Sunday, March 4, 2012

தமிழ் நாட்டு மாதருக்கு


இந்தியா தேசத்து ஸ்திரீகள் இங்குள்ள ஆண் மக்களால் நன்கு மதிக்கப்படுவதற்குள்ள பல உபாயங்களில் வெளி நாட்டாரின் மதிப்பைப் பெற முயல்வதும் ஒரு உபாயமாம் திருஷ்டாந்தமாக, சில வருஷங்களுக்கு முன்பு, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ‘இந்தியா நாகரீகக் குறைவான தேசம்’ என்ற எண்ணம் வெகு சாதாரணமாகப் பரவியிருந்தது. மேற்றிசையோர்களுக்குள்ளே சில விசேஷ பண்டிதர்கள் மட்டும் நம்முடைய வேதங்கள், உபநிஷத்துக்கள், ஸாங்கியம், யோகம் முதலிய தர்சனங்கள் (அதாவது ஞானசாஸ்திரங்கள்); காளிதாஸன் முதலிய மஹா கவிகளின் காவியங்கள்; ராமாயணம், பாரதம்; பஞ்ச தந்திரம் முதலிய நீதி நூல்கள் – இவற்றை மூலத்திலும், மொழிபெயர்ப்புக்களின் வழியாகவும் கற்றுணர்ந்தோராய், அதிலிருந்து ஹிந்துக்கள் பரம்பரையாகவே நிகரற்ற ஞானத் தெளிவும் நாகரீகமும் உடைய ஜனங்கள் என்பதை அறிந்திருந்தனர். இங்ஙனம் மேற்கு தேசங்களில் பதினாயிரம் அல்லது லக்ஷத்தில் ஒருவர் இருவர் மாத்திரம் ஒருவாறு நமது மேன்மையை அங்கீகாரம் செய்தனர். எனினும், அந்நாடுகளிலே பொது ஜனங்களின் மனதில் ‘இந்தியா தேசத்தார் ஏறக்குறைய காட்டு மனிதரின் நிலையிலுள்ளோர்’ என்ற பொய்க் கொள்கையே குடிகொண்டிருந்தது. அப்பால், ஸ்வாமி விவேகானந்தரும் பின்னிட்டு ரவீந்திரநாத தாகூர், ஜகதீச சந்திர வஸு முதலிய மஹான்களும் மேற்றிசையில் விஸ்தாரமான யாத்திரைகள் செய்து தம்முடைய அபார சக்திகளைக் காண்பித்த பின்னரே, மேற்றிசைவாசிகளில் பலர், ‘அடா! இந்த ஹிந்துக்கள் நாகரீகத்திலும், அறிவிலும் இவ்வளவு மேம்பட்டவர்களா?’ என்று வியப்பெய்தினர். 

