1906 செப்டம்பர் 11
எம்.எம். ஹைண்டுமன் என்பவர் இந்தியாவிற்கு இங்கிலாந்திலேயுள்ள
முக்கிய நண்பர்களில் ஒருவர். இவர் வேறு சிலரைப் போல நம்மிடம் அரை மனதுடன் அனுதாபம்
கொள்வாரில்லை. நம்மவர்களுக்கு முற்றிலும் சுயாட்சி கிடைக்க வேண்டுமென்பதையே பெருநோக்கமாகக்
கொண்டவர், மார்லியின் “வரவு செலவு கணக்கு”ப் பிரஸங்கத்தைப்பற்றி ‘ஜஸ்டிஸ்’ (நீதி) என்ற
லண்டன் பத்திரிகையிலே ஒரு விஷயம் எழுதியிருக்கின்றார். இந்தியா சிறிது சிறிதாகச் செழிப்படைந்து
வருகிறதென்று மிஸ்டர் மார்லி கூறியிருப்பதைப்பற்றி இவர் கண்டனை புரிந்து பேசுகிறார்:-
இவரது விவகாரங்கள் பின்வருமாறு:- (1757ம் வருஷம்) பிளாஸி சண்டை
முதலாக (1815ம் வருஷம்) வாடர்லு சண்டை வரை
இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் கொள்ளையடித்துச் சென்றது நூறு கோடி (100,000,000) பவுன்.
அதற்கப்பால் 1875ம் வருஷம் முதல் 1906ம் வருஷம் வரை குறைந்தபக்ஷம் மற்றோரு நூறு கோடி (100,000,000)
பவுன் பிரதியுபகாரமில்லாமல் வாரிச் சென்றிருக்கிறார்கள்.
இன்றும் வருஷந்தோறும், இந்தியாவிலிருந்து பிரதி பிரயோஜன மில்லாமல்
3 கோடி (30,000,000) பவுன் எடுத்துக் கொண்டுபோகிறார்கள். இந்தியாவிலேயே அன்னியர்கள்
(20,00,000) 2 கோடி பவுன் சம்பளமாக எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு இந்தியாவின் இரத்தத்தை
அன்னியர்கள் உறிஞ்சுவதால் இங்கே பஞ்சமும், பிளேக்கும் ஜனங்களைப் பதினாயிரக்கணக்காக
விழுங்குகின்றன. மரணத்திட்டம் வருஷந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைக்காட்டிலும் பெரிய அநீதி எந்தக் காலத்திலும், எந்த ராஜாங்கத்தாராலேயும்
செய்யப்பட்டதே கிடையாது.
மிஸ்டர் மார்லி மேற்கண்ட விஷயங்களையெல்லாம் மிக நன்றாய் அறிவார்.
அப்படியிருந்தும் அவர் இந்தியா செழிப்படந்து வருகிறதென்பதற்கு “நிதரிசனம்” காட்டப்
புகுந்துவிட்டார். இந்தியா கடன்கார தேசமாகி அதன் வருஷாந்திர இறக்குமதிகளைக்காட்டிலும்,
ஏற்றுமதிகள் அதிகப்பட்டு, இங்கிலாந்தின் நன்மைகளின் பொருட்டு அது பெரும் நஷ்டமடைந்து
வருவதையே, மார்லி இந்தியாவிலேயே செல்வம் குவிந்து வருவதற்கு திருஷ்டாந்தமாகக் கூறுகிறார்.
