1 டிசம்பர் 1920 ரெளத்திரி கார்த்திகை 17
திராவிடக் கக்ஷி
நான், ஸமீபகாலம் வரை, திருநெல்வேலி ஜில்லாவின் மேற்கோரத்தில் ஒரு நாகரிகமடைந்த கிராமத்தில் குடியிருந்தேன். பொதுப்படையாக நல்ல நாகரிகமடைந்த அந்த கிராமத்துக்கு ஜாதி பேத விரோதங்கள் ஒரு களங்கமாக ஏற்பட்டிருக்கின்றன. கிறிஸ்தவப் பாதிரிகளின் செல்வாக்கு இந்தியாவில் மற்றெந்தப் பகுதியைக் காட்டிலும் அதிகமாகச் சென்னை மாகாணத்திலும், இந்த மாகாணத்தில் மற்றப் பிரதேசங்களைக் காட்டிலும் மிகுதியாகத் திருநெல்வேலி ஜில்லாவிலும் ஏற்பட்டிருக்கிறதென்ற செய்தி நம்மவரில் பெரும்பான்மையோருக்கும் தெரிந்திருக்கக்கூடும். ஆதலால், இங்கிலிஷ் படித்த பிள்ளைகளுக்குள் அந்த ஜில்லாவில் அநேகர் கிறிஸ்தவப் பாதிரிகள் உபதேசத்துக்கு அதிகமாகச் செவி கொடுத்துவிட நேர்ந்ததென்று நான் தெரிவிப்பது பலருக்கோர் வியப்பாகத் தோன்றாது. ஹிந்து மதத்தை வேரறுத்து, இந்தியாவில் கிறிஸ்து மதத்தை ஊன்றுவதே முக்ய நோக்கமாகக் கொண்டு வேலை செய்துவரும் அப்பாதிரிகள், ஹிந்து மதத்துக்கு பிராமணரே இதுவரை காப்பாளிகளாக இருந்து வருதல் கண்டு, அந்தப் பிராமணரை மற்ற ஜாதியார் பகைக்கும்படி செய்தால் தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினார்கள். இங்ஙனம், மற்ற ஜாதிப் பிள்ளைகளுக்கு ஹிந்து மதத்தில் துவேஷ புத்தியுண்டாக்குவதற்கு அடிப்படையாக பிராமணத் துவேஷம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமென்ற கருத்துடையோர் சென்னை நகரத்து முக்யமான கல்வி ஸ்தலங்கள் சிலவற்றிலுமிருந்து நெடுங்காலமாக வேலை செய்து வருகிறார்கள். காமம், குரோதம் முதலிய தீய குணங்களை வேதம் அஸுரரென்று சொல்லி, அவற்றைப் பரமாத்மாவின் அருள் வடிவங்களாகிய தேவர்களின் உதவியால், ஆரியர் வெற்றி பெறுதற்குரிய வழிகளைப் பற்றிப் பேசுகிறது; இந்த உண்மையறியாத ஐரோப்பிய ஸம்ஸ்க்ருத வித்வான்கள் சிலர் அஸுரர் என்று முற்காலத்தில் ஒரு வகுப்பு மனிதர் இந்தியாவிலிருந்தார்களென்றும், அவர்களை ஆரியர் ஜயித்து இந்தியாவின் ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டு, அதன் பூர்வக் குடிகளைத் தாழ்த்திவிட்டன ரென்றும் அபாண்டமான கதை கட்டிவிட்டார்கள். இதை மேற்கூறிய கிறிஸ்தவப் பாதிரிகள் மிகவும் ஆவலுடன் மனனம் செய்து வைத்துக்கொண்டு தம்மிடம் இங்கிலிஷ் படிப்புக்காக வரும் பிள்ளைகளில் பிராமணரைத் தவிர மற்ற வகுப்பினர்-தென் இந்தியாவில் மாத்திரம்- அஸுர வம்சத்தாரென்றும், ஆதலால் பிராமணர் இவர்களுக்குப் போன யுகத்திலே (வேதமொழுகிய காலத்தில்!) விரோதிகளாக இருந்தனரென்றும் ஆதலால் இக்காலத்தில் அந்தப் பிள்ளைகள் அஸுரக் கொடியை மீளவும் தூக்கிப் பிராமணரைப் பகைக்க வேண்டுமென்றும் போதிக்கத் தொடங்கினார்கள். இந்தியாவிலுள்ள ஜாதி பேதங்களைத் தீர்த்துவிட்டு இங்கு ஸமத்வ தர்மத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அந்தப் பாதிரிகள் இந்த வேலை செய்யவில்லை. ஹிந்து மதத்துக்குக்கேடு சூழவேண்டுமென்ற நோக்கத்துடன் செய்தார்கள். ஆனால், இதில் மற்றொரு விநோதமுண்டு. அஃதியாதென்றால் இந்தியாவில் பிராமணர்களிலேயே முக்காற் பங்குக்குமேல் பழைய சுத்தமான ஆர்யர்களல்லரென்றும் விசேஷமாகத் தென் இந்தியாவில் இவர்கள் பெரும்பகுதி அஸுர வம்சத்தாருடன் கலந்துபோனவர்களின் சந்ததியாரென்றும், அப்பாதிரிகளும் அவர்களுக்கு இந்த அம்சத்தில் குருக்களான ஐரோப்பிய பண்டிதரும் தெரிவிக்கிறார்கள். எனவே பிராமணராகிய நாங்கள் இப்போது உங்களைப்போல் அஸுர ராக்ஷஸராய்விட்ட பிறகும் நீங்கள் எங்களைப் பகைக்கவேண்டுமென்று அந்தப் பாதிரிகள் போதிப்பது