Friday, March 16, 2012

அழகுத் தெய்வம்

மங்கியதொர் நிலவினிலே கனவிலிது கண்டேன்,
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை;
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்.
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்,
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து,
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்ததேன்.

"யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?" என்றேன்;
"யோகமே தவம்,தவமே யோக"மென உரைத்தாள்.
"ஏகமோ பொருளன்றி இரண்டாமோ?"என்றேன்;
"இரண்டுமாம்,ஒன்று மாம்,யாவுமாம்"என்றாள்.
"தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?" என்றேன்.
"வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ?”என்றாள்.

"காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?" என்றேன்.
"காலமே மதியினுக்கோர் கருவியாம்" என்றாள்.
"ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?"என்றேன்;
"நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்" என்றாள்
"ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?" என்றேன்;
"எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்" என்றாள்.
"மூலத்தைச் சொல்லவோ?வேண்டாமோ?" என்றேன்;
முகத்திலருள் காட்டினாள், மோகமது தீர்ந்தேன்.

No comments:

Post a Comment