“விவசாய ஜாதியாருக்குப் பெரிய அனுகூலம் செய்து விட்டதாக” மார்லி
பெருமை பாராட்டிக் கொள்ளுகின்றார். 11 பென்ஸ் கொண்ட 1 ரூபாயை ஹில்லிங் 4 பென்ஸ் கொண்டதாக
வைத்துக்கொள்ள வேண்டுமென்று கவர்ன்மெண்டார் தமது சொந்த நலத்தின் பொருட்டு விதியேற்படுத்தி
100க்கு 40 ஆக இருந்த தீர்வையை 100க்கு 50 ஆகச் செய்துவிட்டார்கள். இது விவசாயிகளுக்குச்
செய்த அனுகூலம். இனி, இத்தேச வஸ்துக்களை இழுத்துக் கொண்டு, அன்னியர்கள் காலில் போட்டு
வரும் ரெயில் பாதைகளை அன்னிய கம்பெனியார் முதல் போட்டு நடத்துகிறார். இந்தியாவிலேயே
எந்த வருஷம் பஞ்சம் அதிகமோ அந்த வருஷத்திலே ௸ கம்பெனி பங்காளிகளுக்கு
அதிகப் பணம் கிடைக்கிறது. இது நமக்குப் பெரிய வரமாக அவர்கள் வெளியில் பேசிக் கொள்கிறார்கள்.
நீர்ப்பாய்ச்சல் விஷயத்தில் ஏதோ ஒரு பெரிய உதாரத் தன்மை காட்டிவிட்டதாக நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். 250 வருஷங்களிலே இந்தியாவின் நீர்ப்பாய்ச்சலின் பொருட்டு
28,000,000 பவுன் செலவிட்டிருக்கிறார்கள். அதில் பெருந்தொகை உபயோகமில்லாமல் துர்விநியோகமாயிருக்கிறது.
இத்தனையும் சேர்த்து ஒரே வருஷத்தில் இங்கிருந்து வாரிச்செல்லும்
பணத்துக்கு சமானமாகமாட்டாது. புராதனமான அரிய வாய்க்கால் தொழில்களை சரியானபடி செப்பனிடாமல்
பாழாக்கிவிட்டார்கள்.
இனி உப்பு வரி ஒன்றிருக்கிறது. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும்
உப்புக் கிடைக்காதபடி நஷ்டமடைந்து கொண்டிருந்த சமயத்தில், வரியின் பளு மிகுதியாலேயே
கவர்ன்மெண்டாருக்குத் தக்க வருமானம் கிடைக்க வழியில்லாமலிருக்கிறது, இந்த சமயத்தில்
௸ வரியை சிறிது குறைத்துவிட்டார்கள். உப்பைப் போன்ற பிராணதாரமான
வஸ்துவில் வரி விதிப்பதுவே பெரும் பாதகம். அப்படியிருக்க, ஒருவித சுயநலத்தைக் கருதி
உப்பைக் குறைத்துவிட்டது ஒரு தர்மமாகுமா?................. தர்மம் என்று சொல்லிக்கொண்டால்
எப்படியிருக்குமோ அப்படியேதான் இதுவும் இருக்கிறது.
இவற்றையெல்லாம் நமது க்ஷேமாபிவிருத்தியின் நிதர்சனங்களென்று
மார்லி வெட்கமில்லாமல் சொல்ல வந்துவிட்டார். நமக்கு இதன் அக்கிரமம் எவ்வளவு தெளிவாக
விளங்குகிறதோ அவ்வளவு தெளிவாக மார்லிக்கும் விளங்குமென்பதில் ஆக்ஷேபமில்லை. ஆனால் சம்பளம்
வாங்கிக்கொண்டு இந்தியா மந்திரி வேலை பார்ப்பவர் அதற்குத் தக்கபடி பேசவேண்டாமா? நாய்
வேஷம் போட்டால் குலைத்துத்தானே தீரவேண்டும்? இந்தியாவின் விஷயமாக…. பேசிக்கொண்டு வந்த
மார்லிக்கு அவர் பேசும்போது தொண்டையடைத்து மூச்சுமுட்டிப் போய்விடவில்லையே! என்ன ஆச்சரியம்!
என்று ஹைண்ட்மான் கவலைப்படுகிறார்.
No comments:
Post a Comment