Friday, June 1, 2012

ஐர்லாந்தும் இந்தியாவும்


19 ஜூலை 1921

மஹாயுத்தம் நடக்கும் காலத்தில், எடிஸன் என்ற அமெரிக்க மின்ஸார சாஸ்திரியின் விலையுயர்ந்த ஆராய்ச்சிக் கூடமொன்று தீப்பட்டெரிந்து போயிற்று.

அது பற்றிச் சில நண்பர்கள் அவரிடம் துக்க விசாரணை புரிந்து கடிதமெழுதியிருந்தார்கள். அதற்கவர் சொன்னார்: “என் கஷ்டம் ஒரு கஷ்டமா! அதோ! ஜெர்மனியில் கைஸர் சக்கரவர்த்தி இருக்கிறார், பாருங்கள். அவர் ஒரு வரையும், அவருடைய பலமற்ற துணைவர்  ஓரிருவரையும் எத்தனையோ அரசுகள் கூடி எத்தனையோ வகைகளாகப் போர் புரிகின்றன. அந்த ஒரு மனிதர் என்ன செய்வார், பாவம்! எனவே எனக்கு ஏதேனும் ஸங்கடம் நேரும் போதெல்லாம் நான் நம்மைக்காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிக பயங்கரமான விபத்துக்களாலே சூழப்பட்டிருக்கும் கைஸரை நினைத்து மனந்தேறுகிறேன்” என்றாராம்.

அக்காலத்தில் இக்கதை வெளியிடப்பட்டிருந்தது தொடர்ச்சியாகப் பத்திரிகை படித்துவரும் நண்பர்களிலே பலருக்கும் ஞாபகமிருக்கலாம். அதுபோல் இந்தக் காலத்தில் நாம் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜைச் சூழ்ந்திருக்கும் ஸங்கடங்களின் தொகையையும் அளவையும் கருதி நம்முடைய கஷ்டங்களை மறக்க முடியுமென்று தோன்றுகிறது.

ஐர்லாந்துக்கு ஏறக்குறை இந்த முறை ஸ்வராஜ்யம் கொடுத்துத்தான் தீரவேண்டுமென்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் அமெரிக்கா சும்மாவிடாது. கனடா சும்மா விடாது. ஆஸ்திரேலியா, தென் ஆபிரிகா, நியூஜிலாந்து முதலிய குடியேற்ற நாடுகள் பொறுத்திருக்கமாட்டா. ப்ரான்ஸிடம் விடுதலைப் ப்ரஸங்கங்களை விரிக்க இங்கிலாந்துக்குச் சிறிதேனும் இடமில்லாமற்போய்விடும். உலக முழுமையிலும் அபகீர்த்தி முற்றும். இங்கிலாந்தின் சத்துருக்கள் பெருமகிழ்ச்சியடைய ஹேது உண்டாகும். இத்தனை உதவிகளுமில்லாது போயினும் இப்போது ஸ்வராஜ்யம் கொடுக்காவிட்டால், ஐர்லாந்து சும்மா இராது. ஸ்வராஜ்யத்தை வற்புறுத்தும் பொருட்டு ஐர்லாந்தியர்  ஐர்லாந்திலும், லண்டன், செஸ்டர் முதலிய் நகரங்களிலும் என்ன காரியங்கள் செய்து வந்தனரென்பதும், அதனால் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் முதலியோருக்கு நேர்ந்த  அஸெளகர்யங்கள் எவையென்பதும் நேயர்களுக்குத் தெரிந்த ஸங்கதிகளேயாம்.

இத்தனை பலாத்காரங்களைக் கருதி ஸ்வராஜ்யம்  கொடுத்துத் தொலைப்போம் எனிலோ, வட ஐர்லாந்து முதல் மந்திரியாகச் சில தினங்களின் முன்னே முளைத்திருக்கும் ஸர்ஜேம்ஸ் க்ரேக் ஏற்கெனவே போர்க்கொடியைத் தூக்கிவிட்டார். அல்ஸ்டர் மாகாணத்துக்குத் தனி பார்லிமெண்ட் சாசுவதமாக இருக்குமெனில், பிறகு ஐரிஷ் ஸ்வராஜ்யம் என்பதற்கு அர்த்தமே கிடையாது. ஐர்லாந்தை இரண்டாக வெட்டிப் பிறகு ஸ்வராஜ்யம் கொடுப்பதென்றால், என்ன செய்கை அது!