தவிரவும், மேற்கத்தியார் நம்மைக் குறைவாக நினைக்கிறார்கள் என்பதை அவ்விடத்துப் பத்திரிகைகளின் மூலமாகவும் புஸ்தகங்களின் மூலமாகவும் தெரிந்து கொண்டவர்களால் நமது தேசத்துக் கல்வி பெருமையால் இந்தியாவின் உண்மையான மாட்சியை அறியாது நின்ற இங்கிலீஷ் படிப்பாளிகளாகிய நம்மவரில் பலரும் வெளி நாட்டாரின் எண்ணத்தையே உண்மையெனக் கருதி மயங்கிவிட்டனர். காலச் சக்கரத்தின் மாறுதலால் இந்நாட்டில் அறிவுத் துறைகள் பலவற்றிலும் மேற்படி இங்கிலீஷ் படிப்பாளிகளே தலைமை வகிக்கும்படி நேர்ந்து விட்டதினின்றும், இந்தியா தன் மாண்பை முற்றிலும் மறந்துபோய் அதோகதியில் விழுந்துவிடுமோ என்று அஞ்சக்கூடிய நிலைமை அநேகமாய் ஏற்படலாயிற்று, இப்படிப்பட்ட பயங்கரமான சமயத்தில் ஸ்வாமி விவேகானந்தர் முதலாயினோர் தம்முடைய ஞான பராக்கிரமத்தால் மேற்றிசை நாடுகளில் திக்விஜயம் பண்ணி, மீண்டனர். இதினின்றும், இங்குள்ள இங்கிலீஷ் படித்த சுதேச தூஷணைக்காரர் தமது மடமை நீங்கி ஹிந்து நாகரிகத்தில் நம்பிக்கை செலுத்துவாராயினர். மேற்றிசையோர் எது சொன்னாலும் அதை வேதமாகக் கருதிவிடும் இயல்பு வாய்ந்த நம்மவர், முன்பு இந்தியாவை அந்த் அந்நியர் பழித்துக்கொண்டிருந்தபோது தாமும் பழித்தவாறே, இந்தியாவை அவர்கள் புகழத் தொடங்கியபோது தாமும் சுதேசப் புகழ்ச்சி கூறலாயினர். விவேகானந்தர் முதலானவர்கள் ஐரோப்பிய அமெரிக்கர்களால் போற்றப் படுவதன் முன்பு அம் மஹான்களை நம்மவர் கவனிக்கவேயில்லை. அப்பெரியோர் மேற்றிசையில் வெற்றி பெற்று மீண்ட மாத்திரத்தில், அவர்களை நம்மவர் தெய்வத்துக் கொப்பாக எண்ணி வந்தனை வழிபாடுகள் செய்யத் தலைப்பட்டனர். இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாகக் கவனித்தறிந்து கொள்ளுதல் நன்று.

அறிவின் வலிமையே வலிமை. அறிவினால் உயர்ந்தோர்களை மற்றோர் இழிவாக நினைப்பதும், அடிமைகளாக நடத்துவதும் ஸாத்யப்பட மாட்டா. அறிவின் மேன்மையால் வெளித் தேசங்களிலே உயர்ந்த கீர்த்தி படைத்து மீள்வாரை அதன் பிறகு இந்தத் தேசத்தார் கட்டாயம் போற்றுவார்கள். சில ஹிந்து ஸ்திரீகள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்ந்த கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வருவார்களாயின், அதினின்றும் இங்குள்ள ஸ்திரீகளுக் கெல்லாம் மதிப்பு உயர்ந்துவிடும். இந்த விஷயத்தை ஏற்கெனவே நம்முடைய மாதர் சிலர் அறிந்து வேலை செய்து வருகிறார்கள். வங்காளத்துப் பிராமண குலத்தில் பிறந்து ஹைதராபாத் நாயுடு ஒருவரை மணம் புரிந்து வாழும் ஸ்ரீ மதி ஸரோஜினி நாயுடு என்ற ஸ்திரீ இங்கிலீஷ் பாஷையில் உயர்ந்த தேர்ச்சி கொண்டு ஆங்கிலேய அறிஞர்கள் மிகவும் போற்றும்படியாக இங்கிலீஷில் கவிதை எழுதுகிறார். இவருடைய காவியங்கள் பல இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு அங்குள்ளோரால் மிகவும் உயர்வாகப் பாராட்டப்படுகின்றன. மேலும், இந்த ஸ்திரீ இங்கிலாந்தில் பல இடங்களிலே நமது தேசத்து முன்னேற்றத்தை யொட்டி அற்புதமான ப்ரஸங்கங்கள் செய்து சிறந்த கீர்த்தி யடைத்திருக்கிறார். மேலும், வங்காளி, பாஷையில் கவிதை யெழுதுவோராகிய ஸ்ரீமதி காமிநீ ராய், ஸ்ரீமதி மன குமாரி தேவி, ஸ்ரீமதி அநங்க மோஹினி தேவி என்ற மூன்று ஸ்திரீகளுடைய பாட்டுக்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்து அமெரிக்காவிலுள்ள பத்திரிகை யொன்று புகழ்ச்சியுரைகளுடன் சிறிது காலத்துக்கு முன்பு ப்ரசுரம் செய்திருப்பதினின்றும், இம்மாதர்களுக்கு அமெரிக்காவில் நல்ல கீர்த்தியேற்பட்டிப்பதாகத் தெரிகிறது.

