26 மே 1917 பிங்கள வைகாசி 13
திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம்
என்கிற மூன்று புருஷார்த்தங்களையும் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளுக்குள் பாடிக்
காட்டிய திறமையைக் கண்டு வியந்து சில ஒளவையாரிடம் சொன்னார்களாம். ஒளவையார் நான்கு புருஷார்த்தங்களையும்
ஒரே வெண்பாவுக்குள் பாடிக் காட்டினாளாம்.
ஈதல் அறம்; தீவினை விட்டீட்டல் பொருள்; எஞ்காதலிருவர் கருத்தொருமித் – தாதரவு [ஞான்றும்பட்டதே யின்பம், பரனைநினைந் திம்மூன்றும்விட்டதே பேரின்ப வீடு.
கொடுப்பது தருமம்.
பாட்டைக் கொடுத்தாலும் சரி; நாட்டைக்
கொடுத்தாலும் சரி; பணம், கல்வி, மருந்து, தைரியம், ஏதேனுமொரு நல்ல பொருளை உடையவன் வேண்டியவனுக்குக்
கொடுத்தால் அஃதறம். உலகத்தில் ஸாமான்ய மனிதனைச் சூழ்ந்து மிக்கோர், ஸமானஸ்தர், தாழ்ந்தோர்
என மனிதர் மூன்று வகையாகக் காணப்படுகிறார்கள். இந்த மூன்று திறத்தாருக்கும் அவன் கொடுக்க
வேண்டிய கொடைகள் காலம், தேசம், இவற்றுக்குத் தக்கபடி அந்தந்த விதமான மாறி நிற்கும்.
இன்னின்ன காலத்தில் இன்னின்னாருக்கு இன்னின்ன பொருள் கொடுக்க வேண்டுமென்பது தர்மிஷ்டனுக்கு
ஸ்வபாவத்திலேயே தெரியும். சேர்க்கப்படுவது செல்வம். மனிதனுக்கு இன்பம் தரும் பண்டங்களையும்
அவற்றைக் கொள்வதற்கு நல்ல கருவியாகிய பொன்னையும் சேகரித்து வைக்க வேண்டும். இடைவிடாமல்
சேர்க்க வேண்டும். கை பற்றின படியாகவே இருக்க வேண்டும். ஆனால் தீயகாரியம் செய்து, கெட்ட
தொழில் செய்து சேர்த்த செல்வம் நிற்காது. செல்வம் சேர்த்த பிறகு அதன் உரத்தால் பிறர்க்குத்
தீங்கு செய்வாரும் விரைவிலே கெடுவார். “அல்லற் பட்டாற்றாது அழுதகண்ணீ ரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” என்று
திருவள்ளுவரும் சொன்னார். துன்பப்பட்டார் அது பொறுக்காமல் அழும் கண்ணீரானது, அந்தத்
துன்ப முண்டாக்கியவனுடைய ஐசுவரியத்தை அறித்தெரியும் ஆயுதமாகும். செல்வம் இனிது. அது
முயற்சியினாலே சேர்க்கப்படுவது. பயனுள்ள்a தொழிலை மேன்மேலும் ஊக்கத்துடனும் அறிவுடனும்
செய்வதால் பொருள் பெருகும். தீயது செய்தாலன்றிப் பொருள் தேட முடியாதென்று மூடர் நினைக்கிறார்கள்.
தீயது செய்யாதபடி சேகரிப்பதே பொருளென்றும், மற்றையது பல துன்பமுண்டாக்கி விரைவிலே அருந்து
போவதோர் மருளென்றும் சொல்லுகிறார்கள்.
பெண்னும், ஆணும் அன்பு கொண்டு வாழ்வதே இன்பங்களிலெல்லாம் சிறந்த
இன்பம். உணவும், ஸ்நானமும், பூவும், சந்தனமும் முதலிய இன்பங்களெல்லாவற்றைக் காட்டிலும்
காதலின்பமே சிறந்தது. காதலுடைய இருவர் கருத்திலே ஒன்று பட்டவராய் ஆதரவு கொள்ளும் நிலையை
மனிதர் கட்டுப்பாடுகளாலும், பணச் செருக்காலும், அநீதியாலும் பெற விரும்புகிறார்கள்.
