Thursday, March 1, 2012

கண்கள்


19 அக்டோபர் 1917

‘கண்கள் சிவந்து பெரியவாய்’ என்றார் நம்மாழ்வார்.

எம்பெருமானுடைய கண்களைச் சொல்லுகிறார். விடுதலை பெற்ற ஜீவன் முக்தர்களுடைய கண்ணும் திருமாலுடைய கண்ணைப் போலவே இருக்கும். தாமரைப் பூவைப் போலே கண் வேண்டும் என்பர். திறந்த பார்வை வேண்டும். 

மூடின கண் மறைந்த ஒளியைக் காட்டுகிறது. யோகி கண்மூடி ஜபம் பண்ணுகிறானே அதை நான் சொல்லவில்லை. ஸாமான்ய ஜனங்கள் கண்ணை முழுதும் விழித்துப் பார்க்காமல் அரைப் பார்வையும் கோணற் பார்வையும் பார்க்கும்படி செய்கிற அஞ்ஞானத்தையும் பயத்தையும் பழிக்கிறேன். இது நிற்க.

நான் சென்னைப்பட்டணத்தில் இருந்தபோது ஒரு சாமியாருடன் ஸ்நேகப்பட்டேன். அவர் சுதேசியம், அன்னிய வஸ்து பகிஷ்காரம், ஸ்வராஜ்ய ஸ்தாபனம் என்ற விஷயங்களைப் பற்றி ஆத்திரத்தோடு பேசுவார். அவர் கண்களை இமைக்காமலே நெடுநேரம் இருப்பார்; மனிதர் இமைக்காமலே இருந்துவிடலாம் என்று அந்தச் சாமியார் சொல்லுவதுண்டு. அது நல்ல பழக்கம். ஸூர்யனையே பார்த்துக் கொண்டிருந்தால் ஞானதிருஷ்டி உண்டாகும். கண்ணில் வீரம் ஏற்படும். 

ஸாதாரணமாக இருவருடைய கண்கள் ஸந்தித்தால், “இவன் ஏனடா நம்மை முறைச்சுப் பார்க்கிறான்?” என்கிற எண்ணம் இருவர் மனசிலும் உண்டாகிறது; ஒருவன் கண்ணைச் சாய்த்துக் கொள்ளுகிறான். அல்லது இருவரும் சாய்த்துக் கொள்ளுகிறார்கள். நேருக்கு நேர் கண்ணுக்குக்கண் பார்த்து இரண்டு பேர் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பது துர்லபம். 

பொய் இல்லாவிட்டால் பார்வை நேராகும்!

கவனி!

பொய் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்.

பயம் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்.

கவனி!

பொய் தீர்ந்தால் பயம் தீரும்.

பயம் தீர்ந்தால் பொய் தீரும்.

நேரே  பார்த்தால் விரோதக் குறியென்று யோக்யன் ஏன் நினைக்க வேணும்? அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உன் மனசில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்ளும் பொருட்டாக உன் கண்ணை நேரே பார்க்கிறேன். விரோதமில்லை. அவமரியாதையில்லை. விஷயம் தெரிந்து கொள்ளும் பொருட்டு. 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள் முழுதும் ஸூர்யனை இடைவிடாமல் பார்த்து உபாசனை செய்தாராம். இது நல்ல வழக்கம். கண் இருக்கும்போது ஸூர்ய நமஸ்காரம் செய்வோம்; அதனால் ஞான திருஷ்டியேற்படும்.

No comments:

Post a Comment