புனா நகரத்துச் சித்திர பண்டிதராகிய ஜனாப் பைஜீரஹ்மின் என்பவர் அமெரிக்காவின் ராஜதானியாகிய ‘நியூயார்க்’ நகரத்திற்குப் போய் சென்ற வருஷத்தில் அந்நகரத்துச் சிற்பிகளால் மிகவும் போற்றப்பட்டார். இவருடைய சித்திரங்களை அங்குள்ளோர் மிகவும் வியந்தனர். அஜந்தாவிலுள்ள குகைச் சித்திர வேலைகளின் ஆச்சரியத்தைக் குறித்து ஸ்ரீமான் பைஜீரஹ்மின் கொலம்பியா ஸர்வகலா சங்கத்தாரின் முன்னே நேர்த்தியான உபந்யாஸம் புரிந்தார். இவருடன் இவருடைய மனைவியும் அங்கு சென்றிருந்தாள். இவர் ‘இந்தியா தேசத்து சங்கீதம்’ என இங்கிலீஷில் ஒரு புஸ்த்க மெழுதியிருக்கிறார். ஹிந்து ஸங்கீத சாஸ்திரத்திலும் வாய்ப்பாட்டிலும் நல்ல தேர்ச்சியுடையவர். இவர் அமெரிக்காவில் பல மாதர் ஸபைகளின் முன்பு ஹிந்து ஸங்கீதத்தைக் குறித்துப் பல உபந்யாஸங்கள் செய்தார். இடைக்கிடையே தம் உபந்யாஸக் கருத்துக்களை திருஷ்டாந்தப்படுத்தும் பொருட்டு நேர்த்தியான பாட்டுக்கள் பாடி அந்நாட்டினரை மிகவும் வியப்புறச் செய்தார். 

இங்ஙனம், தமிழ் மாதர்களிலும் பலர் மேல்நாடுகளுக்கு சென்று புகழ் பெற்று மீள்வாராயின், அதினின்றும் இங்கே நம்முடைய ஸ்திரீகளுக்குள்ள மதிப்பு மிகுதிப்படுமென்பதில் சிறிதேனும் ஐயமில்லை. எவ்வாறு நோக்கிய போதிலும், தமிழ்நாட்டு மாதர் ஸம்பூர்ணமான விடுதலை பெற வேண்டுவாராயின் அதற்குக் கல்வித் தோணியே பெருந்துணையாம். எனவே, கொஞ்சம் கொஞ்சம் பல துறைகளில் பயிற்சி வாய்ந்திருக்கும் தமிழ் சகோதரிகள் இரவு பகலாகப் பாடுபட்டு அவ்வத்துறைகளில் நிகரற்ற தேர்ச்சி பெற முயலவேண்டும். இடைவிடாத பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள்a இயற்கையறிவை மிகவும் உன்னத நினைக்குக் கொணர்ந்து விடுதல் சாலவும்  எளிதாம். ஒளவையார் பிறந்து வாழ்ந்த தமி்ழ்நாட்டு மாதருக்கு அறிவுப் பயிற்சி கஷ்டமாகுமா? சற்றே ஊன்றிப் பாடுவார்களாயின், தமிழ் மாதர் அறிவுப் பயிற்சிகளிலே நிகரற்ற சக்தி படைத்துவி்டுவார்கள். அறிவு திறத்தால் பிறகு விடுதலைக் கோட்டையைக் கைப்பற்றுதல் அதிஸுலபமாய் விடும். எனவே, பலவித சாஸ்திரங்கள் படித்துத் தேறுங்கள். தமிழ்ச் சகோதரிகளே! அங்ஙனம் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடுகளுக்குப் போய்க் கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வாருங்கள். விடுதலைத் தெய்வம் உங்களைக் தழுவும் பொருட்டு இரண்டு  கைகளையும் விரித்துக்கொண்டு காத்து நிற்கிறது. தமிழ் மாதர்களே! மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்கு நல்ல காலம் வருகிறது! வந்துவிட்டது; நீங்கள் விடுதலை பெறுவீர்கள்; உங்களால் உலகம் மேன்மையுறும். 

