25 ஜனவரி, 1918
ஜீவஹிம்ஸை கூடாது. மது மாம்ஸங்களால் பெரும்பான்மையோருக்குத்
தீங்கு உண்டாகிறது. மது மாம்ஸங்கள் இல்லாதிருந்தால் பிராமணருக்குப் பெரிய கீர்த்தி.
அது பெரிய தவம். அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக் கூடிய அநுஷ்டானம்.
ஊண், உடை, பெண் கொடுக்கல் வாங்கல் முதலிய விஷயங்களில் மூடத்தனமாகக்
கட்டுப்பாடுகளும் விதிகளும், தடைகளும் கட்டுவதில் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.
மேலும் உலகத்து மனிதர்களெல்லோரும் ஒரே ஜாதி. ‘இந்தச் சண்டையில்
இத்தனை ஐரோப்பியர் அநியாயமாக மடிகிறார்களே’ யென்பதை நினைத்து நான் கண்ணீர் சிந்தியதுண்டு.
இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன், அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில்
எனக்குச் சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரே வகுப்பு.
சகல மனிதரும் சகோதரர். மனுஷ்ய வர்க்கம் ஓருயிர். இப்படியிருக்க நாம் ஒரு வீட்டுக்குள்ளே
மூடத்தனமாக ஆசாரச் சுவர்கள் கட்டி, “நான் வேறு ஜாதி. என் மைத்துனன் வேறு ஜாதி, இருவருக்குள்
பந்தி போஜனம் கிடையாது. அவனை ஜாதிப்பிரஷ்டம் பண்ணவேண்டும்” என்பது சுத்த மடமை யென்பதைக்
காட்டும் பொருட்டாக இத்தனை தூரம் எழுதினேனே தவிர வேறில்லை.
தமிழ் நாட்டில் ஜாதி ஸம்பந்தமான மூட விதிகளும் ஆசாரங்களும் சடசடவென்று
நொறுங்கி விழுகின்றன.
அடுத்த விஷயம், பெண் விடுதலை. தமிழ் நாட்டில் பெண் விடுதலைக்
கக்ஷிக்குத் தலைவியாக ஸ்ரீமான் நீதிபதி சதாசிவய்யரின் பத்தினி மங்களாம்பிகை விளங்குகிறார்.
ஸ்ரீ அனிபெசண்ட் இந்த விஷயத்தில் அவருக்குப் பெரிய திருஷ்டாந்தமாகவும், தூண்டுதலாகவும்
நிற்கிறார்.
இவ்விருவராலும் இப்போது பாரத தேசத்தில் உண்மையான பெண் விடுதலை
உண்டாக ஹேது ஏற்பட்டது. இவ்விருவருக்கும் தமிழுலகம் கடமைப்பட்டது. இவர்களுடைய கஷிஎன்னவென்றால்,
‘ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு; மனம் உண்டு; பக்தியுண்டு; ஐந்து புலன்கள் உண்டு. அவர்கள்
செத்த யந்திரங்களல்லர். உயிருள்ள செடி கொடிகளைப் போலவுமல்லர். சாதாரணமாக ஆண் மாதிரியாகவேதான்.
புறவுறுப்புகளில் மாறுதல், ஆத்மா ஒரே மாதிரி.’
இதனை மறந்து அவர்களைச் செக்கு மாடுகளாகப் பாவிப்போர் ஒரு திறத்தார்.
பஞ்சுத் தலையணைகளாகக் கருதுவோர் மற்றொரு திறத்தார். இரண்டும் பிழை.
ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம் செய்து கொள்ளலாம். விவாகம்
செய்துகொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்று கோல்;
ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும் போலே. விஷ்ணுவும் லக்ஷ்மியும் போலே. விஷ்ணுவும்
சிவனும் பரஸ்பரம் உதைத்துக் கொண்டதாகக் கதை சொல்லும் பொய்ப் புராணங்களிலே விஷ்ணு லக்ஷ்மியை
அடித்தாரென்றாவது, சிவன் பார்வதியை விலங்கு போட்டு வைத்திருந்தாரென்றாவது கதைகள் கிடையா.
