Thursday, March 29, 2012

ஜப்பானியக் கவிதை


18 அக்டோபர் 1916                                    நள ஐப்பசி 5

ஸமீபத்தில் “மார்டன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர்  ஒரு லிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வதென்னவென்றால்:- இங்கிலாந்து அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன?

மேற்குக் கவிதையில் சொல்மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும், பல சொற்களைச் சேர்த்து வெறுமே, பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக்கொண்டே போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகமிருக்கிறது. தம்முடைய மனத்திலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர் கதைகளெழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்.

ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. கூடை கூடையாகpப பாட்டெழுதி அச்சிடவேண்டும் என்ற ஒரே ஆவலுடன் எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாகமாட்டான். கவி்தை யெழுதுபவன் கவியன்று; கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனி்மை, மோனம், பலர்களின் பேச்சு இவற்றிலே ஈடுபட்டுப் போய், இயற்கையுடனே ஒன்றாகி வாழ்பவனே கவி.

~

ஜப்பானிய பாஷையில் பதினேழசை கொண்ட ‘ஹொக்கு’ என்ற பாட்டு ஒரு தனிக் காவியமாக நி்ற்கும். முப்பத்தோரசையுள்ள ‘உத்தா’ (உக்தம்) என்பதும் அங்ஙனமே. அயோநே நோகுச்சி  தமது கருத்தை விளக்கும் பொருட்டுச்  சில திருஷ்டாந்தங்கள் காட்டியிருக்கிறார். அமெரிக்காவில் மிஸ் ரீஸ் (Miss Lizette Woolworth Reese) என்பதோர் கவிராணி யிருக்கிறார். வேண்டாதவற்றைத் தள்ளிவிடுவதில் அந்த மிஸ் ரீஸ் என்ற பெண் புலவர்  பெயர் வாங்கியிருக்கிறார். அநாவசியமான பதச் சேர்க்கை, அநாவசியமான கருத்து – விளக்கம் என்ற இரண்டுமில்லாமல் முத்துப்போலே பதங்கள் கோக்கும் நல்ல தொழிலாகிய, அக்கவிராணி இங்கிலீ்ஷ் பாஷையில் எழுதியிருக்கும் அடிகள் சிலவற்றை நோகுச்சி எடுத்துக் காட்டுகிறார்.

மழை
(மிஸ் ரீஸ் எழுதியதன் மொழிபெயர்ப்பு மாதிரியடிகள்)

ஓ! வெண்மையுடையது; மழை இளையது. கூரை மேலே சொட்டுச் சொட்டென்று விழுகிறது; வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் ஓடி வருகின்றன. பூண்டுகளின் மணம். பழமையின் நினைவு. இவை யெல்லாம் புல்லாந்தரையிலே குணந் தெரிகிறது. உடைந்த கண்ணாடித் துண்டு போலே. (1)

சிறிய வெளிக்கதவுகள் புடைக்கிறது பார். அதுவரை செவந்த கொடிப்பூண்டுகள்  நேரே ஓடிச் செல்லுகின்றன. (2(

ஓ! வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் வந்து நுழைகின்றன. கற்பூரச் செடியின் மணம். பழைய மகிழ்ச்சி பழைய துன்பம்; இளைய வெண்மழையிலே கிடைத்தன.  (3)

மேற்கூரிய பாட்டை எடுத்துக்காட்டிவிட்ட பிறகு நோகுச்சி சொல்லுகிறார்:-
“வெண்மையுடையது; மழை இளையது” என்ற முதலடியில் வியப்பில்லை. அதிஸாமான்யமான வார்த்தை. கடைசி விருத்தம் வயிரமபோலிருக்கிறது. அதை மாத்திரம் தனிக் கவிதையாக வைத்துக்கொண்டு மற்றதையெல்லாம் தள்ளிவிடலாம். ஜப்பானியப் புலவன் அப்படியே செய்திருப்பான். சிறிய பாட்டுப்போதும். சொற்கள், சொற்கள்,  சொற்கள் – வெறும் சொற்களை வளர்த்துக் கொண்டு போய் என்ன பயன்?

ஜப்பானிலே பதினெட்டாம் நூற்றாண்டில் “பூஸோன் யோஸாஹோ” என்ற ஜப்பானியக் கவிராயர் ஒரு ‘ஹொக்கு’ (பதினெழசைப்பாட்டு) பாடியிருக்கிறார். அதன் மொழிப்பெயர்ப்பு:-
“பருவமழையின் புழையொலி கேட்பீர், இங்கென் கிழச் செவிகளே.” இந்த ஒரு வசனம் ஒரு தனிக் காவியம். பாட்டே இவ்வளவு தான்.

மேற்படி ஹொக்க்ப் பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மனனம் செய்யவேண்டும். படிப்பவனுடைய அனுபவத்திற்கு தக்கபடி அதிலிருந்து நூறு வகையான மறைபொருள் தோன்றும். பல பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்ந கவிதையன்று. கேட்பவனுள்ளத்திலே கவிதை யுணர்வை எழுப்பி விடுவது சிறந்த கவிதை.

~

மற்றுமொரு நேர்த்தியான “ஹொக்குப்” பாட்டு. வாஷோ ம்த்ஸுவோ (Basho Matsuso) என்றொரு ஜப்பானியக் கவியிருந்தார். இவர் வறுமையே விரதமாகப் பூண்டிருந்தாராம். ஒரு சீடன் இவரிடம் கல்வி கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே இவரிடம் மூன்று ரியே (அதாவது ஏறக்குறைய முப்பது வராகன்) காணிக்கையாகக் கொடுத்தான். இவர் ஒருநாளுமில்லாதபடி புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தமக்குத் தொல்லையாதலால் வேண்டியதில்லை என்று திரும்பக் கொடுத்துவிட்டாராம்.

இவருக்கு காகா (Kaga) என்ற ஊரில் ஹொகூஷி என்றொரு மாணாக்கர் இருந்தார். இந்த  ஹொகூஷியின் வீடு தீப்பட்டெரிந்து போய்விட்டது. அந்தச் செய்தியை ஹொகூஷிப் புலவர் தமது குருவாகிய “வாஷோ-மத்ஸுவோ” என்பவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதியனுப்பினார்.
“தீப்பட்டெரிந்தது: வீழு மலரின் – அமைதியென்னே!”

மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும்போது எத்தனை அமைதியுடனிருக்கிறதோ அத்தனை அமைதியுடன் மனிதனுக்கு வருந்துன்பங்களை நோக்குகிறான். .‘வீடு தீப்பட்டெரிந்தது. ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போகவில்லை’ என்ற விஷயத்தை ஹொகூஷி இந்தப்  பாட்டின் வழியாகத் தெரிவித்தார்.

~

“சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” ஜப்பானியக் கவிதையின் விஷேசத் தன்மையென்று நோகுச்சிப் புலவர் சொல்வதுடன், ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது. “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.” கிழக்குத் திசையின் கவிதையிலேயே இவ்வி்தமான ரஸம் அதிகந்தான். தமிழ் நாட்டிலே முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும், ஒரேயடியாய் கவிதை சுருங்கியே போய்விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் “ஹொக்குப்” பாட்டன்று. நோகுச்சி சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.”

No comments:

Post a Comment