சகோதரிகளே!

தமிழ் நாட்டின் நாகரீகம் மிகவும் புராதனமானது. ஒரு தேசத்தின் நாகரீகம் அல்லது அறிவு முதிர்ச்சி இன்ன தன்மை யுடையதென்று கண்டுபிடிக்க் வேண்டுமாயின், அதைக் கண்ணாடி போல விளக்கிக் காட்டுவது அந்த நாட்டில் வழங்கும் பாஷையிலுள்ள இலக்கியம் அதாவது காவியம் முதலிய நூல்களேயாகும். இங்கிலாந்து தேசத்தின் தற்கால இலக்கிய நூல்களை வாசித்துப் பார்த்தோமாயின், அதன் தற்கால நாகரீகத்தை ஒருவாறு அளவிடக் கூடும். எனவே, தமிழ் நாட்டின் புராதன நாகரீகத்தை அளவிட்டறிவதற்கு தமிழ் நூலகளே தக்க அளவுகோலாகின்றன. இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸம்ஸ்க்ருதத்தி்ன் தி்ரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் தி்ரிபுகளல்லாததுவும் ஸம்ஸ்க்ருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்.
தமிழ் பாஷைக்கோ இலக்கணம் முதன்முதலாக அக்ஸ்தியராலும் அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்நி (தொல்காப்பியர்) என்ற முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்ட தென்பது மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் ஸம்ஸ்கி்ருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கின்ற தென்பது மெய்யே. எனினும் வடமொழிக் கலப்புக்கு முந்தித் தமிழுக்கு  வேறுவகையான இலக்கணமிருந்து ஒரு வேளை பின்னிட்டு மறைந்திருக்கக் கூடுமென்று நினைப்பதற்குப் பல ஹேதுக்கள் இருக்கின்றன. இஃது எவ்வாறாயினும், ஸம்ஸ்கிருத பாஷையில் கலப்புக்கு முன்னாகவே, தமிழ் நாட்டில் மிகவும் உயர்ந்த நாகரீகமொன்று நின்று நிலவி வந்த தென்பதற்கு அடையாளமாகத் தமிழில் மிக உயர்ந்த தரமுடைய பல பழைய இலக்கிய நூல்கள் காணப்படுகின்றன.

ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், பிற இடங்களிலும் காணப்படும் நாகரீகங்களுக்கெல்லாம் முந்தியதும் பெரும்பான்மை மூலாதாரமுமாக நிற்பது ஆர்ய நாகரீகம். அதாவது, பழைய ஸம்ஸ்கிருத நூல்களிலே சித்தரிக்கப்பட்டு விளங்குவது. இந்த ஆரிய நாகரீகத்துக்கு ஸமமான பழமை கொண்டது தமிழருடைய நாகரீகம் என்று கருதுவதற்குப் பலவிதமான ஸாக்ஷ்யங்களிருக்கின்றன. ‘ஆதியில் பரம சிவனால் படைப்புற்ற மூல பாஷைகள் வடமொழியென்று சொல்லப்படும் ஸம்ஸ்கிருதமும் தமிழுமே யாம்’ என்று பண்டைத் தமிழர் சொல்லியிருக்கும் வார்த்தை  வெறுமே புராணக் கற்பனை அன்று, தக்க சரித்திர ஆதாரங்களுடையது. “தமிழரும் ஆரியருமல்லாத ஜனங்களைக் கடவுள் பேச்சில்லாமலா வைத்திருந்தார்?” என்று கேட்பீர்களாயின், மற்றச் சொற்களும் பல இருக்கத்தான் செய்தன. ஆனால், மனித நாகரீகத்தில் முதல் முதலாக இவ்விரண்டு பாஷைகளிலேதான் உயர்ந்த கவிதையும்,  இலக்கியங்களும், ,சாஸ்திரங்களும் ஏற்பட்டன. மற்ற பாஷைகளின் இலக்கிய நெறிகள் இவற்றுக்கும் பின்னே சமைந்தன. பல இடங்களில் இவை இயற்றின நடையையே முன் மாதிரியாகக் கொண்டன. அதாவது ஆரியரும் தமிழருமே உலகத்தில் முதல் முதலாக உயர்ந்த நாகரீகப் பதவி பெற்ற ஜாதியார். இங்ஙனம் முதல் முதலாக நாகரீகம் பெற்ற இவ்விரண்டு வகுப்பினரும் மிகப் பழைய நாட்களிலேயே ஹிந்து மதம் என்ற கயிற்றால் கட்டுண்டு ஒரே கூட்டத்தாராகிய செய்தி பூமண்டலத்தின் சரித்திரத்திலேயே மிக விசேஷமும் நலமும் பொருந்திய செய்திகளில் ஒன்றாகக் கணித்தற்குரியது. 

தமிழ் நாட்டு மாதராகிய என் அன்புக்குரிய ஸஹோதரிகளே! இத்தனை பழமையும், மேன்மையும் சான்ற இரண்டு பகுதிகளின் கலப்பாகுந் தன்மையால் பாரத தேசத்திலேயே மற்றப் பிரதேசங்களிலுள்ள நாகரீகத்தை காட்டிலுங்கூட ஒருவாறு சிறப்புடையதாகக் கருதுவதற்குரிய ஆர்யதிராவிட நாகரிகம் உங்களுடைய பாதுகாப்பிலிருக்கிறது.

இதனை மேன்மேலும் போஷித்து வளர்க்கும் கடமை உங்களைச் சேர்ந்தது. எங்ஙனம் எனில், பொதுப்படையாக நோக்குமிடத்தே மனித நாகரிகங்கள் ஆண் மக்களின் உதவி கொண்டே பிறப்பிக்கப்படுகின்றன. அப்பால் பெரும்பாலும் பெண்களாலேயே காக்கப்படுகின்றன. இடைக்காலத்தில் மகம்மதிய நாகரிகம் வந்து ஹிந்து தர்மத்தைத் தாக்கிற்று. ஆனால் ஹிந்து தர்மம் அதிலுள்ள முக்கிய அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, அந்தத் தாக்குதலால் அழிவெய்தாமல், முன்னைக் காட்டிலும் அதிக சக்தியுடன் மிஞ்சி நின்றது. ஸமீப காலத்தில் ஐரோப்பிய நாகரிகம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இதுவும் நமது நாகரித்துடன் நன்றாகக் கலந்துவிட்டது. இனி இதன் விளைவுகளை நம் நாட்டாரின் அறிவினின்று முற்றிலும் பிரி்த்துக் களைதல் ஸாத்யப்படாது. இது நம்முடைய தேச ஞானத்தின் மர்மங்kகளுக்குள்ளே கலந்து பெரும்பாலும் நமதாய் விட்டது…

