Monday, March 26, 2012

கிச்சடி


19 ஜனவரி 1916                                         ராக்ஷஸ தை 6

சமீபத்திலே, பம்பாயில் கூடிய காங்கிரஸ் சபை, முஸ்லீம் சங்கம் முதலியவற்றில் நடந்த உபந்நியாசங்களை வாசி்த்துப் பார்த்தேன். பெரும்பாலும் ரஸமாகத்தான் இருந்தது. இவை போன்ற பிரசங்கங்களை யெல்லாம் தமிழில் தெளிவாக மொழிபெயர்த்து அப்போதைக்கப்போது குட்டிப் புத்தகங்கள் போட்டால் நல்லது. இந்த விஷயத்தில் ஸ்ரத்தை யெடுத்தால், தமிழ் நாட்டுக்கும்  உபகாரம்; அவர்களுக்கும் நல்ல லாபமேற்படும். சபைகளிலே இரண்டு விதமுண்டு. சபை முடிந்தவுடனே செய்கை தொடங்குவதற்கு ஆகவேண்டிய விஷயங்களை முடிவு செய்யும் சபை ஒரு வகை. பொதுப் படையாக நியாய நிர்ணயங்கள் செய்து விட்டுக் கலையும் சபை மற்றொரு வகை. முதல் வகுப்பில்  சேர்ந்த சபைகளிலே மேற்கோள் எடுத்துக் காட்டுதல் குறைவாக இருக்கும். இரண்டாவது வகுப்பு சபைகளில், அந்தப் பண்டிதர் இப்படிச் சொன்னார்; இந்தப் பண்டிதர் அப்படி எழுதி யிருக்கிறார் என்று மேற்கோள் வசனங்கள் மிகவும் அதிகமாக நடைபெறும். பம்பாயில் நடந்த சபைக்ள் பெரும்பாலும் இரண்டு லக்ஷணங்கள் சேர்ந்தவையாதலால் அங்கே பழைவரும் புதியவருமாகி்ய இங்கிலீஷ் பண்டிதரின் வசனங்களை அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசினார்கள். திருஷ்டாந்தமாக:-

“ஸ்வதந்திரமே மனிதரை ஸ்வதந்திரத்திற்குத் தகுதியாக்குகிறது” (அதாவது நீரிலே இறங்கித்தான் ஒருவன் நீச்சுப் படிக்க முடியும்; இல்லாவிட்டால் முடியாது என்பதுபோல்).

இந்த வாக்கியம் மகா கீர்த்தி்யுடன் நெடுங்காலம் இங்கிலாந்தில் முதல் மந்திரியாக இருந்த க்ளாட்ஸ்டன் என்பவர் சொல்லியது. நல்ல ராஜ்யத்தைக் காட்டிலும் ஸ்வராஜ்யம் நல்லது; இது கூறிய பானர்மான் என்பவரும் இங்கிலீஷ் முதல் மந்திரி ஸ்தானம் வகித்தவரேயாம். 

ஸம்ஸ்கிருதம் முதலிய புராதன பாஷைகLள் படித்த வைதிகப் பண்டிதர்களைப் போலவே, நமது தேசத்தில் இங்கிலீஷ் படித்த வித்வான்களும் பெரும்பான்மையாகப் புத்தகப் பழக்கம் அதிகமாகவும் லெளகிகப் பழக்கம் குறைவாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் நாளடைவில் சீர்படுமென்று நம்புகிறேன்.

ஓகோ! இந்த மேற்கோள் சங்கதி எடுத்ததிலிருந்து என்னையும் இன்று அந்தக் குணம் பலமாகப் பிடித்துக்  கொண்டது.

லார்ட் ஹால்டேன் என்று ஒரு இங்கிலீ்ஷ் மந்திரி இப்போது பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார். இவர் நல்ல மேதாவி. இவர் சொல்லுகிறார்:-

“இந்த யுத்தம் முடிந்தவுடனே ஜனாதிகாரம் வந்து நம் முன்னே நிற்கும் (அதாவது பொது ஜனங்கள் கையிலே அதிகாரம் வந்து தங்கும்). நம்முடைய யஜமான்கள் பொது ஜனங்கள் நம் மீது அதிகாரம் செலுத்த வருமுன்பாகவே அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கு நம்மால் இயன்ற அளவு பாடுபட வேண்டும்.” பள்ளி்க்கூடம் என்ற வார்த்தை எடுத்ததிலிருந்து ஆஸ்திரேலியா தேசத்துப் பெண் பள்ளிக்கூடம் ஒன்றைப் பற்றிய கதை ஞாபகத்திற்கு வருகிறது. அதில் வாசித்துக் கொண்டிருந்த ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணை இன்ஸ்பெக்டர் வந்து  பரீக்ஷை நடத்தியபோது பின்வரும் கேள்வி கேட்டாராம்:-

இந்தியா தேசத்து ஜனங்களில் சாதாரன போஜனம் எது?

அந்தப் பெண் சொல்லிய மறுமொழி:- “பஞ்சம்.” வேடிக்கையான கதை.

கல்வி சம்பந்தமாக இன்னுமொரு மேற்கோள்: இன்று கிச்சடியே “மேற்கோள் கிச்சடி” தானே? மிஸ்டர் ஆர்ச்செர் என்ற ஒரு ஆங்கிலேயர்  சில தினங்களின் முன்பு லண்டன் பத்திரிகை யொன்றில் கல்வியைப் பற்றி எழுதிக்கொண்டு வரும்போது, “இங்கிலாந்திலே இப்போது கல்விக்கு மூலாதாரமாக வசன காவியங்களையும், செய்யுட் காவியங்களையும், வைத்திருப்பது சரியில்லை. ஸயன்ஸ் (இயற்கை நூல்) படிப்புதான் மூலாதாரமாக நிற்கவேண்டும்” என்கிறார்.

இவருடைய கொள்கை பலவித ஆக்ஷேபங்களுக்கிடமானது. ஆனால், தனிப் பள்ளிக்கூடங்கள் எந்த முறைமையை அனுசரித்த போதிலும், ராஜாங்கப் பள்ளிக்கூடத்தார் இவருடைய கொள்கையைத் தழுவியே படிப்பு நடத்த வேண்டுமென்று நான் நி்னைக்கிறேன். கற்பனையும் அலங்காரமும் எனக்குக்கூட மிகவும் பிரியந்தான். ஆனால், “நெல் எப்படி விளைகிறது?” என்பதைக் கற்றுக் கொடுக்காமல், “அன்மொழித் தொகையாவது யாது?” என்று படிப்புச் சொல்லிக் கொடுப்பதை நினைக்கும் போது கொஞ்சம் சிரிப்புண்டாகிறது. அன்மொழி்த்தொகை சிலரைக் காப்பாற்றும், ஊர் முழுதையும் காப்பாற்றாது. நெல்லுத்தான் ஊர் முழுதையும் காப்பாற்றும். அன்மொழித் தொகையைத் தள்ளி விட வேண்டுமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அன்மொழித் தொகையைப் பயிர் செய்து நெல்லை மறந்துவிடுவது சரியான படிப்பில்லை  யென்று சொல்லுகிறேன். அவ்வளவு தான்.

1 comment:

  1. பாரதியின் நகைச்சுவையுடன் கூடிய பொருள் பொதிந்த கட்டுரைகள் படிக்கவே இனிக்கும்.

    ReplyDelete