முன்னுக்குப் பின் முரண்படுகிறதன்றோ? மேலும் இந்த “திராவிடர்” என்போர் அஸுர, ராக்ஷசர்களின் ஸந்ததியாரென்பதும் அவர்களிடமிருந்து பிராமணர் ராஜ்யம் பிடித்த கதையும் யதார்த்தமென்று வேடிக்கைக்காக ஒரு க்ஷணம் பாவனை செய்து கொள்வோம். அப்படிக்கிருந்தாலும் அந்த ஸம்பவத்தில் பிராமணரின் மந்திரத்தால் அஸுரர்களை ஜயித்ததாகத் தெரிகிறதேயன்றி மாக்ஸ் முல்லரின் கருத்துப் படிக்கும் பிராமணர் அரசாண்டதாகத் தெரியவில்லை. பிராமணர்களையடுத்து, க்ஷத்திரியர்களே ராஜ்யமாண்டனரென்று தெரிவிக்கப்படுகிறது. தவிரவும் அந்த ஸம்பவம் நடந்து இப்போது புராணங்களின் கணக்குப்படி பார்த்தால் பல லக்ஷங்களோ கோடிகளே வருஷங்கள் கடந்து போயின. ஐரோப்பியப் பண்டிதரின் கணக்குப்படி பார்த்தாலும் எண்ணாயிர வருஷங்களுக்குக் குறைவில்லை. இப்படியிருக்க அந்தச் சண்டையை மறுபடி மூட்டுவது என்ன பயனைக் கருதி? யதார்த்தமாகவே, இந்தியா தேச சரித்திரத்தில் ஹிந்துக்களுக்குள்ளேயே தமிழருக்க்கும் தெலுங்கருக்கும், தெலுங்கருக்கும் ஒட்டருக்கும், ஒட்டருக்கும் வங்காளிகளுக்கும், வங்காளிகளுக்கும் ஹிந்துஸ்தானிகளுக்கும், பஞ்சாபிகளுக்கு, பஞ்சாபிகளுடன் ராஜபுத்திரருக்கும், இவர்களுடன் மஹாராஷ்ட்ரருக்கும், மகாராஷ்ட்ரருடன் ஏறக்குறைய மற்றெல்லாப் பிரிவினருக்கும், இவற்றைத் தவிர, ஹிந்துக்களுக்கும் மஹமதியருக்கும் இடையே கணக்கற்ற யுத்தங்களும், அரசு புரிந்தலும் அடக்கியாளுதலும் நடந்து வந்திருக்கின்றன. இதுபோல், ஒரு நாட்டின் உட்பகுதிகளுக்குள் யுத்தங்கள் இந்தியாவில் மாத்திரமன்றி, ஆஸ்திரேலியா முதல் இங்கிலாந்துவரையுள்ள ஸகல தேசங்களிலும் ஓயாமல் நடந்து வந்திருப்பதாகச் சரித்திரம் தெரிவிக்கிறது. இங்ஙனம் நம் நாட்டில், சமீபகால சரித்திரத்திலேயே நிகழ்ந்த எண்ணற்ற போராட்டங்களை மறந்து இன்று தெலுங்கர், தமிழர் முதலிய ஹிந்துக்களும் மஹமதியரும் ஸஹோதரரைப்போல் வாழ வேண்டுமென்ற உணர்ச்சி பரவியிருக்க, எண்ணாயிர வருஷங்களுக்கு முன் “மந்திரங்களாலும், யாகங்களாலும், அஸுர, ராக்ஷஸர்களை ஜயித்த பிராமணர்களை மாத்திரம் நமம்வர் எக்காலத்திலும் க்ஷமிக்காமல் உலக முடிவு வரை விநோதம் செலுத்திவர வேண்டுமென்று சொல்லுதல் பெரும் பேதமையன்றோ? தவிரவும், இந்த நவீன “அல்லாதார்” தாங்கள் அஸுர வம்சத்தாரென்று செல்வதே முற்றிலும் தவறென்பதை ஏற்கெனவே நன்கு நிரூபணம் செய்திருக்கிறேன். ஜாதி பேதங்களின் கொடுமைகளை உடனே அழித்துவிட வேண்டுமென்பதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்.
ஜப்பான் தேசத்து திருஷ்டாந்தம்
ஜப்பானில் தீண்டாத வகுப்பினருட்படப் பலவித ஜாதி பேதங்களிருந்தன. எனினும் காலஞ்சென்ற மிகாடோ சக்ரவர்த்தி நவீன உலகத்தின் அவஸரங்களைக் கருதி அங்கு ராஜாங்க விஷயங்களில் ஜாதி பேதங்களைக் கருதக்கூடாதென்று சட்டஞ்செய்தார். எத்தனையோ, நூற்றாண்டுகளாக இயல்பெற்ற வந்த பேதக் கொடுமைகள் அங்கு ராஜரீகத் துறையில் மட்டுமேயன்றி, ஸமூஹ வாழ்விலும் புலப்படாதபடி அதிசீக்கிரத்தில் மறைந்து போய் விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் இதுதான் வழி. நாம் ஏற்கெனவே தெரிவித்தபடி ஸ்வராஜ்யம் கிடைத்தால் இந்த ஜாதி பேதத் தொல்லைகளையெல்லாம் சட்டம் போட்டு நீக்கிவிடலாம். இப்போதுள்ள அதிகாரிகள் இவ்விதமான சட்டம் ஏற்படுத்துவார்களென்று எதிர்பார்ப்பதே தவறு. ஆதலால் இந்தியாவின் ஸமூஹ வாழ்க்கையில் ஸமத்வமேற்படுத்த விரும்புவோர் முதலாவது ராஜரீகத் துறையில் ஸமத்வமேற்படுத்த முயலும் “காங்கிரஸ்” கக்ஷியாருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.
No comments:
Post a Comment