அஃதொருவனை இரண்டாக வெட்டிக் கொன்ற பின்னர் அவனுக்கு மணம் புரிவிப்பதாகக் கூறுதல் போலும். எனவே, அல்ஸ்டர் என்றொரு பதார்த்தம் இருப்பதன் உண்மையை நன்குணர்ந்த ஸ்ரீமான் தெவலேரா, தாம் தமது குடியரசுக் கொள்கையை விட்டு “ஸ்மட்ஸ்” ஸ்வராஜ்யத்தை அங்கீகரிக்க ஆயத்தமாக இருப்பதாகவும், ஆனால் அல்ஸ்டர் தனது தனிப் பார்லிமெண்டை விட்டுவிட வேண்டுமென்றும் வற்புறுத்தினார். இங்ஙனமிருக்க, முன்பு யூனியனிஸ்ட் தலைவராக இருந்து இங்கிலீஷ் கவர்ன்மெண்டினிடமுள்ள அளவிறந்த பக்தியால் அதனை எதிர்த்துப் போர் செய்யப் படைகள் தயார் செய்வதவராகிய ஸர் எட்வர்ட் கார்ஸனுடைய பட்டத்தில் இப்போதிருக்கும் அல்ஸ்டர் ப்ரதம மந்திரியான ஜேம்ஸ் க்ரேக் லண்டன் சமாதான ஸங்கத்திற்குத் தம்மை ப்ரிடிஷ் கவர்ன்மெண்டார் அழைத்திருப்பதைக் குறித்துப் பேசிய உதாஸீன மொழிகளை ராய்ட்டர் தந்திகளிடையே காணலாம்.

இங்கிலாந்திலும் லார்ட் டெர்பி முதலியவர்கள் மிஸ்டர் ஜ்யார்ஜைக் கடலில் கவித்து விடுவதற்குரிய யோசனைகள் இப்போது தீவிரமாகப் புரிவதன் காரணம் ஐர்லாந்துக்கு அவர் ஸ்வராஜ்யங் கொடுத்துவிடுவாரோ என்ற பயத்தாலே யன்றிப் பிறிதில்லை. 

கான்ஸர்வடிவ் கக்ஷியார் கைவிட்டால் பிறகு மிஸ்டர் லாய்ட் ஜ்யாரஜுக்கு பஸிபிக் சுமுத்திரந்தான் கதி. 

இங்ஙனம் ஐர்லாந்து விஷயத்தில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் இருதலைக் கொள்ளி எறும்பு போல இடர்படுதல் ஒருபுறமிருக்க இந்த சமயத்தில் இந்தியராகிய நாமும் அவரிடம் ஒரு செய்தியை மிக நன்கு வற்புறுத்திக் கூற விரும்புகிறோம்.

அதாவது ஐர்லாந்தைச் சென்ற பல நூற்றாண்டுகளாக மீட்டும் மீட்டும் போரில் அடக்கி, அதன் விடுதலை வேட்கையை மறுத்து வந்தீர்கள். ஐர்லாந்து மிகச்சிறிய நாடு. உண்மையில், இப்போது கூட இங்கிலாந்திலே ஐர்லாந்தைப் போரில் மடக்கி விடமுடியும்!

அப்படியிருந்தும், உலக முழுமையிலும் எழுச்சி பெற்றிருப்பதாகிய, பெரிதோர் தர்மக் கிளர்ச்சியை முன்னிட்டு ஐர்லாந்துக் கூட இனி ஸ்வராஜ்யமில்லை என்று மறுத்தல் இங்கிலாந்துக்கு ஸாத்யப் படாதென்று தீர்ந்து போய்விட்டது.

அப்படியிருக்க, 5000 வருஷங்களுக்கு முன்னே வேதாந்தப் பயிற்சி செய்தது; முப்பது கோடி ஜனங்களுடையது; இன்றைக்கும் ஜகதீச சந்திரர் முதலியவர்களின் மூலமாக உலகத்தாருக்கு நாகரிகப் பாதையிலே வழி காட்டுவது பூமண்டல்a சரித்திரத்திலே வீரம் முதலிய ராஜ குணங்களில் நிகரற்றதாகிய இந்தியாவுக்கு விடுதலை எப்போது தரப்போகிறீர்கள்?

No comments:

Post a Comment