சிவன் ஸ்திரீயை உடம்பிலே பாதியாகத் தரித்துக் கொண்டார். விஷ்ணு மார்பின் மேலே இருத்தினார்.
பிரம்மா நாக்குக்குள்ளேயே மனைவியைத் தாங்கி நின்றார். ஜகத்திற்கு ஆதாரமாகிய பெருங்கடவுள்
ஆண் பெண் என இரண்டு கலைகளுடன் விளங்குகிறது. இரண்டும் பரிபூரணமான சமானம். பெண்ணை அணுவளவு
உயர்வாகக் கூறுதலும் பொருந்தும்.
எனவே, இன்று தமிழ் நாட்டில் மாத்திரமே யல்லாது பூமண்டல முழுதிலும்,
பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும்
தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப்
பிறப்பிடம்.
இந்த விஷயம் தமிழ் நாட்டில் பல புத்திமான்களின் மனதிலே பட்டு,
பெண் விடுதலைக் கஷி தமிழ் நாட்டின் கண்ணே பலமடைந்து வருவதை நோக்குமிடத்தே எனக்கு அளவில்லாத
மகிழ்ச்சியுண்டகிறது. இந்த விஷயத்திலும் தமிழ் நாடு பூமண்டலத்துக்குச் சிறந்த வழிகாட்டியாக
விளங்குமென்பதில் ஆக்ஷேபமில்லை.
அடுத்த விஷயம் மத பேதங்களைக் குறித்தது. இதில் பாரத் தேசம் –
முக்கியமாகத் தமிழ்நாடு – இன்று புதிதாக அன்று, நெடுங்காலமாக தலைமையொளி வீசிவருதல்
எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ராமானுஜர் தமிழ் நாட்டில் பிறந்தவர் அன்றோ? ஆழ்வார்களும்
நாயன்மார்களும் அவதாரம் புரிந்தது தமிழ் நாட்டிலன்றோ? பறையனைக் கடவுளுக்கு நிகரான நாயனாராக்கிக்
கோயிலில் வைத்தது தமிழ் நாட்டிலன்றோ? சிதம்பரம் கோயிலுக்குள்ளே நடராஜாவுக்கு ஒரு சந்நதி,
பெருமாளுக்கொரு சந்நதி. ஸ்ரீரங்கத்திலே, பெருமாளுக்கு ஒரு துருக்கப் பெண்ணைத் தேவியாக்கித்
துலுக்க நாச்சியார் என்று பெயர் கூறி வணங்குகிறார்கள். “எம்மதமும் சம்மதம்” என்றார்
ராமலிங்க சுவாமி.
உலகத்திலுள்ள மதபேதங்களை யெல்லாம் வேருடன் களைந்து ஸர்வ ஸமய
ஸமரஸக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்குத் தமிழ் நாடே சரியான களம். உலக முழுவதும்
மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மஹான்கள்
இப்போது தமிழ்நாட்டிலே தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு
தமிழகத்தே தொங்கு மென்கிறோம்.
மேலே சொன்னபடி, ‘பரிபூரண ஸமத்வம் இல்லாத இடத்தில் நாம் ஆண் மக்களுடன்
வாழமாட்டோம்’ என்று சொல்லுவதனால் நமக்கு நம்முடைய புருஷராலும் புருஷ சமூகத்தாராலும்
நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோ யாயினும், எத்தன்மையுடையனவாயினும் நாம் அஞ்சக் கூடாது.
சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; தமர்த்துக்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள்.
ஆதலால், சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம்
வெற்றி பெறுவோம். நமக்குப் பராசக்தி துணைபுரிவாள். வந்தே மாதரம்.
No comments:
Post a Comment