Tuesday, June 5, 2012

அழுதபிள்ளை பால்குடிக்கும்



பாரத தேசத்தாரில் லட்ச லட்சமான ஜனங்கள் இந்தப் போரில் மடிந்த ஆங்கிலேயருக்கு உதவிபுரிந்தோம். கோடானுகோடி திரவியத்தைக் கொடுத்து வருகிறோம். இன்னும் சேனையில் ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் வாய் திறந்து கேட்டால், இங்கிலாந்து நமக்கு இப்போது சுயராஜ்யம் கொடுக்கும். நம்மை ஏமாற்றாது. இந்தச் சமயத்தில், நாம் இத்தனை உதவி செய்யும்போது,  காங்கிரஸ் முஸ்லீம் சபையார் சொல்வதை நாம் சரி என்று நினைக்கவில்லை. சண்டை முடியுமுன்பாக இப்பொழுதே கைமேலே சுயராஜ்யம் வேண்டும் என்று நம்மவர் கேட்க வேண்டும் என்று நான் சொல்லுகிறேன். சண்டை முடிந்த பிறகு சுயராஜ்யம் போதுமென்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தால், அது கிடைப்பது அரிதாகும். இப்பொழுதே ஏன் கொடுக்கும்படி கேட்கக் கூடாது? அயர்லாந்து தேசத்தில் சண்டை முடியு முன்பாகவே ஸ்வராஜ்யம் கொடுப்பதற்குரிய முறைமைகளைப்பற்றி ஆலோசனை செய்வதற்காக ஒரு சபை நடந்து வருகிறது. அதில் ஸகல கட்சியாரும் சேர்ந்திருக்கிறார்கள். அது போலவே, இந்த தேசத்திற்கும் ஒரு சபை ஏற்படுத்த வேண்டும்; அதில் இங்கிலீஷ் பிரதிநிதிகள் பாதித்தொகை, பாரதப் பிரதிநிதிகள் பாதித்தொகையாக இருந்து நடத்த வேண்டும். அவ்விதமான சபையை மந்திரி மாண்டேகு இந்த தேசத்தில் இருக்கும்போதே நியமிக்க வேண்டுமென்று நம்மவர் கிராமந்தோறும் சபைகள் கூடி ‘கூ! கூ’ என்று பெரிய சப்தம் போடவேண்டும். திராவிடக் கட்சியார் என்றும், இஸ்லாமியக் கட்சியார் என்றும் யாரோ சிலர் செய்யும் பொய் மேளக் கச்சேரியை நாம் இகழ்ந்து, நகைத்து, ‘காங்கிரஸ் முஸ்லீம் சங்கங்களே தேசத்துக்குப் பொது’ என்பதை ஒரே வார்த்தையாக எங்கும் நிலை நிறுத்த வேண்டும். காங்கிரஸ் முஸ்லீ்ம் சபைகளை எதிர்த்து நமக்கு சுயராஜ்யம் வேண்டாமென்று சொல்லும் ஸ்வதேச விரோதிகளை அடக்கிவிட்டு, நாம் இப்போதே ஸ்வராஜ்யம் கேட்கும்படி நமது பிரதிதிகளாகிய காங்கிரஸ் முஸ்லீ்ம் சபையாரைத் தூண்ட வேண்டும். 

மந்திரி மாண்டேகு சென்னைக்கு வந்திருப்பதால், இந்தச் சத்தம் கிராமங்களில் இடிமுழக்கம் போலவே நடை பெற்று வரவேண்டும்.

ஜனங்களே! உடனே சுயராஜ்ய ஸ்தாபன சபை கூட்டும்படி இரைச்சல் போடுங்கள். அழுத பிள்ளை பால் குடிக்கும்.

No comments:

Post a Comment