Wednesday, June 13, 2012

ஸ்வதேச கீதங்கள் - முன்னுரை

"ஸ்வதேச கீதங்கள்” என்னும் நூல் 1908ல் முதன் முதலாக வெளியாயிற்று. இது பின்வரும் சமர்ப்பணத்தோடும் முகவுரையோடும் கூடியது.

சமர்ப்பணம்

ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்குப் பாரததேவியின் சம்பூர்ண ரூபத்தை காட்டி, ஸ்வதேச பக்தி யுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறுநூலை சமர்ப்பிக்கின்றேன்.

ஆசிரியன்

முகவுரை

ஒருமையும் யெளவனத் தன்மையும் பெற்று விளங்கும் பாரத தேவியின் சரணங்களிலே யான் பின்வரும் மலர்கள் கொண்டு சூட்டத் துணிந்தது எனக்குப் பிழையென்று தோன்றவில்லை. யான் சூட்டியிருக்கும் மலர்கள் மணமற்றவை என்பதனை நன்கறிவேன். தேவலோகத்துப் பாரிஜாத மலர்கள் சூடத் தகுதிகொண்ட திருவடிகளுக்கு எனது மணமற்ற முருக்கம் பூக்கள் அணிக் குறைவை விளைக்கும் என்பதையும் யான் தெரிந்துள்ளேன். ஆயினும் உள்ளன்பு மிகுதியால் இச் செய்கையிலே துணிவு கொண்டுவிட்டேன். சாக்கியன் எறிந்த கற்களையும் சிவபிரான் மலர்களாகக் கருதி அங்கீகரிக்க வில்லையா? அதனை யொப்ப, எனது குணமற்ற பூக்களையும் பாரத மாதா கருணையுடன் ஏற்றருளுக!

சி. சுப்பிரமணிய பாரதி
மயிலாப்பூர் 
1908 ஜனவரி 10

No comments:

Post a Comment