பட்டார்கள்.
முடிவு
இப்படியிருக்கையில், அந்தவூர்
வடக்குத் தெரு மறவருக்கும் தெற்குத் தெரு மறவருக்கும் ஏதோ ஒரு விஷயமாக ஒரு பெருஞ் சண்டை
யேற்பட்டது. தடிகள் கத்திகளுடன் இரண்டு பக்கத்திலுமிருந்து 100, 150 பேர் வந்து கலகம்
பண்ணினார்கள். அதிலே பூச்சித்தேவனும் போனதில் விலாப்புறத்திலே பெரிய குத்துக் காயம்
ஏற்பட்டது. இதற்கிடையிலே ஸர்க்கார் அதிகாரிகள் இரண்டு பக்கத் தலைவர்களையும் பிடித்து
வைத்தார்கள். சிறைச்சாலை வைத்தியர் பூச்சித்தேவனுடைய விலாப்புண்ணைத் தீர்த்துவிடுவதென்று
மூன்று மாதங்களாயின. திருநெல்வேலி நியாயஸ் தலத்தில் விசாரனை நடந்து இவனுக்கு ஏழுவருஷ
கடுங்காவல் விதிக்கப்பட்டது. சென்னைப் பட்டணத்திலுள்ள பெரிய நியாயஸ்தலத்தில் முறையீடு
(அப்பீல்) செய்துகொண்டான். வக்கீல்களும் மற்றவர்களுமாகப்
பதினாயிரம் ரூபாய் செலவாயிற்று. இறுதிவரை இவனுக்கு விடுதலை கிடைக்கவில்லை. கீழ் ஸ்தலத்தின்
தீர்ப்பையே பெரிய நியாயஸ்தலத்தில் உறுதிப்படுத்திவிட்டார். ஏழு வருஷம் சிறையிலிருந்து
வந்தபின் இவனை ஜமீந்தார் கவனிக்கவில்லை. மிஞ்சியிருந்த சொற்பப் பொருளை வைத்துக்கொண்டு
இப்போது மறுபடியும் பூச்சித்தேவன் என்ற பெயருடன்
கூடிய வரை யோக்கியவனாகவே ஜீவனம் செய்து வருகிறான்.
No comments:
Post a Comment