வேதபுரத்தின் வீதியில் ஒரு பண்டாரம் நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு
வந்தான்.
அவன் நெற்றியிலே ஒரு நாமம். அதன் மேலே விபூதிக் குறுக்கு. நடுவில்
ஒரு குங்குமப்பொட்டு.
“உனக்கு எந்த ஊர்?” என்று கேட்டேன்.
“நடுப்பட்டி” என்று அந்தப் பண்டாரம் சொன்னான்.
“நீ எந்த மதம்?” என்று கேட்டேன்.
“வைசாக்தம்” என்றான்.
சிரிப்புடன், “அதற்கர்த்த மென்ன?” என்று கேட்டேன்.
“வைஷ்ணவ-சைவ-சாக்தம்” என்று விளக்கினான்.
“இந்த மதத்தின் கொள்கை யென்ன?” என்று கேட்டேன்.
அப்போது பண்டாரம் சொல்லுகிறான்:-
“விஷ்ணு தங்கை பார்வதி; பார்வதி புருஷன் சிவன். எல்லா தெய்வங்களும்
ஒன்று. ஆதலால் தெய்வத்தை நம்பவேண்டும். செல்வத்தைச் சேர்க்கவேண்டும். இவ்வளவு தான்
எங்கள் மதத்தினுடைய கொள்கை” என்றான்.
“இந்த மதம் யார் உண்டாக்கினது?” என்று கேட்டேன்.
“முன்னோர்கள் உண்டாக்கினது. தனித்தனியாகவே நல்ல மதங்கள் மூன்றையும்
ஒன்று சேர்த்தால் மிகவும் நன்மையுண்டாகு மென்று எனக்குத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளும்,
தில்லை நடராஜரும் கனவிலே சொன்னார்கள். ஆதலால் ஒன்றாகச் சேர்த்தேன்” என்று அந்தப் பண்டாரம்
சொன்னான்.
சிறுகதை
ஒரு வீட்டில் ஒரு புருஷனும் ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒரு
நாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும் போது ஸ்திரீ சமையல் செய்துகொண்டிருந்தாள். சோறு
பாதி கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஸ்திரீ அன்றிரவு கொஞ்சம் உடம்பு அசெளகரியமாக யிருந்தபடியால்,
தனக்கு ஆஹாரம் வேண்டாமென்று நிச்சயித்துப் புருஷனுக்கு மாத்திரமென்று சமைத்தாள்.
புருஷன் வந்தவுடன், “நான் இன்றிரவு விரதமிருக்கப் போகிறேன்.
எனக்கு ஆஹாரம் வேண்டாம்” என்றான்.
உடனே பாதி கொதிக்கிற சோற்றை அவள் அப்படியே சும்மா விட்டுவிட்டு
அடுப்பை நீரால் அவித்துவிடவில்லை. தங்களிருவருக்கும் உபயோக மில்லாவிடினும், மறுநால் காலையில் வேலைக்காரிக்கு உதவு மென்று நினைத்து,
அது நன்றாகக் கொதிக்கும்வரை காத்திருந்து வடித்து வைத்துவிட்டுப் பிறகு நித்திரைக்குச்
சென்றாள்.
அதுபோலவே, கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே
அது தனக்குப் பயனில்லையென்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்தி விடமாட்டான். பிறருக்குப்
பயன் தருமென்பதைக் கொண்டு, தான் எடுத்த வேலையை முடித்த பிறகே வேறு காரியம் தொடங்குவான்.
பிரார்த்தனை
கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும்,
இளைஞருடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹ்ருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி
அருள் செய்க.
No comments:
Post a Comment