Friday, March 2, 2012

மண்ணுலகம்


வீட்டு வியாபாரங்களையும் எனது சொந்த வர்த்தமானங்களையும் குறித்துச் சில திருஷ்டாந்தங்கள் காண்பித்தேன். இனி, வெளி வியாபாரங்கள், எனது மித்திரர், அயலார் முதலியவர்களின் செய்திகள் ஸம்பந்தமாகச் சில திருஷ்டாந்தங்கள் காண்பிக்கிறேன். திருவல்லிக்கேணியிலே “செ……ஸங்கம்” என்பதாக ஓர் தேச பக்தர் சபை உண்டு. அதில் தேசபக்தர்கள் தான் கிடையாது. நானும் சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து, “காரியங்கள்” – ஒரு காரியமும் நடக்கவில்லை – நடத்தினோம். நாங்கள் தேசபக்தர்கள் இல்லையென்று, அந்தச் சுவை ஒன்றுமில்லாமற் போனதிலிருந்தே நன்கு விளங்கும். 

நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர்களெல்லாம் புளியஞ்சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத்தொண்டர்; ‘காலணா’வின் அடியார்க்கும் அடியார்.

ஆனால், எங்களிலே ஒவ்வொருவனும் பேசுவதைக் கேட்டால் கைகால் நடுங்கும் படியாக இருக்கும். பணத் தொண்டரடிப்பொடியாழ்வார் எங்களெல்லோரைக் காட்டிலும் வாய்ப் பேச்சில் வீரர். ஒருவன் வானத்தை வில்லாக வளைக்கலாமென்பான். மற்றொருவன் மணலைக் கயிறாகத் திரிக்கலாமென்பான். ஒருவன் “நாம் இந்த ரேட்டில் – இந்த விதமாகவே – வேலை செய்து கொண்டு வந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப் பெருமை ஆறுமாதத்தில் காற்றாய்ப் போய்விடும்” என்பான். மற்றொருவன் “சியாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷமாகுமென்று கணக்குப் போட்டிருக்கிறார், ஆறு வருஷத்தில் கிடைத்து விடுமென்று எனக்குத் தோன்றுகிறது” என்பான். தவளையுருவங் கொண்ட மூன்றாமொருவன் “ஆறு மாதமென்று சொல்லடா” என்று திருத்திக் கொடுப்பான்.

ப………………… ஆழ்வார் எங்களிலே முக்கியஸ்தர், அவர் இதை எல்லாம் கேட்டுப் பரமானந்தமடைந்து கொண்டிருப்பார். ஆனால் ஒரு தேவதை அவரிடம் வந்து, உங்களுக்கு நான் ஸ்வராஜ்யம் நாளை ஸூர்யோதத்திற்கு முன்பு சம்பாதித்துக்கொடுக்கிறேன்.  நீ உன் வீட்டிலிருந்து அதற்காக ஒரு வராகன் எடுத்துக் கொண்டுவா” என்று சொல்லுமாயின், அந்த ஆழ்வார், “தேவதையே உனக்கு வந்தனம் செய்கிறேன். ஓம் சக்தியை நம: ஓம் பராயை நம: இத்யாதி; அம்பிகே, இந்த உபகாரத்துக்கு நாங்கள் உனக்கு எவ்வாறு நன்றி செலுத்தப் போகிறோம்? எங்கள் உடல்,  பொருள், ஆவி மூன்றும் உன்னுடையதே யாகும், ஆனால், ஒரு வராகன் கேட்ட விஷயத்தைப் பற்றி நான் ஒரு வார்த்தை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதைக் கேள். நீ சொல்லுகிற காரியமோ பொதுக் காரியம். அதற்குப் பொது ஜனங்கள் பணம் சேர்த்துக் கொடுப்பதே பொருத்தமுடையதாகும். நான் ஒருவன் மட்டிலும் கையிலிருந்து பணம் செலவிடுதல் பொருத்தமன்று. இவ்விஷயத்தைப் பற்றி நாங்கள் அடுத்த வாரம் கூடப் போகிற ‘மீட்டிங்’கில் பேசித் தீர்மானம் செய்கிறோம். அதன் பிறகு நீ பெருங்கருணையுடன் எழுந்தருள வேண்டும். இப்போது போய் வருக. வந்தே மாதரம்” என்று மறுமொழி சொல்லியனுப்பி விடுவார். 

ஐயோ! என்ன உலகமடா, இந்த மண்ணுலகம்! ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலை, ஸாரமில்லை, ஸத்துக் கிடையாது: உள்ளூரப் பூச்சியரித்துக் குழலாய் இருக்கும் வாழ்க்கை; ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி கூறுகின்றான். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப்படி விட்டுவிட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனே தான் இருக்கிறான், ஆனால், “நான் ஒருவன் சரியாக இருந்தால் போதுமா? மற்றவர்களை நம்புவதற்கிடமில்லையே” என்று நினைக்கிறான். பிறரை நம்புவதற்கிடமில்லையென்றெண்ணி ஏமாற்றுகிறான். ஐயோ மூடா நீ ஏமாற்றுவதனால், முன்னைக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடுமென்றா நினைக்கிறாய்? மனித ஜாதிக்கு தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம். இறங்காத விஷம். இதன் பெயர் பணம்.

இப்பேய்க்கு வணங்கும்படி அவனைத் தூண்டிவிடுவது விருப்பம்; அதாவது ருசி நீங்கிய விருப்பம்; அறிவற்ற விருப்பம்; ருசிஸஹிதமான விருப்பமுடையோர் கந்தவர்கள். ஸத்திய லோகக் கருவி. 

இன்னும் எத்தனையோ காட்சிகள் மண்ணுலகத்திலிருந்து எடுத்துக் காட்டவேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், பயனற்ற இவ்வுலகத்தைப் பற்றி அதிகமாக விஸ்தரிப்பது பயனுடைய கார்யமாகாது என்பது கருதி இத்துடன் நிறுத்தி விடுகின்றேன். 

(ஞானரதம் என்ற நூலிலிருந்து)

No comments:

Post a Comment