Saturday, May 19, 2012

ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார்


7 ஜூலை  1916                                                                                     நள ஆனி 24

சுதேசமித்திரன் பத்திராதிபர் அவர்களுக்கு:-

சென்னப்பட்டணத்தில் ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார் தமது பெண்ணை ருதுவான பிறகு விவாகம் செய்து கொடுத்த செய்தி எனக்கு சந்தோஷம் தருகிறது.

நமது ஜன ஸமூகத்தில் மாறுதல்கள் நடக்க வேண்டும். மாறுதலே உயிர்த் திறமையின் முதற்குறியாகும். மேன்மேலும் செளகரியத்தை விரும்பித் தானாகவே புதிய புதிய மாறுதல்கள் செய்து கொள்ளாத ஜந்துவை, இயற்கைத் தெய்வம் வலியவந்து கீழ்நிலைமைக்கு மாற்றுகிறது. புராதன ஆசாரங்களில் நல்லதைக் கடைப்பிடித்துக் கெட்டதை நீக்கிவிட வேண்டும். “புராண மித்யேவ நஸாது ஸர்வம்.” பழமை என்ற ஒரே காரணத்தால் எல்லாம் நல்லதாய் விடாது.

மேலும் விவாக சமயத்தில்  சொல்லப்படும் சில வேதமந்திரங்களைக் கொண்டே பூர்வ  காலத்தில் பிராமணர்கூட ருதுவான பிறகுதான் பெண்களுக்கு மணம் செய்வித்தார்கள் என்று ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார் தாம் அவ்விஷயத்தைப் பற்றி ஏற்கனவே எழுதி வெளியிட்டிருக்கும் புத்தமொன்றில் ருஜுப்படுத்தியிருக்கிறார். ஆகவே குழந்தைக் கல்யாணம் வேதோக்தமென்றும், தெய்வக்கட்டளையென்றும் இவர் நம்பவில்லை. இடைக்காலத்தில் நம் ஜாதியார் அறிவும், தைரியமும், சக்தியும் இழந்துவிட்ட பிறகு வந்து நுழைந்த அசம்பாவித வழக்கங்களில் இதுவொன்றென்பது ஸ்ரீ சாஸ்திரியாரின் கொள்கை. இந்தக் கொள்கையை நமது நாட்டில் எத்தனையோ ஜனங்கள் மனதிற்குள்ளே அங்கீகாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இங்ஙனம் ஒப்புக்கொண்ட பிறகும் புதிய சீர்திருத்தத்தை நடைமுறையிலே கொண்டு வருவதற்குத் தைரியமில்லை.

பொதுவாக் இங்கிலீஷ் படித்தவர்களிலே பலரும், இங்கிலீஷ் படிக்காவிட்டாலும் விஷயங்களைத் தாமாகவே யோசனை செய்து பார்க்கும் வழக்கமுடைய வேறு பலரும் நமது ஜனக்கட்டிலே எத்தனையோ குற்றங்குறைகள் இருப்பதாக ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவனவனுக்கு நியாயமாகத் தெரிந்ததை அவனவன் தனது அனுஷ்டானத்தில் காட்டும் முறைமை நமது நாட்டில் நன்றாக ஏற்படவில்லை. தர்மத்துக்காகத் தாங்கள் ஸங்கடப்படுவதிலே பெரும்பாலோருக்கு ஸம்மதமில்லை. அதுவும் இங்கிலீஷ் படித்த கூட்டத்தாரில் மனோதைரியமுடையவர்களின் தொகை மிகவும் சொற்பமென்பது என்னுடைய அபிப்பிராயம். உள்ளும் புறமும் ஒன்றுபோல நடக்கவேண்டும். படித்த வித்வான்கள் வஞ்சக நடை நடந்தால் அந்த தேசம் சூன்யமாகிவிடும். மனோதைரியமில்லாவிட்டால் பயனுடைய செய்கை எதுவுமே செய்ய முடியாது.

விதி வசத்தால் நமது ஜனங்களுக்கு இந்த க்ஷணத்திலே பல விஷயங்களிலும் வழி காட்டக்  கூடிய திறமை இங்கிலீஷ் படித்த சிலரிடத்திலே தான் காணப்படுகிறது. அதற்குக் காரணம் பூமண்டலத்தில் சாஸ்திரங்களும் நவீன யோசனைகளும் நமது பாஷையில் மொழி பெயர்க்கப்படாமல் இருப்பதொன்று; நம்மவர் அன்ய தேசங்களில் யாத்திரை செய்து தற்கால அனுபவங்கள் திரட்டிக் கொண்டு வராமலிருப்பது இரண்டு; நமக்குள் வந்து புகுந்திருக்கும் கோரமான வறுமை மூன்றாவது.

எனவே, இந்தக் கூட்டத்தாரில் சிலர் கொஞ்சம் துணிவாகச் செய்கைகள் செய்வதைக் காணும் போது ஆரம்பத்திlல சொல்லியபடி எனக்கு ஸந்தோஷ முண்டாகிறது. இப்படி நம்மவர் எல்லா விஷயங்களிலும் நியாத்தைத் துணிவுட்ன் செய்து காட்டி நாட்டில் புதிய உயிரை நிலை நிறுத்தும்படி தேவ கருணை செய்க.

No comments:

Post a Comment