Thursday, June 14, 2012

புதுப் பேய்


13 மே 1916                                            நள சித்திரை 21

வேதபுரம் எலிக்குஞ்சு செட்டியார் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது. பெயர் காந்திமதி. பெண் நல்ல அழகு. சிவப்பு நிறம். முகத்தில் ஒரு மாசு மறு இல்லாமல் நிலா வீசும். மென்மையான பூங்கொடியைப் போல் இருப்பாள். இரண்டு மூன்று பாஷைகள் தெரியும்.

நேர்த்தியாகப் பாடுவாள். வீணை வாசிப்பாள். தினந்தோறும் வர்த்தமானப் பத்திரிகைகள் படித்து உலகத்தில் நடைபெறும் செய்திகளை வெகு நுட்பமாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வாள். யாரேனும் ஒரு மந்திரி, அல்லது ஒரு பெரிய ராஜ்ய தந்திரி, அல்லது பெரிய ஞானாசார்யர், தனத்தலைவர் ஆகிய இவர்கள் பேசும் வார்த்தைகளுக்குள்ளே தொளைத்துப் பார்த்துக் கால் மைல் தூரம் அர்த்தம் கண்டுபிடிப்பாள். உபந்நியாசம் செய்வோர் சொல்லக் கூடாதென்று மறைத்து வைக்கும் வார்த்தையைக் கூடக் கண்டு பிடித்துச் சொல்லுவாள். பெண் நல்ல புத்திசாலி.

இவளுக்குப் போன மாசம் வரையிலே ஒரு குறையும் கிடையாது. ஸாதாரணமாக இருந்தாள். தீடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை தலை சுற்றி ஆடத் தொடங்கிவிட்டாள்.

‘ஹா’ என்று கத்துவதும், சிரிப்பதும், பிதற்றுவதும் பெரிய அமளியாய் விட்டது. செட்டியார் என்னை வந்து கூப்பிட்டார். நான் பார்க்கப் போனேன். என்னைக் கண்டவுடன் காந்திமதி கடகடவென்று சிரித்தாள். கண்ணைப் பார்த்தால் வெறி பிடித்தவணைப் போலிருந்தது.

“காந்திமதி, உனக்கு என்ன செய்கிறதம்மா?” என்று கேட்டேன். மறுமொழியில்லை. இரண்டு மூன்று தரம் வற்புறுத்திக் கேட்ட பிறகு, “ஹா, காளிதாசனா? வா வா, தூங்குகிறாயா? எழுப்ப வந்தேன், காளிதாசனா? ஓஹோ; கவியெங்கே, என்மேலே பாட்டுப் பாடு நான் புதுப் பேய்… ஆஹா வெனேஜெலோஸ், மடாதிபதி, தென் ஆப்பிரிகா, வீணை, திருச்சினாப்பள்ளி பாட்டுப் பாடு” என்று எதெல்லாமோ சொன்னாள். நான் திகைத்துப் போய்விட்டேன்.

“எப்படியிருந்த புத்தி!” என்று சொல்லி எலிக்குஞ்சு செட்டியார் கண்ணீருதிர்த்தார். “ஏனம்மா? பிதற்றுகிறாயே, உனக்கு உடம்பு என்ன செய்கிறது?” என்று மறுபடியும் கேட்டேன்.

“எனக்கு உடம்பு ஒன்றுமில்லை. நான் புதுப்பேய். உங்களுக்கெல்லாம் நோய் பிடித்திருக்கிறது.. நான் அதை நீக்கிவிட வந்தேன். விபூதி கொண்டு வா” என்று காந்திமதி அலறத் தொடங்கினாள். எலிக்குஞ்சு செட்டியார் ஒரு பித்தளைத் தட்டிலே விபூதி கொண்டுவந்து என் கையிலே கொடுத்தார். நான் பெரிய மந்திரவாதி என்று அவருடைய அபிப்பிராயம். ஏதாவது வியாதி சாதாரணமாக நரம்புகளைப் பற்றியதாக இருந்தால் மந்திரம் செய்து நோயாளியின் மனத்தை உறுதியாக்கி வியாதியை விரைவிலே ஒழித்துவிடலாம். பேய்க்கு மந்திரம் செய்யும் வழி எனக்குத் தெரியாது. தவிரவும் எனக்குப் பேய் பிசாசுகளின் நம்பிக்கை கிடையாது.

