19 டிசம்பர் 1916 நள மார்கழி 15
பொதுப் பள்ளிக்கூடத்தில் சங்கீதம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இது மற்ற நாகரிக தேசங்களில் சாதாரணமாக நடந்து வருகிறது. உயிரிலே பாதி ஸங்கீதம். சாஸ்திரடத்தை
யாருமே பேணாமலிருந்தால், பாடகர்கூட அதைக் கைவிட்டு விடுவார்கள். ஆதலால் சுதேசமித்திரன்
(விசேஷ அனுபந்தம்) பத்திரிகையில் ஸ்ரீமான் ஸ்ரீநிவாசய்யங்கார் ஸங்கீதம் சீர்திருத்த்
வேண்டுமென்ற கருத்துடன் எழுதிய லிகிதத்தைப் படித்தபோது எனக்குச் சந்தோஷமுண்டாயிற்று.
இங்கிலீஷ் பாஷையிலே ஒரு பெரிய கவிராயன் ஸங்கீத ஞானமில்லாதவரைக்
கள்ளரென்றும் குறும்பரென்றும் சொல்லிப் பழிக்கிறான். பாட்டு ஸகலருக்கும் நல்லது. தொண்டையும்
எல்லாருக்கும் நல்ல தொண்டைதானென்பது என் மதம்.
கூச்சத்தாலும் பழக்கக் குறைவாலும் பலர் தமக்கு நல்ல குரல் கிடையாதென்று வீணே நினைத்துக்
கொள்கிறார்கள்.
பாட்டுக் கற்க விரும்புவோர் காலையில் சூரியனுக்கு முந்தியே எழுந்து
பச்சைத் தண்ணீரிலே குளித்துவிட்டுக் கூடியவரை சுருதியும் லயமும் தவறாதபடி ஸரளி வரிசை
முதலியன பழகவேண்டும். உச்ச ஸ்தாயிதான் எப்போதும்
நல்லது. உடம்பை நிமிர்த்து முகத்தை நேரே நிறுத்தி முகத்திலும் வாயிலும் கோணல் திருகலில்லாதபடி
வாயை ஆவென்று சிங்கம் போலே திறந்து பாடவேண்டும். தொண்டையில் கரகரப்பிருந்தால் வெறு
மிளகைத் தின்ன வேண்டும். கற்கண்டு சேர்ப்பது
நல்லதில்லை.
பாட்டுக் கச்சேரி நடத்தும்போது, நடுவிலே மற்ற வாத்தியக்காரரை வாசிக்கச் சொல்லிவிட்டுப்
பாடகர் வெறுமே இருப்பதும், தெம்மாங்கு முதலான வேடிக்கைப் பாட்டுக்க்ள் பாடுவதும் தமக்கு
ரஸப்படவில்லை யென்று ஸ்ரீநிவாசய்யங்கார் சொல்லுகிறார். அதை நான் ஒரு பகுதி ஆக்ஷேபிக்கிறேன்.
வீணை, குழல் முதலிய இசைக் கருவிகளும் மத்தளம் முதலிய தாளக் கருவிகளும் வாய்ப்பாட்டின் உதவியில்லாமல்
தனியே இன்பந் தருகின்றன.
வாத்யம் எட்டாத ஸ்வரத்தைத் தொடப் போய்க் கஷ்டப்படாது.தொண்டையிலே
கரகரப்பும், அடைப்பும் இருக்கும்போது கச்சேரி நடத்த வராது. சரியானபடி சுருதி சேர்ந்த
பிறகுதான் தொழில் செய்யத் தொடங்கும்.
வீணையும் குழலும் பறவையும் வாய்ப்பாட்டில்லாமல் தனியே ஒலிப்பது
பழைய நாளிலும் உண்டு. கண்ணன் குழலுக்கு இடைப் பெண் ஒத்துப் பாடியது முண்டு. எம்பொருமான் தனியே இசைப்பது முண்டு. தெம்மாங்கு முதலியன ஹாஸ்ய
ரசத்தை உடையவை. அவற்றை முழுதும் நிறுத்திவிடக் கூடாது. ஆனால் ஒரே மெட்டை வளைத்து வளைத்துப்
போன இடமெல்லாம் சொல்லிப் பயனில்லை. தமிழ் பிழையாகவும் பொருள் ரஸமில்லாமலும் பாட்டுக்கள்
இருந்தால் அவற்றை மன்றிலே கொண்டுவருதல் நியாயமில்லை.
இருந்தாலும் மத்தளக்காரனுக்குப் பாட்டுக்காரன் பயந்து கட்டுப்பட்டு
நடக்கும் விபரீதம் சில இடங்களிலே காணப்படுவதைக் கண்டனை செய்து ஸ்ரீநிவாஸய்யங்கார் சொல்லும்
வார்த்தை ஒப்புக் கொள்ளத்தக்கது.
ஏனென்றால் பாட்டுக்காரன் தனது பாட்டுக்களுக்குத் தவறாமல் தாளம்
போட்டு வரவேண்டும்.. இவ்வளவு தாள ஞானம் இருந்தால்
பாடகனுக்குப் போதும். அதிகமிருந்தால் மிச்சம். இந்த விஷயந்தெரியாமல் மத்தளக்காரனுக்குப்
பாட்டுக்காரன் பயப்படுவது மிகவும் வேடிக்கை.
ஸ்ரீமான் ஸ்ரீநிவாசய்யங்கார் ராகப் பழக்கம், வர்ணங்கள், கீர்த்தனங்கள்
முதலிய விஷயங்களைப் பற்றி எழுதியிருப்பதெல்லாம் (பெரும்பகுதி) கேட்டவுடன் நியாயமென்று
கொள்ளத்தக்கது. கீர்த்தனங்கள் பழகுவது மாத்திரம் அவரவரிஷ்டப்படி போகவேண்டும். எது எப்படியிருந்தாலும்
யாராவதொரு வித்வான் இந்தத் தமிழ்நாட்டுக்குப் புதிய கீர்த்தனங்கள் ஏற்படுத்தும் வழிகாட்டிக்
கொடுத்தால், ஆயிரம் பேர் அதைப் பின்பற்றி மேன்மை பெறுவார்கள்.
No comments:
Post a Comment