Saturday, March 31, 2012

நாற்குலம்


சாதூர் வர்ண்யம்

சென்ற ‘காங்கிரஸ்’ ஜனஸபை ‘லக்நெள’ நகரத்தில் கூடிக் கலைந்த  பிறகு, ஸ்ரீமான் லோகமாnனய் பால கங்காதர திலகர் தமது இஷ்டர்களுடன் கான்பூருக்கு வந்தார். அங்கு ராமலீலை நாடகவெளியில் பதினையாயிரம் ஜனங்கள் சேர்ந்த பொதுக்கூட்டம் ஒன்று கூடி அவரை ஸ்வராஜ்ய போதனை செய்யும்படி வேண்டினார்கள். ஸ்வராஜ்ய பேச்சுக்கிடையே அவர் ஜாதிக்கட்டை முறித்துச் சொல்லிய சில வார்த்தைகளை இங்கு மொழிபெயர்த்துக் காட்டுகிறேன்.
திலகர் சொன்னார்:- “பழைய காலத்து நான்கு வர்ணப் பிரிவுக்கும் இப்போதுள்ள ஜாதி வேற்றுமைக்கும் பேதமிருக்கிறது. திருஷ்டாந்தமாக, இப்போது ஒரே பந்தியில் இருந்துண்ண விரும்பாதிருத்தல் சாதிப் பிரிவுக்கு லக்ஷணம் என்று பலர் நினைக்கிறார்கள். பழைய காலத்து விஷயம் இப்படியில்லை. 

‘நான்கு வர்ணங்கள் பிறப்பினாலேயல்ல, குலத்தாலும்  தொழிலாலும் உண்டாயின’ என்று கீதை சொல்லுகிறது. அதன்படி பார்த்தால் இப்போது நமக்குள்ளே க்ஷத்திரியர்; எங்கேயிருக்கிறார்கள்? நம்மைக்காப்போர் ஆங்கிலேயர்கள்; ஹிந்துக்களுள் க்ஷத்திரியரைக் காணோம். இந்தக் கான்பூர் பெரிய வியாபார ஸ்தலம். ஆனால், இங்குள்ள வைசியர் பிற தேசத்து வியாபாரிகளின் வசத்தில் நிற்கிறார்கள். செல்லவத்தலைமை நமக்கில்லை; இப்போதுள்ள பிராமணர் தாமே தேசத்தின் மூளையென்று சொல்லுகிறார்கள். ஆனால் இந்த மூளை மண்ணடைந்து போய், நாம் வெளி்யிலிருந்து அதிக மூளை இறக்குமதி செய்யும்படி நேரிட்டிருக்கிறது.

“நான்கு   வர்ணத்தாருக்குரிய நால்வகைத் தொழில்களும் ஹிந்துக்களல்லாத பிறர் நியமனப்ப்டி நடக்கின்றன. நாமெல்லோரும் தொண்டர் நிலையிலே இருக்கிறோம். தேசம் கெட்ட ஸ்தி்தியிலே இருக்கிறது. உங்களுடம்பில் பிராமண ரத்தம் ஓடுவதாகவும் க்ஷத்திரிய ரத்தம் ஓடுவதாகவும் நீங்கள் வாயினால் சொல்லலாம். ஆனால், உங்களுடைய வாழ்க்கை அப்படியில்லை.”
இவ்வாறு திலகர் சொல்லியதிலிருந்து நமது தேசத்திற்கு மிகுந்த நன்மை யுண்டாகக் கூடும். ஏனென்றால், இவர் தேச முழுவதிலும் சுதேசியக் கட்சியாருக்குத் தலைவராக இருப்பது மாத்திரமேயன்றி, மஹாராஷ்டிரத்து வைதீகப் பிராமணர்களி்ன் தலைவராகவும் விளங்குகிறார். வேத சாஸ்திர் ஆராய்ச்சியில் உயர்ந்த கீர்த்திபெற்றவர். நெடுங்காலமாக இடைவிடாது செய்துவரும் ஆராய்ச்சியினாலும், உயர்ந்த மேதையினாலும், நமது பூர்வீகமான ஜாதி தர்மத்தின் உட்கருத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு நமது தற்காலப் பிரிவுகளைக் கண்டிருக்கிறார். புராதன  தர்மமே பின்பற்றத்தக்கது. ஹிந்துக்களாகி்ய நாமெல்லோரும் இவருடைய உபதேசப்படி நடந்தால் நன்மையுண்டாகும். இப்போதுள்ள ஜாதி  விரோதங்களும் தாழ்வுகளும் நீங்கி எல்லோருக்கும் மேன்மையுண்டாகும்.

ஏனென்றால், எல்லாச் செய்கையும் ஈசனுடைய செய்கை. சோம்பர் ஒன்றுதான் இழிவு; அதுதான் சண்டாளத்தனம். எந்தத் தொழிலையும் நேரே செய்வோர் மேன்மக்கள்.
ஒருவன் தான் பிராமணனாக வேண்டும் என்று கருதினால், அவன் உண்மை ஆராய்ச்சியே முதற்காரியமாகக் கொண்டு வாழக்கடவான். க்ஷத்திரிய  பதவி வேண்டுமானால், தன்னுயிர்க்கிரங்காமல் மன்னுயிரைக் காப்பதே விரதமாகக் கொண்டு வாழக்கடவான். இங்ஙனமே மற்றவையும் கொள்ளுக. குணத்தாலும் தொழிலாலும் ஏற்படுகிற  மேன்மையைக் கண்டு யாரும் பழிகூற இடமில்லை. குணத்திலும் தொழிலிலும் கடைப்பட்ட ஒருவன் பிறப்பைக் காரணமாக வைத்துக்கொண்டு, “நான் மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவன்” என்று சொல்லும் போது, மற்றவருக்குக் கோபம் உண்டாகிறது.

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தான்”

என்று, தாம் வள்ளுவர் மரபில் பிறந்தாலும் நமது முன்னோரால் பிரமதேவனுடைய அவதாரமென்று போற்றப்பட்ட திருவள்ளுவ நாயனார் சொல்லுகிறார். ஒருவன் குணகர்மங்களால் பிராமணனாக இருப்பானாகில், அவனுக்கு நாட்டில் முதலாவது மதிப்புண்டாதல் பொதுவாக எல்லாத்தேசங்களிலும் இயற்கையாக நடந்து வரும் நெறி. ஏனென்றால் எல்லா தொழில்களுக்கும் சாஸ்திரமே நேத்திரம். சரீர இன்பங்களைத் தேடுவதே முதற்காரியமாகக்  கொண்ட மனிதர் மிகுந்து போயிருக்கும் இவ்வுலகத்தில், சிலர் அந்தப் படியைக் கடந்து மேல் ஏறிப்போய் உண்மை தேடுவதே முதற்காரியமென்றும், மற்றதெல்லாம் அதற்குப் பிறகுதான் என்றும் உணர்ந்து நடப்பாராயின், அவரே தலை மக்கள். மற்ற வருணத்து நெறிகளையும் இப்படியே வகுத்தறிந்து கொள்ளுதல் எளிது.

No comments:

Post a Comment