எதற்கும் ஒரு கை பார்க்கலாமென்று உத்தேசித்து விபூதித் தட்டைக் கையிலே வாங்கிக் கொண்டேன். காந்திமதி படீரென்று பாய்ந்து என் கையிலிருந்த தட்டைப் பிடுங்கிக் கொண்டாள்.

“ஹா, ஹா, ஹா! எனக்கா விபூதி போட வந்தாய்? சும்மா இரு. அப்படியே கண்ணை மூடிக் கொள்ளு. நான் உனக்கு விபூதி போடுகிறேன். எலிக்குஞ்சு, நீயும் வா, அப்படியே உட்காரு, உனக்கும் விபூதி போடுகிறேன். இன்னும் உங்கள் கூட்டத்தையெல்லாம் அழைத்து வா. எல்லாருக்கும் விபூதி போடுகிறேன். தென் அப்பிரிக்கா ரஜூல் முஸ்லிம் சங்கம், மதன்மோஹன் மாளவியா, திருச்சினாப்பள்ளி பண்டார, ‘டாக்டர்’ கிழநரி, சென்னப்பட்டணம், கொண்டுவா, கொண்டுவா. எல்லோருக்கும் நான் விபூதி போடுகிறேன்” என்றாள்.

எலிக்குஞ்சு செட்டியார் விம்மி விம்மி அழத் தொடங்கினார்.

“அழாதே, கோழையே, போ, வெளியே போ” என்றாள் காந்திமதி.

எலிக்குஞ்சு செட்டியார் வெளியே போய்விட்டார். அவராலே துக்கம் பொறுக்க முடியவில்லை.

“பேய், பிசாசுகளே கிடையாது. எல்லாம் பொய்” என்று சொன்னேன். காந்திமதி சிரித்தாள்.

“பேயில்லை” என்று மறுபடி சொன்னேன்.

“புதுப் பேய்” என்றாள்.

யான்: என்ன வேண்டும்?

அவள்: விளக்கு.

யான்: என்ன விளக்கு?

அவள்: நெய் விளக்கு.

யான்: என்ன நெய்?

அவள்: புலி நெய்.

யான்: எங்கே கிடைக்கும்?

அவள்: காட்டிலே.

யான்: எந்தக் காட்டிலே?

அவள்: பொதியமலைக் காட்டிலே.

எனக்குக் கோபம் வந்துவிட்டது.

“காந்திமதி, உனக்குப் புத்தி சரியில்லை. நான் மந்திரத்தால் உன்னைக் குணப்படுத்தப் போகிறேன். கொஞ்ச நேரம் பேசாமலிரு; பேசினால் இந்தப் பிரம்பாலே அடிப்பேன்” என்று பயமுறுத்தினேன். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கி முறித்தெறிந்து விட்டாள்.
பிறகு மறுபடியும் அலறத் தொடங்கினாள்:-

“நெய், நெய், நெய் கொண்டுவா. நட, நட. தூங்காதே, எழுந்திரு. நான் புதுப் பேய். எல்லோரும் நெய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பெண்ணை மிகவும் கஷ்டப்படுத்துவேன்” என்றாள்.

“காந்திமதி, நீ சொல்லும் வார்த்தை அர்த்தமாகவில்லையே” என்றேன். “அர்த்தமா தெரியவில்லை? காளிதாசன், காளிதாசன்! கதை கதை” என்று சொல்லி எதெல்லாமோ பிதற்றிய பின்பு ‘ஹா’ என்று மற்றொரு முறை அலறி, அப்படியே மூர்ச்சை போட்டு விழுந்தாள். நான் பெருமூச்சுடன் வெளியேறினேன். சுமார் அரை மணி நேரம் கழிந்த பின்பு, செட்டியார் மறுபடி வந்து கூப்பிட்டு, “காந்திமதிக்குத் தெளிந்துவிட்டது” என்றார். பின்பு போய்க் கேட்டபோது, பேயாடிய விஷயம் ஞாபகமில்லையென்று சொல்லுகிறாள். இப்படி இரண்டு மூன்று வெள்ளிக் கிழமையாய் நடந்து வருகிறது. 

இதனுடைய ஸூக்ஷ்மம் தெரியவில்லை. எனக்குப் பேய் பிசாசில் நம்பிக்கை கிடையாது.

No comments:

Post a Comment