ஸஹோதரி்களே! நீங்கள் ஐரோப்பிய நாகரிகத்தின் சேர்க்கையைக் குறித்துச் சிறிதேனும் வருத்தப்பட வேண்டாம். அது நமது தேசத்துப் பயிற்சியை அழிக்கும் வலிமை உடையதன்று. அது நமக்குத் துணை. அது நாம் அஞ்சுதற்குரிய பிசாசன்று. வெவ்வேறு வகைப்பட்ட இரண்டு நாகரி்கங்கள் வந்து கூடும்போது அவற்றுள் ஒன்று மிகவும் வலியதாகவும், மற்றொன்று மிகவும் பலவீனமாகவும் இருக்குமாயின் வலியது வலிமையற்றதை இருந்த இடம் தெரியாமல் விழுங்கிவிடும். வலிமையற்ற நாகரிகத்திற்குரிய பாஷையும் மதமும் முக்கியத் தன்மையற்ற புற ஆசாரங்கள் மாத்திரமேயன்றி விவாக முறை முதலிய முக்கிய ஆசாரங்களும் அழிந்து மறைகின்றன. அந்த நாகரிகத்தை காத்து வந்த ஜனங்கள் பலமுடைய நாகரிகங்களின் பாஷை, மதம் முதலியவற்றைக் கைக்கொள்கிறார்கள். பிலிப்பைன் தீவில் அமெரிக்க நாகரிகம் இவ்வகை வெற்றியடைந்திருக்கிறது. ஆனால் நம்முடைய ஹிந்து நாகரிகம் இங்ஙனம் சக்தியற்ற வஸ்துவன்று. பிற நாகிரகங்களுடன் கலப்பதனால் இதற்குச் சேதம் நேருமென்று நாம் சிறிதேனும் கவலைப் படவேண்டிய அவசியமி்ல்லை. உலகத்திலுள்ள நாகரிகங்கள் எல்லாவற்றிலும் நம்முடைய நாகரிகம் அதிக சக்தியுடையது. இது மற்றெந்த நாகரிகத்தையும் விழுங்கி ஜீர்ணித்துக் கொள்ளும் திறன் வாய்ந்தது. ஆதலால் ஐரோப்பிய நாகரிகத்தின் கலப்பிலிருந்து ஹிந்து தர்மம் தன் உண்மை யியல்பு மாறாதிருப்பது மட்டுமேயன்றி முன்னைக் காட்டிலும் அதிக சக்தி்யும் ஒளியும் பெற்று விளங்குகிறது. இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்கு உணர்ந்து கொண்டாலன்றி இவர்களுடைய ஸ்வதர்ம ரக்ஷணம் நன்று நடைபெறாது….

தமிழ் நாட்டு ஸஹோதரிகளே! கணவன்மார், உடன் பிறந்தார், புத்திரர் முதலானவர்களால் நன்கு மதிக்கப் பெறாமல் இழிவாகக் கருதப்பட்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து விடுதல் நன்று.
“மான மிழந்தபின் வாழாமை முன்னினிதே.” கல்வி கூட அத்தனை பெரிதி்ல்லை, தைரியம் வேண்டும். எதுவரினும் நம்மைப் பிறர் தாழ்வாகக் கருதவும் தாழ்வாக நடத்தவும் இடங்கொடுக்கக் கூடாது என்ற மன உறுதி வேண்டும்.

ஐரோப்பிய நாகரிகத்தின் புறத்தோற்றங்களிலே ஆக்ஷேபத்துக்கு இடமான அம்சங்கள் பலவும் இருக்கின்றன என்பதில் ஸந்தேகமில்லை. ஆனால் இது வியக்கத்தக்க தொரு செய்தியன்று. நமது  ஸநாத ஹிந்து தர்மத்தின் புறநடைகளி்லே கூடப்பல வெறுக்கத்தக்க அம்சங்கள் வந்து கலந்துதான் கிடக்கின்றன. அதுபற்றி ஐரோப்பிய நாகரிகத்தையே வெறுத்தல் சாலமிகப் பேதமையாம்….

ஆகவே, பூமி முழுமைக்கும் பெருந்துணையாக நின்று மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றக் கூடிய ஹிந்து மதத்தின்  ஸார உண்மைகளை நாம் ஒழுக்கத்திலே காண்பிக்க வேண்டும். இங்ஙனம் காண்பிக்கும்படி நம்மவரைத் தூண்டி வழிகாட்டும் கடமையும், தகுதியும் நம்முடைய மதங்களுக்கே உரியன.

No comments:

Post a Comment