ஆண் பெண் உறவினால் வரும் துன்பந்தான் மனிதருக்கு இவ்வுலகத்தில் மற்றெல்லாத் துன்பங்களைக்
காட்டிலும் அதிகமாக ஏற்பட்டுவிட்டது. விவாக முறையைச் சில தேசங்களில் நரகம் போலே செய்துவிட்டார்கள். தெய்வம் கொடுக்கும் இன்பத்தை
மனிதர் அறியாமையாலும் பாபசிந்தையாலும் துன்பமாக மாற்றிக் கொள்ளுகிறார்கள்.
தெய்வத்தை நம்பி மேற்படி மூன்றனுள்
எதுவும் இன்றியமையாத தில்லையென்று கொண்டு, வருவதுதானே வருமென்று சொல்லி, எல்லாம் தெய்வத்தின்
செய்கையாதலால் நமக்கெவ்விதமான பொறுப்புமில்லை யென்று நடப்பதே விடுதலை இன்பம். துன்பம்
எது நேர்ந்தாலும் சரியென்று மனக்கவலையை ஒரேயடியாக நெருப்பிலே போட்டுக் கொளுத்திவிட்டு
தெய்வத்தின் நினைப்பே கதியென்று நிற்பது விடுதலை. “எல்லாத் தருமங்களையும் விட்டு, என்னையே
சரணடைக” என்று கீதையும் சொல்லிற்று.
இந்த விடுதலை பெற்றவன் பண்டாரமாகிக்
கந்தையுடுத்துப் பிச்சை வாங்கித் தின்பானென்று சில பாமர ஜனங்கள் நினைக்கிறார்கள். அது
முற்றிலும் தவறு. ஆயிரத்திலொரு ஜீவன்முக்தன் பண்டார வழியிலே சென்றாலும் செல்லக்கூடும்.
ஆனால் அதுவே மார்க்கமென்று நினைத்துவிடக்கூடாது. ஜனகன் ஜீவன் முக்தி பெற்று ராஜ்யமாண்டான்.
அர்ஜுனனும் அப்படியே. ரிஷிகளெல்லாரும், பெண்டு பிள்ளைகளுடன் சுகமாக வாழ்ந்தார்கள்.
விடுதலை பெற்றவர் எந்தத் தொழில் செய்தாலும் செய்வார்கள். ஆனால் அந்தரங்க நம்பிக்கை
தெய்வமொன்றினிடத்தேயே செலுத்தி வாழ்வார்கள். “எத்தொழிலைச் செய்தாலும், ஏதவத்தைப்பட்டாலும்,
முக்தர் மனமிருக்கு மோனத்தே” என்பது முன்னோர் வாக்கு. பரனை நினைந்து முன் மூன்றையும்
விட்டு விடுதல் இன்பமென்று ஒளவை கூறினாள். பற்று விட்டிருப்பதே விடுதலை. உள்ளத்துறவே
துறவு. உள்ளத்துறவுடைய மனிதனை நாம் என்ன அடையாளத்தாலே கண்டு பிடிக்கலாம்? பக்தி முதிர்ச்சிக்கு
எது தவறாத லக்ஷணம்? “அஞ்சாதே!” என்றதுட வேதம். பயம் நீங்கி யிருப்பதே விடுதலைக்கு லக்ஷணம்.
ஒருவன் உண்மையாகவே தெய்வத்தை நம்பினானா, வீணுக்குச் சொல்லுகிறானா என்பதை அறிய வேண்டுமானால்
ஆபத்து வேளையிலே பார்க்க வேண்டும். ஆபத்து நேரும் போது நெஞ்சு நடுங்காம லிருப்பவன்
ஞானி, பக்தன், முக்தன். மரணத்துக் கஞ்சாதவன் தெய்வத்தை உண்மையாகச் சரணடைந்தவன். தெய்வத்தை
நம்பினால் தீமை நமக்கு வாராதென்பதை ப்ரத்யக்ஷ ஞானமாகக் கொண்டு ஜீவன் முக்தர் எந்தப்
பதவியிலிருந்த போதிலும் நிகரற்ற வீரராக விளங்குவார்.
No comments:
Post a Comment