26 ஏப்ரல் 1916 நள
சித்திரை 14
நமது தேசத்தில் இப்போது புதிதாக யோசனை செய்யப்படும் காரியங்களில்
பூனாவில் ஸ்ரீ கார்வே என்பவர் ஏற்படுத்தப் போகிற ஸ்திரீகளின் சர்வகலா சங்கம் பிரதான
வகுப்பைச் சேர்ந்தது. இந்த முயற்சிக்கு சர்க்காரின் உதவி கிடைத்தால் அதனை ஸ்ரீ கார்வே
மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளக் காத்திருக்கிறார். அவ்வுதவி பின்னிட்டுத்தான் கிடைக்குமென்றால் அதுவரை தமது
காரியத்தை இவர் நிறுத்தி வைக்கப் போகிறதில்லை. ஜனங்களின் சஹாயத்தை மாத்திரமே வைத்துக்கொண்டு
இந்தச் சர்வகலாசங்கத்தை ஸ்தாபனம் செய்துவிடலாமென்ற
நம்பிக்கை இவருடைய மனத்தில் பரிபூரணமாக ஏறியிருக்கிறது. ஆனால் இவர் ஒரு விஷயத்தை முன்யோசனை
யில்லாமல் தொடங்கிப் பின்னிட்டு அதன் கஷ்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இடைமுறிந்து
போகும் தன்மையுடையவரல்ல. தம்மால் நிர்வகிக்க முடியாத காரியத்தைப் படபடத்த விருப்பத்தாலே
கைக்கொள்ளக் கூடியவரல்ல. இவர் ஒன்றைத் தொடங்கினால் அக்காரியம் தெய்வங்கள் எதிர்த்து
நாசஞ் செய்தாலொழிய மனிதர் எதிர்ப்பினாலே நின்று போய்விடாது. முதிர்ந்த அறிவு, வயது,
அநுபவம் இவற்றினால் காரியசித்திக்குத் தகுதி பெற்றவர். வீண் படாடோபமும் ஆடம்பரமும்
இல்லாதவர். உண்மையான தேசாபிமானி. அநாதைக் கைம் பெண்களுக்கு இவர் செய்திருக்கும் நிலையான
உபகாரம் நம்மவர்களால் மறக்கக் கூடியதன்று.
ஸ்திரீகளுக்கென்று தனியான யூனிவர்சிடி இதற்கு முன் பூமண்டலத்திலேயே
இரண்டு தான் இருக்கின்றன. ஜெர்மனியில் லைப்ஜிக் பட்டணத்திலே ஒன்றிருக்கிறது. ஜப்பானில்
ஒன்றேற்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே
இந்தக் காரியத்தை முதலாவது ஸ்ரீ கார்வேதான் ஆரம்பம் செய்கிறார்.
ஒரு காரியத்தைத் தொடங்குவோன் அதன் சம்பந்தமான விஷய நுட்பங்கள்
தெரிந்தவனாகவும் விடாமுயற்சி யுடையவனாகவும் இருந்தால் அந்தக் காரியம் எப்படியும் கைகூடிவிடும்.
பொதுவாக எல்லா தேசங்களிலும் அநேக நற்காரியங்கள் பணமில்லாமல் முறிந்து போவது வழக்கம்.
அதிலும் நமது தேசம் உலக முழுவதிலுமுள்ள எல்லா நாடுகளைக் காட்டிலும் இப்போது அதிக ஏழைமை
கொண்டிருப்பதால் இங்கே பணமில்லாமல் உடைந்து போன காரியங்களுக்கு அளவில்லை. இருந்தபோதிலும்
தர்மதீரர் இதைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அறிவும் மன உறுதியும் சேர்ந்தால் வானத்தை
வெல்லலாம். லெளகிக காரியங்கள் சாதிப்பது எம்மாத்திரம்? ஸ்ரீ கார்வேயின் பிரயத்தனத்திற்குப்
பணம் போதுமான வரை சேர்ந்து கொண்டுதான் வருகிறது. பூனாவிலே ஒருவர் தமது வீட்டை விற்று
10,000 ரூபாய் கொடுத்ததாகத் தெரிகிறது. ஸ்ரீ கார்வே ஏற்படுத்தப் போகிற சர்வகலா சங்கத்தில்
தேச பாஷைகளின் மூலமாகவே சகல சாஸ்திரங்களும் கற்றுக் கொடுக்கப்படும். இவருடைய சர்வகலாசங்கம்
ஸ்தாபனமாகிப் பத்து வருஷம் நடக்குமானால் அதுவரை நம் நாட்டு ஆண் பள்ளிக்கூடங்களி்ல்
இங்கிலீஷ் பாஷை மூலமாகவே கல்விப் பயிற்சி நடந்து வருமானால் பிறகு நமது நாட்டில் ஆண்களைக்
காட்டிலும் பெண்கள் உயர்ந்த கல்வியும் அறிவுத் திறமையும் சாஸ்திரப் பழக்கமும் பெற்றிருக்கும்படி
நேரிடும். அந்த நினை ஏற்படு முன்னாகவே ஆண் பள்ளிக்கூடங்களிலும் சுதேச பாஷைகளின் பழக்கம்
அதிகப்பட்டு விடுமென்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment